மழை பெய்யும் தருணங்களில்

By டான் அசோக்

மழை மனிதர்களுக்காகப் பெய்வதில்லை; மண்ணுக் காகப் பெய்கிறது. யாருக்கோ யாரோ சுமந்து வரும் பூ மாலையை தனக்கானதாய் எண்ணி மகிழும் ஒருவனைப் போல மழைவரும் போதெல்லாம் மனிதர்கள் வானத்தைப் பார்த்து குதூகலிக்கிறார்கள். மழையோ இடையில் எது தடுத்தாலும் விழுந்து, வழுக்கி, சறுக்கி சேரவேண்டிய மண்ணில்எப்படியும் சேர்ந்து விடுகிறது. மண்ணிற்கும் மழைக்கும் பூமியின் முதல் நாளில் இருந்தே காதல் இருந்திருக்கிறது.

சூரியனில் இருந்து பிய்ந்து வந்த நெருப்பு வட்டமாய் தகித்துக்கொண்டிருந்த பூமியை, தந்தையின் அரவணைப்பில் இருக்கும் காதலியை தீராத காதலால் திருடும் காதலனைப் போல, விடாமல் நீர் பொழிந்து திருடிக்கொண்டது மழை. மழை, பூமியை பருவமெய்த வைத்திருக்காவிடில் பூமி மனிதர்களைப் பெற்றிருக்காது.

பேச, எழுதப் பழகும் முன் மனிதன் முதன்முதலில் ஓவியம் வரையத் துவங்கியதுஅடைமழை பெய்த ஒரு அழகிய மாலைவேளையில் தான். கற்களைக் கூராக்கி,மிருகங்களின் கழுத்தைப் பதம் பார்த்துப் பச்சையாய் தின்ற மனிதனுக்குள் ஓவியனை உருவாக்கும் ஆற்றல் மழையைத் தவிர வேறெதற்கும் இருந்திருக்கும் என்பதை நம்புவதற்கில்லை. காதலிகளுக்கு இருந்திருக்கலாம். ஆனால் காதலியை மட்டுமல்ல... காதலையே அடையாளம் காட்டும் பொருளாய் மழைதானே இதுவரைக்கும் இருக்கிறது.காதலுக்கும் மழைக்கும் ஒரு தொடர் புண்டு. மழையில் சொல்லப்பட்ட காதல்கள் நிராகரிக்கப்பட்டதாய் எந்த இலக்கியமும் இதுவரை சொன்னதில்லை, நாமும் கேள்விப்பட்டதில்லை.

காதலிகள் தரும் முத்தங்களைப் போன்றது மழை. அதுவாய் நினைத்தால்தான் பெய்யும்.சில மழைகள் பெய்தடித்து திணறடிப்பதுமுண்டு. சில இன்னும் பெய்யாதா என ஏங்கவைப்பதும் உண்டு.

வெயிலுக்கு எதிரியாய் சொல்லப்பட்டாலும், மழையை எதிரியாய்ப் பெறும் தகுதி வெயிலுக்கு இருப்பதாகச் சொல்லமுடியாது. மழை, ஞானத்தின் மொத்தவிலைக்கடை.மழை சோகமாய் இருக்கும் தருணங் களில் உள்ளுக்குள் இருக்கும் ஞானியை எழுப்பிவிடுகிறது. மரத்தில் விழுந்து, இலையில் வடிந்து, கீழேத் துளித்துளியாய் ஒழுகும் மழையைப் பார்க்கும் ஒவ்வொருவனும் ஒரு நொடியேனும் புத்தனாகிறான். புத்தர் போதிமரத்தடியில் இருந்தபோது மழை பெய்திருக்க வேண்டும். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக புத்தரின் ஞானத்திற்கு போதி மரம் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

மணலை மட்டுமல்ல, மனதையும் கழுவும் ஆற்றல் மழைக்கு உண்டு. மழை பெய்யும்போது எல்லா மனங்களிலும் பெரும்பாலும் சமாதானமே நிலவுகிறது. ஏதோ நல்லசெயலை செய்யலாமா வேண்டாமா எனக் குழப்பத்தில் நிற்பவர்களை "உடனே செய்" என மழை தலையில் தடவிச் சொல்கிறது. மழையின் சத்தம் எதிர்மறை எண்ணங்களுக்குஒவ்வாததாக இருக்கிறது. ஏதாவதொரு மழை யின் போது எப்போதாவது ஒரு முறை யேனும் கோபம் வந்திருக்கிறதா என எண்ணிப்பார்த்தால் அப்படி எதுவும் எப்போதும் வந்ததாகத் தெரியவில்லை. மழையின் காரணமாக கெட்டுப்போன வேலைகளால் ஏற்படும் எரிச்சல் கூட மழையை சபிக்கக்கூடிய அளவிற்குக் கடினமானதாய் ஏற்படுவதில்லை. சாக எண்ணி கடைசி மாடிக்குப் போன எத்தனையோ பேர் மழையைப் பார்த்து மனம் மாறியிருக்கலாம். கொலை காரர்களில் எத்தனையோ பேரின் மனங்களைக் கூட கடைசி நேரத்தில் மழை கழுவியிருக்கக்கூடும்.

