வட கிழக்கு மிளகாய் ரகங்களின் கவித்துவக் காரம் பற்றியும், எனது மராட்டியக் கவி நண் பருடன் மிஷ்டி தோய்க்கு மிளகாய் ஊறுகாய் தொட்டுச் சாப்பிட முடிவு செய்தது பற்றியும் சென்ற கட்டுரையில் சொல்ல ஆரம்பித்தேன் அல்லவா? அதை முடித்துவிடுவோம்.
சிவப்பு நாகா அல்லது பேய் நாகா என்று அழைக்கப்படுகிற நாகா ஜொலா கியா இனத்தில் அதைப் போலவே கொலைக்காரம் கொண்ட வேறு சில உப மிளகாய்கள் உண்டு. அந்த வங்காள நாடக சிரோன்மணி எங்க ளுக்குக் கொடுத்தனுப்பிய மிஜோரத்து ஊறுகாயானது அப்படியான மிளகாயில் போடப்பட்டது. அசப்பில் உறை ரத்தம் போலவே இருந்தது. மிளகாயும் மசாலாவும் சுமார் ஆறு மாதங்களாக ஊறிக்கொண்டிருப்பதாக நண்பர் சொல்லியிருந்தார். அது ஊற ஊறக் காரம் ஏறுகிற ரகம். வழக்கமாக நாம் ஊறுகாய் போடப் பயன்படுத்துகிற நல்லெண்ணெய் அதில் கிடையாது. பதிலாக, அடி நாக்கில் சற்றுக் கசப்பை ஏற்றிக்கொடுக்கிற கடுகு எண்ணெய்.
பொதுவாகவே காரத்தின் இடுப்பில் படிந்த கசப்பு, ஒரு நடன சுந்தரியின் நளினம் கொண்டது. தனியாக அதை உணர முடியாது. கண்ணீரின் உப்பைப் போன்றது அது. சாப்பிட்டு ஆனதும் காரம் அடங்கி, வியர்த்துக் கொட்டி, கொஞ்சம் கொஞ்சமாக நிதான நிலைக்கு வந்து சேரும்போது அடித் தொண்டையில் மிக மெலி தாகக் கசக்கும். நன்றாக இருக்கும்.
சில ரக மிளகாய்களுக்கு இயல் பிலேயே இந்த இடுப்பில் படிந்த கசப்புச் சுவை உண்டு. காரத்தின் வீரியத்தில் அது சட்டென்று தெரியாதே தவிர, அதையும் இனம் கண்டு ஆராய்ந்து வைத்திருக்கிற பிரகஸ்பதி கள் இருக்கிறார்கள். மோரிச் என்று ஒரு மிளகாய் இருக்கிறது. இது பங்களாதேஷில் அதிகம் விளையும். பூட் ஜொலாகியா மிளகாய் இனத்தைச் சேர்ந்தது.
இந்த மோரிச்சில் மேற்படி கசப்பு சற்று அதிகமாகவே உண்டு. கிழக்கு வங்காளத்துக் கிங்கரர்கள் இந்த மிளகாயைக் கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவார்கள். அது வீரம் விளைந்த மண்ணோ இல்லையோ, காரம் விளைந்த மண். கிட்டத்தட்ட மரணத்தின் வாசல் கதவு வரை இழுத்துச் சென்று காட்டிவிட்டு வரக்கூடிய காரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை விரும்பிச் சமைத்து உண்கிறவர்களின் மனநிலையை ஆராய்ந்து பார்த்தால் என்னவாவது ஞானம் சித்திக்கலாம்.
இருக்கட்டும். நாம் மிஜோரத்து மிளகாய் ஊறுகாய்க்கு வருவோம். அது நாகா ஜொலாகியா அல்ல என்று நண்பர் சொல்லியிருந்தார். அந்த இனத்தைச் சேர்ந்த வேறு ஏதோ ஒரு மிளகாய். அவர் சொன்ன பெயர் இப்போது மறந்துவிட்டது. ஆனால் அதை ருசி பார்த்த அனுபவம் இந்த ஜென்மத்துக்கு மறக்காது.
குட்டிப் பானைகளில் மிஷ்டி தோய் வாங்கிக்கொண்டு ஊறுகாய் சகிதம் நானும் என் மராட்டிய நண்பரும் தங்கி யிருந்த விடுதி அறைக்கு வந்து சேர்ந் தோம். உட்கார்ந்ததுமே ஒரு தட்டை எடுத்து வைத்து ஊறுகாய் கவரை அவிழ்த்துக் கொட்டினார் நண்பர்.
அடேய், இது தொட்டுக்கொள்ள மட்டுமே. அதற்கெதற்கு இவ்வளவு?
எப்படியும் ஒரு பத்திருபது பேர் தொட்டுக்கொண்டு சாப்பிடும் அளவுக்கு அதில் ஊறுகாய் இருந்தது. ஆனால் மராட்டிய சிங்கமோ தன் ஒருவனுக்கே அது போதாமல் போய்விடுமோ என்று அச்சப்படுவதாகத் தெரிந்தது. எனக்குப் பிரச்சினை இல்லை. இயல்பிலேயே எனக்குக் காரம் ஒவ்வாது. சற்றே காரமான வத்தக் குழம்பு சாதம் சாப்பிட்டாலே கதறிக் கண்ணீர் விட்டுவிடுவேன்.
ஆனால், ருசி பார்க்கிற விஷயம் என்று வந்துவிட்டால் எனக்குக் கண்ணீர் ஒரு பொருட்டல்ல. அந்த மிஜோரத்து மிளகாய், மிஷ்டி தோயுடன் எப்படிச் சேரும் என்று அறியும் ஆவல் கட்டுக் கடங்காமல் இருந்தது. என்னைவிட என் நண்பருக்கு.
அவர்தான் ஆரம்பித்தது. முதலில் சுண்டு விரலால் கொஞ்சம் ஊறுகாயை வழித்தெடுத்து நாக்கில் தடவி சப்புக் கொட்டினார். அதன்மீது ஒரு ஸ்பூன் மிஷ்டி தோயைவிட்டு சேர்த்து மீண்டும் சப்புக் கொட்டினார். ஸ்ர்ர்ர்க்க்க்ஸ்ர்ர்ஸ்க்ற்ற்ற்க் என்று விநோதமாக ஒரு சத்தம் எழுப்பினார்.
‘‘என்ன?’’
‘‘பிரமாதம். சாப்பிடு!’’ நண்பர் கொடுத்த உற்சாகத்தில் நான் கொஞ்சம் ஊறுகாயை வழித்தேன். நாக்கு அருகே கொண்டு சென்றபோது கணப்பொழுது தயங்கினேன். சரித்திரப் புகழ்வாய்ந்த வடகிழக்குக் காரம். உள்ளுக்குள் ஒரு சிறு எச்சரிக்கை மணி அடித்தது. எதற்கும் இருக்கட்டும் என்று முதலில் அந்த இனிப்புத் தயிரை ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் விட்டேன். அதன்மீது ஊறுகாயைச் சேர்த்து, சற்றே பதம் பார்த்தேன்.
பரவாயில்லையே, அப்படியொன் றும் கொல்லும் காரமில்லையே என்று எண்ணி, அடுத்த முறை முதலில் ஊறுகாயை நாக்கில் தடவிக்கொண்டு அதன்மீது தயிரை விட்டேன். சப்புக் கொட்டி நன்றாக உண்டேன். இப்போ தும் ருசிக்கத்தான் செய்தது.
‘‘அடேய் கவிஞா, நீ சொன்னது சரி. இனிப்புக்குச் சரியான துணை காரம்தான். இந்த விநோதக் கலவை அருமையாக இருக்கிறது!’’ என்று மனமாரப் பாராட்டினேன். பரபரவென்று இருவரும் ஒரு குப்பித் தயிரை ஊறு காய் சேர்த்து காலி செய்து முடித்தோம்.
இரண்டாவது தயிர்ப் பானையை எடுத்து வைத்தபோதுதான் விபரீதம் விளைந்தது. கவிஞனாகப்பட்டவன் இன்னொரு யோசனை சொன்னான். ஒரு ஸ்பூன் ஊறுகாயை அப்படியே எடுத்து அந்தக் குட்டிப் பானைத் தயிரில் கலந்துவிட வேண்டியது. பிறகு தயிரை ஸ்பூனால் எடுத்து உண்ணலாம்.
விதி யாரை விட்டது? ஒரு ஸ்பூன் என்றவன் சற்று தாராளமாகவே எடுத்துத் தயிரில் கொட்டிக் கலந்தான். அந்தக் கடும் சிவப்பும் தயிரின் பிரமாதமான மென்மையும் மணமும் சேர்ந்து நூதனமான ஒரு கிறக்கத்தைக் கொடுக்க, என்னை மறந்து அந்தப் பானையை அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டேன்.
அரை வினாடி. ஒரு வினாடி. ஒரு சில வினாடிகள்.
என் நாக்கு, கன்னத்தின் உட்பகுதி கள், தொண்டை, உணவுக் குழாயெங் கும் காரம் பரவி தீப்பிடிக்கத் தொடங் கியது. இனிப்புத் தயிர் எங்கே போன தென்றே தெரியவில்லை. தயிரின் இனிப் பைக் கொன்று காரம் அங்கு கோலோச்சத் தொடங்கிவிட்டது. ‘ஆ, இது காரம்!’ என்று உணர்வதற்கு முன்னால் அது காதுகள் வரை பாய்ந்து எரிய ஆரம்பித்தது. தாங்க முடியாமல் அலறத் தொடங்கினேன்.
கவிஞன் பயந்துவிட்டான். ஓடிச் சென்று எங்கிருந்தோ பாட்டில் பாட்டிலாக ஐஸ் வாட்டர் எடுத்து வந்து ஊற்றினான். நான் மிச்சமிருந்த எட்டு பானைத் தயிரையும் குடித்து, அதற்குமேல் சில குடங்கள் தண்ணீரையும் குடித்து, நாலு வாழைப்பழம் சாப்பிட்டு என்னென் னவோ செய்தும் அடங்கவில்லை. உடம்பெல்லாம் உதறி, வியர்த்துக் கொட்டி, இதயத் துடிப்பு எகிறிவிட்டது.
சுண்ணாம்புக் காளவாய்க்குள் உட லின் உள்ளுறுப்புகளைத் தோய்த் தெடுத்த மாதிரியே உணர்ந்துகொண் டிருந்தேன். ஜென்மத்துக்கும் மறக்காத காரம் அது.
முதலில் ருசித்த ஒரு சொட்டு ஊறு காய்க்குப் பிறகு அதைச் சாப்பிடவே வழி யற்றுப் போய்விட்ட அந்த மராட்டிய நண்பனிடம் மறுநாள் மன்னிப்புக் கேட்டேன். ‘‘உனக்கு ஒரு பானை தயிராவது நான் மிச்சம் வைத் திருக்கலாம்.’’
‘‘அதனால் பரவாயில்லை. நேற்று நீ ஆடிய ஊழித்தாண்டவத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். புரியாவிட்டாலும் பரவாயில்லை. படிக்கிறேன், கேள்!’’
சிங்க மராட்டிய மொழி எனக்குத் தெரியாது. அவன் கவிதை நன்றாகத் தான் இருந்திருக்க வேண்டும். சொல் லாட்சியில் காரத்துக்கு நிகரான முரட்டுத்தனமும் தெரிந்தது. ஆனால் அந்தக் கடுகெண்ணெய் வாசனைதான் இல்லை.
- ருசிக்கலாம்… | எண்ணங்களைப் பகிர: writerpara@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago