புது எழுத்து | முத்துராசா - சமூகத்துக்கான குரல்

By இந்து குணசேகர்

சென்னையில் நடைபெறும் இலக்கிய வாசிப்புக் கூட்டங்களில் நிச்சயம் முத்துராசாவை பார்த்துவிடலாம். கையில் புத்தகத்துடன் வட்டமாக அமர்ந்திருக்கும் அத்தகைய இலக்கிய கூட்டங்களில் முத்துராசாவின் சமூக அக்கறை கொண்ட கவிதைகள் கவனம் பெற தவறியதில்லை.

இலக்கிய உலகில் தனக்கான அடையாளத்தை பெற்றுவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் மதுரையிலிருந்து சென்னையை நோக்கி எவ்வித பின்புலமும் இல்லாமல் சினிமா பாணியில் புறப்பட்டு தற்போது இலக்கிய உலகில் கவிஞராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் இளம் கவிஞரான முத்துராசாவுடனான நேர்காணல்,

மணிநேர இடைவேளையில் மீண்டும் மீண்டும் 'தி இந்து' ஆன்லைனுக்கான புது எழுத்து நேர்காணலுக்காக தொலைபேசியில் முத்துராசாவை அழைக்க நேரிட்டது.

போனை எடுத்துப் பேசிய போதேல்லாம், ''இல்லைங்க நானே கால் பண்றேன்னே....இங்க முக்கிய வேலை இருக்கும். சென்னையில் வீடு தேடி அலைஞ்சிட்டிருக்கேன்'' என்ற முத்துராசா ஒரு வழியாக நேர்காணலுக்கான நேரத்தை ஒதுங்கி நம்மிடையே பேச ஆரம்பித்தார்.

"நான் பிறந்தது சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமம். வளர்ந்தது எல்லாம் மதுரை மாவட்டம் தென்கரை கிராமம் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

பள்ளிப்படிப்பை அரசு பள்ளிகளில்தான் படித்தேன். சிறுவயதில் எழுத்தில் பெரிய ஆர்வம்லாம் இருந்தது இல்லை, ஆனால் பள்ளிப் பருவங்களில் இரண்டாம் தமிழ் தாளில் கவிதைகள், கதைகளில் கேள்விகள் கேட்பார்கள் இல்லையா? அதை ஆர்வத்துடன் எழுதுவேன். அந்த அளவுக்குதான் என் எழுத்து ஆர்வம் இருந்தது.

பின்னர் எப்படி முத்துராசாவின் கவிதைகள் பிறந்தன என்று கேட்டபோது, "தமிழ் நன்றாக எழுதுவேன் என்பதற்காக ஊரில் உள்ள நல்ல காரியங்கள், கெட்ட காரியங்களுக்கு அடிக்கப்படும் போஸ்டர்களுக்கு ஒரு இரண்டு வரி எழுதி தரும்படி என்னிடம் கேட்பார்கள் நானும் எழுதிக் கொடுப்பேன். உண்மையை கூற வேண்டும் என்றால், இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறேன் அந்த நாட்களில் எனக்கே தெரியாமல் நான் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்திருக்கிறேன். என்றவர் தனது பாதையை மாற்றியமைத்த மதுரை அமெரிக்கன் கல்லூரி குறித்து விவரிக்கிறார்.

"மதுரையில் உள்ள பிரபலமான அமெரிக்கன் கல்லூரியில் பிசிஏ படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதில் ஆர்வம் இருந்தது இல்லை. எலக்டிவ்வாக விஸ்காம்மை தேர்ந்தெடுத்தேன். அதன் ஆசிரியராக இருந்த கவுரி சார்தான் நான் கதைகள், கவிதைகள் எழுதியதைப் பார்த்து எழுத்து உனக்கு நன்றாக வருகிறது. அதனால் முதுநிலை பட்டப்படிப்பை இது தொடர்பாக தேர்ந்தெடுத்துப் படி'' என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2013- ஆம் ஆண்டில் இதழியலை தேர்ந்தெடுத்தேன். என்னுடைய முதுநிலை படிப்புக்காகதான் நான் முதன் முதலில் சென்னை வந்தேன்.

நானும் என் நண்பன் வினோத் என்பவரும் பல்வேறு கனவுகளை சுமந்து கொண்டு சென்னைக்கு பயணித்தோம். அப்போது சென்னை எனக்கு முற்றிலும் அந்நியப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் தீவிரமாக எழுத ஆரம்பித்தது சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பிறகுதான். தொடர்ந்து புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன், தொடர்ந்து என்னை கூர்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இதன் பலனாக நான் எழுதிய கவிதைகள் பல, பல்வேறு அச்சு பதிப்பகங்கள், மற்றும் இணையதளங்களில் வெளிவர ஆரம்பித்தன. நானும் இலக்கிய உலகில் எட்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.

என்னுடைய கவிதைகளைப் பார்த்து ’மாமதுரை போற்றதும்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தலைமையின் கீழ் மதுரை சார்ந்த பாடல்கள் எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் என்னுடைய பாடல்கள் ரத்து செய்யப்பட்டன. இருந்தாலும் அதில் பங்கேற்றது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், நான் சரியான பாதையில் செல்வதையும் என் தோளுக்கு பின்னால் ஆறுதல் கூறிய கைகள் உணர்த்தின" என்று இளம் கவிஞரின் ஆரம்ப கால போராட்டங்களை நமக்கு நிழற்படமாக காட்டிக் கொண்டிருந்த முத்துராசா குமாரிடம் முதல் கவிதைத் தொகுப்பான 'எறும்புகள் மொய்க்கும் இரைப்பை' பற்றி கேட்டேன்.

"என்னுடைய கவிதைகளைப் படித்த இதழியல் துறைத் தலைவர் இரவீந்திரன், இதனை புத்தகமாக கொண்டு வரலாமே என்றார். முதலில் அதனை நான் நம்பவில்லை. என்னை உற்சாகப்படுத்துவதற்காக இவ்வாறு கூறுகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது துறை மாணவர்கள் உதவியுடன் சென்னைப் பல்கலைக்கழக 'முற்றம்' விழாவில் பதிப்பகமாக அல்லாமல், பல்கலைக்கழக அளவில் என்னுடைய முதல் கவிதை தொகுப்பான ’எறும்புகள் மொய்க்கும் இரைப்பை’ 2015-ம் ஆண்டு வெளியானது. இந்தக் கவிதை தொகுப்பை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து 2016- ஆம் ஆண்டு ’நினைவுக்கு வரும் சாவுகள்’ என்ற இரண்டாவது கவிதை தொகுப்பு வெளியானது.

இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் நான் ஓட வேண்டிய தூரத்தைக் காட்டின. ஓட ஆரம்பித்தேன் என்றவரிடம், இரண்டு கவிதை புத்தகங்கள் வெளியான பிறகு நடந்த மாற்றங்கள் பற்றி கேட்டபோது, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக அகில இந்திய வானொலியில் ’இளைய பாரதம்’ என்ற தலைப்பில் கதைகள், கவிதைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தேன்.

அதனைத் தொடர்ந்து மாணவ பத்திரிகையாளனாக பிரபலமான வார இதழில் பணியாற்றினேன். இதன் மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த செய்திக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். இது எனக்கு சிறிய அடையாளத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் இன்று நான் தொடர்ந்து ஒடிக் கொண்டிருக்கிறேன் போட்டி உலகில் முழுமை பெற வேண்டும் அல்லவா? என்ற முத்துராசா குமாரின் கவிதைகள் சில

கீழ்தெரு மேத்தெரு

உன்னையும் என்னையும் கீழ்தெரு

மேத்தெரு என்று சொல்லி

தண்டவாளத்தில் தலைகள்

வைக்கத் தூண்டினால்

சாதிகளையும் பலவந்தமாக

இழுத்துக்கொண்டு விழுந்து

சிதைந்து பல

துண்டுகளாவோம்.....

வாக்கு வங்கிகளற்ற உலகம்

குழந்தைகளாகவும்

பைத்தியங்களாவும்

பிராணிகளாகவும்

தூசிகளாகவும்

மாறிப்போவதற்கு

விண்ணப்பங்கள்

இருந்தால்

தயவுசெய்து

தரவிறக்கம்

செய்து கொடுங்கள்……

கடைசி கடுதாசி

தற்கொலை கடிதங்களை எழுதும் பொழுதே

கசக்கி எறிந்துவிட்டு தெருமுக்கு வரை

காலாற நடந்து வருவோமென்று

எழுந்திருந்தால் எப்படி

இருந்திருக்கும்.

போன்ற பல நம்பிக்கையூட்டும் கவிதைகளைப் படைத்து வரும் முத்துராசா தனது ஆசானாக மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதோ நா. முத்துக்குமாருடனான தனது காதலை அவரே விவரிக்கிறார்,

ஒரு கவிதையின் நடை எப்படி இருக்க வேண்டும் என்பதையும், கவிதைகள் யதார்த்த தன்மை மாறாமல் மிகுந்த கற்பனையில் இருக்கக் கூடாது என்பதையும் நா. முத்துகுமாரின் கவிதைகள்தான் எனக்கு உணர்த்தின.

என்னுடைய முதல் கவிதைத் தொகுப்புக்கு அவரிடமிருந்து முன்னுரை வாங்க வேண்டும், அவரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால்……. அது கடைசி வரை நிறைவேறவில்லை. தற்போது நா. முத்துக்குமார் இல்லை அவரைக் காணமுடியாதது இன்றளவும் எனக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது ஆசானின் இறப்புக்கு, முத்துராசா எழுதிய கவிதை...

மூடப்படாமல் கிடக்கும் உனது

பேனாவின், கடைசி மிச்ச மை

உன்னைக் கேட்டால் என்ன சொல்ல

முத்துக்குமார்?

நீண்ட அமைதிக்கு பிறகு பேச்சை தொடர்ந்தவரிடம், தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நபர் நீங்கள், ஏன் பிரபலான பதிப்பகங்களில் உங்களது கவிதை நூல்களை வெளியிட முயற்சி எடுக்கவில்லை? அவ்வாறு செய்திருந்தால் உங்களுடைய கவிதைகள் நிறைய பேரை சென்றடைந்திருக்கும் அல்லவா? என்னுடைய இரண்டு புத்தகங்களும் பல்கலைக்கழக அளவில் ஒரு மாணவனாக நான் வெளியிட்ட புத்தகங்கள். ஆனால் அதற்கான எனக்கு கிடைத்த அடையாளம் நான் எதிர்பார்த்ததைவிட அதிகமானது. எனக்கும் என்னுடைய கவிதைகள் பிரபலான புத்தக பதிப்பகங்களில் வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக முயன்று பார்க்கலாம்……..'' என்ற முத்துராசாவின் கவிதையின் சிறப்பு என்னவென்றால் அவருடைய கவிதைகள் நிகழ்கால அரசியலை பேசுகிறது. சாதி, மேலதிகார சிந்தனை, நகரமயமாக்கல், காதல், விவசாயம், இயற்கை என பல்வேறு தளங்களிலும் கேள்வியை முன் வைக்கிறது.

இலக்கிய பின்புலம் இல்லாமல் வந்துள்ளீர்கள் எப்படி உங்களை இந்த இலக்கிய சமூகம் வரவேற்கிறது. என்று கேட்டதற்கு, நிச்சயம் நல்ல வரவேற்பு உள்ளது. நமது கவிதைகள் தரமானதாக இருந்தால் அதனை வரவேற்க யாரும் தயங்குவதில்லை. நாம் படைப்பில் கவனம் செலுத்தினால் போதும். நமக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும். அதுமட்டுமில்லாது நாம் சரியான பாதையில் சென்றால் வெற்றி நிச்சயம் அதற்கான வாய்ப்பை சமூக ஊடகங்கள் எளிமையாக்கியுள்ளன.

என்று அலட்டிக் கொள்ளாமல் பேசும் முத்துராசா தனது ஆஸ்தான குருக்களாக கேரள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரையும், நா.முத்துக்குமாரையும் குறிப்பிட்டார்.

மறக்க முடியாத விமர்சனங்கள் பற்றி, ஒரு முறை எனது தாத்தாவைப் பற்றி ’காசி தாத்தா’ என்ற தலைப்பில் கவிதையைக் கண்டு எனது தாத்தா என்னை பாராட்டியது என்னால் மறக்க முடியாது. குறிப்பு நான் எழுதிய கவிதைகளில் என் குடும்பத்தினர் படித்தது அந்த ஒரு கவிதையை மட்டும்தான்.

ஒருமுறை இயக்குனர் ராம் அவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது அப்போது என்னுடைய கவிதைகளை அவரிடம் காட்டினேன். அதனைப் படித்துவிட்டு உன் கவிதைகளுக்கு சிறுகதைக்கான கரு உள்ளது என்றார். என் கவிதைகளை விமர்சிக்கவும் செய்தார்.

மேலும் எனது சக நட்புகளும் விமர்சனங்கள் மூலம் என் கவிதைகளுக்கான வடிவத்தை நான் மீட்டெடுக்க தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றன.

என்ற முத்துராசா நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். மேலும் மீனவப் பிரச்சினைகள் குறித்தும் உணவு அரசியல் தொடர்பாகவும் பாடல்களை எழுத திட்டமிட்டுள்ளார் என்பதை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அடுத்தக் கட்ட பயணம், என்னுடைய இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் இணைந்து ஒரே தொகுப்பாக கொண்டு வரும் எண்ணம் உள்ளது. சிறுகதைகள், கதைகள் எழுதுவதை அதிகாரிக்க வேண்டும்.

இந்த அனுபவங்களுடன் திரைத்துறைக்கு சென்று நல்ல தரமான படங்களை அளிக்க வேண்டும் அவ்வளவுதான் என்று விடைபெறுவார் என்று நினைக்கையில் சென்னை பற்றி இந்த நேர்காணலில் ஒன்றை கூற வேண்டும் என்று மீண்டும் தொடர்ந்தார்.

சென்னை வந்தபோது நிறைய சிக்கல்களை எதிர்கொண்டேன். பொருளாதார ரீதியாக, கலாச்சாரரீதியாக நிறைய எதிர் கொண்டேன். சென்னை வந்த பிறகுதான் எனக்கு சகிப்புத்தன்மை உருவானது.

அரவணைப்பு, அடைக்கலம், அடையாளம் தந்து உதவியது என்னுடைய நணபர்கள்தான். மேலும் சென்னையில்தான் என் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர்கள் கார்த்திக் புகழேந்தி, அகர முதல்வன் , இன்பா சுப்ரமணியன் போன்றோரின் நட்பு கிடைத்ததுள்ளது. ’முத்து அவ்வளவுதான் முத்துராசா ஊர் சுத்திட்டு தான்தோன்றித் தனமாக இருந்துவிடுவான்’ என்றுதான் ஊரிலுள்ள சொந்தங்களும், பெற்றோரும் நினைத்தார்கள் ஆனால் அதனை பொய்யாக்கி எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள சென்னைக்கு அன்பான முத்தங்கள் என்று நம்மிடமிருந்து விடைபெற்றார்.

முத்துராசாவின் படைப்புகள்

எறும்புகள் மொய்க்கும் இரைப்பை - முற்றம் கலைக் குழு

நினைவுக்கு வரும் சாவுகள் - முற்றம் கலைக் குழு

புத்தகங்கள் வேண்டுவோர் தொடர்புக்கு: 89738 82339

முந்தைய அத்தியாயம் > >புது எழுத்து | மனுஷி பாரதி - பெண் குரல்

இந்து குணசேகர், தொடர்புக்கு > indumathy.g@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்