என்னருமை தோழி..! 17: ஆப்ஸ் பெண்ணின் ஆங்கிலம்!

By டி.ஏ.நரசிம்மன்

ராதாகிருஷ்ணன் "அற்புதம்" என்று தன் பாட்டைப் பாராட்டியதும். சந்திரபாபு விடுவிடுவென்று நேராக ராதாகிருஷ்ணனை நோக்கி நடந்து, சட் டென்று அவரது மடியிலேயே அமர்ந்து விட்டார்! ஜனாதிபதியின் தோளில் கைபோட்டு அணைத்து, மறு கையால் அவரது முகவாய் கட்டையை பிடித்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்து விட்டார். ‘‘நீதாண்டா கண்ணா.. நல்ல ரசிகன்..’’ என்று ராதாகிருஷ்ணனின் மடியில் உட்கார்ந்தபடியே சொல்ல, பாதுகாப்பு அதிகாரிகள் பதறிப் போய் ஓடி வந்தார்கள்.

‘‘இவன் என்ன லூசா?’’ ... சிவாஜி கணேசன் அலறியேவிட்டார்.

‘‘சந்தியா... இவரு குடிச்சிருக்காரா என்ன..?’’ பயந்து போன ராஜசுலோச்சனா கேட்டார்.

ஜெமினி கணேசன் பாய்ந்து சென்று ஜனாதிபதியின் மடியில் இருந்து சந்திரபாபுவை இழுப்பதற்கு முயன்றார். கலைக் குழுவினரின் முகத்தில் ஈயாடவில்லை.

‘‘ஹி மஸ்ட் பி எக்ஸென்ட்ரிக்!’’... அங்கிருந்த வடநாட்டு பாடகர் மன்மோகன் தாகூர் கூற, அருகில் இருந்த நீங்களோ, ‘‘நோ..நோ... ஹி இஸ் எ ஜீனியஸ். பட் வெரி எமோஷனல்...’’ என்று கூறினீர்கள்.

நல்லவேளை, சந்திரபாபு உணர்ச்சிவசப் பட்டிருப்பதை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் புரிந்துகொண்டு அவரைத் தட்டிக்கொடுத்தார். பின்னர் கலைக் குழுவினர் அனைவரும், சந்திர பாபுவை திட்டித் தீர்த்தபோது, அவர் தங்களிடம் வந்து, ‘‘அம்மு! நான் செஞ்சது தப்பா? அவர் என் கலையைப் பாராட்டினார். நான் அவரது ரசிகத்தன்மையை பாராட்டினேன். இதுல..ஜனாதிபதி என்ன... குடிமகன் என்ன?...’’ என்று ஆதங்கத்தோடு கேட்க, ‘‘ஐ ஆம் ஏபிள் டு அண்டர்ஸ்டாண்ட் யூ..!’’ என்று நீங்கள் சமாதானப்படுத்தினீர்கள்.

உங்கள் முதல் ஹீரோ ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமான காந்த் என்று பலரும் சொல்வார்கள். ஆனால், முதன் முதலாக கேமரா முன்பாக நீங்கள் தோன்றியது சந்திரபாபுவுடன்தான் என்பது பற்றியும் சொல்லி இருக்கிறீர்கள்!

‘நன்ன கர்தவ்ய’ என்கிற கன்னடப் படம், 1964-ல் தயாரிக்கப்பட்டது. அதில் மூன்று ஹீரோக்கள் ஒரே அறையில் தங்கி இருக்க, அதே தெருவில் வசிக்கும் விதவைப் பெண்ணாக நீங்கள் நடித்தீர்கள். உங்கள் தாய் சந்தியாவே இந்தப் படத்தில் உங்களுக்கு மாமியாராக நடித்தார்.

தமிழில் முதன் முதலாக ‘வெண்ணிற ஆடை’ வந்தபோது. இங்கேயும் விதவை வேடமா என்றுதான் முதலில் தயங்கினார் உங்கள் தாய். ‘நன்ன கர்தவ்ய’ படத்தில் நடிக்க வந்த சந்திரபாபு, நீங்களும், சந்தியாவும் தமிழில் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு, ‘‘என்ன நீங்க.. தமிழ் பேசறீங்க.. நீங்க கன்னடக் காரங்க இல்லியா..?’’ என்று கேட்க, உங்கள் தாய்... ‘‘இல்லை...நாங்க ரங்கத்து ஐயங்கார்...’’ என்று சொல்ல... வெகு விரைவில் உங்களுடன் நட்பாகிவிட்டார், சந்திரபாபு!

நீங்களும் சந்திரபாபுவும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வீர்கள். உங்களது கான்வென்ட் ஆங்கிலத்தைப் பார்த்து வியந்து போன சந்திரபாபு, ‘‘ஹேய் அம்மு! உண்மையைச் சொல்லு... நீ ஆப்ஸ் பொண்ணுதானே..? (ஆங்கிலோ இந்தியப் பெண் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்!) சும்மா.. தமிழ் பொண்ணுன்னு உடான்ஸ் உடறே! உங்கம்மா உன்னை ஆப்பக்காரி கிட்டேதான் வாங்கிருக்காங்க’’ என்றெல்லாம் கேலி செய்வார்.

அப்போது அவர் உங்களிடம் தனது ‘மிமிக்ரி’ திறமைகளைக் காட்டி சிரிக்க வைப்பது வழக்கம் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் கலைக் குழு விஷயத்துக்கு வருவோம். கலைக் குழுவினர் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம், நட்சத்திர இரவில் வசூலான நிதியை அளித்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், நீங்கள் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி பிரதமரிடம் அளித்தீர்கள்! பிரதமர் தயங்க, உடன் இருந்த சந்தியா, ‘‘ஐயா... வாங்கிக் கொள்ளுங்கள்’’ என்று வற்புறுத்த, பிரதமரும் நகைகளைப் பெற்றுக் கொண்டார்.

என்னருமை தோழி...!

‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தை படமாக எடுக்க இருப்பதாக உங்கள் தாய் கூறியதும் இந்த சம்பவங்கள் எல்லாம் உங்கள் மனத் திரையில் ஓடி உங்களை நெகிழ வைத்தன. ‘கலாட்டா கல்யாணம்’ படத்தை சிவாஜி கணேசனின் சொந்த நிறுவனம் தயாரித்தது.

அதற்கென பெரிய விளம்பர உத்தியைக் கையாண்டது. ‘கனவுக் கன்னி’ ஜெயலலிதா முதல் முறையாக நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் படம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது.

‘சிவாஜி கணேசனுடன் நடிப்பது குறித்து ஏதேனும் கேட்பாரோ?’ என்கிற கவலையுடன்தான் எம்.ஜி.ஆரைப் பார்க்க உங்களை அழைத்துப் போனார் சந்தியா. ஆனால், அவர் அது குறித்து ஒன்றுமே பேசவில்லை. தனது அடுத்த படம் தொடர்பாக நேரே விஷயத்துக்கு வந்தார்.

‘‘அம்மு... எனது நூறாவது படம், ஜெமினி பேனரில் இயக்குநர் சாணக்யா இயக்கத்தில் ‘ஒளி விளக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இயக்கியவர் சாணக்யா. நூறாவது படம் என்பதால் கூடுதல் சிறப்பாக இருக்க வேண்டும். நீதான் கதாநாயகி. நேரம் கிடைக்கும்போது, சாணக்யாவிடம் கதையை கேட்டுக் கொள்’’ என்று உங்களிடம் எம்.ஜி.ஆர். கூறினார்.

ஏற்கெனவே, கையில் பத்து படங்கள், சிவாஜி கணேசன் படத்தையும் சேர்த்து. இந்நிலையில், இன்னொரு படத்துக்கு கால்ஷீட்டா? நடிக்க முடியுமா?.. யோசனையும், குழப்பமும் ஒரு பக்கம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் நூறாவது படம் என்பதால், மறுக்காமல் ஒப்புக்கொண்டீர்கள். பிறகு இயக்குநர் சாணக்யா தங்களிடம் கதை சொன்னபோதுதான் உங்களுக்கு அந்த விஷயம் தெரியவந்தது...!

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

படம் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

9 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்