அம்மா தியான முன்னேற்றக் கழகம்?!

By ஜாசன்

எந்த நேரம் பார்த்து ஜெய லலிதாவின் சப்ஸ்டிட்யூட் முதல்வர் பன்னீர்செல்வம் கண்ணை மூடி அம்மா சமாதி முன்னால் 45 நிமிடம் முப்பது நொடி (ஸ்டாப் வாட்ச் வைத்து கிடைத்த எக்ஸ்க்ளுசிவ் புள்ளி விவரமாக்கும்!) தியானம் செய் தாரோ... அவர் கண்ணைத் திறந்ததுமே, ‘‘சொல்லுங்க அண்ணே சொல்லுங்க... அம்மா ஆன்மா என்ன சொல்லுச்சு?” என்று ஊடகங்கள் மொச்சு எடுக்கவும், அம்மா பேரை சொல்லி ‘மடத்தை’ நடத்த நினைக்கும் அத்தனை தலைகளுக்குமே தியான மேனியா பிடித்துக் கொண்டது.

அம்மாவின் ஆன்மா அநேக மாக ஆசைப்பட்டதெல்லாம், தான் இருந்த காலத்தில் சட்டை பண்ணாமல் ஒதுக்கியே வைத் திருந்த ஊடகங்களுக்கு இனிமேல் செமத்தியாக தீனி போட்டு டி.ஆர்.பி ரேட்டை ஏற்றிக் கொடுக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கும்.

‘‘கவலை வேண்டாம்! இனி ஒரு மண்டலத்துக்கு பிரேக்கிங் நீயுஸுக்குப் பஞ்சமே இருக்காது’’ என்று சொல்லி சமாதியில் இருந்து பன்னீர் புறப்படவும், அதன் பின் தமிழகத்தில் பன்னீர் புயல் வீசியது.

குக்கிராமமாக சோம்பிக் கிடந்த கூவத்தூர், ‘உலகப் புகழ்பெற்ற’ சுகவாசஸ்தலமாக மாறியது. கரன்சி லட்சுமி, சொர்ணலட்சுமி எல்லாம் தோன்றி அருள் பாலித்து கடாட்சித்தார்கள். ஒ.பி.எஸ் தியான மகிமையால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தளபதியின் சட்டைக் கவசம் கிழிந்தது. சபாநாயகர் நாற்காலி தறிகெட்டு டான்ஸ் ஆடியதில், தான் இல்லாத சமயம் அந்த நாற்காலியை ரிசர்வ் வங்கி கஜானாவில் வைத்துப் பூட்டலாமா என்ற ரேஞ்சுக்கு சபாநாயகர் சிந்திக்க வேண்டி வந்தது.

பன்னீர் தியான பலன் அதோடு விட்டதா? கம்பிக்குள் தியானம் பண்ண பெங்களூருவுக்கு அனுப் பப்படுவதற்கு முன்னால், ரெண்டு நாளாவது ‘தமிழகத்தின் நிரந்தர’முதல்வராக உட்காருகிற பாக்கியத்தை சின்னம்மாவிடம் இருந்து பறித்து, அந்தப் பந்தை கவர்னர் மாளிகைக்குஉருட்டித் தள்ளியதும் தியான மகிமையே அல்லவா!

சட்டப்பேரவையில் ஆளுங் கட்சி உறுப்பினர்கள் பேசும்போது முதல்வர் இருக்கும் திசை நோக்கி மெகா கும்பிடு போட்டு, ‘‘மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா... என்னை வாழவைத்த தாயே!’’ என்றெல்லாம் போற்றி பாடாமல், ‘‘மாண்புமிகு பேரவைத் தலை வரே’’ என்று பேச்சைத் தொடங்கி விட முடியுமா முன்பெல்லாம். ஒருவேளை சின்னம்மா அந்த நாற்காலியில் உட்கார்ந்து இருந் தால், சின்னச் சின்ன ‘டிங்கரிங்’ வேலைகளுடன் கூசாமல் அதே போற்றிப் பாடலைத் தொடர்ந் திருக்கத்தானே வேண்டும்.

பன்னீரை புரட்சி செய்யத் தூண்டிவிட்ட அம்மாவின் ஆன்மா, தீர்ப்பு முடிவையும் அட்வான் ஸாகப் பன்னீர் காதில் ஓதியிருக்கத்தான் வேண்டும். இல்லாட்டி, பணிவு புகழ் பன் னீருக்கு எங்கிருந்து வரும் சின்னம்மாவுக்கு எதிராகவே சீறுகிற தைரியம்!

முதல்வர் வீட்டுக்கோ, கட்சி ஆபீஸுக்கோ, கோட்டைக்கோ அல்லது கடைவீதிக்கோ... புறப் படும்போதும் சரி... போய்ச் சேருகிற இடத்திலும் சரி... ரேஷன் கடை மற்றும் ஐ.பி.எல் மேட்ச் டிக்கெட் க்யூ போல் வரிசையாக நின்று கூப்பிய கரங்களுடன், ஆதி மனித போஸில் குனிந்த முதுகுடன் நிற்பதுதானே மரபு!

என்றைக்காவது இந்த எம்.எல்.ஏ-க்களும், மந்திரிகளும் நினைத்திருப்பார்களா... முதல்வர் காலையே மிதித்துக்கொண்டு, அவருக்கு சரிசமமாக கூட்டம் கூட்டமாக பத்திரிகைகளுக்குப் போஸ்கொடுக்கிற காலமும் வருமென்று!

இந்தப் பணிவு, குனிவை எல்லாம் பழங்கதையாக்கி… நீதிதேவன், இந்தத் தடவையாவது கணக்குப் பிழையின்றி தீர்ப்பு கொடுப்பதற்கும் பன்னீரின் தியானத்தால் மனமிரங்கி அம்மா வின் ஆன்மாதான் வழி செய்ததோ என்னவோ..!

‘பன்னீர் பெற்ற பாக்கியம் பெறுக இவ்வையகம்’ என்று அம்மா ஆன்மா அலறியதோ என்னவோ, நிதி அமைச்சர் என்ற லக்கி பிரைஸ் அடித்ததில், தலை கால் தெரியாத ஜெயக்குமார், ஒரு சேஞ்சுக்கு பட்ஜெட் பெட்டியை அம்மாவிடம் சமர்ப்பிக்க ‘பீச்’சுக் குப் போன ஜெயக்குமார், அப் படியே தானும் கொஞ்சம் தியானம் மேற்கொண்டார். வந்து பெட்டியைப் பிரித்தபோது, மூணு லட்சத்து சொச்சம் கோடி கடன்தான் சாதனை என்று தெரிந்தது. அவசரப்பட்டு இந்த நிதி அமைச்சர் பதவியை வாங்கிவிட்டோமோ... நம்மை உஷார்படுத்தவில்லையே அம்மா வின் ஆன்மா என்று பயந் திருப்பாரோ என்னவோ,

ஓ.பி.எஸ். தியானம் இன்னும் இன்னும் வைரஸ் ஆக... சாரி வைரலாக பரவுகிறது என்பதுதான் உண்மை.

புதுக்கட்சி தொடங்கிய தீபா தியானம் செய்தார். ‘‘அத்தை நான் உங்க தீபா’’ என்று சொல்லிவிட்டு வந்தவர், ஏதாவது நல்வாக்கு தருவாங்க என்று பார்த்தார். ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை. எதிர் வினையாக அவரது கணவரே தீபா பேரவையை விட்டு விலகி தனிக்கட்சி என்று அவரும் தியானத்தில் அமர்ந்தார்.

ஐயகோ! தேர்தல் நேரத்தில் கட்சிகளை உடைத்து விளை யாடும் அம்மா, தன் மறைவுக்குப் பிறகு அண்ணன் மகள் வீட்டி லேயே ஆன்மாவை விளையாட விடுவார் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்!

பரப்பன அக்ரஹாரத்தில் சசிகலாவின் தியானம் எதற்காக இருக்கும்? எக்காரணம் கொண்டும் தான் இருக்கும் அறை பக்கம் வந்துவிடவேண்டாம் என்பதே அவர் தியான வேண்டுதலாக இருக்கும்.

ஆர்.கே. நகர் தொகுதி வாக் காளர்கள் ஓட்டுக்கு ரேட்டு உயர தியானம் இருக்கலாம். தான் ஜெயித்து முதல்வர் ஆவதற்கு தினகரனும்... தப்பித் தவறியும் ஜெயித்து வந்து அவர் தன் பதவியைப் பறித்துவிடாமல் இருக்க எடப்பாடி பழனிசாமியும்... இந்த சர்க்கஸ் கூத்துக்கள் மாறி மாறி நடந்து... கூவத்தூர் மாதிரி காபந்து காட்சிகள் அடிக்கடி அரங்கேறி... கோஷ்டி மாறி கோஷ்டியாக தங்களை ‘கவனித் துக் கொண்டே’ இருக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ-க்களும் கூட்டு தியானம் நடத்தலாம்.

‘தியான டெக்னிக்’ இப்போது எல்லோருக்கும் பரவிவிட்டது. நண்பர் வீட்டுக்குப் போனபோது அவரது அம்மா தியானத்தில் ஆழ்ந்திருந்தார். என்ன வேண்டு தல் என்று நண்பரிடம் கேட்ட போது, ஒரு சீரியல் பெயரைச் சொல்லி ‘‘அந்தக் காயத்ரி கொட்டத்தை அடக்கி அவளை ஜெயிலுக்கு அனுப்பணுமாம்!’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்