ஏடறியாத எழுத்தறியாத கிராமத்து மனிதர்கள் தாங்களே இட்டுக்கட்டிப் பாடும் பாட்டுகளைக் கேட்டிருக்கிறீர்களா? நாட்டுப்புற இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் இப்படிப்பட்ட பாடல்களைத் தொகுத்துப் புத்தகங்களாகப் போட்டிருக்கிறார்கள். நான் அதைச் சொல்லவில்லை. அந்தப் பாடல்களின் ஒரு வரியையாவது கிராமவாசி யாராவது பாடக் கேட்டிருந்தால், நீங்கள் பாக்கியவான்கள். அவர்களே சொல்லிக்கொள்வதுபோல அவர்கள் ‘வாழ்ந்து கெட்ட’ காலத்தின் வாசனையை நீங்கள் நுகர முடியும் - அந்தப் பாடல்களிலே!
நான் கேட்டிருக்கிறேன்.. பல சந்தர்ப்பங் களில் - மாடு மேய்ப்பவர்களிடம், தலைச் சுமை வியாபாரிகளிடம், வயல் வேலை செய்யும் பெண்களிடம்!
பாட்டின் பாரம்
தெருவிலே கூடை நிறைய வாழைப் பழங்களை விற்றுக்கொண்டுபோன பெண் மணி தலைச்சுமையை இறக்கி வைத்து விட்டு, எங்கள் வீட்டு முன்னால் இருந்த மரநிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந் தார். அவர் முகத்தில் என்னவோ வாட்டம். என் மனைவி வாழைப்பழம் வாங்கியதோடு நிற்காமல் அந்தப் பெண்ணின் வாயையும் கிண்டியிருக்க வேண்டும். ‘என்ன கஷ்டம் உனக்கு?’ என்று கேட்டாளோ என்னவோ, அந்த அம்மாள் பாடுவது திண்ணையில் உட்கார்ந்திருக்கும் எனக்குக் கேட்டது.
“பரமனோட கோயிலாண்ட
பாளை பழுத்திருக்கு
பத்தாயிரம் பட்சிகளும்
பாலப் பழம் கோதுதம்மா!
எம் பாவிகொற சொன்னேனுன்னா
பாலப் பழம் கோதாதும்மா!
பசியாறி நிக்காதும்மா...”
ஈசுவரன் கோயிலாண்ட
எலந்த பழுத்திருக்கு
எட்டாயிரம் பட்சி வந்து
எலந்தபழம் கோதுதம்மா!
ஏழ கொற சொன்னேனுன்னா
எலந்த பழம் கோதாதம்மா
எளப்பாறி நிக்காதும்மா!
“கொஞ்சம் கூடையத் தூக்கிவிடு தாயி’’ என்றார் அந்தப் பெண் ஒரு பெருமூச்சுடன்.
மனைவி உதவ, கூடையின் பாரம் அந்தப் பெண்மணி தலைமீது ஏறிவிட்டது. ஆனால், அவர் பாடிய பாட்டின் பாரம் என் மண்டை மீது ஏறிவிட்டது.
எங்க போயி அண்டுறது?
குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு பக்கத்து ஊர் திருவிழாவுக்குப் போகிறாள் தாய் ஒருத்தி. சாமி கும்பிட அல்ல.. சாப்பாட்டுக்கு வழி தேட. குழந்தைகளில் மூத்த குழந்தை விவரம் தெரிந்த பெண். அது பாடுகிறது..
காக்காவே காக்காவே
எங்க அம்மாவைக் கண்டிங்களா?
வேலூரு சந்தையிலே
வேடிக்கை பாக்குறாளாம்
கச்சக் கருவாடுன்னு
கையேந்தி நிக்குறாளாம்
மாரளவு தண்ணியில
மாம்பழத்த விக்கிறாளாம்
ஊவா முள்ளால
ஒதுங்கித்தான் நிக்கிறாளாம்
ஊவாமுள் என்று ஒருவகை முள் இருக்கிறது. நெருங்கினால் ஒட்டிக் கொள்ளும் உடம்பெல்லாம் ஊர்வது போல் எரியும். இங்கே ஊவாமுள் என்பது என்னவென்று தெரிகிறது அல்லவா?
பாட்டியும் விடுகதையும்
நாங்கள் சென்ற கார் நெடுஞ்சாலையில் நின்றுவிட்டது. தூரத்தில் ஒரு தோப்பு.. நெருங்கினோம். அங்கிருந்த பாட்டியிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தோம்.
“புள்ளைங்களா ஒரு வெடி போடுறேன் வெடிக்கிறீங்களா”- பாட்டி கேட்டார். அதாவது, விடுகதை சொல்கிறேன்.. விடை சொல்லுவீங்களா என்று இதற்குப் பொருள்.
“ஓ” என்றோம் கோரஸாக.
“சின்னப் பயலும்
சின்ன செறுக்கியும்
சேர்ந்து கட்டுன வூடு
சிக்கல் இல்லாமப் பிரிச்சுப்புட்டா
சென்னப் பட்டணத்துல பாதி.”
- பாட்டி பாடினார்..
“புரியலையே பாட்டி.”
“அண்ணாந்து பாருங்க புரியும்.”
பார்த்தோம்.. மரத்தில் காற்றிலாடும் தூக்கணாங் குருவிக் கூடுகள்.
“ஆங்.. அதுதான் தூக்கணாங் குருவிக் கூடு தம்பிங்களா. அந்த ரெண்டு குருவியும் தான் சின்னப் பயலும் சின்ன சிறுக்கியும்.. தெரியுதா?
இந்தக் கூட்டைச் சிக்கல் இல்லாமல் யாரும் பிரிக்க முடியாது. அப்படிப் பிரிச்சுட்டா சென்னப் பட்டணத்தில் பாதி தாரேன்.” இது ஒரு விடுகதை அல்ல; வரலாற்றின் சுவடு! சென்னை, சென்னப் பட்டணமாக அழைக்கப் பட்ட காலத்தில் பிறந்தது இந்த விடுகதை!
இது என்ன இஸம்?
மேஜிக்கில் ரியலிஸம், மிஸ்டிசிஸம், ஃபாண்டஸி என்று மிரட்டும் நவீனப் படைப்பாளிகளோடு போட்டிபோடும் பாட்டு ஒன்றை திருவண்ணாமலையில் ஒரு பண்டாரத்திடம் கேட்டேன். “சாமி, கோவிக்காமப் பதில் சொல்லுங்க.. வீடு வாசலை விட்டு வந்த உங்கள்ல இளவட்டங்களும் இருக்காங்க... இவங்களும் மனுசங்கதானே... அதாவது நான்....”. குடித்துக்கொண்டிருந்த பீடியை எறிந்துவிட்டு சாமி பாடியது.
“ஏரிக்கரை மேலே வண்டு
எந்நேரம் பார்த்தாலும் சண்ட
பண்டார வாசல்ல பொம்மை
பொம்மைக்குப் பாவாடை கட்டி
சிலுக்கு மூக்குத்தி குத்தி
தில்லாலங்கடி தில்லாலே..”
“சாமி... நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலியே”
கையிரண்டையும் மேலே தூக்கி ஆடலானார் “அதான் சொல்லிட்டேனே தில்லாலங்கடி தில்லாலே..”
ஏடில்லை, எழுத்தில்லை இலக்கண மில்லை, ஆனால் வார்த்தைகள் வயல் வரப்புகளில் அலைகின்றன. உணர்வுகளின் ராகங்களை மீட்டிய பாட்டுவாசிகள் அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் அவலம் மிஞ்சுகிறது.
- தஞ்சாவூர்க் கவிராயர். தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago