வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் டிபிக்களை அடிக்கடி மாற்றுவதன் உளவியல் என்ன? பாதிப்புகள் ஏற்படுமா?

By க.சே.ரமணி பிரபா தேவி

தற்போதைய ட்ரெண்டில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸைத் தினந்தோறும் மாற்றுவதும் இருக்கிறது. இந்த வசதி அறிமுகமாகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தாலும், தினந்தோறும் ஸ்டேட்டஸ் மாற்றுவது சிலரின் வழக்கமாகிவிட்டது.

வாட்ஸ் அப்பின் இந்த வசதியில், ஸ்டேட்டஸ்களை மாற்றுவதோடு நிறுத்தாமல் அதை தங்களது நண்பர்கள் குழுமத்தில் யார் யார் பார்த்தார்கள் என்ற விவரத்தையும் கண்காணிப்பவர்கள் பலர்.

ஃபேஸ்புக், ட்விட்டர் புரொஃபைல் படங்களை அடிக்கடி மாற்றுவதையும் சிலர் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பயணங்களின் போது, விழாக்களின் போது, கட்டிடங்களுக்கு முன்னால் என எங்கு சென்றாலும் படங்களை எடுக்க வேண்டும் என்ற முனைப்பு மக்களிடையே அதிகரித்துக்கொண்டே வருகிறது. நினைவுகளுக்காக என்பதைத் தாண்டி, சமூக ஊடகங்களில் பகிரப் படங்கள் எடுக்கும் போக்கு கணிசமாக உயர்ந்துள்ளது.

இன்றைய கால மக்கள் அனைவரும் கேட்ஜட்டுகளுடனே அதிகம் உரையாட என்ன காரணம்? கட்டற்ற சுதந்திரமா, வெற்று கவன ஈர்ப்பா அல்லது உளவியல் காரணங்களும் ஒளிந்திருக்கிறதா? இதுகுறித்து உளவியல் நிபுணர் அசோகனிடம் பேசினோம்.

''சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைவிட வாட்ஸ் அப்புக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் மற்ற செயலிகள் திறப்பதற்கும், பயன்பாட்டுக்கும் சிறிதளவு அவகாசம் எடுக்கும் நேரத்தில், வாட்ஸ் அப் உடனடியாகச் செயல்படுகிறது.

உதாரணத்துடன் சொல்ல வேண்டுமென்றால் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை ஃபில்டர் காபி என்றால், வாட்ஸ் அப் இன்ஸ்டண்ட் காபி போல. ஃபேஸ்புக்கில் பதிவேற்றும் விஷயங்கள் பொதுவெளியில் பகிரப்படும்போது, உலகம் முழுக்கச் செல்லும். ஆனால் வாட்ஸ் அப் அப்படியில்லை. நம்முடைய போன் தொடர்புகளுக்கு மட்டுமே தகவல்கள் பகிரப்படும்.

இத்தகைய காரணங்களால் வாட்ஸ் அப் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனாலேயே ஸ்டேட்டஸ் மாற்றுவது, புரொஃபைல் படம் மாற்றுவது உள்ளிட்டவைகளும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

    நார்சிஸம் காரணமா?

    நம்முடைய புகைப்படங்களைப் போடுவதற்குப் பின்னால் நார்சிஸத்தின் பங்கும் இருக்கிறது. தன்னைத் தானே ரசித்துக்கொள்வதன் உச்சம்தான் நார்சிஸம். கிரேக்கத்தில் இதற்கு ஒரு சுவாரசியக் கதை உண்டு. நார்சிசஸ் என்ற இளவரசனுக்கு மாலை வேளையில் நீர்ப்பரப்புகளின் அருகே ஓய்வெடுக்கும் வழக்கம் உண்டு. அதேபோல ஒரு நாள் மாலையில், தன் முகத்தைக் குளத்தங்கரையில் ரசிக்கிறான் நார்சிசஸ்.

    தன்னுடைய அழகால் கவரப்பட்ட அவன், அந்த பிம்பத்தோடு இணைய ஆசைப்படுகிறான். இதனால் குளத்தில் குதிப்பவன், நீச்சல் தெரியாமல் மாண்டு போகிறான். இதிலிருந்துதான் நார்சிஸம் என்ற சொல் உருவானது.

    மேக் அப், பேசும் விதம், ஆடை தேர்வு, ஆளுமை என எல்லாவற்றிலும் உப்பு போல கொஞ்சம் நார்சிஸம் இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் அதுவே அதிகமாகிவிடக் கூடாது.

    தன்னைத்தானே ரசித்துக் கொள்வதோடு, அடுத்தவர்களும் ரசிக்கட்டுமே என்ற மனநிலையில் வெளிப்பாடுதான் அடிக்கடி புகைப்படங்களை மாற்றுவது. ஒரு பழங்கூற்று உண்டு. ''மண வீட்டில் மணமகனாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருக்கவேண்டும்''. தானே முன்னிலைப் படுத்தப்பட வேண்டும் என்ற புகழ் போதையின் உச்சம் இது.

    புகைப்படங்களை தேர்ந்தெடுப்பதன் பின்னணி

    நம்முடைய சமூக ஊடக கணக்குகளுக்கான புகைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் சில உளவியல் காரணங்கள் ஒளிந்திருக்கின்றன. அவை நம் ரசனையை வெளிப்படுத்தும் விஷயங்கள்.

    வீட்டுக்கு திடீரென விருந்தாளிகள் வந்துவிட்டால், உணவு தயாரிக்க யோசித்து சிலர் ஹோட்டலில் சென்று உணவை வாங்கி வருவர். அத்தகைய மனநிலைதான் தங்களின் உண்மை முகத்தை மறைத்து, சினிமாவில் நடிக்கும் அழகான பெண்கள், ஆண்களின் புகைப்படங்களை வைப்பதன் பின்னணியில் மறைந்திருக்கிறது.

    செய்தி, படங்களை ஃபார்வர்ட் செய்பவர்கள் குறித்து?

    வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் கருத்துகளையும், பொது அறிவு செய்திகளையும்கூட வைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு தகவலைப் பார்ப்பார்கள். அதை ரசிக்கிறார்களோ இல்லை பின்பற்றுகிறார்களோ நிச்சயம் அவற்றை அடுத்தவர்களுக்குக் கடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களால்தான் பெரும்பாலான செய்திகள் மற்றவர்களுக்கு ஃபார்வர்ட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

    இதன்மூலம் இறுக்கமாய் இருப்பவர்கூட நகைச்சுவையாளராகத் தன்னை பாவனை செய்துகொள்கிறார். தமிழக அரசியலைத் தாண்டாதவர்கள், சர்வதேச அரசியல் பேசுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் சமூகத்தை ஒட்டி வாழ நினைக்கிறார்கள். ஆனால் அதில் போலித்தன்மையே அதிகமாய் இருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் ஒவ்வொருக்கும் நல்ல, அழகான முகமூடி கிடைக்கிறது. உண்மையான முகத்தை யாருமே வெளிக்காட்டுவதில்லை.

    கருத்துக் கூறுபவர்கள் பற்றி...

    இதில் இன்னொரு வகையும் உண்டு. கருத்துச் சொல்பவர்கள் என்னும் வகையாளர்கள். இவர்கள் மற்றவர்கள் என்ன பதிவிட்டாலும் கருத்துக்கூறுவார்கள். கமெண்ட் அடிப்பார்கள். நம்மைப் பற்றி அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிவதில் நமக்கு அலாதியான ஆர்வம் இருக்கும். அந்த மனநிலையைக் காசாக்குகின்றன சமூக வலைதளங்கள்.

    நம்முடைய பதிவுகளை, புகைப்படங்களை யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள்? எத்தனை பேர் கருத்து சொல்லியிருக்கிறார்கள் என்பதைக் கண்காணித்துக் கொண்டே இருப்பவர்கள் பலர். ஒரு குழந்தை, தான் புதிதாக வாங்கிய பொம்மையை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்ப்பது மாதிரியான மனநிலை அது.

    பாதிப்புகள் என்னென்ன?

    அதிக நேரம் தொழில்நுட்ப சாதனங்களுடனே இருப்பவர்களிடம் ஒருவிதமான பரபரப்பு இருக்கும். வெறுப்பு மனநிலை உண்டாகும். மனதை ஒருமுகப்படுத்தும் திறன் குறைந்துகொண்டே செல்லும். உறவுகளுக்கிடையே பாதிப்பு ஏற்படும். உணர்வுகள் உருக்குலையத் தொடங்கும்'' என்றார்.

    சமூக வலைதளங்களால் பாதிப்பு மட்டும்தானா?

    சமூக வலைதளங்கள் பாதிப்பை மட்டுமே அளிக்கின்றன என்பதில் உண்மையில்லை. ஓய்வெடுக்க, உரையாட, பகிர, முக்கிய காலங்களில்தகவலைப் பரிமாறப் பெரிதும் உதவுபவை சமூக ஊடகங்களே. அவற்றில் எந்த நேரமும் இருப்பதையும், அப்டேட்டுவதையுமே தொழிலாகக் கொள்ளாமல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவது என்று சுய வரையறை செய்துகொள்வது வாழ்க்கையை இனிப்பாக்கும்.

    VIEW COMMENTS

    முக்கிய செய்திகள்

    வலைஞர் பக்கம்

    23 hours ago

    வலைஞர் பக்கம்

    1 day ago

    வலைஞர் பக்கம்

    6 days ago

    வலைஞர் பக்கம்

    29 days ago

    வலைஞர் பக்கம்

    1 month ago

    வலைஞர் பக்கம்

    1 month ago

    வலைஞர் பக்கம்

    1 month ago

    வலைஞர் பக்கம்

    2 months ago

    வலைஞர் பக்கம்

    3 months ago

    வலைஞர் பக்கம்

    3 months ago

    வலைஞர் பக்கம்

    3 months ago

    வலைஞர் பக்கம்

    3 months ago

    வலைஞர் பக்கம்

    3 months ago

    வலைஞர் பக்கம்

    3 months ago

    வலைஞர் பக்கம்

    3 months ago

    மேலும்