எலி மை எனிமி

By வெ.சந்திரமோகன்

‘ஹேங் ஓவர்’ படத்தில் பல் தேய்க்கப் போனால் பாத்ரூமுக்குள் புலி ஒன்று இருக்கும். அதுபோல், டெல்லி முனிர்காவில் நான் குடியிருந்த வீட்டின் பாத்ரூமில் புலியை விட சற்றே சிறிய அளவில் (!) எலி ஒன்று இருந்தது. என் மனைவிதான் முதலில் பார்த்து சொன்னாள். லைட்டைப் போட்டு கதவைத் திறப்பதற்குள் அது டாய்லெட் ஓட்டைக்குள் புகுந்து ஓடிவிட்டது. அதன் வால் நெளிவது என்னவோ பாம்பு நெளிவது போல் இருந்தது.

தினமும் அந்த பெரிய எலி (பெருச்சாளி?) வர ஆரம்பித்து விட்டது. என் வீட்டு பாத்ரூமுக்கு நான் போவதற்கு முன் கதவைத் தட்டி அந்த எலியிடம் அனுமதி கேட்டுத்தான் போகவேண்டும் எனும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. லைட்டைப் போடாமல் கதவைத் தட்டாமல் திறந்துவிட்டால் அது வழி தெரியாமல் நம் மீது பாய்ந்து விடுமோ என்ற அச்சம் வேறு. அததுக்கு உரிய மரியாதை என்று ஒன்று இருக்கிறதல்லவா? புதுமைப்பித்தனின் ’வேதாளம் சொன்ன கதையில்’ வேதாளம் சொல்லும் “மனுஷனுக்கு இப்போதெல்லாம் பயப்படக் கூட திராணி இல்லை. அந்தக் காலத்துலே ராமன், கிருஷ்ணன் எல்லாம் எங்க கிட்டே நல்லத் தனமா பயப்படுவா!” நமக்கு புழுவைக் கண்டாலே பயம்தான். ஒருமுறை என் ஜீன்ஸுக்குள் என்னவோ ஊர்ந்து ஓடி காலில் இருந்து தொடைவரை வந்து விட்டது. ‘பூச்சி...பூச்சி...’ என்று கதறிப் பதறி அதை அப்படியே பிடித்து நசுக்கி விட்டேன் பயத்தில். பார்த்தால் கரப்பான் பூச்சி. உள்ளே இருந்தது கரப்பான் பூச்சியாக இல்லாமல் தேளாக இருந்தால் என்ன ஆகும்? பயப்படாமல் எப்படி இருக்க முடியும்?

எங்கள் வீடு இருந்தது தரைத் தளத்தில். முனிர்காவில் வீடுகள் எப்படி இருக்கும் என்று டெல்லிவாசிகளுக்குத் தெரியும். ஒன்றின் மீது ஒன்று

ஏறி முட்டி நிற்கும். நீங்கள் நடந்து போக எப்படியும் வழி கிடைத்து விடும் என்றாலும் இரண்டு மூன்று பேராக போக வேண்டுமானால் ஒருவர் வாலை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் ஓட்டிக்கொண்டு தான் செல்லவேண்டும். அதனால் எங்கே என்ன ஜீவன் இருக்கிறது என்று எளிதில் புரிபட்டு விடாது.

இந்த பெருச்சாளியின் வரவுக்கு முன்னால் சில எலிக்குட்டிகள் வந்து போயின. உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவு சிறிசு. ஆனால் என்ன அழிச்சாட்டியம். கடுப்பாகித் துரத்தினால் படு வேகத்தில் ஓடி மறைந்து விடும். உணவுப் பொருட்களை எல்லாம் ப்ரிட்ஜுக்குள் அடைத்து வைக்க வேண்டிய நிலை. விஷம் வைத்துக் கொன்றுவிடலாம் என்றால் மனைவி வேண்டாம் என்று விட்டாள். வீட்டுக்குள்ளேயே எங்காவது இறந்துவிட்டால் நாற்றமடிக்கும் என்று மறுத்தாள். சரி விட்டுப் பிடிப்போம் என்று இருக்கையில்தான் அந்தப் பெரிய எலியின் பிரவேசம் நடந்தது.

