காலத்தின் வாசனை: பரிமாறும் கைகளைப் பார்த்ததுண்டா?

By தஞ்சாவூர் கவிராயர்

ஓட்டலானாலும் வீடானாலும் சாப்பிட உட்கார்ந்ததும் பரிமாறியவுடன் இலையில் கைவைத்துவிடுகிறோம். பரிமாறும் கையைப் பார்த்து நன்றி சொல்லத் தோன்றுவதே இல்லை. வாழ்க்கையின் இதுபோன்ற நுட்பமான தருணங்களை நாம் இப்படித்தான் எளிதாகக் கடந்து செல்கிறோம். அவற்றை உற்றுநோக்கி உணர்வுபூர்வமாக உள்வாங்கும் அவகாசம் நமக்கு இருப்பதில்லை.

அந்தக் காலத்தில் சமையல் நன்றாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பெண்களின் கைப்பக்குவம் என்பார்கள். இந்தக் கைப்பக்குவம் சமையலுக்கு மட்டுமல்ல பரிமாறுவதற்கும் பொருந்தும். அம்மா மாதிரி பரிமாற யாரால் முடியும். எந்த அம்மாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. முதலில் தட்டு நிறைய அம்மா பரிமாறுவது தன் அன்பையே அல்லவா?

பெரியப்பா ஒரு கம்பவுண்டர். எங்கள் வீட்டில் ஒருமுறை சாப்பிட உட்கார்ந்தார். அம்மாதான் பரிமாறினார். சாப்பிட்ட பிறகு அம்மாவைக் கூப்பிட்டு கையைக் காட்டி, ‘‘எத்தனை நாளாக இப்படி இருக்கு?’’ என்று கேட்டார். அப்பா உட்பட நாங்கள் எல்லோரும் குழம்பிப்போய்விட்டோம். அம்மா முகம் மட்டும் வெளிறிவிட்டது “ரொம்ப நாளாக இருக்கே” என்றார்.

“நான் ஒரு களிம்பு தர்றேன் போடு சரியாகிடும்” என்றார் பெரியப்பா.

ஓயாது பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து அம்மாவின் கைகளில் சேற்றுப் புண். வெளுத்துப்போன விரல் இடுக்குகளில் தோல் பிய்ந்து சிவப்பாக... ரத்தச் சிவப்பு...

“நான் கவனிக்கவே இல்லையே!” என்றார் அப்பா. நாங்களும்தான்.

அக்கறைதான் அன்பைப் புலப்படுத்து கிறது. அன்றுமுதல் பெரியப்பாவின் சுபாவம் என்னையும் தொற்றிக் கொண்டது.

பரிமாறும் கைகளைக் கவனிப்பேன். ஆகா! அவை சொல்லும் கதைகள்தான் எத்தனை? ஒரு நண்பர் தன் மனைவியின் சமையலை ஓஹோவென்று புகழ்வார். வற்புறுத்தி அவர் வீட்டுக்கு அழைத்துப்போனார். சத்தியமாகச் சொல்கிறேன் சாப்பிடவே பிடிக்கவில்லை. எனக்காக அவர் மனைவி இலை நிறைய ஏராளமான பதார்த்தங்களைச் செய்து வைத்திருந்தார். பரிமாறியபோது கவனித்தேன். ரொம்பவும் பலவீனமான பரிதாபமான கைகள்! இந்தக் கைகளைக் கொண்டு சமைத்துச் சாப்பிட வேணுமானால் நெஞ்சில் ஈரமற்ற அரக்கனால்தான் முடியும்.

ஓட்டலில் நடந்த ஒரு சம்பவம்

நானும் என் நண்பனும் பாண்டி பஜாரில் ஒரு ஓட்டலில் சாப்பிடப் போனோம். நண்பன் “இங்கே இட்லி விசேஷம்” என்று சொல்லிவிட்டு இட்லி ஆர்டர் செய்தான்.

இட்லி வந்து சேர்ந்தது, ஒரு இட்லியை விண்டு போட்டவன் சட்டென்று நிமிர்ந்து சர்வரைப் பார்த்து “ஐயா நீ… நீங்கள் பிச்சுமணிதானே?” என்று கேட்டான். தாடியும் மீசையுமாக காட்சியளித்த அவர் முகத்தில் ஆச்சரியம். “எப்படித் தெரியும்?” இருபது வருஷங்களுக்கு முன்னால் திருவல்லிக்கேணியில் (ஒரு பிரபல ஒட்டலின் பெயரைக் குறிப்பிட்டு) அந்த ஓட்டலில் நான் தினந்தோறும் சாப்பிடுவேன், என் பெயர் மீனாட்சி சுந்தரம். என் சொந்த ஊர் திருநெல்வேலி என்றான். இருபது வருடங்களில் எத்தனை ஓட்டல்கள்? எத்தனை இலைகள்? எத்தனை முகங்கள்?

“ஞாபகம் வந்துட்டுது” என்றார் பளிச்சென்று.

“எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்றேன் நண்பனிடம். “அவர் முகம் மறந்து போச்சு, ஆனா அந்தக் கைகளை எப்படி மறக்க முடியும் கோபாலி? ஏதோ பழகின மனுஷனைப் பார்க்கிற மாதிரி இருக்கு அந்தக் கைகள்” என்றான். புறப்படும்போது அவர் கைகளில் ஒரு 100 ரூபாய்த் தாளைத் திணித்தான் என் நண்பன். அந்த நண்பன் கவிஞர் சுந்தர்ஜி ப்ரகாஷ். ஒரு நல்ல கவிதையைப் படித்த திருப்தி கிடைத்தது எனக்கு. ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் விருந்து மேசைகளிலும் அதிநவீன உணவகங்களிலும் பரிமாறும் கைகளைப் பார்த்திருக்கிறேன். அழகிய நீண்ட விரல்கள், மெல்லிய விரல்கள், நகப்பூச்சுடன் கூடிய நாசூக்கு விரல்கள், மயக்கும் விரல்கள்.

களத்து மேட்டிலும் கழனியிலும் நாற்று நட்டு, பாடுபட்டு, கரடுமுரடாகிக் கோணிப்போன கிராமத்துத் தாய்மார்களின் பரிமாறும் கைகளுக்கு அவை ஒருபோதும் ஈடு இணையாகாது. “அம்மாவின் கைகளைப் பார்த்தால் எனக்கு அழுகையாக வரும்” என்பார் நகரவாசியாக மாறிவிட்ட நண்பர் ஒருவர். தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தரின் தபேதராக பணிபுரிந்த நடராசனை மறக்கவே முடியாது. முறுக்கிய மீசை, பெரிய கிருதா - வெள்ளை டர்பன்- வெண்ணிற கோட்டு கம்பீர நடை. ஒரு அழகிய ட்ரேயில் தேநீர்க் கோப்பைகளை ஏந்திவந்து மிகுந்த பணிவுடன் சற்றே குனிந்து அவர் விருந்தினர்களிடம் நீட்டும் போது ஏர் இந்தியா மகாராஜாவின் பாவனை வெளிப்படும். பெருமித உணர்வில் விருந்தினர்கள் பூரித்துப் போவார்கள்.

நடராசன் அகால மரணம் அடைந்தார். அவர் நினைவைப் போற்ற துணைவேந்தர் ஒரு காரியம் செய்தார். புதிதாகக் கட்டப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழக விருந்தகத்தை நடராசன் நினைவு விருந்தகம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தார். நடராசனின் கைகளைப் போற்ற வேறென்ன பரிசு வேண்டும்?

- தஞ்சாவூர்க் கவிராயர், ‘தெருவென்று எதனைச் சொல்வீர்?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

ஓவியம்: வெ.சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்