வரிகளுக்கிடையே படிக்க வைக்கும் அறிவைப் போல, காட்சி களுக்கிடையே பார்க்க வைக்கிறது மழை. சாவு வீடுகள் கூட மழை பெய்யும் தருணங்களில் வெறும் சோகவீடுகளாய்த் தெரியாமல் சாவிற்கும், மனிதர்களுக்குமான உறவை உணர்த்தும் கண்காட்சி அரங்கங்களாகத் தெரிகின்றன. மழையில் நனைந்த சாவுவீட்டில் உதிர்ந்த ரோஜாப்பூக்கள் விட்டுச் செல்லும் வாசம் நாசி வழியாக குடலுக்குள் ஊடுருவும் போது சாவு நமக்கு மிக நெருக்கத்தில் வந்து போகிறது.

கவிஞர் இனத்தின் அதிகாரபூர்வ கடவுளாய் மழை இருக்கிறது. மண்ணிற்கு அடுத்து கவிதைகளுக்கே அவை மிக நெருக்கமாய் இருக்கின்றன. மழை ஆயிரமாயிரம் காலமாய் மண்ணைக் காதலித்தாலும் வழியில் நிற்கின்ற ஒரே காரணத்திற்காக மனிதர்களுக்கும்எவ்வளவோ வழங்கிக் கொண்டிருக்கிறது. மின்கம்பியில் அமர்ந்தபடி நனைந்த தலையைசிலுப்பிக் காயவைக்கும் குருவிகள், உடலைச் சிலுப்பியபடியே ஓரமாய் நடக்கும் தெருநாய்கள், மழையால் உயிர் பெற கடைசியாக ஒருமுறை முயற்சித்து தோற்றுக்கிடக்கும் நனைந்த சருகுகள், திடீரென எட்டிப் பார்க்கும் காளான்கள், தலைக்குப் பிடிப்பதா புத்தகப் பைக்குப் பிடிப்பதா எனத் தெரியாமல் குடையை முன்னும் பின்னுமாய் மாற்றிமாற்றி ஆட்டி இரண்டையுமே நனைத்து நடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள்,தாமரை இலையில் மழை பெய்தததைப் போல நீர்த்துளிகள் நிற்கும் அழகியமுகங்களுடன் செல்லும் குமரிகள் என மழையை விட அழகாய் மழை விட்டுச் செல்லும் தடங்கள் ஏராளம். நடப்பை விட தடயங்கள் அழ கானவை என்பதையும் மழையே கற்றுத்தருகிறது. மனிதர்கள் விரும்புவதைப்போல மழை தனி அடையாளங்களை விரும்புவதில்லை. சாகக்கிடந்த எதோ ஒரு விதை எதேச்சையாகப் பெய்த எதோ ஒரு மழையில் உயிர்பிழைத்து பெரும்

விருட்சமாய் வளர்ந்திருக்கலாம். எந்த விதை எந்தத்துளியில் முளைத்தது என்பது தெரியா தெனினும் ஒவ்வொரு பிரம்மாண்ட விருட்சத்தின்பின்னும் அடையாளம் தெரியாத ஒரு மழையின் துளி இருக்கிறது.

எத்தனையோ மழைகள் லட்சம் வருடங்களாய் பெய்திருக்கின்றன. மாமோத்கள் காலத்தில் பெய்தது, டினோசர்களுக்கும் பெய்தது, இன்று மனிதர்களுக்கும் பெய்கிறது.நாளை எதுவுமே இல்லையென்றாலும் மழை பெய்துகொண்டுதான் இருக்கும். மழையைப் பொறுத்தவரை நாம் மண்ணுடனான அதன் காதலால் ஏற்பட்ட விபத்து. நமது உலகம் அழிந்தாலும் புதிய உலகம் உருவாகும் வரை மழை பெய்யும். ஆனால் நம்மைப்போல வேறு யாராலும் மழையை மனதிற்குள் உணர முடியுமா எனத் தெரியவில்லை.ஆனால் மழை அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. அதன் தேவையெல்லாம் மண்ணைச் சேரவேண்டும். மண் இருக்கும் வரை மழை பெய்யும்.

http://donashok.blogspot.com/2013/08/blog-post_16.html

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

14 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

மேலும்