வைட்டமின் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து உயிரி வேதியியல் அறிஞர் ஃப்ரெட்ரிக் கவுலேண்ட் ஹாப்கின்ஸ் (Frederic Gowland Hopkins) பிறந்த தினம் இன்று (ஜூன் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் நகரில் (1861) பிறந்தார். ‘சிட்டி ஆஃப் லண்டன்’ பள்ளியில் பயின்றார். அங்கு படிக்கப் பிடிக்காமல், தனியார் பள்ளியில் பயின்றார். பின்னர் லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கைஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அறிவியல், மருத்துவம் பயின்றார்.
* அதே கல்லூரியில் உடலியல், நச்சுத்தன்மையியல் துறை ஆசிரியராகப் பணியாற்றினார். பட்டாம்பூச்சி இறக்கைகளின் நிறமியல் தன்மைகள் குறித்து ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டார். உடல் அமிலங்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
* கேம்பிரிட்ஜ் சோதனைக்கூட நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று, உடலிய லின் ரசாயன அம்சங்கள் குறித்து ஆராய 1898-ல் அங்கு சென்றார். அங்கு உயிரி வேதியியல் துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.
* ட்ரினிட்டி கல்லூரியில் ஃபெல்லோவாகவும், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் துறை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். உயிரி வேதியியல் என்ற புதிய துறை அப்போதுதான் உருவானது. இதனால், அத்துறையின் முதல் பேராசிரியர் என்ற பெருமை பெற்றார்.
* செல்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். சிக்கலான வளர்சிதை மாற்ற ஆக்சிஜனேற்றம், குறைப்பு செயல்பாடுகள், எதிர்வினைகள் மூலம் செல்கள் எவ்வாறு ஆற்றலைப் பெறுகின்றன என்பதை ஆராய்ந்தார்.
* லாக்டிக் அமிலம் - தசைச் சுருக்கம் இடையே உள்ள தொடர்பு குறித்து, விஞ்ஞானி வால்டர் மார்லே ஃப்ளெட்சருடன் இணைந்து ஆராய்ந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் தசைகளில் லாக்டிக் அமிலம் சேர்ந்துவிடுகிறது என்பதை இவர்கள் எடுத்துக் கூறியது உயிரி வேதியியல் துறையின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
* விலங்குகள் உயிர் வாழவும், வளர்ச்சிக்கும் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, கனிமங்கள், தண்ணீர் மட்டுமல்லாது, வேறு சில முக்கியப் பொருட்களும் அவசியம் எனக் கண்டறிந்தார். அவற்றுக்கு ‘துணைபுரியும் உணவுக் காரணிகள்’ எனப் பெயரிட் டார். இவையே பின்னர் ‘வைட்டமின்கள்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
* வைட்டமின்களின் ஊட்டச்சத்து மதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்தார். அது, முதல் உலகப்போர் நடந்த நேரம். அப்போது உணவுப் பொருள் பற்றாக்குறை நிலவியதாலும், உணவுப் பொருட்களை பங்கிட்டுக் கொடுக்கும் நிலை இருந்ததாலும், இவரது இந்த ஆராய்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
* எந்த உணவுப்பொருளில் எவ்வளவு சத்து உள்ளது என்பதைக் கண்டறிந்து கூறினார். கோ-என்சைம் சேர்மங்களைக் கண்டறிந்து, அவற்றின் குணங்களை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். வைட்டமின் கண்டுபிடிப்புக்காக கிறிஸ்டியன் எய்க்மேனுடன் இணைந்து 1929-ல் இவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* இதுதவிர, ராயல் சொசைட்டியின் ராயல் மெடல், காப்ளே மெடல், சர் பட்டம், இங்கிலாந்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட பல பதக்கங்கள், கவுரவங்களைப் பெற்றார். மனிதகுலத்துக்கு மிகவும் பயனுள்ள ஆராய்ச்சிகளை இறுதிவரை மேற்கொண்ட ஃப்ரெட்ரிக் கவுலேண்ட் ஹாப்கின்ஸ் 86-வது வயதில் (1947) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago