என்னை உங்கள் இல்லத்துக்கு 2008-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி அன்று அழைத்து, போயஸ் கார்டனில் ‘வேதா நிலையம்’ எழும்பிய மனையினை வாங்கிய பின்னணியைப் பற்றி என்னிடம் நீண்ட நேரம் பேசினீர்கள்.
நடிகை ஷீலா, தான் வீடு வாங்க போவதைத் தெரிவித்ததுமே உங்கள் மனதிலும் புதிய வீட்டுக்கான ஆசை விதை விழுந்துவிட்டது. அதை தங்கள் தாய் சந்தியாவிடம் தெரிவித்தீர் கள். புதிய மனை வாங்குவதைக் காட்டிலும் நீங்கள் ஏற்கனவே, 1967-ல் போயஸ் தோட்டத் தில் வாங்கியிருந்த மனையிலேயே புதிய வீடு கட்டும் யோசனைக்கு அவரும் செயல் வடிவம் தந்தார். பின்னர், உங்களைக் காண வந்த ஷீலா விடம் நீங்களும் வீடு கட்ட போவதாக பெருமை யுடன் கூற, அவர், தான் கட்டும் வீட்டில் நீரூற்று வைக்கப் போவதாகவும் கூறி, உங்கள் வீட்டிலும் அதே போல நீரூற்று ஒன்றை அமைக்க யோசனை கூறினார். அதற்கு, ‘‘எனக்கு அதெல்லாம் வேண்டாம். எனக்கு தேவை பெரிய லைப்ரரி..’’ என்று அறிவின் விசாலத்தை காட்டும் வகையில் அமைந்தது உங்கள் பதில்!
போயஸ் கார்டன் பகுதியில் மனை வாங்குவதற்கு முன்பாக, தி.நகரிலேயே வீடு கட்டுவதற்கு காலி மனை ஒன்றை உங்கள் தாய் சந்தியா தேடி வந்தார். காரணம், அப்போது சிவாஜி கணேசன் துவங்கி, பானுமதி, மனோரமா, தங்கவேலு, காஞ்சனா, ராஜ என்று பல முன்னணி நட்சத்திரங்களும் தி.நகரில்தான் வசித்தார்கள். டாக்டர் நாயர் ரோடு, பர்கிட் ரோடு போன்ற இடங்களில் நிறைய மனைகளை பார்த்தும், எதுவுமே அவருக்கு திருப்திகரமாக அமையவில்லை. ‘‘தி.நகரை தவிர்த்து அதிகம் சந்தடி இல்லாத, அமைதியான வேறு பகுதிகளில் மனையை வாங்கலாம்’’ என்று நீங்கள் வலியுறுத்தினீர்கள்.
அப்போதுதான்... போயஸ் கார்டன் பகுதியில் விற்பனைக்கு மனைகள் உள்ளதாக ஒரு புரோக்கர் மூலம் சந்தியா கேள்விப்பட்டார். உடனடியாக போயஸ் தோட்ட பகுதிக்கு போன அவருக்கு, மனை ஒன்று காண்பிக்கப்பட்டது. சந்தியாவுக்கு அந்த மனை மிகவும் பிடித்துப் போனது. தாங்கள் விரும்பியபடி அந்த பகுதி அமைதியாகவும், மரம், செடி, கொடிகள் நிறைந்து, ரம்மியமாகவும் காட்சி தந்தது. உடனே, உங்களையும் வரவழைத்து அந்த மனையைக் காண்பித்தார்.
உங்களுக்கு அந்த மனை பிடித்திருந்தது என்பதைவிட, போயஸ் கார்டன் பகுதி மிகவும் பிடித்து போனது. மனஅமைதிக்கு மிக உகந்த இடம் என்று கருதினீர்கள். மேலும், உங்கள் மேற்படிப்புக்கு ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி வாய்ப்பளித்திருந்தது. அந்த வாய்ப்பினை நிரா கரித்து விட்டோமே என்கிற மனவருத்தம் உங் களுக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது.
‘‘என் தாய் காட்டிய மனை, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரிக்கு பின்புறமாக அமைந்திருந்ததை கண்டதும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது’’ என்று அதே மகிழ்ச்சி முகத்தில் தெறிக்க, சிறு குழந்தை போல குதூகலத்துடன் என்னிடம் சொன்னீர்கள்!
உங்கள் மனப்பூர்வமான சம்மதத்துடன் நல்ல நாளில், சந்தியா அந்த மனையை வாங்குவதற்கு முன்பணமும் கொடுத்து விட்டார். மனையின் விலை அந்தக் காலத்தில் ஒரு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய்!
‘காவல்காரன் படப்பிடிப்பின் இடைவேளை யில் எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டிருந்த போது, அவரிடம் இதுபற்றி கூறினீர்கள்!
‘‘போயஸ் கார்டன்... நல்ல ஏரியாவாச்சே...’’ என்று எம்.ஜி.ஆரும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
‘‘வாங்களேன்..! நான் வாங்க உள்ள மனையைக் காட்டுகிறேன்’’ என்ற உங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரும் கிளம்பி வந்தார். உங்கள் தாயிடமும் விவரத்தைத் தெரிவித்து அவரையும் போயஸ் கார்டனுக்கு வரச் சொன்னீர்கள்.
அந்த மனை சதுரமாக, தெற்கு திசை நோக்கி அமைந்திருந்தது. எம்.ஜி.ஆர், வெகு நேரம் அந்த மனையை ஆராய்ந்து கொண்டிருந் தார். அதற்குள்ளாக, சந்தியாவும் அங்கே வந்து சேர்ந்தார். ‘‘மனையின் நுழைவாயில் அமைப்பு வாஸ்து முறைப்படி சரியில்லை. மனை வேறு தெற்கு திசை நோக்கி அமைந் திருக்கிறதே..’’ என்று எம்.ஜி.ஆர் தயக்கத்துடன் இழுத்தார்.
என்னருமை தோழி...!
இந்த விஷயத்தை நீங்கள் என்னிடம் சொன்னபோது, எனது முகத்தில் தென்பட்ட வியப்பையும், நம்பிக்கையின்மையையும் நீங்கள் கவனித்து விட்டிருக்க வேண்டும். அதனால்தான் பேசுவதை நிறுத்தி விட்டு, என்னை சிரிப்புடன் நோக்கினீர்கள்!
‘‘வாட் ஹேப்பண்ட்?’’... உங்களின் கேள்வி.
‘‘பகுத்தறிவு பேசும் கட்சியில் அப்போது முக்கிய பிரமுகராக இருந்த எம்.ஜி.ஆரா இப்படி...’’ என்று இழுத்தபடி நம்ப முடியாத வியப்புடன் எனது கேள்வியையே பதிலாக அளித்தேன்.
நீங்கள் மெல்ல சிரித்தபடி, ‘‘எம்.ஜி.ஆருக்கு சில நம்பிக்கைகள் உண்டு. கார் நம்பர், மனையின் அமைப்பு, கதாபாத்திரங்களின் பெயர்கள், படப்பிடிப்பு துவங்கும் நாள் போன்றவற்றில் நம்பிக்கைகளை பார்ப்பார். அவருக்கு ஏழாம் நம்பர் மிகவும் ராசியானதாக நம்பினார்’’ என்று எனக்கு விளக்கிய நீங்கள், தொடர்ந்தீர்கள்...
‘‘மனையின் வாஸ்து சரியில்லை. தெற்கு பார்த்து இருக்கிறதே...’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும், உங்கள் தாய் சந்தியா சட்டென்று அவரை சமாதானப்படுத்தினார்... ‘‘எங்கள் வைணவர்களுக்கு இதில் நம்பிக்கை கிடையாது. தெற்கு திசை பரவாயில்லை.காரணம், எங்கள் சொந்த ஊர் திருவரங்கத்தில் அரங்கன், தென்திசை நோக்கித்தான் சயனம் செய்திருக்கிறான்...’’ என்று கூறினார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘இந்த நிலத்தின் வாஸ்து சரியில்லை. வேறு ஏதாவது மனை இந்தப் பகுதியிலேயே இருந்தால் பாருங்கள். மேலும், அம்மு எதிர்காலத்தில் மேன்மை பெற வேண்டும். அதற்கு தென் திசை ஒவ்வாது. வளர்ச்சிக்கு வடதிசையை நோக்கி மனை இருந்தால் நன்றாக இருக்கும்’’ என்று நல்லெண்ணத்துடன் கூறினார்.
அதோடு, உடனடியாக தன் கார் ஓட்டுநரை அனுப்பி அந்தப் பகுதியில் வசித்த தனக்குத் தெரிந்த ஒருவரை அழைத்து வரச் சொன்னார். எம்.ஜி.ஆருக்குத் தெரிந்த அந்த நபர் வந்ததும், ‘‘இந்த ஏரியாவில் வடக்கு பார்த்த மனைகள் ஏதாவது விற்பனைக்கு உள்ளதா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
‘‘இருக்கிறதே..!’’ என்ற அந்த நபர் ஒரு மனையைக் காட்டினார்.
அந்த இடம்... ‘36 சேம்பர் ஆப் ஷோலின்’ போன்று அரசியல் எதிரிகளை சாதுர்யத்தால் நீங்கள் பந்தாட வியூகங்கள் வகுக்கப்பட்ட இடம்! அதே நேரம், ‘36 சவ்ரங்கீ லேன்’ படத்தின் கதாபாத்திரம் வயலட் ஸ்டோன்ஹாம் போல் தாங்கள் தனிமையில் வாடிய இடமும் கூட!
- தொடர்வேன்... | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
29 days ago