அப்துல் கலாம் முதலாமாண்டு நினைவு நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட திட்டம்

அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளில், உலகம் முழுக்க உள்ள இந்தியர்களைக் கொண்டு ஒரு கோடி மரக் கன்றுகளை நட 'அப்துல் கலாம் ஃபவுண்டேஷன்' அமைப்பு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை 27-ம் தேதி, ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அப்துல் கலாம் மாரடைப்பால் மரணமடைந்தார். கலாம் மறைந்து இன்றோடு ஒரு வருடம் நிறைவுறும் நிலையில், அவரின் முதலாமாண்டு நினைவு நாள் நாளை (புதன்கிழமை) உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. மத்திய அரசு, மாநில அரசுகளோடு இணைந்து ஏராளமான தனியார் அமைப்புகளுக்கும் இந்த நாளைக் கொண்டாட உள்ளனர்.

நினைவு நாள் நிகழ்ச்சிகள் குறித்து நம்மிடம் பேசிய 'அப்துல் கலாம் ஃபவுண்டேஷன்' அமைப்பின் உறுப்பினரும், சமூக ஆர்வலருமான அப்துல் கனி,

''ராமேஸ்வரத்தில் நாளை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சிற்பக் கலைஞர் ஒருவர் இரண்டு நாட்களாக, அப்துல் கலாமின் 100 மணல் சிற்பங்களை உருவாக்கி வருகிறார். ராமேஸ்வரத்தில் நாளை காலை 7 மணி முதல் 100 மணல் சிற்பங்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

அதேபோல் மற்றொரு கலைஞரின் கைவண்ணத்தில் பூசணிக்காயால் கலாமின் உருவங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவையும் நாளை காலை 8 மணி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

'டேக் கேர் இந்தியா' சார்பில், 'கலாம் அறிவுப் பேரணி' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ராகவா லாரன்ஸ் சென்னையில் இருந்து கிளம்பும் 'அறிவு ஜோதி'யை ஏற்றிவைத்தார். நாளை பாம்பன் பாலத்தில் இருந்தும் 'அறிவு ஜோதி' ஏற்றப்பட உள்ளது. கலாம் முகமூடி அணிந்துகொண்டு மாணவர்கள் அதை ஊர்வலமாக எடுத்து வருகின்றனர்.

மேலும் கலாமின் கனவான பசுமை இந்தியாவை உருவாக்கும் பொருட்டு, நாளை அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளில், உலகம் முழுக்கப் பரந்திருக்கும் இந்தியர்களைக் கொண்டு ஒரு கோடி மரக்கன்றுகளை நடத் திட்டமிட்டுள்ளோம். ஆர்வமுடையவர்கள் தங்களின் இடங்களில் கலாமின் நினைவாக ஒரு கன்றை நடலாம்.

மக்கள் மரக்கன்றை நட்டு அதனுடன் புகைப்படம் எடுத்து houseofkalam@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம். நாளைய நாளில் ஒவ்வொருவரின் பங்கும் ஒற்றை மரக்கன்றை நடுவதுதான். ஆனால் அனைத்து மக்களும் இதையே எண்ணினால் ஒரு கோடிக் கன்றுகள் இந்த உலகில் வாழும். மரங்களாகி நம்மை வாழ வைக்கும். இதுவே கலாமின் ஆசை'' என்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE