என்னருமை தோழி..! 28 - அம்மா என்றால் அன்பு!

By டி.ஏ.நரசிம்மன்

உங்கள் தாய் சந்தியா, போயஸ் தோட்டத் தில் தெற்கு நோக்கி இருந்த மனை ஒன்றை தேர்ந்தேடுத்து அதற்கு முன் பணம் கொடுத்திருந்தார். மனையை காண வந்த எம்.ஜி.ஆரோ, அந்த மனையின் வாஸ்து சரியில்லை என்று வடக்கு நோக்கி அமைந்திருந்த மனை ஒன்றை காண்பித் தார். ஆனால், சந்தியாவுக்கு அந்த மனை பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் காண்பித்த அந்த மனையை பார்த்தவர், அந்த மனைக்கு எதிராக அமைந்திருந்த சிறு சந்தினை தயக்கத்துடன் பார்த்தார்.

‘‘இந்த மனைக்கு எதிராக ஒரு சந்து போகி றதே. இந்த மனை தெருக்குத்தாக உள்ளதே’’ என்றார். இதை எல்லாம் கவனித்துக் கொண் டிருந்த உங்களுக்கோ தர்மசங்கடம். யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் குழப்பத்துடன் இருவரையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு யாதுமாகி நின்ற தாய்க்கு தென் திசை நோக்கி இருக்கும் மனையை வாங்க வேண் டும் என்பதே விருப்பம். அர்ஜுனனுக்கு துரோணாச்சாரியார் வழி காட்டியது போன்று, உங்களுக்கு ஆசானாக விளங் கிய எம்.ஜி.ஆருக்கோ வடக்கு திசை நோக்கி அமைந்திருந்த மனையை நீங்கள் வாங்க வேண்டும் என்று எண்ணம்!

‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்று தனது படத் தலைப்பு மூலம் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தியிருந்தாலும், திரைப்படத் துறை யில் உங்களின் உன்னதமான உயர்வுக்கு காரணமாக இருந்தவராயிற்றே! அவர் நல்லதுதான் செய்வார் என்று உங்களுக்கு அழுத்தமான எண்ணம். அதனால்தான், எம்.ஜி.ஆரின் யோசனையை ஏற்று, வடக்கு பார்த்த மனையையே தேர்வு செய்தீர்கள்.

எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட மனையையே வாங்கிவிடலாம் என்று நீங்கள் கூறிய வுடன், சந்தியாவும் ஒப்புக்கொண்டு விட்டார். பழைய மனைக்கு ஏற்கெனவே தந்திருந்த முன்பணத்தை திரும்பப்பெற்று, எம்.ஜி.ஆர். சொன்ன மனைக்கு முன்பணம் கொடுத்தாகி விட்டது!

என்னருமை தோழி…!

இந்த சம்பவங்களைப் பற்றி என்னிடம் குறிப்பிடும்போது, இந்த இடத்தில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கூறினீர்கள்...

‘‘இந்த மனையை நான் வாங்கிய நேரத்தில் ஒரு வதந்தி கிளம்பியது. எம்.ஜி.ஆர்.தான் எனக்கு மனையை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அந்த வதந்தி. என் தாய் ஏற்கனவே பேசி முடித்திருந்த நிலத்தை நிராகரித்துவிட்டு, அதை வாங்க இருந்த பணத்தில்தான் எம்.ஜி.ஆர். சொன்ன மனையை வாங்கினேன். இந்த உண்மை தெரியாமல், எம்.ஜி.ஆர். எனக்கு போயஸ் தோட்ட மனையை வாங்கித் தந்ததாக வதந்தி கிளம்பியது. அந்த மனையை எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்தாரே தவிர, அதை வாங்க கொடுக்கப்பட்ட முழு பணமும் நான் படங் களில் நடித்து, உழைத்து சம்பாதித்தது’’ என்று ஆணித்தரமாக கூறினீர்கள்!

அப்போது நீங்கள் தெரிவித்த கருத்து, பெண்கள் சுயமாக உழைத்து முன்னேறினா லும் அங்கீகாரம் அளிக்காத, ஆணாதிக்கம் மிக்க இந்த சமுதாயத்தின் அவலத்தை சுட்டிக்காட்டுவதாக இருந்தது.

‘‘தனித்து வாழும் பெண்கள், வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து முன்னேறினால், அதைப் பொறுக்க முடியா மல், அந்த வளர்ச்சிக்குப் பின்னே ஒரு ஆணின் உதவிக்கரம் இருப்பதாக இந்த சமுதாயம் எளிதாக கூறிவிடும். இம்மாதிரி எனது சாதனைகள் பல, பிறரின் உதவியோடு நான் செய்ததாக சொல்லப்பட்டது’’ என்று சற்றே வருத்தத்துடன் கூறினீர்கள்!

போயஸ் கார்டனில் வாங்கிய மனையில் வீடு கட்டுவதற்கான பணிகள் 1971 -ல் மும்மர மாக நடைபெற்றன. அதே வருடத்தில் வீட்டின் கிரகப்பிரவேசத்தை முடித்துவிட வேண்டும் என்று சந்தியாவும் நீங்களும் தீர்மானித்திருந் தீர்கள். அந்தச் சமயத்தில்தான் ‘திக்குத் தெரியாத காட்டில்’ படப்பிடிப்பின்போது ‘‘எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறே?’’ என்று கேட்ட உங்கள் அத்தைகளிடம் இந்த வீட்டின் கிரகப்பிரவேச விருந்தைத்தான் முதலில் போடுவதாகக் கூறினீர்கள்!

எதிலும் உறுதிமிக்கவரான நீங்கள் வசிக் கப் போகும் வீட்டின் ஒவ்வொரு கல்லின் உறுதியும் சோதித்துப் பார்த்து கட்டப்பட்டது! சந்தியா தனது உடல்நிலையையும் பொருட் படுத்தாமல், தினமும் காலையிலேயே கட்டுமானப் பணிகள் நடக்கும் போயஸ் கார்டன் மனைக்கு வந்து விடுவார். ஒவ் வொரு வேலையும் தனது மேற்பார்வை யிலேயே நடக்கும்படி பார்த்துக் கொண் டார். நீங்கள் அப்போது வெளிப்புற படப்பிடிப்பு களில் மிகவும் ‘பிஸி’யாக இருந்த நேரம்.

உங்கள் ஆசைப்படியே முதல் மாடியில் பெரிய நூலகத்துக்கான வசதியும் ஏற்படுத்தப் பட்டது. மைசூரில் இருந்தபோது பொக்கிஷங்களாக போற்றி பாதுகாத்து வந்த குடும்ப புகைப்படங்கள் வைக்க ஒரு இடம் அமைக்கப்பட்டது.

உங்கள் பாட்டனார் நரசிம்மன் ரங்காச் சாரி, மைசூர் மன்னர் கிருஷ்ண சாமராஜ வாடியாருக்கு மருத்துவராக இருந் தவர். உங்கள் பாட்டனாரின் சிறப்பான மருத் துவ சேவைக்காக அவருக்கு மைசூர் மன்னர் அன்பளிப்பாக கொடுத்த காட்சி பொருட்களை வைப்பதற்கும் சந்தியா தகுந்த இடங்களை ஏற்படுத்தினார்.

மைசூர் மன்னர் பரிசளித்த வேலைப்பாடு கள் மிகுந்த ரத்தினக் கம்பளம் (தரை விரிப்பு) ஒன்று, வெகு காலம் உங்கள் பாட்டனார் வீட்டின் விசாலமான கூடத்தில் விரிக்கப்பட்டிருந்தது. மணமான புதிதில் சந்தியா அந்த தரை விரிப்பின் வேலைப்பாடு களைக் கண்டு மலைத்துப் போனார்!

போயஸ் கார்டன் மனையில் வீடு கட்டத் துவங்கியவுடன், அம்மாதிரி கம்பளம் ஒன்றை வாங்கி வீட்டின் வரவேற்பறையில் அலங்கரிக்க வேண்டும் என்று சந்தியா நினைத்தார். பாரிமுனை பகுதிக்குச் சென்று, அதே மாதிரியான கம்பளங்களை தேடினார்.

என்ன ஆச்சரியம்...!

மைசூரில் இருந்த அதே போன்ற தரை விரிப்புகள் இரண்டு அங்கே கிடைத்தன. ஒன்று சந்தன நிறத்தில் சிறந்த வேலைப்பாடுகளுடன் காணப்பட்டது. உங்கள் தாய்க்கு அது மிகவும் பிடித்து விட்டது. ஆனால், உங்களுக்குப் பிடித்த பசுமை நிறத்தில் மற்றொரு கம்பளமும் மிக அழகாக இருந்தது. சந்தியா அந்த கம்பளத்தையே வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்தார்.

உடன் வந்த உறவினர் வியந்தார். ‘‘உனக்குத்தான் சந்தன நிறக் கம்பளம் பிடித்திருக்கிறது என்றாயே. எதற்கு பச்சை நிற தரை விரிப்பை வாங்குகிறாய்..?’’ என்று கேட்க, ‘‘அம்மு தனது சிறு கையால் சம் பாதித்து கட்டும் வீடு. படிப்பையும் தியாகம் செய்து, எங்களுக்காக உழைக்கிறாள். தரை விரிப்பு அவளது விருப்பப்படியே அமையட்டும்…’’ என்று கண்கலங்கினார் சந்தியா.

அந்த உறவினர் மூலம் உங்கள் தாயின் எண்ணத்தை அறிந்துகொண்ட நீங்கள், அந்த சந்தன நிற தரை விரிப்பையும் வாங்கி, அதை தாய்க்கு பரிசளித்தீர்கள். ‘‘இது உன் அறைக்கு’’ என்று நீங்கள் சொன்னபோது, உங்கள் தாயின் கண்களில் அன்பும், ஒருவித சோகமும் கலந்த கண்ணீர்!

போயஸ் கார்டன் வீடு வளர்ந்து வந்த அதே வேகத்தில், உங்கள் தாய் சந்தியாவின் மனபாரமும் வளர்ந்தது. ஒரு நாள் இரவு, சந்தியா உங்கள் பக்கத்தில் வந்து சொன் னார்… ‘‘ஒரு முக்கியமான விஷயம், அம்மு!’’

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, தாயின் முகத்தை ஏறிட்டு பார்த்த உங்களுக்கு கடும் அதிர்ச்சி…!

- தொடர்வேன்... | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்