சந்திரபாபு வேடிக்கையான மனிதர். ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காட்சியில் ‘‘வேங்கையா.. வேங்கையா! நீ எங்கய்யா போனே..?” என்று கத்தியபடி சந்திரபாபு பாலைவனத்தில் எம்.ஜி.ஆரைத் தேட வேண்டும். ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, செங்குத்தான மணல்மேட்டிலிருந்து சந்திரபாபு கீழே இறங்கி வருவதை படம் பிடிப்பதற்கு வசதியாக, கேமராவை நிலைப்படுத்தியிருந்தார்.
இயக்குநர் ‘ஆக் ஷன்’ என்று சொன்னதும் சந்திரபாபு மணல் மேட்டிலிருந்து ‘வேங்கையா… வேங்கையா!..’ என்று கத்தியவாறு கீழே இறங் கத் துவங்கினார். அவர் வேண்டும் என்று செய் தாரோ... அல்லது, இறங்கும்போது கால் இடறி யதோ, மணல்மேட்டிலிருந்து ஏழெட்டு குட்டிக் கரணங்களை போட்டு, கீழே விழுந்து, சுதாரித் துக்கொண்டு கேமராவைப் பார்த்தார். இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். எரிச்சலடைந்து விட் டார். ‘‘மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது’’ என்று இயக்குநரிடம் கூறினார். எம்.ஜி.ஆர் கோபத்துடன் இருப்பதை அறிந்த நீங்கள், நடந்ததைப் பற்றி சந்திரபாபுவிடம் கேட்டீர்கள்.
காட்சி தத்ரூபமாக அமையவேண்டும் என் பதற்காகவே, தான் அவ்வாறு விழுந்ததாக, சந்திர பாபு பின்னர் தங்களிடம் கூறினார். சந்திரபாபு விழுந்தது நகைச்சுவைக்கு பலம் சேர்த்தது என்றாலும், அவர் அம்மாதிரி விழப் போவதை இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் கூறி யிருக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் எண் ணம். இருப்பினும், காட்சியை நீக்காமல், ‘‘அவர் விழுவது போலவே இருக்கட்டும்’’ என்று கூறி விட்டார் எம்.ஜி.ஆர்.! இந்த விவகாரம் முடிந்தா லும் தொடர்ந்து சந்திரபாபுவால் பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருந்தன.
என்னருமை தோழி…!
பாலைவனத்தில், எம்.ஜி.ஆர், சோ, சந்திரபாபுவுடன் உங்களுக்கு ஒரு காம்பினே ஷன் காட்சி. எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஒப்பனை யில் மாறுதல்கள் தேவைப்பட்டதால், அவர் ஒரு கூடாரத்தில் ஒப்பனை செய்துகொண் டிருந்தார். சோவும் நீங்களும் நாற்காலிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தீர்கள். நீங்கள் இருவரும் சேர்ந்தால் அரசியலில் துவங்கி, இலக்கியம், சினிமா, ஆன்மிகம் என்று விவாதிப் பதற்கு விஷயங்கள் நிறைய இருக்கும். தங்களுடன் சந்திரபாபு வேறு சேர்ந்து கொண்டதால், சிரிப்பு வெடிகளாக சிதறின.
அப்போது ஒப்பனை முடித்து வந்த எம்.ஜி.ஆரை ஏற இறங்க பார்த்த, சந்திரபாபு, அவரது நேர்த்தியான ஒப்பனையில் லயித்துப் போனார். ‘‘வாத்யார்...லுக்ஸ் டாஷிங்...! ஹி லுக்ஸ் லைக் எ கிரீக் காட்..!’’ என்று கூற, சோவும், நீங்களும் லேசாக புன்னகைத்தீர்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கு என்ன தோன்றியதோ, விருட் டென்று அங்கிருந்து சென்று விட்டார். ஒரு இறுக்கமான சூழ்நிலை அங்கு தோன்றியது.
நிலைமையை ஊகித்துக்கொண்ட நீங்கள், ‘‘பாபு...! நீங்க சொல்ல விரும்பியதை தமிழி லேயே சொல்லியிருக்கலாம்’’ என்று கூறினீர்கள். ‘‘அவர் கிரேக்க கடவுளைப் போல அழகா இருக்கிறதாத்தானே சொன்னேன்..’’என்று சந்திரபாபு கூறினாலும், சுற்றி இருந்தவர்களின் தூபமும் சேர அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே அத்தோடு ஒரு திரை விழுந்து விட்டது. இருவரிடையே இணக்கத்தை ஏற்படுத்தி சந்திரபாபுவின், ‘மாடி வீட்டு ஏழை’ படத்தை முடிக்க வேண்டும் என்ற உங்களது நல்லெண்ணம், பலிக்காமலே போய்விட்டது!
ஆனால், ‘அடிமைப் பெண்’ திரைப்படம், தமிழகம் கண்டிராத மாபெரும் வெற்றியைப் பெற்றது. உங்களுக்கும் மிகப்பெரிய பெயர் கிடைத்தது. ஒகேனக்கல் ஆற்றில் தாங்கள் எம்.ஜி.ஆருக்கு வாள்பயிற்சி அளிக்கும் காட்சி யில் விசில் சத்தம் கூரையைப் பிளந்தது. ‘அம்மா என்றால் அன்பு…’ பாட்டின் மூலம் தங்கள் இசை ஞானத்தையும், முரசு நடனத்தின் மூலம் உங்களது நாட்டிய திறமையையும் எம்.ஜி.ஆர். வெளிக்கொணர்ந்தார்!
ஜீவா பாத்திரத்தை காட்டிலும், எதிர்மறை யான குணாதிசயம் கொண்ட அரசி பவளவல்லி யின் பாத்திரம் சூப்பர் ஹிட் ஆனது. சுட்டு விர லால், கீழுதட்டினை மடித்து, பற்களால் கடித்து பிறகு அலட்சியத்துடன் இதழை விடுதலை செய் யும் தங்கள் ஸ்டைல் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. அந்த கால மாணவிகளிடையே இந்த ஸ்டைல் மிகவும் பிரபலமானது. தளபதியாக வரும் ஆர்.எஸ்.மனோகரிடம் ஒரு காட்சியில் நீங்கள், ‘‘எனக்கும் அரசியல் தெரியும் தளபதியாரே..’’ என்று சவால் விடும்போது பின்னாளில் அந்தக் காட்சிக்கு உற்சாக வரவேற்பு! ‘அடிமைப் பெண்’ வசூலில் பெரும் சாதனைகளை புரிந்ததோடு, ஒரு வெள்ளிவிழா படமாகவும் அமைந்தது. சிறந்த படம் விருது, பிலிம் பேர் விருதுகள் வென்றது.
இதே வருடத்தில் சிவாஜி கணேசனுடன் நீங்கள் நடித்த இரண்டு படங்கள் வெளியாயின. ‘தெய்வ மகன்’ படத்தில் தந்தை, இருமகன் கள் வேடத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. தாங்கள் முன்பே கூறியது போன்று, விருது கிடைத்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
‘தெய்வ மகன்’ படப்பிடிப்பில் ஒரு சுவை யான சம்பவம். தந்தை சிவாஜி கணேசனிடம் தன் காதலியான தங்களை அறிமுகம் செய்ய அழைத்து வருவார், இரண்டாவது மகனாகவும் நடிக்கும் சிவாஜி. தந்தையை கண்டதும், பயந்து நெளிந்து, அசைந்தாடி, நகத்தை கடித்துக்கொண்டே நிற்பார்.
படம் முழுவதும் இரண்டாவது மகன் பாத்திரத்தின் மேனரிசமாக இது இருக்கும். இதை கவனித்துக் கொண்டிருந்த நீங்கள், சிவாஜி கணேசனிடம், ‘‘நீங்கள்…யாரை இமிடேட் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். அவரிடம் சொல்லி விடட்டுமா…’’என்று விளையாட் டாக பயமுறுத்திக் கொண்டே இருப்பீர்கள். சிவாஜியும்… ‘‘அம்மாடி..கண்டுக்காதே. மூன்று பாத்திரங்களை ஏற்று நடிக்கிக்கிறேன். வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற் காகவே அவரை காப்பி அடிக்கிறேன்…’’ என்று சிரிப்பார்.
‘தெய்வ மகன்’ படம் வெளியானதும், அனை வரும் கண்டுபிடித்துவிட்டார்கள். அவ்வாறு நகம் கடிப்பதும், நெளிவதும், இயக்குனர் தரின் மேனரிசம் என்று அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிந்திருந்தார்கள், என் தந்தை ‘சித்ராலயா’ கோபு உட்பட! சிவாஜி கணேசனுடன் நீங்கள் நடித்த ‘குருதட்சிணை’ படம், சுமாராகத்தான் போனது. அதில் சிவாஜி கணேசன், பத்மினிக்கு ஈடு கொடுத்து நீங்கள் நடித்திருந்தீர்கள்.
‘அடிமைப் பெண்’ படப்பிடிப்பின்போது ஒரு நாள் உணவு இடைவேளையில் எம்.ஜி.ஆரிடம், ஒரு கதையைக் கூறினீர்கள். அந்தக் கதை ஏற்கனவே, நீங்களும், என்.டி. ராமாராவும் ஜோடியாக நடித்து, வெளிவந்த ‘கதாநாயகுடு’ படத்தின் கதை. எம்.ஜி.ஆருக்கு இந்தக் கதை மிகவும் பிடித்து போனது. முல்லபுடி வேங்கட ரமணா என்பவரின் கதை அது. அதை தமிழில் விஜயா இன்டர்நேஷனல் சார்பில் நாகிரெட்டி தயாரித்தார்.
படத்தில் தனக்கு பொருத்தமாக இருக்கும் படி சில மாற்றங்களைச் செய்த எம்.ஜி.ஆர்., படத்தில் தனது பாத்திரத்தின் பெயரையும் ‘துரை’ என்று வைத்தார். அண்ணாவின் மரணம் அவரை எவ்வளவு தூரம் பாதித்திருந்தது என் பதை இதிலிருந்து புரிந்து கொண்டீர்கள். அது மட் டுமா... எம்.ஜி.ஆர். மீது மக்கள் கொண்டி ருந்த அனுதாபம்தான் அலையாக எழுந்து 1967 தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தியது என்று நீங் கள் கூறியிருந்ததை இந்த படத்தின் மூலம் அவர் பரிசோதிக்க முடிவு செய்துவிட்டார் என்பதை யும் புரிந்து கொண்டீர்கள். அந்தப் படம்…
- தொடர்வேன்... | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
29 days ago