சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஹீரோ, ஹீரோயினாக சித்தரிக்கிறார்கள். பெரும்பாலும் ஹீரோயினை பள்ளி மாணவியாகவும், ஹீரோவை வேலைவெட்டிக்கு செல்லாமல், குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் ஊர்சுற்றும் இளைஞனாகவும் காட்டுகிறார்கள். அந்தப் படங்களும் வெற்றிபெறுகின்றன. அந்த வெற்றிக்குப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்தே இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களை எடுக்கிறார்கள் என்பதுதானே காரணம். தங்களின் வியாபாரத்திற்காக இப்படிப்பட்ட படங்களை எடுப்பது சரியா?
சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம் என்று சொல்பவர்களே, அதைத் தவறாக உபயோகப்படுத்தலாமா? நாட்டில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று காரணங்கள் சொல்வது நியாயமாகாது. இளம் தலைமுறை எப்படி இருக்கிறது என்று காட்டுவதைவிட, எப்படி இருக்கவேண்டும் என்பதைக் காட்டுவதுதானே சமூக அக்கறையுள்ள படைப்பாளிகளின் கடமை.
மாணவப் பருவத்தில் உள்ளோர் காதலில் விழுவதில் சினிமாவின் தாக்கம் நிச்சயமாக உள்ளது. ஏனென்றால், மாணவர்கள் பெற்றோரைவிட தங்களின் நண்பர்களுடன்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். நண்பர்களிடம்தான் மனம்விட்டு பேசுகிறார்கள். அப்படிப் பேசும்போது சினிமாதான் அவர்களின் முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது. தொலைக்காட்சி, செல்பேசி, இணையம் போன்ற எல்லாவற்றிலும் சினிமாவே பிரதானமாக இருக்கிறது.
இதுபோன்ற திரைப்படங்கள் இங்கே U-சான்று பெற்று வெளிவருகிறது. ஆனால் இதே படங்களை வெளிநாடுகளில் 13 அல்லது 15 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க அனுமதி கிடையாது. ஆனால் இங்கே எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பிறந்த குழந்தை முதல் அனைவரும் பார்க்கிறார்கள். தணிக்கை குழுவும் இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களுக்கு அனுமதி அளிக்கிறதே?
பெற்றோரும் இதுபற்றி எதுவும் கவனிப்பதில்லை. அவர்களுக்கு குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யவே நேரம் போதவில்லை போலும். தமிழ்த் திரையுலக படைப்பாளிகள், பள்ளி மாணவ, மாணவியரின் காதலைப்பற்றி படம் எடுப்பதில் தங்களின் படைப்புத்திறமையைக் காட்டுவதை விடுத்து, பள்ளிகளில் இருக்கவேண்டிய கண்ணியமான ஆண்-பெண் நட்பைக் காட்டலாமே? அதுபோக திரைப்படமாக எடுக்க இன்னும் எவ்வளவோ வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறதே. தனது மகள்/மகன் பள்ளியில் படிக்கும்போதே காதலிப்பதைக் கண்டு எந்த பெற்றோராவது மகிழ்ச்சியடைவரா?
இங்கு யாரும் காதலுக்கு எதிரியல்ல. காதல் என்பது வாழ்வில் சரியான தருணத்தில் சரியான நபரைச் சந்தித்து, பரஸ்பர புரிதலுக்குப்பிறகு ஏற்படவேண்டிய ஒரு உணர்வு. ஆனால் அதைத் தூண்டுகிற வேலையை யாரும் செய்யவேண்டாமே. படைப்பாளிகள் அதைத் தவிர்க்கலாமே.
படைப்பாளிகள் மட்டுமல்ல, பெற்றோருக்கும் இதில் பெரும்பங்கு உண்டு. இப்போது காதல் செய்யும், காதலர்தினம் கொண்டாடும் கல்லூரி மாணவர்களைவிட, பள்ளி மாணவர்களே அதிகம். பல குடும்பங்களில் குழந்தைகளும் பெற்றோரும் மனம் விட்டு பேசுவதில்லை. குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடைவெளி உண்டாகிவிட்டது. இது மிகவும் ஆபத்தானது. இந்த வயதில் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி என்பதை யார் அவர்களுக்குப் புரியவைப்பது? தன்னைப்பற்றித் தனக்கே முழுமையாகத் தெரியாத வயதில், எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைப் புரிந்துகொண்டு, தேர்ந்தெடுத்துக் காதலிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? காதல் ஒன்றும் பள்ளியிலேயே ஆரம்பித்து அங்கேயே முடிந்து விடுகின்ற உணர்வு அல்லவே.
அடுத்து இணையம், செல்பேசி போன்றவை சினிமாவைவிட பலமடங்கு மோசமானவை. இவற்றால் எந்த அளவுக்கு நமக்கு நன்மை கிடைக்கிறதோ அதே அளவு தீமையும் உள்ளது. சினிமாவைப் பார்த்து மாணவர்கள் அறியாத வயதில் காதலில் விழுகிறார்கள் என்றால், இதுபோன்ற தொழில்நுட்பங்களைத் தவறான முறையில் உபயோகித்து அவர்கள் குற்றவாளிகளாகவே மாறுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சமூக அவலம்?
இப்போதுள்ள சூழ்நிலையில், மாணவர்களுக்குத் தனிமையும் இணையம், செல்பேசி போன்ற தகவல்தொடர்பு சாதனங்களும் சுலபமாகக் கிடைப்பதே, மாணவர்கள் மற்றவர்களின் துணை இல்லாமலேயே தீயப்பழக்கங்களைக் கற்று தீயவழியில் செல்ல காரணமாக இருக்கின்றது. இப்படி இருந்தால் எப்படி ஒழுக்கமான சமுதாயம் உருவாகும்?
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சில நிகழ்ச்சிகள் சினிமாவைவிட ஆபாசமானவை. 'நெடுந்தொடர்' என்ற பெயரில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் நமது பண்பாட்டை சீர்குலைத்துக்கொண்டு இருக்கின்றன. இவையெல்லம் பெற்றோரும் தங்களின் குழந்தைகளுடன் அமர்ந்து, பார்த்து ரசிக்கிறார்கள் என்பது கொடுமை.
குழந்தைகள் எதைப் பார்க்கவும், கேட்கவும், படிக்கவும் அவர்களின் பெற்றோர்தான் தணிக்கைக் குழுவாக இருந்து கண்காணிக்க வேண்டும். தொலைக்காட்சி, இணையம், செல்பேசி இவை எல்லாவற்றையும் குழந்தைகள் பயன்படுத்த பெற்றோர்தான் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதுபோன்ற சாதனங்களை குழந்தைகள் உபயோகப்படுத்தும்போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும்.
தேவையான அளவு மட்டும் இதுபோன்ற தொழிநுட்ப சாதனங்களை உபயோகப்படுத்திவிட்டு, மற்ற நேரத்தை அறிவார்ந்த புத்தகங்களை வாசிக்கச் சொல்லிப் பழக்கலாம். அதற்கு முதலில் பெற்றோர் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களைப்பார்த்துதானே குழந்தைகள பழகுவார்கள்.
மேலும் நேரம் கிடைக்கும்போது வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பயணம் மேற்கொள்ளலாம். நல்ல புத்தகங்களும், பயணங்களும் வளரும் இளம் பருவத்தினருக்கு நல்ல சிந்தனையைக் கொடுக்கும். 'அதற்கெல்லாம் நேரம் இல்லை' எனச் சொல்வது நியாயமாகாது. குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்கியதுபோல, அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக, பண்புள்ளவர்களாக வளர்க்கவும் நேரம் ஒதுக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமைதானே.
குழந்தைகளை ஒழுக்கமானவர்களாக வளர்க்க மற்றவர்களை நம்பி எந்த பயனுமில்லை. இதற்கு உதாரணமாக, சமீபத்தில் இணையத்தில் படித்த ஒரு செய்தியைக் கூறலாம்.
ஒரு குழந்தை, வேலைக்கு செல்லும் தன் தாயிடம் கேட்கிறது: "அம்மா, நீ வெளியே செல்லும்போது உனது பணப்பை அல்லது வேறு எதாவது விலையுயர்ந்த பொருளை, வேலையாட்களை நம்பி விட்டுச்செல்வாயா?" என்று கேட்கிறது. அதற்கு அந்தத் தாய் 'நிச்சயமாக மாட்டேன்" என்று பதில் கூறுகிறாள். பெண் குழந்தை கேட்கிறது "பின் எந்த நம்பிக்கையில் என்னை அவர்களுடன் விட்டு செல்கிறாய்?" என்று. இந்தக் கேள்விக்கு அந்தத் தாயால் என்ன பதில் கூற முடியும்? இதுதானே இன்று பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது.
மொத்தத்தில் இதில் நாம் எல்லோருமேதான் தவறு செய்கிறோம். அதை உணர்ந்து, தவறுகளைத் திருத்தி, நமது சமூகத்தை நாம்தானே நல்வழிபடுத்தவேண்டும்.
வெ.பூபதி, கட்டுரையாளர், தொடர்புக்கு boopat23@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago