பாலகங்காதர திலகர் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

பாலகங்காதர திலகர் - விடுதலைப் போராட்ட வீரர்

'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கிய விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் (Bal Gangadhar Tilak) பிறந்த தினம் இன்று (ஜூலை 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் (1856) பிறந்தவர். தந்தை, பள்ளி துணை ஆய்வாளர். புனேயில் ஆரம்பக் கல்வி பயின்றார். கணிதம், சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கினார். புனே டெக்கான் கல்லூரியில் 1877-ல் பட்டம் பெற்றார்.

* இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறையில் இருந்து மீட்பதற்காகவே சட்டப்படிப்பில் சேர்ந்தவர், 1879-ல் சட்டப்படிப்பை முடித்து, பல தேசபக்தர்களை சிறையில் இருந்து விடுவித்தார்.

* கோபால் கணேஷ் அகர்கர், விஷ்ணுசாஸ்திரி உள்ளிட்டோருடன் இணைந்து 1881-ல் 'கேசரி' என்ற மராத்தி இதழையும், 'மராட்டா' என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் தொடங்கினார். இதன் தலையங்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்க வைத்தன.

* இந்தியக் கலாச்சாரத்துடன் இணைந்த கல்வியை வழங்கவும், தேசபக்தி உணர்வை பரப்பவும் இவர்கள் இணைந்து 1884-ல் தக்காண கல்வி சபையைத் தொடங்கினர். இந்த அமைப்பு, பெர்கூசன் கல்லூரியாக வளர்ச்சியடைந்தது. மகாதேவ ரானடேயின் சார்வஜனிக் சபாவில் இணைந்து பொதுச் சேவை ஆற்றினார்.

* 'திலக் மகராஜ்', 'லோகமான்ய' என்று போற்றப்பட்டார். 'சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்' என்று முழங்கினார். ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். மக்களிடம் ஒற்றுமை, நாட்டுப்பற்றை ஏற்படுத்த கணபதி உற்சவம், சத்ரபதி சிவாஜி உற்சவங்களைத் தொடங்கிவைத்தார்.

* பம்பாய், புனேயில் 1896-ல் பிளேக் நோய் பரவியபோது நிவாரணப் பணிகளில் அயராது ஈடுபட்டார். அப்போது, மக்களைக் காப்பாற்றாமல் கொண்டாட்டங்களில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இவர் எழுதிய தலையங்கமே காரணம் என்று கூறி சிறையில் அடைக்கப்பட்டார்.

* வங்கப் பிரிவினை எதிர்ப்பு, சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவு, அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு என பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். 1907-ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 'மிதவாதிகள்' என்றும், திலகரின் தலைமையில் தீவிரப்போக்கு கொண்டவர்கள் என்றும் அக்கட்சியில் இரு பிரிவுகள் உருவாகின.

* தனது பத்திரிகையில் இளம் புரட்சியாளர்களை ஆதரித்து எழுதியதால், மீண்டும் 6 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு 'கீதா ரகசியம்' என்ற நூலை எழுதினார். நீரிழிவு நோயால் அவதிப்பட்ட இவரை விடுவிக்கக் கோரி, விக்டோரியா மகாராணிக்கு மாக்ஸ் முல்லர் கடிதம் எழுதினார்.

* 1914-ல் விடுதலையானதும் ஊர் ஊராகச் சென்று சுயாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1919-ல் இங்கிலாந்து சென்று இந்திய சுயாட்சிக்கு ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாலகங்காதர திலகர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1920 ஆகஸ்ட் 1-ம் தேதி 64-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்