நோபல் பெற்ற அமெரிக்க அறிஞர்
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியல் அறிஞரும், நவீன காந்தவியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ஜான் ஹாஸ்ப்ரோக் வான் லெக் (John Hasbrouck Van Vleck) பிறந்த தினம் இன்று (மார்ச் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலம் மிடில்டவுன் நகரில் (1899) பிறந்தார். தந்தை பிரபல கணிதவியலாளர். அவருக்கு விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி கிடைத்ததால், குடும்பமும் அங்கே குடியேறியது. இவரது தாத்தா பிரபல வானியலாளர்.
* வான் லெக் அசாதாரண நினைவாற்றல் பெற்றிருந்தார். பள்ளிப் பருவத்தில் அறிவியல், கணிதத்தில் சிறந்து விளங்கினார். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். இவரது பேராசிரியர் மேற்கொண்டிருந்த குவான்டம் தியரி குறித்த ஆய்வு, இவரை வசீகரித்தது. அவரது வழிகாட்டுதலில் ஹீலியம் அணு குறித்த ஆய்வில் ஈடுபட்டு, 1922-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
* இவரது ஆய்வுக் கட்டுரை ‘ஃபிலாசபிகல் மேகசின்’ என்ற இதழில் வெளிவந்தது. மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. காந்தவியல் கோட்பாட்டை தனது முதன்மையான ஆராய்ச்சிப் பொருளாக எடுத்துக்கொண்டார்.
* காந்தவியல் கோட்பாடு மட்டுமல்லாது, மூலக்கூறுகளின் நிறமாலை, மின்காப்புப் பொருளியல், தனிமத் தளர்வு குறித்தும் ஆராய்ந்தார். 2-ம் உலகப்போரின்போது அணுகுண்டு தயாரிப்பதற்கான மன்ஹாட்டன் திட்டத்தில் பங்கேற்றார். மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ரேடார் குறித்து ஆராய்ந்தார்.
* மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) ரேடியேஷன் சோதனைக் கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இது ரேடியோ அஸ்ட்ரானமி என்ற புதிய அறிவியல் களம் உருவாகவும் அடித்தளமாக அமைந்தது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, மீண்டும் ஹார்வர்டு வந்து, அதன் இயற்பியல் துறை தலைவராகப் பொறுப்பேற்றார்.
* காந்தவியல் குவான்டம் மெக்கானிகல் கோட்பாடு, படிகப் புலக்கொள்கை குறித்த ஆராய்ச்சிகளால், உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் எழுதிய ‘குவான்டம் பிரின்சிபல்ஸ் அண்ட் லைன் ஸ்பெக்ட்ரா’ நூல் பரபரப்பாக விற்பனையானது.
* விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவியேற்றார். படிகப் புலக்கொள்கை குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். மீத்தேன் மூலக்கூறு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து பல கட்டுரைகள், நூல்கள் எழுதினார்.
* மீண்டும் 1935-ல் ஹார்வர்டு பல்கலைக்கழகம் திரும்பிய இவர் 1969-ல் பணி ஓய்வு பெறும்வரை அங்கு பணியாற்றினார். அங்கு, ரேடியோ ஆராய்ச்சி ஆய்வகத்தின் தலைவராகவும் செயல்பட்டார். கணிதம், இயற்கை தத்துவ பேராசிரியராகவும் பணியாற்றினார்.
* காந்தத்தின் மின் கட்டமைப்புகள், ஒழுங்கற்ற அமைப்புகள், அவற்றில் எலெக்ட்ரான்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்த ஆய்வுக்காக பிலிப் வாரன் ஆண்டர்சன், சர் நெவில்லி ஃபிரான்சிஸ் மாட் ஆகிய இருவருடன் சேர்ந்து இவருக்கு 1977-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* காந்தவியல் கோட்பாடுகளை விளக்கி தொடர் விரிவுரைகள் நிகழ்த்தினார். இவை பின்னாளில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. இர்விங் லாங்மயர் விருது, தேசிய அறிவியல் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள், விருதுகளைப் பெற்றார். நவீன காந்தவியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜான் ஹாஸ்ப்ரோக் வான் லெக் 81-வது வயதில் (1980) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago