சினிமா வியாபாரம்

By அருண்.மோ

திரைப்படம் என்றால் அது வணிகம்தான்... முதல்போட்டவன் என்ன கலை சேவையா செய்வான் என்று பலர் எப்போதும் ஓர் எதிர்க்குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நான் மிக உறுதியாக அடிக்கோடிட்டு சொல்லிவருகிறேன், சினிமாவில் வியாபாரம் இருக்கலாம்; ஆனால் வியாபாரம் மட்டுமே சினிமாவாக இருந்தால் அதை அனுமதிக்க முடியாது என்று. ஆனால் இரண்டிற்குமான வேறுபாட்டை கூட அறியாதவர்கள், சினிமா வெறும் வியாபாரம்தான் என்று வாதிடுவது வேடிக்கையான ஒன்று.

பள்ளிக்கூடங்களில் வசூலிக்கும் நன்கொடையை முன்வைத்து, கல்வி இங்கே வியாபாரம் ஆகிவிட்டது என்று எதிர்க்குரல் எழுப்பும் நண்பர்கள், அதை எதிர்த்து எல்லாரும் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நண்பர்கள், சினிமாவே வியாபாரமாகிவிட்டது என்பதை மட்டும் மிக வசதியாக மறந்துவிட்டு, அதை எதிர்த்துப் பேசுபவர்களை நோக்கி சினிமா அப்படிதான் இருக்கும், அதை நாம் அனுசரித்து போக வேண்டும், முதல் போட்டவன் என்ன பண்ணுவான் என்பது மாதிரியான கேள்விகளை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கூட நன்கொடை, கல்வி வியாபாரம் என்பது நம்மை நேரடியாக பாதிக்கக் கூடியது. எனவே அதற்காக நாம் எதிர்க் கேள்வி எழுப்புகிறோம். ஆனால் சினிமா வியாபாரம் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதல்ல, என்பதால் அது பற்றிய எந்தவித சுய பிரக்ஞையும் இன்றி நாம் அதை எதிர்த்து பேசுபவர்களைக் கூட வாயடைக்க செய்து விடுகிறோம்.

சினிமா என்பது முழுக்க முழுக்க வியாபாரம் என்று நாமாகவே முடிவு செய்துவிட்டால், கல்வி வியாபாரம், தினசரி வாழ்வின் அத்தியாவசமான பொருட்கள், பால் முதற்கொண்டு வியாபாரமாவதை நாம் வாயை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். செய்யும் வேலைக்கு ஏற்ற கூலி, போட்ட முதலில் இருந்து கொஞ்சம் கணிசமான லாபம், இது போதும் என்கிற வியாபாரம் என்றும் நிலைத்து நிற்கும். தவிர, அந்த மாதிரியான நேர்மையான வியாபாரம்தான் சமூகத்தின் மாற்றங்களிலும் பங்குகொள்ளும்.

ஒன்றுக்கும் உதவாத, குறைந்தபட்சம் சுடுதண்ணீர் வைப்பது எப்படி என்பதைக் கூட, மறைமுகமாகவேணும் சொல்லித் தரமுடியாத இந்த கல்வி, வியாபாரமாகிறது என்பதற்காக குரல் கொடுக்கும் நாம், தனது காட்சி படிமங்களால் இந்த சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சினிமா வியாபாரமாகிவிட்டதை சகித்துக் கொள்ள முடிகிறது என்றால், இது எத்தகைய நகைமுரண்.

சினிமாவில் வியாபாரத்தை எதிர்த்து போராடுவது என்பதும், அது குறித்து பேசுவது, எழுதுவது என்பதும் அந்த மாற்றம் உடனடியாக வந்துவிடும் என்பதற்காக அல்ல.. அந்த மாற்றத்தை நோக்கி ஒரு அதிர்வலையை இந்த சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். எல்லா சீர்கேடுகளையும் சகித்துக் கொண்டு ஒரு சமூகம் வாழ்கிறது என்றால், அந்த சமூகம் ஒரு நடைபிணத்திற்கு சமமானது.

சுற்றி நிகழும், சீர்கேடுகளை எதிர்த்து குறைந்தபட்சம் ஒரு எதிர்க்குரலாவது எழுப்ப வேண்டும். அந்த குரல் மாற்றத்தை கொடுக்கிறதோ இல்லையோ, ஆனால் மாற்றத்திற்கான முதல் புள்ளியை தொடங்கி வைக்கும், ஒரு அதிர்வை ஏற்படுத்தும், சீர்கேட்டை எதிர்த்து நிற்க அடுத்தடுத்த வருபவர்களுக்கான மன உறுதியை அளிக்கும்.

சினிமாவின் நேரடி வணிகத்தை விட, அந்த வணிகம் வீழ்ந்தால், மறைமுகமாக வீழும் நபர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஒரு இயக்குனர் சொன்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. கலை கலையாகவே நடந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், ஒரு கூத்து நடக்கிறது. மக்கள், கொஞ்சம் பணத்தை அவர்களின் வாழ்வாதாரத்திற்காக கொடுப்பார்கள்.

சில வருடங்கள் கழித்து, கூத்து நடத்துபவர்களுக்கு வருகின்ற காணிக்கை, அவர்களுக்கு மக்கள் கொடுக்கும் பணத்தின் பலம் கூடுகிறது. அவர்கள் செழித்து வளர்கிறார்கள். ஆனால் அப்போதும் கூத்து மாறவில்லை. கூத்து கலைஞர்களின் வாழ்க்கை தரம் பெருக, பெருக, கூத்துக் கலையும் சிறப்பு பெறுகிறது. ஆனால், இவர்களுக்கு பணம் வருவதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், அட இதில் இவ்வளவு பணம் வருகிறதா? என்று அசந்துப் போய், அந்த கூத்துக் கலைஞர்களுக்கு மேலும் மேலும் வாய்ப்பு பெற்று தருவதாக கலைஞர்களிடமும், அவர்களை அழைத்து வந்து சிறப்பாக நடத்திக் கொடுக்கிறோம், என்று அதன் தேவை இருக்கும் ஊர்க்காரகளிடமும் சொல்லி இடையில், இடைத்தரகர்களாக உருவெடுக்கிறார்கள். இந்த இடைத்தரகர்களால், கலை கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரமாக உருவெடுக்கிறது. கூத்தின் கலைத் தன்மை அப்படியே தன்னை இழந்து தெருவீதியில் நிர்வாணமாக நிற்கிறது. அந்த நிர்வாணத்தை ரசிப்பதற்கு இந்த நாட்டில் பார்வையாளர்கள் பஞ்சமா என்ன? இதோ இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த வியாபாரம்.

இங்கேதான் பிரச்சினையும். கூத்தில் கொஞ்சம் கலையம்சமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கலைஞர்களை நோக்கி நேரடியாக நாம் சொல்லலாம். அதை அவர்களும், உணர்ந்து ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கலை இங்கே விற்பனை பொருள் அல்ல. ஒரு நாட்டின் சொத்து. ஒரு சமூகத்தின் அடையாளம். கலாச்சார விருட்சத்தின் வேர். அதை வைத்துக் கொண்டு நாம் வியாபாரம் செய்ய முடியாது. அதை அழித்துதான், நாம் வியாபாரம் செய்ய முடியும் என்பது இந்த வியாபாரத்தை விரும்பும் எல்லா இடைத்தரகர்களும் முன்வைக்கும் கூற்று.

புற்றீசல் போல, இந்த கலையை வியாபாரப் பொருளாக மாற்றும் இடைத்தரகர்கள் பெருகிய உடன், அதை தாங்கிப் பிடிக்க நிறைய வேர்கள் தேவைப்படுகிறது. அதற்குத்தான், வெகுஜன சினிமாக்களை ஆராதிக்கும் ஊடகங்கள், பத்திரிகைகள், என வேரில் பல கிளைகள் தோன்றி, இந்த வெகுஜன சினிமாவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கலைஞர்கள் என்றாவது தங்கள் தவறை உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ள முற்பட்டாலும், உடனடியாக இந்த வெகுஜன சினிமாவின் அடிவருடிகள், அவர்களை தடுத்து, மீண்டும் இந்த வியாபாரத்தை பெருக்கி கொள்வதில் அக்கறை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மீறி, இது ஒரு கலை, நீங்கள் பணம் போடுகிறீர்கள், உங்களுக்கு தேவையான பணத்தோடு, கொஞ்சம் லாபத்தை எடுத்துக் கொண்டு இந்த கலையையும் உயிர்ப்பிக்க வையுங்கள் என்று யார் கேட்டாலும், தின்றுக் கொழுத்த இந்த வியாபார பெருச்சாளிகள், அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதே இல்லை. கலை, கலைஞர்களிடம் இல்லை. அது வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டு, தன்னை விடுவிக்க ஏதேனும் ஒரு ஆபத்பாந்தவன் வரமாட்டானா என்று காத்திருக்கிறது.

ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும்போது சினிமாவுக்கான கதையை எப்படி தயார் செய்வது என்கிற கேள்வி வந்தது. கதையில் கொஞ்சம் ட்விஸ்ட் இருக்கணும் என்றார் நண்பர். இப்படி நிறைய பேர் மனதில் இருக்கும் விஷயங்கள், சினிமாவிற்கு கொஞ்சம் ட்விஸ்ட் வேணும், காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், திடீர் திருப்பம், நல்ல பாடல்கள், ஒன்றிரண்டு சண்டைகள் இப்படி நிறைய இருந்தால் அது படம். அதுதான் சினிமா என்கிற எண்ணம்தான், அடுத்தடுத்து சினிமாவை நோக்கி வரும் அத்தனை இளைஞர்கள் மனதிலும் மிக ஆழமாக பதிந்திருக்கும் எண்ணம். தமிழ் சினிமாவையே பார்த்து, தமிழ்நாட்டிலேயே, அதுவும் அவரவர் சொந்த ஊரில், அதிகபட்சம் சென்னை வந்து தங்கியிருந்து சினிமாவில் வாய்ப்பு தேடும் அத்தனை நண்பர்களுக்கும், சினிமா என்றால் மேற்சொன்ன இந்த வஸ்துகள் இருந்தால் போதும் என்கிற எண்ணம் அப்படியே ஆழ்மனதில் பதிந்திருக்கிறது.

அட இதெல்லாம் மட்டும் இருந்தால் அது சினிமா அல்ல, இங்கே இதெல்லாம்தான் வியாபாரம் ஆகும் என்று யாரோ சில வியாபாரிகள் சேர்ந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்புதான் அது. இதென்ன சமையலா? இன்னன்ன பொருட்கள் இன்னன்ன விகிதத்தில் இருக்க வேண்டும் சொல்வதற்கு? அல்லது இன்னன்ன பொருட்கள் இருந்தால்தான் அது சாப்பிடத் தகுந்த உணவு என்று சொல்வதற்கு?

வெற்றி பெற்ற படங்கள் ஏதாவது ஒன்று, மேற்சொன்ன இந்த விஷயங்கள் இல்லாமல் வந்திருக்கிறதா என்றால், முன்னமே சொன்னது போல், பார்வையாளனையும், படைப்பாளியையும் இங்கே வியாபாரிதான் தீர்மானிக்கிறான். ஆனால் அதை உடைத்து, சினிமா என்கிற காட்சி மொழியை இங்கே உருவாக்க நாம் நிறைய பிரயத்தனப்பட வேண்டும்.

ஏதோ ஒரு சம்பவம் உங்களை பாதித்தால், ஒரு சமூக பிரச்சினை பற்றி எவ்வித முன்முடிவும் இல்லாமல் பேச துணிந்தால், கலை என்கிற வாசகத்தை உங்கள் மனம் தன் அகவிழியில் உணர்ந்திருந்தால் அங்கே எழும் சினிமா, நிச்சயம் எதிரில் இருக்கும் பார்வையாளனையும் கவரும். ஆனால், நாம் இங்கே ஏதோ சினிமா என்றால், இன்னன்ன விஷயங்கள் இருக்க வேண்டும். அதை செய்து கொடுக்க இன்னன்ன தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறோம். நான் நேசிக்காமல், நான் விரும்பாமல், என்னை பாதிக்காமல் ஒரு விசயத்தை எப்படி என்னால் திரையில் கொண்டு வர முடியும் என்று யாரும் சிந்திப்பது இல்லை. திரை என்பது வெறுமனே ஒரு வெள்ளைத் துணியல்ல. அது பார்வையாளனையும், நாம் சொல்ல விழையும் கதையையும் இணைக்கும் மாயவெளி. அந்த திரையில், உங்களை பாதித்த விசயத்தை, அதிகபட்சமான பூச்சுகள் இல்லாமல் உங்களால் சொல்ல முடிந்தால், நிச்சயம் இருக்கையில் இருக்கும் பார்வையாளனையும் அது கவரும்.

காட்சி பிம்பங்கள் ஏற்படுத்தும் மாற்றத்தை, அதன் வீரியத்தை நாம் இன்னமும் சரியாக உணரவே இல்லை. மாறாக நாம் சினிமாவை, முழுக்க முழுக்க வசனம் சார்ந்ததாகவும், பாடல்கள், நகைச்சுவை, சென்டிமென்ட் இவைகளை சார்ந்ததாகவும் மட்டுமே இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சினிமாவின் வகைமைகள் நிறைய இருக்கிறது. நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட், இன்னும் நிறைய வகைகள் இருக்கிறது. நாம் இப்போதுதான் கல்ட் என்றொரு வகைமையை அறிந்துக் கொள்ள விழைந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் நிறைய இயக்குனர்களுக்கு ஒரு படம் எடுக்க நல்ல கதையும், திரைக்கதையும் இருந்தால் போதுமென்பதைத் தாண்டி, நிறைய கோடிகள் தேவை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஷங்கர் மாதிரியான இயக்குனர்களிடம் இருபது கோடி கொடுத்து ஒரு படமெடுத்து கொடுங்கள் என்றால், அவரால் ஒருபோதும் அத்தனை சிறிய(!) பட்ஜெட்டில் படமெடுக்க முடியாது. அவருக்கு தேவை குறைந்தது ஐம்பது கோடிகளுக்கு மேல்.

இன்னொரு தயாரிப்பாளரின் பணம் என்றால் நூறு, இருநூறு கோடி வரை செலவு செய்து படமெடுக்கும் இயக்குனர்கள், தாங்கள் படமெடுக்கும்போது மட்டும் இரண்டு கோடியில் முடித்துக் கொள்கிறார்கள். அப்படி இரண்டு கோடியில் ஒரு படமெடுத்துவிட்டு, நல்ல படங்களை நான் ஆதரிக்கிறேன். அதற்கு என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய விரும்புகிறேன் என்று பேட்டியும் அளிக்கிறார்கள். இவர்கள் இரண்டு கோடியில் தயாரிப்பதுதான் நல்ல படம் என்றால், நூறு, இருநூறு கோடியில் இவர்கள் இயக்கும் படங்கள் மோசமானவை என்றுதானே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. எனில் இப்படி மோசமான படங்களை இயக்கிதான் ஆகவேண்டும் என்கிற அவசிய நிலை இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது.

தமிழ்நாட்டில், இருசக்கர, நான்குசக்கர வாகன விற்பனை, தண்ணீர் விற்பனை, பெட்ரோல் விற்பனை, உணவகங்கள், டாஸ்மாக், ரியல் எஸ்டேட் போன்று சினிமாவும் ஆகபெரிய வணிகமாகவே இருக்கிறது. சினிமா என்பது முதலீடு கோரும் கலை என்பதும், அதற்கு குறைந்தபட்ச முதலீடு தேவை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் மற்ற தொழிலை போல, சினிமாவில் வெறுமனே முதலீடு செய்துவிட்டு, அதற்காக பல மடங்கு லாபத்தை கோரி நிற்பது கலைக்கு எதிரான செயல். கலைக்கு எதிராக தமிழ்நாட்டில் நடக்கும் மிகபெரிய வன்முறை இது.

இப்படி வியாபாரத்தை, வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ்நாட்டில் சினிமாவின் மீது செலுத்தப்பட்ட வன்முறைகளில் சிலதான், குத்துப்பாட்டு, சண்டை, அர்த்தமற்ற பாடல்கள், சென்டிமென்ட் போன்ற பல விஷயங்கள். ஒரு நல்ல சினிமாவிற்கு மேற்சொன்ன எந்த விசயங்களும் தேவையற்றது. சினிமா என்பதே முழுக்க முழுக்க கேலிப்பொருளாக மாறியதுதான் இந்த வணிக முயற்சியின் உச்சம். திரையில் காட்சிகள் தோன்றும்போது, அதில் இருந்து அருமையான காட்சிப் படிமங்களை மனதில் ஏற்றிக்கொள்வதற்கு பதிலாக, விசில் அடிக்கவும், காகிதங்களை கிழித்துப் போடவும், பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யவும் மட்டுமே தமிழ் சினிமா அதன் பார்வையாளர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறதே தவிர, திரையில் தோன்றும் காட்சிகளை வைத்து, அந்த காட்சிகளின் மூலம் எற்படக்கூடிய பரவச நிலையை உணர எந்த பார்வையாளனுக்கும் தமிழ் சினிமா சொல்லிக்கொடுத்ததே இல்லை. அதையும் தாண்டி, எந்தவொரு படைப்பும், சமூக அக்கறை இன்றியோ, தன்னுடைய சமூகம் சார்ந்த எந்தவித உருப்படியான பதிவுகளையும் முன்வைக்கவில்லையோ, அது நிச்சயம் காலத்தால் நிச்சயம் நிற்காது. அப்படி எல்லா படைப்புகளும் காலத்தால் நிற்கமுடியாமல் போகும்போது, இங்கே படைப்பு ரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்தும்போது, நாம் தேமேனென்று கையைப் பிசைந்து கொண்டுதான் நிற்கவேண்டும்.

கனடிய தத்துவவியலாளரான Herbert Marshall McLuhan, இன் புகழ்பெற்ற வாசகமான “the world has become a global village” என்பதுதான் இப்போது நமது கண்கூடாக நிகழ்ந்து வரும் மாற்றம். இந்த உலகமே ஒரு கிராமமாக சுருங்கி வருகிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு சாதனம், எழுதப்படும் ஒரு கவிதை, கதை, நாவல் எல்லாம் அடுத்த சில நாட்களில் உலகம் முழுக்க சந்தைக்கு வந்துவிடுகிறது. சினிமா கூட கண்டுபிடிக்கப்பட்டு இரண்டாண்டுகளில் இந்தியாவிற்கு வந்துவிட்டது. உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் எல்லாவற்றையும் அடுத்த கணத்தில் பெற்றுவிடும் வாய்ப்பை இணையம் இப்போது சாத்தியப்படுத்தியுள்ளது. நாமும் உலகம் முழுக்க எல்லாவற்றையும் பெற்று நமது வாழ்க்கை முறையை கூட பெரும்பாலும் மாற்றிக் கொண்டுவிட்டோம்.

ஆனால் உலகின் சினிமாவில் நடந்த எந்த ஒரு கலைப்புரட்சியும் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவே இல்லை. தொழில்நுட்பத்தை நாம் உடனடியாக எங்கிருந்தாவது கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால் உலகின் மற்ற சினிமாவில் இருக்கும் அந்த கலைத் தன்மையை மட்டும் நமது சினிமாவில் நாம் இன்னமும் கண்டுகொள்ள இயலவில்லை. எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொண்ட ஒரு சமூகம் எப்படி சினிமாவில் மட்டும் அத்தகைய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டாமல் அல்லது அதுபற்றி யோசிக்க கூட வக்கில்லாமல் இருக்கிறது என்பதன் பின்னணியில் இருக்கும் அரசியலும், வியாபார நுணுக்கங்களும் அபாயகரமானது.

