பொதுப் போக்குவரத்து எனும் மானக்கேடு!

By செல்வேந்திரன்

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க, அரசுக்கு உதவும் வகையில் குடிமக்கள் வாரத்திற்கு ஒருநாளேனும் சொந்த வாகனங்களைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தினைப் பயன்படுத்த வேண்டும் என்று கடந்த மாதத்தில் ஒருநாள் மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்க்கட்சிகள், இதழியலாளர்கள், பொதுமக்கள் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரும் 'மாற்றத்தை விரும்பினால், அதை உன்னிலிருந்தே துவங்கு' என்பதற்கேற்ப அக்டோபர் 9-ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் தானும், தனது துறை ஊழியர்களும் பொதுப்போக்குவரத்தினைப் பயன்படுத்தப் போகிறோம் என அறிவித்தார். சொன்னபடியே மெட்ரோ ரெயிலில் பயணித்து ஊடகங்களில் பரபரப்பைக் கிளப்பினார். அவருக்கு நல்ல மீடியா மைலேஜ் கிடைத்தது. பொதுப் போக்குவரத்தால் எனக்கு என்னவெல்லாம் கிடைத்தது?! பார்ப்போம்.

நான் வாழும் கோவையில் மெட்ரோ ரயில்கள் கிடையாது. அரசாங்கம் அறிவிப்பதற்கு முன்னரே என்னளவில் சமூகத்திற்கு உதவலாமென்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேருந்துகளைப் பயன்படுத்தத் துவங்கினேன். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட தூரம் 15 கிலோமீட்டர். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு என் ஈருளி விசுவாசமாக 60 கிலோமீட்டர்கள் ஓடும். இரண்டு நாட்கள் அலுவலகம் சென்று வர ரூ.75/- ஆகும். நான் வாழும் அறிவொளி நகரிலிருந்து கோவைப்புதூர் பஸ் டெர்மினல்ஸ் வர ரூ.5/- கோவைப்புதூரிலிருந்து காந்திபுரம் வர ரூ.15/- காந்திபுரத்திலிருந்து அலுவலகமிருக்கும் எல்.ஐ.சி நிறுத்தம் வர ரூ.5/- ஒருநாளைக்கே ஐம்பது ரூபாய் செலவானது. சரி பரவாயில்லை. மாதம் 375 ரூபாய்தானே அதிகம் ஆகிறது என சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

ஈருளியில் அலுவலகம் செல்லும்போது காலை 9:15-க்கு வீட்டை விட்டு கிளம்பினால் எவ்வளவு மெதுவாக வண்டி ஓட்டினாலும் 9:45 மணிக்குள் அலுவலகத்தை அடைந்து விடுவேன். பேருந்து நாம் நினைத்த நேரத்திற்கு கிடைக்காதல்லவா? எட்டு மணிக்கே அறிவொளி நகரில் பஸ் பிடிக்க வேண்டும். மாறி மாறி அலுவலகம் வரும்போது மணி பத்தை தாண்டி விடும். சரி சீக்கிரம் வந்துதான் என்ன சரித்திர சாதனையைப் படைத்து விடப்போகிறோமென இந்த நேர விரயத்தையும் கூட பொறுத்துக்கொண்டேன். (மேலதிகமாக வாரத்திற்கு ஒருமுறை பஞ்சர், செல்ஃப் எடுக்கலை, ராடு கட்டாயிடுச்சி என நட்டாற்றில் இறக்கி விடுவதையும் கட்டுரையாளர் கருணை கூர்ந்து பொருத்துக்கொள்கிறார்.)

காலை நேரத்தில் உட்கார இடம் கிடைக்காது. தோளில் தொங்கும் பையை வைத்துக்கொண்டு நிற்பது நமக்கும் நமக்கடுத்து நிற்பவருக்கும் சிரமம். தலா 6 ரூபாய் கொடுத்து இஸ்திரி போட்ட சட்டையும், பேன்ட்டும் கசங்கி விடும். குளித்ததும் அடித்த கோடாலி (ஆக்ஸ்) திரவியமும் பரிதாபமாகச் செயலிழந்து கசகசத்து உடல் நாறத் தொடங்கி விடும். நாமென்ன ஆணழகன் போட்டிக்கா போகப்போகிறோமென இதையும் கூட பொறுத்துக்கொள்ளலாம்.

பொறுத்துக்கொள்ளவே முடியாத ஒன்றுண்டு. அது ஓட்டுனர்கள், நடத்துனர்களின் வசவு. 'யோவ் மேல வாய்யா... மேல வாய்யா... உள்ளே போ, படியில நிக்காதே, சில்லறை இல்லாம ஏன்யா எழவு எடுக்கற, இடிச்சா தள்ளி நில்லும்மா, யோவ் கெழவா எறங்கித் தொலையா...' வயது பாரபட்சமின்றி ஒருமையில் விளிக்கப்பட்டு, அருவருக்கத்தக்க ஒன்றைப் பார்ப்பது போல பார்க்கப்பட்டு, பார்வையாலே செல்லுமிடம் வினவி, மூஞ்சில் எறிவதைப் போல கிழித்து ஏறியப்படும் டிக்கெட்டை காற்றில் பறந்து விடும் முன் எட்டிப்பிடித்து - சுயமரியாதை உள்ள எவனும் நகரப் பேருந்தில் பயணிக்க விரும்பமாட்டான்.

பத்து வருடங்களுக்கு முன்னர் நான் ஊர் ஊராகச் சென்று கடைகளுக்கு தீப்பெட்டி சப்ளை செய்து வந்த காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் பதினைந்து பேருந்துகள் வரை மாறி மாறி பயணிப்பேன். அவ்வமயம், டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு சில்லறை பிறகு தருகிறேனெனச் சொல்லி ஏமாற்றிய, லக்கேஜ் ஏற்ற டிக்கெட் தொகை போக லஞ்சம் கேட்ட, நிறுத்தங்களில் நிற்காமல் சென்ற நடத்துனர்கள் ஒட்டுனர்கள் மீதெல்லாம் அஞ்சலட்டையில் புகார் எழுதி அனுப்புவேன். சம்பந்தப்பட்டவர்களே வீடு தேடி வந்து புகார்களை வாபஸ் வாங்கச் சொல்லி கெஞ்சிய அனுபவங்கள் உண்டு. இன்று அப்படியொரு நிலைமை இருப்பதாகத் தெரியவில்லை.

ஏன் இன்று இத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை?! சமீபத்தில் கோவையில் இலவச பஸ் பாஸ் வைத்திருந்த பள்ளி மாணவி, பேருந்திலிருந்து நடத்துனரால் தள்ளி விடப்பட்டார். பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். கொந்தளித்த பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தினால் நடத்துனர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முயலும்போது சம்பவ இடத்திற்கு வந்த நடத்துனரின் தொழிற்சங்கத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் இதர ஒட்டுனர்கள், நடத்துனர்களைத் திரட்டி போராட்டம் நடத்தி நகரத்தையே ஸ்தம்பிக்கச் செய்தார். பல மணி நேரங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யாராலும் எதுவும் செய்துவிட முடியவில்லை.

இதே போல ஈருளியில் வந்த இளைஞர்கள் இருவர் தங்களை வேகமாக உரசிச் சென்ற பேருந்தினை விரட்டிப் பிடித்து ஓட்டுனருடன் தகராறில் ஈடுபட்டதையும் பொதுப்பிரச்சனையாக்கி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தினர் கோவை நகரையே ஸ்தம்பிக்க வைத்தனர்.

இன்று எந்தவொரு போக்குவரத்து ஊழியர் மீதும் பொதுமக்களோ, அரசு அதிகாரிகளோ நடவடிக்கை எடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனம். எங்கள் மீது கைவைத்தால் சிட்டியையே அல்லோலப்படுத்திவிடுவோம் என்பதுதான் மேற்கண்ட சம்பவங்களின் மூலம் அவர்கள் சொல்ல வரும் செய்தி.

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். உரிமைகளைப் போராடிப் பெற்றுத் தருகிற அதே சமயத்தில் கடமைகளில் தவறுபவர்களைக் கண்டிக்கவும் செய்தால்தான் அது நியாயம். மாறாக சம்பந்தப்பட்டவர்கள் சொந்த கட்சியினைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக எந்த குற்றம் செய்தாலும் அணி திரண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வது காக்கா கூட்டத்தினைத்தான் நினைவு படுத்துகிறது. இதுவரை எந்த தொழிற்சங்கமாவது தானாக முன்வந்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்களா?!

ஈரோட்டில் கண்பார்வையற்ற இளைஞர் நள்ளிரவில் அத்துவான நடுரோட்டில் இறக்கி விடப்பட்ட சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தையே கலங்கச் செய்தது. பேருந்து எண்களை தனது கைப்பேசியில் அந்த இளைஞர் படம் பிடித்து ஆதாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில், ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென்பது ஒருவருக்கும் தெரியாது. இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்கள் நிறுத்தத்தில் காத்திருந்தால் நிற்காமல் செல்வது குற்றமென உயர் நீதிமன்றமே கண்டித்தது. அப்படிச் செய்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்போமென கோர்ட்டில் உறுதியளித்த அதிகாரிகள் இதுவரை எத்தனை பேரை தண்டித்திருக்கிறார்கள் எனத் தெளிவில்லை.

சட்ட விரோதமாக தரமற்ற தனியார் மோட்டல்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவது, பணத்தை வாங்கிக்கொண்டு கூரியர்காரர்களைப் போல தபால்கவர்களை, பார்சல்களை வாங்கி பட்டுவாடா செய்வது, லக்கேஜ் பாஸ்களில் குறிப்பிட்டதைவிட அதிக எடையுள்ள பார்சல்களை ஏற்றிக்கொள்வது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது என நீள்கிறது குற்றப்பட்டியல்கள்.

ஒரு பொறுப்புள்ள பிரஜையாக, பத்திரிகையாளானாக, அகத்தில் நல்ல குடிமகனாகத் தன்னை உணர்பவனாக என்னால் அன்றாடம் பேருந்தில் நிகழும் இந்த அவமானங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், தோல்வியுற்றவனாக பொதுப் போக்குவரத்தினைப் பயன்படுத்துவதைக் கைவிட்டேன்.

வீரப்ப மொய்லிக்கு மேற்கண்ட அனுபவங்கள் நிகழாமல் இருக்க எல்லாம் வல்ல வித்துவக்கோட்டம்மனைப் பிரார்த்திக்கிறேன்.

நினைவுகூர ஒரு தகவல்: கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபம்சிங் ஐந்து ரூபாய் சில்லறை பிரச்சினைக்காக ஓடும் பேருந்திலிருந்து நடத்துனரால் தள்ளி விடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செல்வேந்திரன், கட்டுரையாளர் - தொடர்புக்கு k.selventhiran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்