எலியைக் கொல்ல எளிய வழிகள் பல உண்டு. கட்டையை எடுத்து மடேரென்று மண்டையில் அடித்துக் கொல்வது, விஷம் வைப்பது, பொறி வைத்துப் பிடித்து காக்காவுக்கு ட்ரீட் வைப்பது என்று எக்கச்சக்க வழிமுறைகள் உண்டு. என் நண்பன் குமார் காலாலேயே மிதித்துக் கொன்றுவிடுவான்.

படுபயங்கரமாக இருக்கும். எனக்கு இயல்பிலேயே வன்முறை உடம்புக்குச் சேராது என்பதால் விஷம் வைக்கலாம் அல்லது பொறி வைத்துப் பிடித்து இனிமேல் இந்தப்பக்கமெல்லாம் வரப்படாது என்று எச்சரித்து அனுப்பலாம் என்று நினைத்தேன். சரியென்று எலிப்பொறி வாங்கப் போகலாம் என்று முனிர்கா கடைவீதிக்குள் வந்தால் எதிர்த்தாற்போல் எழுத் தாளர் ஷாஜஹான் வந்தார்.

“என்ன வாங்கப்போறீங்க” என்றார். விஷயத்தை சொன்னதும் “என்னைய்யா ..இதுக்குப் போய் எலிப்பொறி வாங்குறீங்க..பாத்ரூம் கதவைச் சாத்திவிட்டு ஒரே அடியா அடிக்க வேண்டியதுதானே ..இப்பக்கூட ஒரு எலியைக் கொன்னு போட்டுத்தான் வர்றேன்” என்றார். ராவண வதம் செய்த ராமன் போல் எனக்குக் காட்சியளித்தார்.

எலி என்னை விட இரண்டு கிலோதான் கம்மியாக இருக்கும் என்று என் உடம்பை சுட்டிக்காட்டி சொன்னதும் அரண்டு விட்டார். “பாத்ரூம் கதவை மூடினால் பலியாவது எலியல்ல நான்தான்” என்று அவருக்கு விளக்கினேன். “அந்த சைசுக்கெல்லாம் எலிப்பொறி கிடைக்காது..சர்க்கஸ்லே சொல்லி ஏதாவது கூண்டு வாங்கிட்டுப் போங்க” என்று விட்டு நடையைக் கட்டினார். கையறுநிலையில் தவித்த எனக்கு ஒரு கடைக்காரன் வழி சொன்னான்.

“பிடிங்க .. ராட் கில்லர். இதை சாப்பிட்டால் எலி ஒரு கிலோ மீட்டர் ஓடிச் சென்று உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே உயிர் விடும். எடுத்துச் செல்லுங்கள். உங்கள் வீட்டில் சாந்தி நிலவட்டும்" என்றான். பத்துரூபாய்க்கு இரண்டு வில்லைகள். கவனமாக மூலைக்கொன்றாக வைத்து விடுங்கள், எல்லாம் சரியாகி விடும் என்று அவன் கொடுத்த எலி விஷத்தை வாங்கி பாத்ரூமுக்குள் வைத்துவிட்டோம். மூலைக்கொரு வில்லை. காலையில் பார்த்தால் எலியையும் காணோம். வில்லையையும் காணோம். சரி இன்றோடு பிரச்னை தீர்ந்தது என்று பார்த்தால். மறுநாள் பாத்ரூமுக்குள் சத்தம். போய்ப் பார்த்தால் அதேபோல் ஆனால் சைஸில் கொஞ்சம் சிறிய இன்னொரு எலி “எங்கப்பனையா விஷம் வச்சிக் கொன்னே..உன்னை சும்மா விடமாட்டேன்டா” என்று எச்சரித்துவிட்டு டாய்லெட் ஓட்டைக்குள் ஓடி மறைந்து விட்டது.

அதற்கு நான் வைக்கும் வில்லை விஷம் என்று தெரிந்து விட்டது. இனி என்ன வழி என்று தெரியவில்லை. ஒன்று அது இருக்க வேண்டும் இல்லை நான் இருக்க வேண்டும். அதுதான் ஏரியாவுக்கு சீனியர் என்பதால் நாங்கள் வேறு வீடு பார்த்துக் குடியேறினோம்.

வே.சந்திரமோகன் - வலைப்பதிவுத்தளம்>http://chandanaar.blogspot.in/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்