பிரபல கவிஞர், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரான தஞ்சை ராமையா தாஸ் (Thanjai Ramaiah Dass) பிறந்த தினம் இன்று (ஜூன் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தஞ்சாவூர் மானம்புச்சாவடியில் (1914) பிறந்தார். தஞ்சை புனித பீட்டர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். கரந்தை தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார். ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
* சிறிது காலம் அங்கு பணியாற்றிய இவருக்கு நாடகத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. ஒரு நாடகக் குழு தங்களது சபாவுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதும் வாத்தியாராக அவரை ஏற்றுக்கொண்டது. பின்னர் ‘ஜெயலட்சுமி கானசபா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். ‘மச்சரேகை’, ‘பகடை’, ‘பவளக்கொடி’, ‘விதியின் வெற்றி’, ‘அல்லி அர்ஜுனா’, ‘வள்ளித் திருமணம்’ ஆகியவை இவரது வெற்றிகரமான நாடகங்கள்.
* பல இடங்களுக்கும் சென்று நாடகம் நடத்தினார். காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர், சுதந்திரப் போராட்ட காலத்தில் பல போராட்டங்களில் கலந்துகொண்டார். நாடு விடுதலை பெற்ற பிறகு, இவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிக்கான பட்டயம், பதக்கத்தை மறுத்துவிட்டார்.
* தமிழ் நாடக உலகின் தலைமை ஆசிரியர் எனப் போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளைத் தன் குருவாக ஏற்றார். இவரது நாடக வசனங்கள் பிரபலமாகின. சினிமா துறையிலும் இவரது புகழ் பரவியது. 1947-ல் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ திரைப்படத்துக்கு முதன்முதலாகப் பாடல் எழுதினார்.
* தொடர்ந்து ‘திகம்பர சாமியார்’, ‘சிங்காரி’ உள்ளிட்ட படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். தொடர்ந்து பல பட வாய்ப்புகள் தேடி வந்தன. இவரது ‘பகடை பன்னிரண்டு’ நாடகம், ‘குலேபகாவலி’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.
* இப்படத்தில் இடம்பெற்ற இவரது பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இயக்குநர்கள் விரும்பும் பாடலாசிரியர் ஆனார். ஒரு திரைப்படத்துக்கு கதை, வசனம், பாடல்களை ஒருவரே எழுதும் நடைமுறையைத் தொடங்கிவைத்தவர் இவர்தான்.
* இவர் பாட்டு எழுதும் வேகத்தைக் கண்டு வியந்த எம்ஜிஆர், இவரை ‘எக்ஸ்பிரஸ் கவிஞர்’ என்றுதான் அழைப்பார். சினிமாவுக்குப் பாட்டு, வசனம், தயாரிப்பு என மும்முரமாகச் சுழன்றாலும், திருக்குறள் மீதான பற்றின் காரணமாக, ‘திருக்குறள் இசையமுதம்’ என்ற இசை நூலை எழுதினார்.
* பாமரர்களும் ரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாய, தத்துவக் கருத்துகளைப் பரப்பினார். சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், கண்டசாலா, ஆதிநாராயணராவ், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி உள்ளிட்ட அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையமைப்பிலும் பாடல்களை இயற்றியுள்ளார்.
* மயக்கும் மாலைப்பொழுதே’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘அழைக்காதே’, ‘புருஷன் வீட்டில் வாழப்போகும்’, ‘சொக்கா போட்ட நவாபு’, ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் அமர கீதங்களாக விளங்குகின்றன. ‘எத்தனை காலம்தான்’, ‘ஏச்சுப் பிழைக்கும் தொழிலே’, ‘ஆனந்தக் கோனாரே’ போன்ற பாடல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
* 83 திரைப்படங்களில் 500-க்கும் பாடல்களை எழுதியுள்ளார். 25 திரைப்படங்களுக்கு கதை வசனம், 10 படங்களுக்கு திரைக்கதை தீட்டியுள்ளார். காலத்தை வென்ற கீதங்களைப் படைத்த தஞ்சை ராமையா தாஸ் 51-வது வயதில் (1965) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago