என்னருமை தோழி..! - 4

By டி.ஏ.நரசிம்மன்

கடவுளின் சித்தம்!

வெள்ளிக்கிழமை, 2008-ம் வருடம், மார்ச் 7... திருவல்லிக்கேணி விழா ஒன்றில் உரை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் முக்தா சுந்தர். உங்கள் மதிப்பிற்குரிய நண்பரும் இயக்குநருமான முக்தா வி.சீனிவாசனின் மகன். அகவை அறுபதை கொண்டாடும் தாங்கள், முக்தாவிடம் ஆசி பெற வேண்டி அவர் வீட்டுக்கு வரப் போவதாகச் சொன்னார் முக்தா சுந்தர். உங்களை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால், என்னையும் வரும்படி சொன்னார். இதுவன்றோ இறைவனின் விளையாட்டு!

‘விண் வழிப் பயணங்களை சில காலம் தவிர்த்துவிடுங்கள்’ என்று நான் கடிதம் மூலம் விடுத்த கோரிக்கை உங்களை வந்து அடைந்ததோ இல்லையோ... நேரில் பார்க்கும்போது சற்று விரிவாகவே சொல்லி வலியுறுத்த இது ஒரு வாய்ப்பு என்று நினைத்தேன்.

நான் ஆற்ற வேண்டிய உரையை எழுதிக் கொடுத்துவிட்டு, மயிலையில் வி.எம். தெருவில் உள்ள முக்தாவின் இல்லத்திற்குப் புறப்பட்டேன். தெருவெங்கும் ஒரே பரபரப்பு, தலைவி வரப்போவதாக அப்பகுதியில் எங்கும் ஆர்ப்பரிப்பு. முக்தாவை வணங்கிவிட்டு, என்னையும் அழைத்தமைக்கு நன்றி தெரி வித்தேன். சரியாக ஐந்தரை மணிக்கு நீங்கள் வந்தீர்கள்.

முக்தாவின் குடும்பமே வாயிலில் நின்று வரவேற்றது. எங்கும் உங்களை வாழ்த்தி கோஷம். அவர் வீட்டு முன்ஹாலில் நான் ஒரு ஓரமாக நின்றிருந்தேன். உங்களை பார்த்து நான் கரம் குவிக்க, நீங்களும் சற்றே வியப்புடன், புருவத்தை உயர்த்தியபடி பதிலுக்குக் கரம் குவித்தீர்கள். முகமெங்கும் உற்சாகத்துடன், பளீர் நிற சேலையில் பொன் நகை ஏதுமின்றி வாய் நிறைய புன்னகையுடன் நின்றீர்கள். 1996 கைதுக்கு பிறகு நீங்கள்தான் பொன் நகைகளை துறப்பதாகக் கூறி இருந்தீர்களே.

இன்முகம் காட்டி நின்ற தங்களிடம் பேச அதுவே தகுந்த தருணம் என தோன்றிவிட... பட்டென்று பேசிவிட்டேன். ‘‘மேடம்.. நினைவிருக்கிறதா..? நான்தான் நரசிம்மன். சித்ராலயா கோபுவோட மகன். விண் வழிப் பயணங்களைத் தவிர்க்கும்படி மடல் அனுப்பியது நான்தான்” என்று நான் கூறியபோது, பதில் ஒன்றும் தாங்கள் கூறவில்லை.

முக்தா குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட, அவரது பூஜையறையில் குழுமி னோம். பதவி இழந்த தேவேந்திரன், மகா லட்சுமியை இறைஞ்சித் துதிபாடி பதவி பெற்ற கதையை வடமொழியில் நான் கூற, ஆர்வத்துடன் நீங்கள் கவனித்தீர்கள். அகவை அறுபதை கொண்டாடும் உங்களை வாழ்த்தி வணங்கிவிட்டு, நான் விலகி... மறுபடி முன்ஹாலில் போய் நின்றேன்.

முக்தா சீனிவாசனையும் அவர் மனைவி யையும் கௌரவித்த பிறகு, பூஜையறையை விட்டு வந்த தாங்கள் மறுபடி என்னைக் கண்டு கனிவுடன் புன்னகைத்தீர்கள். ''உங்களிடம் பேச வேண்டும். என் இல்லம் வாருங்கள்’’ என்று சொல்லி, உதவியாளரிடம், ‘‘இவர் போன் நெம்பரை வாங்கிக்கோங்க’’ என்று பணித்துவிட்டு, விடைபெற்றுச் சென்றீர்கள்.

அதே மாதம் 21-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு போயஸ் இல்லத்துக்கு வரும்படி அழைப்பு வந்தது. கல்லூரி மாணவனாக மதிய உணவு திட்டத்தைப் பற்றி பேட்டி காண ஏற்கெனவே வந்திருந்த இடம்தான் என்றாலும், இம்முறை என்னுள் ஒருவித சஞ்சலம். முன்னெச்சரிக்கைக் கடிதத்தை நீங்கள் அதிகப் பிரசங்கித்தனமாக எடுத்துக் கொண்டிருப்பீர்களோ என்ற யோசனையுடன் தயங்கித் தயங்கித்தான் வந்தேன்.

என்னருமை தோழி...!

வரவேற்பு அறையில் விக்டோரியா மகாராணி போல் வீற்றிருந்தீர்கள். ''வாங்க, நல்லா இருக்கீங்களா..?’’ என்று வரவேற்ற தங்களுக்கு மரியாதை செய்ய என் கையில் பூச்செண்டோ, சால்வையோ இல்லை. கைகுவிப்பையே பரிசாகத் தந்தேன். அருகி லிருந்த சோபாவைக் காட்டி அமரும்படி சொன்னீர்கள்.

‘‘அப்பா அம்மா.. நல்லா இருக்காங்களா..? கோபு இஸ் எ கிரேட் ஹ்யூமரிஸ்ட்’’ என்றீர்கள். உடனேயே விஷயத்துக்கும் வந்தீர்கள். ‘‘நரசிம்மன், உங்கள் கடிதம் படித்தேன். ஆனால், அதுபற்றி எந்த முடிவுக்கும் வர முடியாமல் திருக்கடையூர் கிளம்பி விட்டேன். விமானத்தில் கோளாறு என்றதால் மீண்டும் வந்துவிட்டாலும், உங்கள் கடிதத்தை நம்பத் தோன்றவில்லை. அதனால்தான் மற்றொரு விமானத்திற்காக காத்திருந்தேன். அதுவும் தாமதம். நல்ல நேரத்துக்குள் கோவில் போய்ச் சேர வேண்டுமே என்று காரில் திருக்கடையூர் சென்று விட்டேன்...’’ என்றீர்கள்.

‘‘ஒருவேளை, உங்கள் விமானப் பயணம் தடைபட்டதற்கு என் பிரார்த்தனைகூட காரணமாக இருந்திருக்கலாம், மேடம்’’ என்று துடுக்கென்று சொல்லிவிட்டேன்.

நீங்கள் புன்னகைத்தபடி, ‘‘அந்த விமானத்தில் ஏறும்போதே படியில் என் சேலை சிக்கியது. அடுத்து, கோளாறு என்று விமானி சொன்னபோது நான் ஆச்சரியப்பட்டேன். உங்கள் கடிதத்தைப் பற்றி நினைத்தேன்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘கிரகங்களின் சஞ்சாரப்படி இப்படி எல்லாம் நடக்கும் என்று கணிப்பது சாத்தியம் என்று நிஜமாகவே நீங்கள் நம்புகிறீர்களா...?’’ என்று வினவினீர்கள்.

‘‘நான் அறிந்த சாஸ்திரங்களின்படி உணர்ந்த செய்தி இது. இப்படி நடக்கும் என்று ஒரு சூசக தகவல் அதில் உள்ளது. அதனால்தான் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல... என் தந்தையுடன் திரைத்துறையில் பணி புரிந்தவர் நீங்கள். எனது கல்லூரிப் படிப் பின்போது ஆராய்ச்சிகளுக்கு உதவியும் செய்தீர்கள். அந்த உரிமையில்தான் கடிதம் அனுப்பினேன். மற்றபடி வேறு எண்ணங்கள் கிடையாது’’ என்றேன்.

நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள். நான், ‘‘1991 முதல் நீங்கள் பதவியிருந்தாலும், 2008-ல்தான் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். இப்போதுகூட உங்க ளைச் சந்திக்கப் போகிறோம் என்று நினைக்கவில்லை. நீங்கள் அழைத்துதான் வந்திருக்கிறேன்.’’ - கிடுகிடுவென்று மனதில்

பட்டதை சொல்லி முடித்தேன். புன்சிரிப்புடன் நான் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தீர்கள்.

