சிலை சிலையாம் காரணமாம் - 13: ஐம்பொன் சிலையில் தங்கம் இருக்கிறதா?

By குள.சண்முகசுந்தரம்

நெல்லை மாவட்டம் பழவூரில் உள்ளது நாறும்பூநாதர் கோயில். இங்கிருந்த நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், கிருஷ் ணர், நாறும்பூநாதர் உள்ளிட்ட 13 ஐம்பொன் சிலைகள் 2005 ஜூன் 18-ல் களவுபோனது. இதுவும் சுபாஷ் கபூரின் இயக் கத்தில் நடந்த கடத்தல்தான். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சக்திமோகன், பாலச்சந்தர், சின்னக் காஞ்சிபுரம் ஆறுமுகம் ஆகியோர் இந்தச் சிலைகளைத் திருடியதாகவும் மதுரையைச் சேர்ந்த சவுதி முருகன், ஷாஜ கான், அருணாசலம், காரைக் குடி தினகரன் ஆகியோர் அந்த சிலைகளில் சிலவற்றை 9 லட்ச ரூபாய்க்கு கபூரின் கூட்டாளியான அண்மையில் சென்னையில் கைது செய் யப்பட்ட தீனதயாளுக்குக் கைமாற்றிவிட்டதாகவும் சொல் கிறது போலீஸ்.

கூரியரில் சென்னைக்கு வந்த சிலைகள்

இந்த வழக்கில் தீன தயாளும் கபூரும் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப் பட்டார்கள். திருடப்பட்டதில் பெரும்பகுதி சிலைகள் திரு வனந்தபுரத்தில் இருந்து மும் பைக்கு கூரியர் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்டு மும்பையில் இருந்து சென்னைக்கு வந்ததாக வும்; அங்கே இருந்து நியூயார்க் கில் உள்ள கபூரின் ‘ஆர்ட் கேலரி’க்குக் கடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதற்கிடையே, திருடப்பட்ட சிலைகளில் ஒன்றான பால விநாய கரை இரண்டு மாதம் கழித்து கேர ளத்தில் விற்க முயன்றதாக கொல் லத்தைச் சேர்ந்த சேது, அஜீஸ், தமிழகத்தைச் சேர்ந்த விநாயகம், செல்லப் பாண்டி, காமராஜ் ஆகியோரை கைது செய்தனர் போலீஸார். அதேசமயம், பழவூர் சிலைத் திருட்டின் பின்னணியில் ஒரு கொலையும் நடந்தது. அந்தக் கொலை ஏன் நடந்தது என்று பார்ப்பதற்கு முன்பாக, ஐம்பொன் சிலைகளைப் பற்றி சொல்லியாக வேண்டும்.

ஐம்பொன் சிலையில் தங்கம் இருக்கிறதா?

ஐம்பொன் சிலை என்றாலே அது ஏதோ விலை மதிக்க முடியாத உலோகம் என்றும், அதில் தங்கம் அதிகம் கலந்திருக்கும் என்றும் பரவலான கருத்து உள்ளது. இது உண்மையில்லை. ‘‘ஐம்பொன் சிலைகள் அதன் பழமையைப் பொறுத்து உத்தேசமாக மதிப்பீடு செய்யப்படுகின்றன’’ என்கிறார் சுவாமி மலையைச் சேர்ந்த கே.மோகன்ராஜ் ஸ்தபதி. தஞ் சைப் பெரிய கோயிலை உரு வாக்கிய ஸ்தபதிகளின் 30-ம் தலைமுறை வாரிசான மோகன் ராஜ், ‘குடந்தை வட்ட கோயில் செப்புத் திருமேனிகள், படிமக் கலை, அலங்காரக் கலை’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைக் காக ஆய்வுகள் மேற்கொண் டிருப்பவர்.

