இந்த எடைக்குறைப்பு என்பது ஓர் அகண்ட பரிபூரணானந்த லாகிரி. கொஞ்சம் ருசித்துவிட்டால் மனுஷனை ஒரு வழி பண்ணாமல் ஓயாது. நானெல்லாம் பிறந்தது முதலே அடை, வடை வகையறாக்களுடன் இடைவெளியின்றி உறவா டிய ஜந்து.
நடுவே இடை என்ற ஒன்றும் எடை என்ற மற்றொன்றும் இருப்பது பற்றியெல்லாம் எண்ணிக் கூடப் பார்த்தது இல்லை. விரோதிக்ருதுவில் ஆரம் பித்து ஹேவிளம்பி முந் தைய வருஷம் வரைக்கும் அங்ஙனமே இருந்துவிட்டு, சட்டென்று ஒருநாள் பார்த்து, எடையைக் குறைப்போம் என்று இறங்கினால் இப்படித்தான் ஏடாகூடங்களை எதிர்கொள்ள நேரிடும்.
’கார்ப் ஷாக்’ என்கிற தடாலடி ஒரு நாள் உணவு மாற்ற உற்சவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். முழுநாள் உண்ணாவிரதம், மாவுச் சத்து மிக்க ஒரு முழு விருந்து, அதன்பின் மீண்டும் ஒரு முழுநாள் உண்ணாவிரதம் என்பது என் திட்டம். சரியாக இதனைச் செய்து முடித்தபின், அடுத்த நாள் காலை எடை பார்த்தால் கண்டிப்பாக இரண்டில் இருந்து மூன்று கிலோ வரை குறைந்திருக்கும் என்று வல்லுநர்கள் சொல்லியிருந்தார்கள்.
ஆனால், நான் எடை பார்த்தபோது தொள்ளாயிரம் கிராம் ஏறியிருந்தேன். குலை நடுங்கிவிட்டது. இதென்ன அக்கிரமம்! இந்த இயலின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கார்ப் ஷாக்கின் மூலம் எடைக் குறைப்பு நிச்சயம் நடக்கும் என்று சொல்லியி ருப்பது உண்மையென்றால் எனக்கு எப்படி ஒரு கிலோ ஏறும்? எந்தக் கேடுகெட்ட சைத்தான் எனக்குள்ளே சென்று உட்கார்ந்துகொண்டு, இப்படியொரு போட்டி அதிமுக நடத்த ஆரம்பித்திருக்கிறான்? புரியவில்லை.
இதில் உச்சக்கட்ட வயிற்றெரிச்சல் ஒன்று உண்டு. என் நண்பர் ஈரோடு செந்தில்குமாரைப் பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? தமிழகத்தில் அவரை விஞ்சிய கனபாடிகள் ஒருவர் இந்நாளில் இருக்க முடியாது. நமக்கெல்லாம் 192 என்றால் நோட்டுப் புத்தகம்தான் நினைவுக்கு வரும். அவர் எடையில் அந்த எண்ணை எட்டிப் பிடித்தவர். அவருக்கும் என்னைப் போல் ஒருநாள் இந்த எடைச் சனியனைக் குறைத்தால் தேவலை என்று தோன்றி, கொழுப்புணவுக்கு மாறி சர்வ அநாயாசமாக ஐம்பது கிலோ குறைத்தவர். அதோடு மனிதர் திருப்தியடைந்தாரா என்றால் இல்லை.
தனது ஸ்தூல சரீரத்துக்கு அந்த கார்ப் ஷாக் உற்சவத்தை அடிக்கடி கொடுத்துப் பார்க்க ஆரம்பித்தார். சென்றவாரம் நான் ’விளக்கு’ வாங்கிய அதே சமயம் செந்திலும் அந்தப் பரீட்சையில் இறங்கினார். ஆனால், அவர் என்னைக் காட்டிலும் பலமடங்கு வீரியம் மிக்க விரத பயங்கரவாதி. என்னால் 24 மணி நேரம் உண்ணாமல் இருக்க முடியும். அதன்பின் ஒரு பிரேக் எடுத்து சாப்பிட்டுவிடுவேன். செந்தில் 32 மணி நேரம் 48 மணி நேரமெல்லாம் தொடர் உண்ணாவிரதம் இருக்கக்கூடியவர். சரியாகச் சொல்வ தென்றால் உண்ணுவதில் உள்ள அதே தீவிரம் அவருக்கு உண்ணாது இருப்பதிலும் உண்டு.
அப்பேர்ப்பட்ட மகானுபாவர் இம் முறை 72 மணி நேர உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். முனிபுங்க வர் மாதிரி ஓரிடத்தில் அக்கடாவென்று உட்கார்ந்து கண்ணை மூடித் தவம் செய்வதென்றால் இப்படி உண்ணாதிருப் பது பெரிய பாதிப்பைத் தராது. அக்காலத்து முனிவர்களெல்லாமே இம்மாதிரி கொழுப்புணவு உண்டு, உடம்பைப் பசிக்காத நிலைக்குப் பழக்கிக்கொண்டுதான் தவத்தில் உட்காருவார்கள்.
நவீன உலகில் புருஷ லட்சண மாக உத்தியோகம் என்று என்னவா வது ஒன்றைச் செய்து தீர்க்க வேண்டி யிருக்கிறதே? என் நண்பர், அதையும் செய்தபடிக்குத்தான் விரதமும் இருப்பார்.
இம்முறை அவர் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு எதுவும் சாப்பிடுவதில்லை என்று முடிவு செய்து அறிவித்தபோது முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை. விரதம் என்றால் ஜீரோ கலோரி என்று அர்த்தம். போனால் போகிறதென்று ஒரு நாளைக்கு இரண்டு வேளை பால் சேர்க்காத, சர்க்கரை போடாத கடும் காப்பி வேண்டுமானால் அருந்திக்கொள்ளலாம். நூறு மில்லிக்கு ஒரு கலோரிதான் அதில் சேரும். அது நாலு முறை சுச்சூ போனால் சரியாகிவிடும்.
நான் சொன்னேன், இது உதவாது. விரத இலக்கணங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்தும் எனக்கு இந்த அதிர்ச்சி வைத்தியம் ஒத்துவரவில்லை. நாமெல்லாம் பிறவி கார்போஹைடிரேட் அலர்ஜியாளர்கள். ஒருவேளை அரிசிச் சோறு உண்டால்கூட ஒரு கிலோ ஏற்றிக்காட்டுகிற உடம்பை ஓரளவுக்குமேல் தேர்வு எலியாகப் பயன்படுத்தக்கூடாது.
அவர் கேட்கிற ஜாதியில்லை. திட்டப்படி 72 மணி நேர விரதத்தை நடத்தி முடித்தார். விரதம் முடித்தபோது அவர் சாப்பிட்டவை இவை: ஐந்து முட்டைகள், கால் கிலோ தந்தூரி சிக்கன், கால் கிலோ பார்பெக்யூ சிக்கன், கால் கிலோ க்ரில்டு சிக்கன், ஒரு ப்ளேட் பன்னீர் ஃப்ரை, பத்தாத குறைக்கு ஒரு எலுமிச்சை ஜூஸ்.
என்னடா ஒரே காட்டான் கோஷ்டியாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? நண்பர் ஒரு காலத்தில் ஜீவகாருண்யவாதியாக இருந்தவர்தான். எடைக் குறைப்பில் தீவிரம் ஏற்பட்டதும் கன்வர்ட் ஆகிப் போனவர். அதை விடுங்கள். திட்டம் பலன் கொடுத்ததா? அதுதான் முக்கியம்.
விரதத்துக்குப் பிறகு மேற்படி அசாத் திய விருந்தையும் உண்டு முடித்து, மறுநாள் காலை எடை பார்த்திருக்கிறார். எடை மெஷின் சுமார் ஆறு கிலோ குறைத்துக் காட்டியிருக்கிறது!
ரொம்ப யோசித்த பிறகு, எனக்கு இதற்கு பதில் கிடைத்தது. உடம்பு வாகு என்று சொல்லுவார்கள். என்னதான் பிறந்தது முதல் உண்டு களித்த உணவினம் என்றாலும் எனது தேகமானது கார்ப் சென்சிடிவ் தேகம். காணாதது கண்ட மாதிரி ஒருநாள் உண்டு தீர்த்தாலும் கறுப்புப் பணம் சேர்த்துப் பதுக்கும் பரம அயோக்கியனைப் போல் உடம்புக்குள் ஒரு லாக்கர் திறந்து பதுக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்தத் தொல்லையில் இருந்து விடுபடத்தான், சேமிக்கவே தெரியாத கொழுப்புணவுக்கு மாறினேன். அதற்கொரு அதிர்ச்சி, அப்புறம் ஒரு முயற்சி என்று போங்காட்டம் ஆடினால் ஒரு கிலோ என்ன, ஒரு குவிண்டாலேகூட ஏறத்தான் செய்யும்.
செத்தாலும் இனி விஷப் பரீட்சைகள் கூடாது என்று அப்போது முடிவு செய்தேன். ஒரு நாளைக்கு மூன்றுவேளை முழு உணவும் முப்பது வேளை நொறுக்குணவும் தின்றுகொண்டிருந்தவன் நான். மேற்கு மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலுக்கு சாக்குப் பை எடுத்துச் சென்று கிலோ கணக்கில் இனிப்பு மற்றும் கார வகையறாக்களைக் கொள்முதல் செய்து வந்து வைத்துக்கொண்டு, ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிப்பேன்.
2 அல்லது 3 மணி வரை எனக்கு எழுதும் வேலை இருக்கும். எழுதிக்கொண்டே சாப்பிடுவேனா அல்லது சாப்பிட்டுக்கொண்டே எழுதுவேனா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், என்னைப் போல் விடிய விடிய உண்டு தீர்த்தவன் இன்னொருத்தன் இருக்க முடியாது.
அதிலிருந்து மெல்ல மெல்ல மாறத் தொடங்கி இன்று ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு என்னும் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறேன். கடந்த ஒரு மாதமாகவே இப்படித்தான். மதியம் 1 மணிக்கு சாப்பிட்டால் அதோடு மறுநாள் மதியம் 1 மணிதான். நடுவே இரண்டு கறுப்பு காபி மட்டும் உண்டு. எடைக் குறைப்பு வெறி குறைந்துவிட்டது இப்போது. ஆனால், உடம்பு சிறகு போலாகி வருவதை உணர்கிறேன். பசி இல்லை. சோர்வில்லை. எவ்வித உபாதைகளும் இல்லை. நோயற்று வாழ இதுதான் ஒரே வழி.
அதெப்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழமுடியும்?
முடியும். பார்த்துவிடலாம்.
- ருசிக்கலாம்… | எண்ணங்களைப் பகிர: writerpara@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago