வேதா நிலையம் வீட்டுக்குள் நுழைவதற்காக பசுமாடு ஒன்று கொண்டுவரப் பட்டது. அந்த மாடு வீட்டிற்குள் நுழைந்ததும் திடீரென மிரண்டு போய் நின்றது. சுற்றும்முற்றும் பார்த்து ‘அம்மா’ என்று இருமுறை கத்தியதாக கூறினீர்கள். ஒரு வேளை வருங்காலத்தில் இந்த இல்லத்திலிருந்து தமிழகத்தையே ‘அம்மா’வாக பரிபாலனம் செய்ய போகிறீர்கள் என்பதை சூசகமாக தெரிவித்ததோ என்னவோ!
சாதுவான அந்தப் பசுமாடு திடீரென்று தனது வாலை சுழற்றி, சாணத்தை நடு வீட்டில் இட்டது. அதன் பிறகுதான் அந்த மாடு வயிற்று உபாதை யினால் சிரமப்படுவது அனைவருக்கும் புரிந்தது. நீராக விழுந்த சாணம், அந்த மாட்டின் பின்னால் மங்கள பொருட்களை தட்டுகளில் ஏந்தி நின்ற பெண்களின் பட்டுச் சேலையை நாசம் செய்ய, அவர்கள் வீறிட்டு இங்குமங்கும் ஓட, அலறலைக் கேட்டு மாடு இன்னும் மிரள... ஒரே களேபரம்.
அதுவரை தாயின் பிரிவை எண்ணி ஒரு மூலையில் சோகமாக நின்றிருந்த நீங்கள் இந்தக் காட்சியை கண்டதும், பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கலகலவென நகைக்கத் துவங்கினீர்கள். நீண்ட நாட்கள் கழித்து உங்கள் முகத்தில் சிரிப்பு!
உங்கள் வீட்டில் பணிபுரியும் வயது முதிர்ந்த பணிப்பெண், மாட்டுக்காரரை திட்டியதாகக் கூறினீர்கள். ‘‘ஏம்பா, வேற மாடே கிடைக் கலையா. இப்படியா.. புதுவீட்டுல பண்ணும்..?’’ என்று இரைந்தது உங்கள் சிரிப்பை அதிகரித்தது. இந்தக் களபேரத்துக்கும் உங்கள் மகிழ்ச்சிக்கும் இடையே கிரகப்பிரவேசம் மிக விமரிசையாக நடைபெற்றது.
அன்று மாலை வீணை சிட்டிபாபுவின் இன் னிசை கச்சேரிக்கு, எம்.ஜி.ஆர். உட்பட திரைப் படத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்திருந்து, உங்களை வாழ்த்தினர். உங்கள் தாய்க்கு மிகவும் பிரியமான சில ராகங்களை இசைக்க வேண்டும் என்று தாங்கள் சிட்டிபாபு விடம் வேண்டுகோள் விடுத்தீர்கள். ‘வேதா’ நிலை யம் என்று பெயரிடப்பட்ட அந்த இல்லத்தில் தனது வீணையில் சாம கானத்துடன் நிகழ்ச் சியை நிறைவு செய்தார் சிட்டிபாபு.
கிரகப்பிரவேசம் முடிந்த சில நாட்களில் குடும்பத்துடன் வேதா நிலையத்திற்குள் குடி புகுந்தீர்கள்.உங்கள் தாய் வாங்கியிருந்த தரை விரிப்புகள், திரைச் சீலைகள், மைசூர் மன்னரது அன்பளிப்பு பொருட்கள் ஆகி யவை அவர் விருப்பப்படியே வீட்டை அலங்கரித்தன.
தாய் இறந்து போனதும், அவரது பொறுப்புகள் எல்லாமே உங்கள் தலையில் தான் சுமத்தப்பட்டன. அண்ணன் ஜெயகுமாருக்கு தகுந்த பெண்ணைத் தேடி திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தபோது, உங்கள் தோழியான நடிகை ஷீலா தனக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் இருப்பதாகக் கூறியிருந்தார். அந்தக் குடும்பமும் தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவதாக ஷீலா தெரிவிக்க, அந்தக் குடும்பத்துடன் தொடங் கியது கல்யாணப் பேச்சு. ஷீலா, ஜெயக்குமார் இருவருடனும் நீங்களே பெண் பார்க்க சென்றீர்கள்.
பெண்ணின் பெயர் விஜயலட்சுமி. உங் களுக்கு பெண்ணை மிகவும் பிடித்துவிட, ஜெய குமாரும் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். தாங்களே முன்னின்று திருமணத்தை மிகவும் எளிய முறையில் நடத்தி வைத்தீர்கள். உங்கள் தரப்பில் உங்களது சித்திகளின் குடும்பங்களும், நடிகை ஷீலாவின் குடும்ப மும் மட்டுமே பங்கேற்றன.
அண்ணன், அண்ணியுடன் தாங்கள் வேதா நிலையத்தில் நிம்மதியாக வசிக்க தொடங்கினீர் கள். அண்ணனுக்கு ஒரு மகனும், மகளும் பிறக்க, அந்த குழந்தைகளுக்கு தீபா, தீபக் என்று பெயரிட்டு மகிழ்ந்தது நீங்கள்தான்! அந்தக் குழந்தைகளுடன் நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பீர்கள்.
என்னருமை தோழி…!
இந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடிப்பது நின்று போனது. உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரச்சினைகளை ஏற்படுத்த நினைத்தவர்கள், 1970-ம் ஆண்டு முதலே அதற்கான வேலைகளை துவக்கி இருந்தனர். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் மூன்று கதாநாயகிகளில் நீங்களும் ஒருவர் என்று உறுதியாக நம்பினீர்கள். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடிக்க ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, உங்களுக்கு வந்த மற்ற படங்களின் வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டீர்கள்.
உங்களது பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் கூட தயார். ஆனால், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் விளம்பரம் வெளியானபோது உங் களுக்கு பதிலாக நடிகை சந்திரகலாவின் பெயர் தான் காணப்பட்டது. இதனால் சற்றே பாதிக்கப் பட்டாலும் உங்களுக்கும் எம்.ஜி.ஆருக் கும் இடையே பிளவை ஏற்படுத்த நினைப்பவர் களின் தற்காலிக வெற்றி இது என்று மனதைத் தேற்றிக் கொண்டீர்கள்.
‘அம்மாவே போய் விட்டார். இனி திரைப்பட வாய்ப்புகள் நழுவினால்தான் என்ன’ என்று எண்ணிக் கொண்டதோடு, இனிமேல் கதா நாயகிக்கு முக்கியத்துவம் தரப்படும் கதாபாத் திரங்களில் மட்டுமே நடிப்பதென்று அப் போதே ஒரு தீர்மானத்துக்கு வந்தீர்கள். இந்த சமயத்தில்தான் திமுக-வில் பிரச்சினை கள் தோன்றின. 1972 அக்டோபர் 10-ம் தேதி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அண்ணா திமுகவை தொடங்கினார். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் திரை யிடுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழக அரசியல் சூழ்நிலையே பரபரப்படைந்திருந்த அந்த வேளையில், ‘வேதா நிலையம்’ இல்லத் தில் உங்களின் அமைதியான வாழ்க்கை தொடர்ந்தது.
‘கங்கா கௌரி’ படப்பிடிப்புக்காக, நீங்கள் மைசூர் சென்றிருந்தபோது, வாட்டாள் நாகரா ஜின் ஆதரவாளர்களால் சூழப்பட்டு, ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக…’ என்று கோஷமிடும்படி வற்புறுத்தப்பட்டீர்கள். நீங்கள் அதற்கு பிடிவாத மாக மறுத்து, ‘‘நான் தமிழ்ப் பெண். தமிழ் ஒழிக என்று கூற மாட்டேன்…’’ என்று குண்டர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் உங்கள் உறுதியை வெளிப்படுத்தினீர்கள். படப்பிடிப்புக்கு வந் திருந்த பத்திரிகையாளர்கள்தான் கன்னட வெறியர்கள் உங்களைத் தாக்காமல் பாதுகாப்பு அளித்தார்கள். பின்னர், விஷயம் கேள்விப் பட்டு மைசூரில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆர்., ‘கங்கா கெளரி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்து பார்த்து உங் களுக்கு ஆறுதலும் தைரியமும் சொன்னார்.
1973-ல் திடீரென்று உங்களுக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு. தன்னுடன் ‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். அந்த சமயத்தில் நீங்கள், ‘சூரியகாந்தி’, ‘பாக்தாத் பேரழகி’ மற்றும் ‘வந்தாளே மகராசி’ போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக் கும் கதைகளில் மட்டுமே நடித்து வந்தீர்கள். ‘‘இப்போதெல்லாம் நான் ஹீரோயின் சப்ஜெக்ட் களில்தான் நடிக்கிறேன்’’ என்று நீங்கள் கூறிவிட, பிறகு எம்.ஜி.ஆரே போன் செய்து, மீண்டும் தன்னுடன் நடிக்க அழைத்தார். அவரது கோரிக்கையை தட்ட முடியாமல் ஏற்றுக்கொண்டீர்கள். இந்தப் படமே நீங்கள் எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசிப் படம்!
அந்த வருடம் மே மாதம்... தமிழகத்தின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர் தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நிறுத்திய அண்ணா திமுக வேட்பாளர் மாயத்தேவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தனை ஒரு லட்சத்து நாற்பத்து ஓராயிரத்துக்கும் அதிக மான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருந் தார். அங்கே போட்டியிட்ட ஆளும் திமுகவின் வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் சுமார் 93 ஆயிரம் வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார். நீங்களும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டீர்கள்.
வெறுமையுடன் இருந்த உங்கள் மனதில் ஆனந்தத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி!
- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
29 days ago