ஆவலை வீசுவோம் 24 - சின்ன சின்ன தேடியந்திரங்கள்

By சைபர் சிம்மன்

| கோப்பு வடிவங்களில் துவங்கி, எழுத்துருக்கள், ஐகான்கள் மற்றும் லோகோக்களை தேட உதவும் தனித்தனி தேடியந்திரங்கள் இருக்கின்றன. |

இணையத்தில் நாம் தகவல்களை மட்டும் தேடுவதில்லை. புகைப்படங்களை தேடுகிறோம், வீடியோக்களை தேடுகிறோம். இவைத் தவிர அவரவர் துறை மற்றும் தேவைக்கேற்ப கோப்புகளை, லோகோக்களை, ஐகான்களை, எழுத்துருக்கள் என பலவற்றை தேடுகிறோம். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட நோக்கிலான இந்தத் தேடியந்திரங்கள் தேடலை எளிதாக்கி கொள்ள உதவுவதோடு, எதிர்பார்ப்பை கச்சிதமாக நிறைவேற்றித் தருகின்றன.

ஐகான்கள்

அடையாள சின்னங்கள் என புரிந்து கொள்ளக்கூடிய ஐகான்களை தேடும் அவசியம் வடிவமைப்பாளர்களுக்கு அடிக்கடி ஏற்படலாம். சராசரி இணையவாசிகளுக்கு கூட சில நேரங்களில் குறிப்பிட்ட ஐகான்கள் தேவைப்படலாம். இதுபோன்ற நேரங்களில் பொது தேடியந்திரங்களில் தேடிப்பார்ப்பதை விட, ஐகான்களுக்கான தேடியந்திரங்களில் தேடுவது எந்த அளவுக்கு பயன் மிக்கதாக இருக்கும் என்பதை இவற்றை பயன்படுத்திப் பார்க்கும்போது தான் தெரியும்.

ஐகான்கள் தேடல் என்று சொல்லும்போது முதலில் வந்து நிற்பவை ஐகான் பைண்டர் ( >https://www.iconfinder.com/ ) மற்றும் ஐகான்சீக்கர் ( >http://www.iconseeker.com/).

ஐகான் பைண்டர் 20,000 வகைப் பிரிவுகளில் ஒரு லட்சத்துக்கும் மேலான ஐகான்களை தேடலாம் என்கிறது. இதன் தேடல் கட்டத்தில் நாம் விரும்பும் ஐகானுக்கான குறிச்சொல்லை டைப் செய்த பிறகு பொருத்தமான ஐகான்கள் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் முதல் பார்வைக்கு இது வழங்கும் வாய்ப்புகள் கொஞ்சம் திகைப்பாகத்தான் இருக்கும்.

ஐகான்கள் எப்படி இருக்க வேண்டும், கையால் வரையப்பட்டதா? கார்ட்டூனா? அல்லது பிக்சல் வடிவிலானதா? இல்லை தட்டையானதா? என பல வகைகளில் இருந்து தேர்வுசெய்து கொள்ள முடியும். புகைப்படத் தன்மை கொண்டவை, வெளிக்கோடு மட்டும் கொண்டவை மற்றும் மென்மையானவை ஆகிய வாய்ப்புகளும் உள்ளன.

இவைத் தவிர வெக்டார் வடிவிலானதா? என்றும் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் வடிவமைப்பாளர்கள் இந்தத் தேர்வுகளை பார்த்தால் சொக்கிப்போவார்கள். இலவச ஐகான்களும் உண்டு. கட்டணச் சேவையாக பயன்படுத்த வேண்டிய பிரிமியம் ஐகான்களும் உண்டு. தேடல் பதம் தொடர்புடைய மற்ற பதங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. கட்டணச்சேவைக்கு சந்தாவும் இருக்கிறது.

ஐகான்சீக்கர் கொஞ்சம் எளிமையானது. குறிச்சொற்களை டைப் செய்து ஐகான்களை தேடிக்கொள்ளலாம். ஐகான் அளவுக்கான தேர்வு மட்டும் தான் இருக்கிறது. பிரபலமான ஐகான்கள் மற்றும் ஐகான் மேகங்கள் மூலமும் தேடிப்பார்க்கலாம்.

பைண்ட் ஐகான்ஸ் ( >http://findicons.com) இலவச ஐகான்களை தேடித்தருகிறது. மற்ற எந்த ஐகான் தேடியந்திரங்களை விடவும் அதிக ஐகான்களை தனது அட்டவணையில் கொண்டிருப்பதாக சொல்கிறது. தனது தேடல் நுட்பமும் மேம்பட்டது என்று கூறுகிறது. அதற்கேற்ப தேடலில் பலவித வாய்ப்புகளை முன்வைக்கிறது. ஒவ்வொரு ஐகானிலும் அதற்கான கோப்பு வடிவத்தையும் தேர்வு செய்யலாம். ஐகானுக்கான வண்ணங்களை கூட தேர்வு செய்ய முடிகிறது. கையால் வரையப்பட்டது, 3டி போன்றவற்றையும் குறிப்பிட்டு தேடலாம்.

இதில் இணையவாசிகள் தாங்கள் பார்த்த நல்ல ஐகான்களையும் சமர்ப்பிக்கலாம். ஐகான்களுக்கு பொருத்தமான குறிச்சொல்லை சமர்பிப்பது மற்றும் முடிவுகளின் தரத்தை மதிப்பிடுவது மூலம் தேடல் நுட்பத்தை மேம்படுத்திக்கொள்ள உதவவும் வழி செய்கிறது.

ஐகான் ஆர்க்கேவ் ( >http://www.iconarchive.com/) இன்னொரு அருமையான தேடியந்திரம். 2 ஆயிரம் வகைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐகான்களை தேட வழி செய்கிறது. தேடல் கட்டத்தின் கீழே குறிச்சொல் வழிகாட்டியும் இடம்பெறுகிறது. புதியவை, பிரபலமானவை, வகைகள் என ஐகான்களை பலவிதமாக தேடலாம். கலைஞர்களை முன்வைத்தும் தேடலாம். பின்னணி. அளவு, வண்ணம் போன்ற அம்சங்களின் அடிப்படையிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இணையவாசிகள் தேர்வு செய்யும் ஐகான்களை சேமித்து வைப்பதற்கான வசதி மற்றும் பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் இருக்கிறது. பிரிமியம் ஐகான்களை கட்டணம் செலுத்தி வாங்கலாம்.

வெரிஐகான் எளிமையான தோற்றத்துடன் ஆனால் தேடலில் அதிக வாய்ப்புகளை அளித்து கவர்கிறது. ஐகான்களை அவற்றின் அளவு மற்றும் ரகங்களுக்கு ஏற்ப தேடலாம்.

மிஸ்டர்.ஐகான்ஸ் ( >http://mricons.com/), ஐகான்ஷாக் ( >http://www.iconshock.com/icon-finder.php), பிளாட்டிகான் (http://www.flaticon.com/), ஐகான்ஸ்பீடியா ( >http://www.iconspedia.com/) என ஐகான் தேடியந்திரங்களின் பட்டியல் நீள்கிறது.

லோகோ தேடல்!

ஐகான்களை போலவே லோகோக்களை தேட விரும்பினால் இன்ஸ்டண்ட் லோகோ சர்ச் (http://instantlogosearch.com/) தேடியந்திரம் உதவுகிறது. பிரபலமான பேஸ்புக், டிவிட்டர் லோகோக்களில் துவங்கி எண்ணற்ற நிறுவனங்களின் லோகோக்களை தேடலாம், டவுண்லோடு செய்து கொள்ளலாம். நிறுவனங்களை குறிப்பிட்டு லோகோவை தேடிப்பார்க்கலாம்.

இதேபோல வெக்டீசி (http://www.vecteezy.com/) வெக்டார் வடிவங்களை தேட வழி செய்கிறது. வெக்டார்கள் பல தலைப்புகளின் கீழ் வகைப்பத்தப்பட்டுள்ளன. ராணுவம், கிளிப் ஆர்ட், மக்கள், மதம், வடிவங்கள் என பல விதமான தலைப்புகளை பார்க்கலாம்.

எழுத்துருக்கள்!

எழுத்துருக்கள் மூலம் தான் இணையத்தில் பெரும்பாலானவற்றை எதிர்கொள்கிறோம். விதவிதமான எழுத்துருக்கள் இருக்கின்றன. எழுத்துருக்களில் ஏதேனும் சந்தேகம் என்றாலோ அல்லது புதிய எழுத்துருக்கள் தேவை என்றாலோ கவலையே வேண்டாம், எழுத்துருக்களுக்கு என்றே பாண்ட்சீக், வாட் பாண்ட் ஈஸ் போன்ற அருமையான தேடியந்திரங்கள் இருக்கின்றன.

பாண்ட்சீக் ( >http://www.fontseek.com/) தேடியந்திரத்தில் குறிப்பிட்ட எழுத்துருவின் பெயரை குறிப்பிட்டு தேடலாம். எழுத்துருக்கள் அகர வரிசையிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

எழுத்துருவின் பெயர் தெரியாது, ஆனால் அதன் எழுத்துக்கள் நன்றாக இருப்பதாக தோன்றுகிறதா? அவற்றை அப்படியே சமர்பித்து எழுத்துரு என்ன என்று கண்டுபிடிக்கும் வசதியை மைபாண்ட்ஸ் ( >https://www.myfonts.com/WhatTheFont/) தேடியந்திரம் அளிக்கிறது.

வாட் பாண்ட் ஈஸ் ( >http://www.whatfontis.com/) மூலமும் எழுத்துருவை புகைப்படமாக சமர்பித்து தேடலாம்.

ஐடிண்டிபாண்ட் ( >http://www.identifont.com/) தேடியந்திரமும் எழுத்துருகளை பலவிதமாக தேடித்தருகிறது.

எழுத்துருவை பெயர் குறிப்பிட்டு அல்லது உருவத்தை சமர்பித்து தேடிக்கொள்ளலாம். குறிப்பிட்ட எழுத்துரு போன்ற எழுத்துருக்களையும் தேடலாம். எழுத்துரு தோற்றத்தை வைத்தும் தேடலாம். குறிப்பிட்ட நிறுவனத்தின் எழுத்துருக்களையும் தேடலாம். வடிவமைப்பிலும், உள்ளடக்கத்திலும் நேர்த்தியாக இருப்பது இதன் சிறப்பு.

கோப்பு வடிவங்கள்

இதைப்போலவே இணையத்தில் பலவகையான கோப்பு வடிவங்கள் பயன்படுத்தப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். கோப்பு வகைகள் மற்றும் தகவல்களை தேடுவதற்கு பைல் இன்போ ( >http://fileinfo.com/) தேடியந்திரம் கைகொடுக்கிறது. பைல் பார்மேட் ( >http://www.fileformat.info/) தேடியந்திரமும் இதற்கு உதவுகிறது. கோப்பு வடிவங்கள் தொடர்பான செய்திகளையும அணுகலாம். பைல் எக்ஸ்டென்ஷனும் ( >http://file-extension.net/seeker/) இந்த வரிசையில் வருகிறது.

- சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

| முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 23 - இணையத்தில் புத்தகம் தேடும் வழி! |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்