‘‘நீங்கள் கடிதம் எழுதியதை நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால் அதில் உள்ள எனது நம்பிக்கையின்மையைதான் நான் தெரிவிக்கிறேன். ஆனால், முக்தாவின் வீட்டில் உங்களைப் பார்த்தது ஒரு ஆச்சரியம் தான்’’ என்றீர்கள்.

‘‘ஒருவேளை இதுவே கடவுளின் சித்தமாக இருக்கும், மேடம்...’’ என்றேன் நான்..

‘‘உங்கள் பெயரை கொண்டவர்தான் என் குடும்ப கடவுள்...’’ என்ற நீங்கள்,

‘‘உங்கள் சாஸ்திரம் சொல்வதை கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்’’ என்று கேட்டீர்கள்.

‘‘இப்போது சனியின் சாரம் சரி இல்லை. அறுபது வயதில் உள்ள ஒரு தலைவர் விமான விபத்தில் காலமாவார். இன்னும் இரண்டு ஆண்டுகளில், அதாவது டிசம்பர் 2009 முடிவதற்குள் அப்படி நடைபெறுவதற்கு வாய்ப்புண்டு’’ என்றேன்.

சற்று நேரம் மௌனம் சாதித்த நீங்கள், ‘‘அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வரும். பிரச்சாரத்திற்கு விமானத்தில் போக வேண்டி இருக்கும். கொடநாடு செல்லவும் திட்டம் வைத்துள்ளேன். என்னால் விமான பயணத்தை தவிர்க்க முடியாது. இருப்பினும், உங்கள் கடிதத்துக்கு நன்றி...’’ என்று கூறி முடித்தீர்கள்.

‘‘உங்களை சந்திக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி...’’ என எழுவதற்கு முற்பட்ட என்னிடம் திடீரென்று கேட்டீர்கள் -

‘‘அப்படி எந்தவித அசம்பாவிதமும் நடக்க வில்லை என்றால்...?’’

எனக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை.

‘’டிசம்பர் 2009 வரை யாருக்கும் எந்த தீங்கும் நடக்கக் கூடாது என்று பிரார்த் திக்கிறேன், மேடம். அப்படி நடக்காமல் இருந்தால் மிகவும் மகிழ்வேன். அதேசமயம், இறையருளால் எதுவும் நடக்காவிட்டால், இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கிறதே ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி பஸ் நிறுத்தம்... உங்கள் உதவியாளர் துணையோடு என்னை 29C பஸ்சில் ஏற்றி விடுங்கள்’’ என்றேன்.

‘‘எதற்கு...?’’ என்பது போல் புருவம் உயர்த்தினீர்கள்!

‘‘29C பஸ் கீழ்ப்பாக்கம் போகுமாம்...’’ - நான் இப்படி சொன்னதும் உங்களையும் மறந்து சிரிக்கத் துவங்கினீர்கள்.

‘‘யு ஹவ் காட் யுவர் ஃபாதர்ஸ் ஹ்யுமர்...’’ என்று சொன்னீர்கள்.

‘‘நான் என் குடும்பத்தில் பிறந்ததே ஒரு ட்ராஜெடி நேரம்...’’ என்று கூறித் தொடர்ந்தேன்.

‘‘என் தந்தைக்கு நாலு மகன்கள். அவர் பணிபுரிந்த ‘கல்யாண பரிசு’ படம் ரிலீஸ் ஆனபோது, மூத்த மகன் பிறந்தான். ‘காத

லிக்க நேரமில்லை’ ரிலீஸின்போது மூன்றா வது மகன் பிறந்தான். ‘காசேதான் கடவுளடா’ ரிலீஸ் சமயம் நாலாவது மகன் பிறந்தான். இதெல்லாமே காமெடி நிறைந்த படங்கள். இரண்டாவது மகனான நான் பிறந்தபோது, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படம் ரிலீஸ் ஆனது. அது ஒரு ட்ராஜெடி என்பதுதான் உங்களுக்கே தெரியுமே...” என்றேன்.

வாய்விட்டு மறுபடியும் சிரித்தீர்கள்.

2008 நல்லபடி கடந்தது... 2009-ல்...

- தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்