ஜாலியன் வாலாபாக் நாயகரின் மகள் தமிழ்நாட்டின் மருமகள்!

By தஞ்சாவூர் கவிராயர்

வரலாற்று ஆசிரியா்களால் ‘ஹீரோ ஆஃப் ஜாலியன் வாலாபாக்’என்று வர்ணிக்கப்படுபவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. பிறப்பால் முஸ்லிம். இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகப் போராடியவர். ஆழ்ந்த இஸ்லாமிய மதப்பற்றும் ஜின்னாவுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்த இவர், முஸ்லிம்களுக்காக தனிநாடு உருவாவதை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்.

இவரது மகள் சஹிதா, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்பிஎஸ் ஸைக் காதல் மணம் செய்துகொண்டதும், இவர்களின் திருமணத்தை நேருவே முன்னின்று நடத்திவைத்ததும் பலர் அறியாத செய்தியாகும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை

டாக்டர் கிச்சுலு, டாக்டர் சத்யபால் இருவரை யும் ஆங்கிலேய அரசு பஞ்சாபிலிருந்து வெளியேற்றியது. இதைக் கண்டித்து, அமிர்த சரஸில் ஜாலியன் வாலாபாக்கில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடாயிற்று. அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவதாக இருந்த டாக்டர் கிச்சுலு கைதுசெய்யப்பட்டதால், அவர் இருக்கை காலியாக இருந்தது. ஆனாலும், கூட்டத்தின் தலைவருக்கான இடத்தில் டாக்டர் கிச்சுலுவின் படம் வைக்கப்பட்டுக் கூட்டம் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு நடந்த சம்பவம், இந்திய வரலாற்றின் கருப்பு தினமாக அதை மாற்றியது. ஜாலியன் வாலாபாக் படுகொலை காந்தியைக் கொதித்தெழ வைத்தது.

ஜெனரல் டயரின் கொடுஞ்செயலைப் புகழ்ந்து பாராட்டிய அன்றைய ஆங்கில ஆட்சி, பஞ்சாப் புரட்சிக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டி, டாக்டர் கிச்சுலுவைச் சிறையில் அடைத்தது.

“குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது?” என்று ஜெயில் கம்பியைப் பற்றியபடி கண்ணீர் மல்கக் கேட்ட தன் உறவினரிடம், ‘‘இந்தியாவில் அநாதை இல்லங்கள் இருக்கின்றன’’ என்று பதிலளித்தார் டாக்டர் கிச்சுலு. கிச்சுலு மிகச் சிறந்த பேச்சாளர். தோற்றத்தில் அழகர். ஷேக் அப்துல்லாவின் நெருங்கிய நண்பர். காஷ்மீர் பிரச்சினைகளில் சைபுதீன் கிச்சுலுவின் கருத்தறிந்துதான் நேருவே செயல்பட்டதாகச் சொல்வதுண்டு. காந்திஜியும் கிச்சுலு வீட்டில் ஆலோசனை நடத்தியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர் என்பதால், ஆங்கிலேய அரசு அவரை அடிக்கடி சிறைவைத்தது. தமது வாழ்நாளின் 14 ஆண்டுகளைச் சிறைக் கொட்டடிகளில் கழித்தார் கிச்சுலு. தேசத்துக்காகத் தன் பரம்பரைச் சொத்துகளை, நகைகளை, உடைமைகளை எல்லாம் அப்படியே வாரிக் கொடுத்தவர் கிச்சுலு. அந்திமக் காலத்தில் டெல்லி பொதுமருத்துவமனையில், பரம தரித்திரராகத்தான் காலமானார்.

கம்யூனிஸ்ட் ஆக்கிய கடிதம்

மருத்துவமனையிலிருந்து அவரது மகள் சஹிதாவுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி எழுதினார். ‘ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது பெரிதில்லை. நமது மக்களுக்கு ஏழ்மை யிலிருந்து என்று விடுதலை கிடைக்கிறதோ அப்போதுதான் நிஜமான விடுதலை பெற்றதாக ஆகும். இதற்காகப் பாடுபடு.’ இதன் பிறகுதான் சஹிதாவுக்கு கம்யூனிஸத்தின் மீது ஈடுபாடு உண் டாகக் காரணமாயிற்று. அக்கட்சியின் மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார் சஹிதா.

தேசப் பிரிவினைக்குப் பிறகு, கிச்சுலுவின் குடும்பம் லாகூரிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தது. டெல்லி ஆர்ட் தியேட்டரில் பாட்டு, நடனம் என்று பல நிகழ்ச்சிகளில் சஹிதா பங்குகொண்டார். அப்போதுதான் தமிழ்நாட்டிலிருந்து வந்த எம்.பி.சீனிவாசன் என்ற இளைஞரைச் சந்தித்தார். நட்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது.

பாதை தெரியுது பார்...

எம்பிஎஸ் ‘பாதை தெரியுது பார்’ படத்தில் இசையமைத்த ‘தென்னங்கீத்து ஊஞ்சலிலே...’, ‘சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டைத் துணையை தேடுது...’ போன்ற பாடல்கள் காலத்தில் அழிக்க முடியாதவை.

சென்னை கேகே நகரில் சஹிதா சீனிவாசன் வசிப்பதாகக் கேள்விப்பட்டு, அவரைச் சந்தித்தபோது, அவர் வாழ்க்கை இடர்சூழ்ந்த ஒன்றாக இருந்தது. எம்பிஎஸ் காலமாகியிருந்தார். ஒரே மகன் கபீருக்கு மனநலப் பிரச்சினை. மாமியார் (எம்பி எஸின் தாயார்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டி ருந்தார். எம்பிஎஸ்ஸுக்கு நிறைவேறாத லட்சியங்கள் ஏதேனும் இருந்ததா என்று கேட்டதற்குச் சொன்னார். “அவருக்கு லட்சியம் என்று ஏதும் கிடையாது; கனவுகளில் வாழ்ந்தவர் அவர். எம்பிஎஸ் ஒரு நேர்த்தியாளர். தன்னுடைய இசைக் குறிப்புகளையும்கூட உரிய முறையில் அவரே ஒழுங்காகத் தொகுத்து வைத்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார். அவரது அரசியல், கலை, இலக்கியம் சம்பந்தமான கட்டுரை களைத் தனி நூலாக வெளியிடும் கடமையும் எனக்கு இருக்கிறது” என்றார் சஹிதா.

இருண்ட அத்தியாயம்

சஹிதாவைச் சந்தித்து 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரைத் தேடிச் சென்றோம். சஹிதாவும் அடுத்து அவரது மகனும் மறைந்துபோனதே எங்களுக்கு கிடைத்த தகவல்கள். எம்பிஎஸ்ஸின் இசைக் குறிப்புகள் என்ன ஆயின? அவரது அரசியல், கலை - இலக்கியக் கட்டுரைகள். நூல் வடிவில் வந்தனவா? தெரியவில்லை. ‘ஜாலியன் வாலாபாக் நாயகர்’என்ற பெயரில் ஒளி வீசிய சைபுதீன் கிச்சுலுவின் வாரிசுகளின் வாழ்க்கையின் இறுதி அத்தியாயம் மேற்கொண்டு வாசிக்க முடியாதபடி இருண்டுகிடக்கிறது!

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 hours ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்