சென்ற தீபாவளியின்போது நண்பர் ஒருவர் அவர் வீட்டுக்கு அழைத்தார். மிக நல்ல நண்பர். போகும் போது நிறையவே உணவும் இனிப்புகளும் பார்சல் கொடுத்தனுப் பினார். நான் எப்போதும் போல வேண்டாம் என்று சும்மாங்காச்சிக்கும் முதலில் மறுத்தேன். மனதிற்குள் பயம்தான், எங்கே சரி பரவால்லங்க என்று திரும்பி வைத்துக்கொள்வாரோ என்று.ஆனால் அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. நிறையவே உணவும் இனிப்புகளையும் தூக்கமுடியாத அளவுக்கு நிரப்பிக்கொடுத்தார். அப்பாடா நைட்டுக்காச்சு என்று நினைத்தபடி கிளம்பினேன்.
புத்தாடை உடுத்தி முகத்தில் புன்னகையோடு கடக்கிற மைனாக் களையும் மயில்களையும் பார்த்தபடி சுகமாக வண்டியோட்டி வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கையில் காசில்லாததை உணர்ந்து சைதாப்பேட்டை பக்கமாக ஒரு ஏ.டி.எம்மில் நிறுத்தினேன்.
ஏ.டி.எம்-க்கு பாதுகாப்புக்காக ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். விரலால் உந்தித்தள்ளினாலே உதிர்ந்துவிடுகிற உறுதியான தேகமும் முகத்தில் எண்ணெய் வழிய கொஞ்சமாக சோகத்தையும் அப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார். இவருக்கே இரண்டு பேர் பாதுகாப்புக்கு வேணுமே என்று நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.
வண்டியை ஓரமாக நிறுத்தி ஏ.டி.எம் கதவை திறக்க, “தம்பி ஹெல்மெட்டை கழட்டிடுங்க.. திட்டுவாங்க” என்றார். யார் திட்டுவார்கள் யாரைத் திட்டுவார்கள் என்பது புரியவில்லை. ஆனால் அவர் திட்டுவாங்கியிருப்பார் என்பதை உணர்ந்து உடனே கழற்றினேன்.
“தம்பி அந்த கர்சீப்பையும்.”
கழற்றினேன்.
உள்ளே நுழைந்து பணத்தை எடுத்துக்கொண்டு விறுவிறுவென வெளியேறும்போது, வண்டியை எடுக்க உதவியபடி சல்யூட் அடித்தார். பாக்கெட்டில் சில்லறை தேடினேன்.
உடனடியாக அகப்படாத அந்த இரண்டு ரூபாயைத் தேடிக்கொண்டே அந்த பெரியவரிடம் “என்ன தாத்தா இங்க உக்காந்திருக்கீங்க? தீபாவளியெல்லாம் இல்லையா” என்று பேச்சுக்கொடுத்தேன். கையில் ஐந்து ரூபாய் அகப்பட்டது கொடுத்தேன். புன்னகையோடு வாங்கிக்கொண்டார்.
“இல்ல தம்பி... ஊருக்கு போணும்.. ஆனா போல” சொல்லும்போதே முகம் மாறியது.
“மெட்ராஸே காலியாகி கெடக்கு.. எந்த ஊரு... உங்களுக்கு?”
“மதுரப்பக்கம். ஊர்ல பேரய்ங்க நாலு பேர் இருக்காய்ங்க.. மூணு பசங்க.. பொண்டாட்டி போய்ட்டா. விவசாயம்தான். இப்ப இல்ல..” என்று உடைத்து உடைத்து வார்த்தைகளை முழுங்கினார். நான் தலையில் கர்சீப்பை கட்டிக்கொண்டிருந்தேன்.
“இப்ப என்ன.. சும்மா போய்ட்டு வரதுதானே”
“போலாம்தான்.. வெறுங்கையோட எப்படி போறது.. அதுமில்லாம அவிங்க நம்மள மதிக்கறதில்லனுதான் பொழப்புதேடி இங்கவந்து இந்தா இந்தவேல பாக்குறேன்.”
“அதுசரி போனஸ் கீனஸ் குடுத்துருப் பாய்ங்கள்ல.. போலாம்ல.”
“இல்லப்பா இன்னும் சம்பளமே போடல.. பேமன்ட் இன்னும் பேங்க்லருந்து வரலனு ஆபீஸ்ல சொல்ட்டாங்க என்ன பண்றதுனு தெரியல... அப்படியே வந்தாலும்.. என்னத்த குடுத்துறப்போறானுங்க.. மூவாயிரத்து ஐநூறு ரூவா தருவாய்ங்க.. அது திங்கறதுக்கும் தங்கறதுக்குமே போயிடும்.. ஊருக்குன்னா துணிமணி வாங்கிட்டு போனாதான மரியாத” என்றார். எனக்கு அவர் சொல்வதில் பாதி புரிந்தும் புரியாமலுமிருந்தாலும், உம் கொட்டிக்கொண்டிருந்தேன். ஊரில் விவசாயம் பார்த்தது, சினிமா வாய்ப்புத்தேடி முதல்முறை சென்னை வந்தது, காதலித்து தன் மனைவியை திருமணம் செய்துகொண்டது என்று சொல்லிக்கொண்டே போனார். நான் அவருடைய சீட்டுக்கு அருகில் ஏடிஎம் வாசலில் அமர்ந்துவிட்டிருந்தேன்.
ஊருக்குள் முதன்முறையாக பைக் வாங்கியது, அண்ணன் தம்பி பிரச்சனையில் சொத்து விவகாரம் கோர்ட்டுக்கு போக எல்லாவற்றையும் இழந்தது என நிறையவே பேசிக்கொண்டேயிருந்தார். மகிழ்ச்சியான தருணங்களை சொல்லும்போது எம்.ஜி.ஆராகவும் சோகம் வரும்போது சிவாஜியாகவும் மாறி மாறி அவர் முகம் அபிநயிக்க நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
“என் பொண்டாடி இருந்திருந்தா இப்படிலாம் தனியா கெடந்து” என்று எதையோ சொல்ல ஆரம்பித்தவர் நிறுத்திக்கொண்டார். அவருடைய குரலும் அவருடைய ஏதோ மோசமான துக்கத்தை உணர்த்துவதாக இருந்தது. க்க்க்க் என்று இருமினார். “உடம்பை பார்த்துக்கங்கோங்க தாத்தா நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு என்னுடைய விசிட்டிங் கார்ட் ஒன்றை கொடுத்து எதுனா உதவி வேணும்னா சொல்லுங்க என்றபடி என் பைக்கை எடுக்க மீண்டும் கிளம்பினேன்.
என்னவோ ஒரு உந்துதல்... திரும்பி அவரிடம் சென்று “சாப்டீங்களா” என்றேன். இல்லை என்றார். கையிலிருந்த பார்சலை அவரிடம் கொடுத்தேன். “நல்லா சாப்டுங்க.. ஸ்வீட்டுமிருக்கு இரண்டு நாள் வச்சு சாப்டுங்க.” என்று கொடுத்தேன் வேண்டாம் என்றார். “புடிங்க தாத்தா ஹேப்பி தீபாவளி” என்று திணித்தேன்.
அவசரமாக ஏடிஎம் உள்ளே போய் ஒரு நூறுரூபாய் எடுத்து அவர் கையில் கொடுத்தேன். வேண்டாம் என்று முதலில் நிறையவே மறுத்தார். கையில் வைத்து “நான் உங்க பேரன் மாதிரிதான். வச்சிக்கோங்க. ஹேப்பி தீபாவளி” என்று திணித்தேன். வாங்கிக்கொண்டார். போன்பண்ணுங்க என்றேன் தலையசைத்தார். “சரி தாத்தா கிளம்பறேன்” என்றேன். கையை பற்றிக்கொண்டார். எதுவுமே பேசவில்லை. நான் கிளம்ப அவர் என்னை பார்த்துக்கொண்டேயிருந்தார்.
கிளம்பி வீடுவந்துசேர்ந்த பின்தான் நினைப்பு வந்தது அந்த தாத்தா பேரை கேக்கவே இல்லையே.. அவரும் என் பேரை கேக்கவே இல்லை.
அதிஷா - வலைப்பதிவுத்தளம் http://www.athishaonline.com/
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago