தீப்பொறி தீபிகா வீடியோ பதிவு: தமிழகத்தில் இருந்து சில பெண்ணிய குரல்கள்

By க.சே.ரமணி பிரபா தேவி

பிரபல பாலிவுட் நடிகை தீபிகோ படுகோனை முன்வைத்து முற்போக்கான பெண்ணிய சிந்தனை எனக் கருதப்படும் வாசகங்களைத் தாங்கிய வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது 'எனது விருப்பம் / தெரிவு' (My choice) குறும்படம்.

ஹொமி அதாஜானியா இயக்கத்தில், பெண்கள் ஃபேஷன் இதழான 'தி வோக்' வெளியிட்டுள்ள இந்தக் குறும்படத்தில் உள்ள முக்கிய அம்சங்களை மேற்கோள்காட்டி, ட்விட்டரில் மணிக்கு நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. | படிக்க - >ட்வீட்டாம்லேட்: தீபிகாவின் விருப்பங்களும் எதிர்வினை தெறிப்புகளும்!

இந்தக் குறும்படம் பேசும் எண்ணிய வாசகங்களில் உடல் சார்ந்த விருப்பங்களை மட்டுமே சுட்டிக்காட்டி, இணையத்தில் எதிர்க் கருத்துகள் பரவலாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில், "என் விருப்பம்... என் கைரேகையைப் போன்றது. அதை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் தீபிகா படுகோன்.

அந்த வீடியோ பதிவு குறித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பெண்களின் பார்வை இது:

குஷ்பு -காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர்:

தீபிகா நடிக்காமல் இருந்தாலே எல்லாரும் அமைதியாய்ப் பார்த்திருப்பார்கள். காணொளியில் தீபிகா படுகோன் நடித்திருப்பதால்தான், இது சர்ச்சைக்குரியதாக ஆகியிருக்கிறது. பெண்ணுரிமையைப் பற்றி ஆயிரம் பேர் பேசினாலும், அதை ஒரு பிரபலம் கூறும்போது சர்ச்சைக்குள்ளாகிறது. ஆயிரக்கணக்கில் நேர்மறையான விமர்சனங்கள் வரும்போது சில நூறு எதிர்ப்புகள் வருவது சகஜம்தான்.

என்னைப் பொறுத்தவரையில் அந்தக் காணொளியில் வரும் கருத்துக்கள் எவையும் அநாகரிகமாகவோ, மறுக்கத்தக்கதாகவோ இல்லை.

மாலினி ஜீவரத்னம் -திரைப்பட உதவி இயக்குநர்:

இதுவரைக்கும் பெண் மேல் ஒட்டியிருந்த அத்தனை லேபிளையும் தூக்கியெறிஞ்சுட்டு சுதந்திரமா என் உடல் என் தெரிவுன்னு வாழுறத மட்டுமே அந்த காணொளி உணர்த்துறதா தோணுது.

ஒரு பெண் அடிமையாக வாழ்ந்துட்டு அடிமையாகவே சாகுறதுலதான் கலாச்சாரம், பண்பாடு காப்பாத்தப்படுது. என் தலைல இருக்கிற முடிகூட இப்படித்தான் இருக்கணும்ங்கறத முடிவு பண்ணுறது நான் இல்ல... இந்த சமூகம் தான். உடை, உடல் சுதந்திரம் ஏன் உணர்வு சுதந்திரம் எல்லாமே பாலின அடிப்படைல பெண்களுக்கு கேள்விக் குறிதான்.

கற்பு எல்லாருக்கும் பொதுவானது. அது பாலின அடிப்படையில பெண்ணுக்கு மட்டுமே வச்சா, அப்படிப்பட்ட கற்புங்குற லேபிள் தேவையே இல்லை. பெண்ணுக்கு பர்தா; பெண்ணுக்கு தாலி; பெண்ணுக்கு மட்டுமே ஒழுக்கம்; பெண்ணுக்கு மட்டுமே கற்பு; பெண்ணுக்கு மட்டுமே கலாச்சாரம் கட்டுப்பாடு... பொண்ணோட விருப்பு வெறுப்புகளைத் தெரிவு செய்ய இங்க பெண்ணுக்கே உரிமை இல்லை.

தீபிகாவின் வீடியோவில் மேல்தட்டு பெண்கள் வாழ்வில் ஏற்படவேண்டிய மாற்றங்களுக்காக மட்டுமே பேசப்படுகிறது என நிறைய பேர் பேசுறாங்க. மாற்றம் முதல்ல படிச்ச பெண்கள்கிட்ட இருந்து ஏற்படணும். அவங்களால்தான் அடிதட்டு மக்களுக்கும் அதைக் கொண்டு சேர்க்க முடியும்.

'லிவிங் ஸ்மைல்' வித்யா - நாடக கலைஞர்:

இந்தக் காணொளி, பெண்களைப் பற்றிய பார்வையைச் சொல்கிற விதத்தில் திருப்திகரமாக இருந்தாலும், கொஞ்சம் ஃபேன்ஸியா இருக்கு. மேல்தட்டு பெண்களைப் பற்றி மட்டுமே சொல்லுகிற விதம் மாற்றப்பட்டிருக்கலாம். செக்ஸ் என்பது தனிநபர் சார்ந்த விருப்பம் என்பதை தெளிவா சொல்லி இருக்கு. ஆனால் அதைத் தாண்டிப் பெண்களைப் பற்றிப் பேச ஆயிரம் விஷயங்கள் இருக்கு.

பெண்களின் தனிப்பட்ட உறவையும், வாழ்க்கையையுமே பேசும் இந்தக் காணொளியில் தலித் பெண்களின் மீதான அடக்குமுறை, வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் கூறியிருக்கலாம்.

ஹன்ஸா -வழக்கறிஞர்:

"எத்திசையிலும் முடிவற்றவள்" – இந்த வரி மிகவும் என்னைக் கவர்ந்தது. ஆண் சொன்னதைக் கேட்பதும், அதன் படி நடப்பதுமான போக்குக்காட்டல் எல்லாமே பெண் செய்யும் நாடகமே. இது சர்வைவலுக்காக மட்டும் இல்லை. மேற்சொன்ன வரிக்காகவும்தான்.

இந்த உண்மையை உணர்ந்தவர்கள்தான் பெண்கள். ஆனால் திடம் உள்ள பெண்கள் மட்டுமே அதை வெளிக்காட்டுகிறார்கள். மற்றவர்கள் சொல்வதில்லை. 'இது நடிப்பு என சொல்வதால் நாடகம் தடைபடும்' என்பதாலேயே சொல்வதில்லை இவர்களில் சிலர்.

பெண்ணை புரிந்துகொண்டாலே சட்டங்கள் அவளுக்கு சில இடங்களில் அதாவது ஆணின் பார்வையில் அதிக இடம் / வரம் அளிப்பது போலத் தோன்றுகிறது. ஓர் ஆண் நினைப்பது போன்றே அச்சு பிசகாமல் அவளைக் சட்டம் கட்டுக்குள் வைத்தால், விட்டுத்திமிறி வெளியேறிவிடுவாள். அந்த கட்டத்தை பெண் நெருங்கிவிட்டாள் என்றே தோன்றுகிறது. இனி நாடகம் இல்லை.

"என் உடல் என்னுடையது. என் உடல் குறித்து என்னுடைய முடிவே இறுதி" என்பதை அவள் சொல்லும் நிலையில் வைத்ததே ஒரு தலைகுனிவுதான். ஏனெனில் இது மாற்றே இல்லாத உண்மை அல்லவா? ஆண் சொல்லக்கூடும்… "அவளின் உடல் என்னை திசை திருப்புகிறது" - இது கட்டுக்குள் இல்லாத அவனின் மனதா அவள்? பெண் பெரும் சக்திதான். அதைச் சீண்டல்கள் மூலம் உணர முயலவேண்டாம். ஏனெனில் வெடிப்பிற்கான மிகச் சரியான 'பதத்தில்' இப்போது அவள். ஓண்டர்ஃபுல் தீபிகா!

ப்ரியா ஆனந்த் - நடிகை:

நடிகைகள் என்றாலே பொதுவான சில அபிப்ராயங்கள் இருக்கின்றன. நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் கவலைகள், பிரச்சனைகள் இருக்கின்றன. பெண்ணுடல் சார்ந்து பேசுவதே களங்கம் என்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்தக் காணொளி பதில் அளித்திருக்கிறது. மொத்தத்தில் இது ஒரு நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

கிர்த்திகா தரன் - வலைப்பதிவர்:

எப்போதும் இதுபோன்ற காணொளிகள் பெரிதாய்ப் பேசப்படாமல் இருக்கிறதோ, அப்போதுதான் பெண்ணுரிமை முழுமை அடையும். இந்தக் காணொளி மூலம் விருப்பங்களைச் சுயமாகப் பூர்த்தி செய்ய முடியாத பல பெண்களின் மெளனக் கதறலையும், வலியையும் உணர முடிகிறது. இதைப் பற்றித் தைரியமாகப் பேச தீபிகாவால் முடிந்தது. பலரால் முடியவில்லை.

கலாச்சாரம் காலத்திற்கேற்றாற்போல மாறிக்கொண்டே வருகிறது. அது உடைபடுவதை எல்லோராலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. என்னைப் பொருத்தவரையில் உடல் சார்ந்த விஷயங்கள் பெண்ணின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றிப் பொதுவெளியில் கருத்து சொல்வதே தவறுதான். பல்லாண்டுகளாய் வாழ்ந்த ஊரைவிட்டு வர முடியாததுதான். ஆனால் வேறு வழியில்லாதபோது வந்துதான் ஆக வேண்டும். அதேபோல கலாச்சாரக் கோட்பாட்டுக்குள் இருந்து வெளியே வருகிற வாழ்க்கை முறையும் மெல்லப் பழகும்.

பாரதி பாஸ்கர் - பட்டிமன்றப் பேச்சாளர்:

என்னைப் பொறுத்தவரையில் இக்காணொளி பெண்ணுரிமையைப் பேசுகிற காட்சியமைப்பாகத் தெரியவில்லை. பெண்ணுரிமையைப் பற்றி ஒரு வாழ்வியல் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட காணொளியில் நடித்திருக்கும் தீபிகாவே அழகு மற்றும் உடல் சார்ந்த விஷயங்களை மூலதனமாகக் கொண்ட சினிமாவைத்தான் தன் தொழிலாகக் கொண்டிருக்கிறார். உயர்தட்டு பெண்களின் உடல் சார்ந்த விஷயங்களைத் தாண்டி அறிவு, மனம் சார்ந்த விஷயங்கள் முதலியவை இக்காணொளியில் கூறப்படாதது போலித்தனமாய் இருக்கிறது.

என் உடல், என் மனம், என் விருப்பம் என்னும் இதே வார்த்தைகளை ஆண் சொல்லி இருந்தால் இச்சமூகத்தில் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். பெண்ணுரிமை பற்றி 1920-களில் பாரதியே பேசிவிட்டான். இது குறித்து ஒலிக்கும் குரல்கள் நமக்குப் புதிதில்லை. ஆனால் இந்த எதிர்ப்பு எங்கிருந்து வருகிறது, எதை யார் சொல்கிறார்கள் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. இதே கருத்துகளை மலாலா பேசி இருந்தால் அதன் வீச்சும், வீரியமும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் மேல்தட்டுப் பெண்களின் உடல் சார்ந்த விஷயங்களைத் தாண்டி படிப்பு, வேலை, திருமணம், மறுமணம், வாழ்க்கை முறை போன்ற பிற பெண்களின் சொந்த விருப்பத் தெரிவுகள் பற்றி இக்காணொளி எதையும் கூற முற்படவில்லை.

லீனா மணிமேகலை,கவிஞர் - இயக்குநர்:

அதிகாரத்திற்கு எதிராக எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் படம், அதன் உத்திகளால், அந்த அதிகாரத்திற்கே பலியாகியிருக்கின்றது. தலைமுடி எண்ணெய், ஷாம்பூ, ஃபேர்னஸ் க்ரீம் போல பெண் விடுதலை என்பது ஒரு நுகர்பொருள் இல்லை. பாலின சமத்துவம் என்ற கருத்தை எதோ பண்டம் போல விற்க முயற்சி செய்வதுதான், இந்தப் படத்தின் தோல்வி என நான் கருதுகிறேன். விற்பனைக்கான முகமாக தீபிகா படுகோன் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் அவரையும் பண்டமாகவே பரிதாபகரமாக மாற்றிவிடுகின்றது.

அடிப்படையில் "சுயதேர்வு" என்பது பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமை. அதை குறித்து பேச எத்தனித்திருப்பது பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால் வர்க்கம், சாதி, மதம், இனம் என பலவாறாக பிளவுப்பட்டிருக்கும் நம் சமுகத்தில், அதை ஒற்றைப் பரிமாணத்தில் பேசிவிட முடியாது அல்லவா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்