‘‘பொதுவாக அந்தக் காலத்தில் உலோகத்தை ‘பொன்’ என்று சொல்வது மரபு. ஐம்பொன் சிலைகளில் செம்பு, பித்தளை, காரீயம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐம்பொன்னும் சேர்ந்திருக்கும். இதில் தங்கம், வெள்ளியின் அள வானது மிகச் சொற்பமானது. ஐம்பொன் சிலைகளில் 85 சதவீதம் செம்பும், 13 சதவீதம் பித் தளையும், 2 சதவீதம் காரியமும் இருக்கும். இதுவே 100 சதவீதமாகி விடும். இதில்லாமல் கிராம் கணக்கில் வெள்ளியும் தங்கமும் அதில் சேர்க்கப்படும். இது சிலை யின் எடைக் கணக்கில் வராது.

சோழர் காலத்தில்தான் மிக அதிக அளவில் ஐம்பொன் சிலைகள் செய்யப்பட்டன. அந்தக் காலத்தில் திருக்கோயில்களை எழுப்பிய அரசர்கள், அவை களில் வைப்பதற்காக ஐம்பொன் சிலைகளை செய்ய ஸ்தபதி களுக்கு ஒப்புதல் வழங்கினார்கள். அதன்படி சிலைகளுக்கான வார்ப் பட அச்சு தயாரானதும் அரசர் களோ, அவர்களால் அங்கீகரிக்கப் பட்ட ராஜப் பிரதானிகளோ சிலை செய்யும் இடத்துக்கு நேரில் வருவார்கள்.

அவர்கள் முன்னிலையில் ஐம் பொன் சிலைக்கான மூன்று உலோகங்கள் களிமண் மூசை களில் உருக்கப்பட்டு வார்ப்படத் தில் ஊற்றப்படும். வார்ப்பட அச்சை தலைகீழாக மண்ணுக்குள் புதைத்து வைத்து, அதன் கால் பகுதி வழியாகத்தான் உலோ கக் குழம்பை ஊற்றுவது வழக்கம். அப்போதுதான் உலோ கக் குழம்பானது சீரான அழுத் தத்தில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் அச்சின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று உறுதியான சிலை கிடைக்கும்.

சிலைகளின் முகங்கள் பிரகாசிக்க இதுவும் காரணம்

சிலை வார்க்கப்படுவதை நேரில் பார்வையிட வரும் ராஜப் பிரதானிகள், தாங்கள் அணிந் திருக்கும் தங்கம், வெள்ளி நகை களில் ஒன்றிரண்டை பயபக்தி யுடன் எடுத்து கொதிக்கும் உலோ கக் குழம்பில் போடுவது உண்டு. நகைகளில் உள்ள தங்கமும் வெள்ளியும் உருகி, உலோகக் குழம்பின் மேல் பகுதியில் படிமமாக நிற்கும். உலோகக் குழம்பை அச்சின் கால் பகுதி வழியாக ஊற்றும்போது தங்கம், வெள்ளி கலவையானது பெரும் பாலும் சிலையின் தலைப் பகுதிக்குப் போய்விடும். ஐம் பொன் சிலைகளின் முகப் பகுதிகள் கூடுதல் பிரகாசமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சுமார் 6 அங்குல ஐம்பொன் சிலைக்கு வார்ப்படம் சுமார் ஒரு மணி நேரம் மண்ணுக்குள் புதைந்திருந்தால் போதும், குளிர்ந்துவிடும். அதுவே மூன்றடி சிலையாக இருந்தால் குளிர ஒருநாள் ஆகும். ஐம்பொன் சிலைகள் செய்ய ஆர்டர் கொடுப்பவர்கள் கிராம் கணக்கில் தங்கம், வெள்ளியை தங்கள் கையால் கொடுக்கும் நடைமுறை இப்போதும் தொடர்கிறது’’ என் கிறார் மோகன்ராஜ்.

அதுசரி, கடத்தல்காரர்கள் நடராஜர் சிலைகளையே குறி வைத்து தூக்குவது ஏன்? அதற்கு என்ன பதில் சொன்னார் மோகன்ராஜ்?

- சிலைகள் பேசும்...

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 12: கடத்தல் மன்னன் கபூர்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்