நிறுவனமயமான சினிமாவை ஆதரித்து விமர்சனம் எழுதி வரும், so called intellectual நண்பர்களும் மேற்கத்திய கோட்பாடுகள், மேற்கத்திய சினிமா கலைஞர்களை மேற்கோள் காட்டிதான் விமர்சிக்கிறார்கள். ஏன் பாலச்சந்தரின் கூற்றுப்படி, அல்லது பாரதிராஜாவின் புகழ் பெற்ற படமான “——–” இல் இருந்து என்று அவர்கள் யாரும் மேற்கோள் காட்டி நிகழ்கால சினிமாவை விமர்சிப்பதில்லை. இங்கே இன்னமும் உதாரணங்களே உருவாகாமல் இருக்கிறது.

மேற்கத்திய கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், மேற்கத்திய சினிமாக்களின் ரசனைப் பற்றி பேசும்போது மட்டும், மெதுவாக நகர்கிறது, புரியவில்லை என்கிற பல்வேறுவிதமான குற்றச்சாட்டோடு, அதெல்லாம் இந்த நாட்டின் கலாச்சாரத்தோடு, பாரம்பரியத்தோடு இல்லை, இந்த நாட்டு மக்களின் கலை வடிவம் இப்படிதான் இருக்கும் என்கிற ஒரு வெற்று பிரச்சாரத்தை வேறு நடத்தி வருகிறார்கள். சினிமா என்பதே முதலில் இந்த நாட்டின் கலைவடிவம் இல்லை. தவிர இந்த நாட்டிற்கென்று ஏதாவது கலாச்சாரம், இன்னமும் பாக்கி இருக்கிறதா? உலகம் முழுவதும் சினிமாவில் நடந்த எந்தவிதமான கலைப் புரட்சியும் அல்லது சினிமாவை ஒரு கலை ரசனையோடு அணுகும் விதமும் இன்னமும் இந்த நாட்டில் மட்டும் ஏற்படவே இல்லை. அதற்கான காரணம் முழுக்க முழுக்க இங்கே நாம் சினிமாவை வணிகப்பூர்வமாக அணுகியதுதான்.

வேட்டி அணிந்திருந்த நமக்கு பேன்ட் அணிவதில் எவ்வித கலாச்சார பிரச்சினையும் இல்லை. ஆனால் நமது வாழ்வில் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சினையை நமது கலைவடிவங்களின் வழியாக பதிவு செய்வதிலும், அதை காட்சிப்பூர்வமாக கொண்டு வரவேண்டும் என்பதிலும் மட்டுமே நாம் இதை ஒரு கலாச்சார எதிரியாக பாவிக்கிறோம். சினிமாவிற்கென்று இங்கே நிலையான சித்தாந்தங்கள் இல்லை. ஒரு கொள்கைக் கட்டுப்பாடு இங்கே இல்லை, தீவிரமான இயக்கங்கள் இங்கே உருப்பெற்று வளர்வது இல்லை. வளர்ந்தாலும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அது தன்னையும் ஒரு நிறுவன வரையறைக்குள் உட்படுத்திக் கொள்கிறது. திராவிட கட்சிகள்தான் அதற்கு ஆக சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் தங்களின் சிந்தனைகளை, இந்த கலைவடிவம் மூலம் மக்களிடையே கொண்டு போய் சேர்க்க நினைத்த தலைமை மாறி, இப்போது முழுக்க முழுக்க சினிமாவை ஒரு நிறுவன கட்டுமானத்திற்குள் கொண்டு செல்லும் வேலையை முழுமூச்சில் செயல்படுத்தி வருவதும் இதே திராவிட சிந்தனையாளர்கள்தான்.

அருண். மோ, கட்டுரையாளர் - தொடர்புக்கு thamizhstudio@gmail.com

வலைத்தளம் www.thamizhstudio.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்