கவி பிரதீப் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இந்தி கவிஞர், பாடலாசிரியர்

உலகப் புகழ்பெற்ற இந்தி கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான கவி பிரதீப் (Kavi Pradeep) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் (1915) பிறந்தவர். இயற்பெயர் ராமச்சந்திர நாராயண்ஜி திவேதி. இந்தூர், அலகாபாத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர், லக்னோ பல்லைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றார். ஆசிரியர் பயிற்சியும் பெற்றார்.

* ஏராளமான நூல்களைப் படித்தார். இளம் வயதிலேயே கதை, கவிதைகள் எழுதும் திறன் பெற்றிருந்தார். இவரது வீடு எப்போதும் இலக்கியவாதிகள் கூடும் இடமாக இருந்தது. அலகாபாத்தின் இலக்கியச் சூழலும் இவரது படைப்பாற்றலை மெருகேற்றின.

* இந்தி இலக்கிய ஜாம்பவான்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றார். இவர் ஆசிரியர் வேலை தேடியபோது, ஒரு கவியரங்கில் இவரது பாடல்களை பாம்பே டாக்கீஸ் ஸ்டுடியோ உரிமையாளர் கேட்டார். ‘கங்கண்’ திரைப்படத்துக்கு இவரைப் பாடல் எழுதச் சொன்னார்.

* இதைத் தொடர்ந்து, வெற்றிகரமான பாடலாசிரியராகப் பிரபலமடைந்தார். இனிய குரல் வளமும் கொண்ட இவர், அப்படத்தில் தான் இயற்றிய 4 பாடல்களில் மூன்றைப் பாடினார். அடுத்த ஆண்டு, ‘பந்தன்’ திரைப்படத்தில் இவர் எழுதிய அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன.

* விடுதலைப் போராட்ட இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, இவரது ‘சல் சல் ரே நவ்ஜவான்’ என்ற தேசபக்திப் பாடல் மிகவும் பிரபலமடைந்தது. தொடர்ந்து பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி, திரையுலகில் தனி முத்திரை பதித்தார். பாடலாசிரியராக மாறிய பிறகு ‘பிரதீப்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார். பிரதீப்குமார் என்ற பெயரில் பிரபல நடிகர் இருந்ததால், ‘கவி’ என பெயரில் சேர்த்துக்கொண்டார்.

* மக்களிடம் இவரது பாடல்கள் தேசபக்தியைத் தூண்டின. எளிய வார்த்தைகளில், சூழலுக்கேற்ப அமைந்த இவரது பாடல்கள் அனைவரையும் வசீகரித்தன. ‘தூர் ஹடோ யே துனியா வாலோ’ என்ற தேசபக்திப் பாடல் இடம்பெற்ற ‘கிஸ்மத்’ திரைப்படம் வெளிவந்தபோது, திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ குரல் அதிரச் செய்தது.

* ஒரு திரையரங்கில் இப்படம் மூன்றரை ஆண்டுகாலம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. புரட்சிப் பாடலை இயற்றியதற்காக இவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால், சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

* இந்திய - சீனப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்காக ‘ஆயே மேரே வதன் கே லோகோ’ என்ற பாடலை இயற்றினார். லதா மங்கேஷ்கர் குரலில் உணர்ச்சிகரமான இப்பாடலைக் கேட்டு நேரு உள்ளிட்ட தலைவர்கள் மட்டுமின்றி, இந்திய தேசமே அந்த வீரர்களுக்காகக் கண்ணீர் வடித்தது.

* ‘மை தோ ஆரத்தி உத்ரூ ரே சந்தோஷி மாதா கீ’ என்ற இவரது பக்திப் பாடல் அமர கீதமாக இன்றும் வழிபாடுகளில் பாடப்படுகிறது. 50 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில், சுமார் 1700 பாடல்கள், ஏராளமான தேசபக்திப் பாடல்கள், 72 திரைப்படங்களில் பாடல்களை இயற்றியுள்ளார்.

* தேசியக் கவி என்று போற்றப்பட்டார். வாழ்நாள் சாதனைக்காக தாதா சாகேப் பால்கே விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். இறுதிவரை தனது பாடல்களால் கவிதைக் களத்துக்கு வளம் சேர்த்த கவி பிரதீப் 83-வது வயதில் (1998) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்