கைலாஷ் சத்யார்த்தி 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற குழந்தைகள் நல ஆர்வலர்

அமைதிக்கான நோபல் பரிசு வாங்கியவரும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காகப் போராடிவருபவருமான கைலாஷ் சத்யார்த்தி (Kailash Sathyarthi) பிறந்தநாள் இன்று (ஜனவரி 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் (1954) பிறந்தவர். இயற்பெயர் கைலாஷ் சர்மா. தந்தை காவலராகப் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். உள்ளூரில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்றார். மின்பொறியியலில் பட்டம் பெற்றார்.

* பள்ளிக்குச் சென்றபோது, காலணி தைக்கும் தொழிலாளியின் மகன் ஏக்கத்துடன் இவரைப் பார்த்துள்ளான். ஏன் அவனை பள்ளிக்கு அனுப்பவில்லை என்று இவர் கேட்டதற்கு, ‘நாங்கள் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று அந்த தொழிலாளி கூறினார். அது, இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

* இளம் வயதில் ஒருமுறை ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சிலரை அழைத்திருந்தார். சமைத்தது தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால், அவர்கள் அனைவரும் சாப்பிடாமலேயே சென்றுவிட்டனர். இதில் மனம் நொந்தவர், தன்னை மேல் சாதியாக அடையாளம் காட்டும் ‘சர்மா’ என்ற குடும்பப் பெயரை நீக்கி, சத்தியார்த்தி என்று வைத்துக்கொண்டார்.

* 1980-ல் தனது பணியை விட்டு விலகி, நண்பர்களின் உதவியோடு ‘பச்பன் பச்சாவோ ஆந்தோலன்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். சமூகத்தில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக உலக அளவில் போராடிவருகிறார். இதனால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். இவரது அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.

* குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலகளாவிய அணி வகுப்பில் (Global March Against Child Labour) பங்கேற்றார். குழந்தை தொழிலாளர், கல்வி அமைப்பான பன்னாட்டு மையத்தில் (ஐசிசிஎல்இ) இணைந்து பணியாற்றினார்.

* குழந்தை தொழிலாளர் பிரச்சினையை மனித உரிமைப் பிரச்சினையாக அடையாளம் காட்டினார். இதுதான் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக கேடுகளுக்குக் காரணம் என்றார். ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தோடு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புப் போராட்டத்தை இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.

* பல இதழ்களின் ஆசிரியராகச் செயல்பட்டார். சமூக அக்கறை, மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் அடங்கிய யுனெஸ்கோ உயர்நிலைக் குழு உறுப்பினராக இருக்கிறார்.

* தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாமல் தயாரிக்கப்படும் கம்பளங்களை அடையாளம் காட்டவும், தரப்படுத்தவும் ‘ரக்மார்க்’ என்ற சுயசான்றிதழை அறிமுகம் செய்தார். ஐரோப்பா, அமெரிக்காவிலும் இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

* தொழிலாளர்களாகப் பணியாற்றிவந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களை பச்பன் பச்சாவோ ஆந்தோலன் அமைப்பு விடுவித்து அவர்களது மறுவாழ்வு, கல்விக்கு வழிவகுத்துள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

* 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் வழங்கப்பட்டது. இவரைப் பற்றியும் இவரது முக்கிய இலக்கான குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பையும் முன்னிலைப்படுத்தி குறும்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சமூக சீர்திருத்தம், சிறுவர் தொழிலாளர் முறை ஒழிப்பு உட்பட பல்வேறு சமூக சேவைகளை ஆற்றிவரும் கைலாஷ் சத்யார்த்தி இன்று 63 வயதை நிறைவு செய்கிறார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

மேலும்