இளங்கோவடிகளில் ஆரம்பித்து, ‘மோக முள்’ நாவல் எழுதிய தி. ஜானகிராமன் வரை காவிரியின் அழகில் மயங்கி மனதைப் பறிகொடுத்தவர்களுக்குப் பஞ்சமே இல்லை. காவிரியின் கரையில் இருந்தபடி அதன் அழகை ரசித்துக்கொண்டே, ஒரு வாழ்நாளையே கழித்துவிடலாம்.
தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள், காவிரி ஆற்றங்கரைகளை அழகுபடுத்த விரும்பினார்கள். செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், முதலமைச்சரான கோவிந்த் தீட்சதர் மற்றும் மராட்டிய மன்னர்கள் விதவிதமான கருங்கல் திருப்பணிகள் செய்து, காவிரியின் இரு கரைகளையும் அழகுபடுத்தினார்கள்.
காவிரிக்கரையின் தென்திசையிலும் வடதிசையிலும் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் சுவாமி புறப்பாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். பத்து நாள் விழாக் காலத்தில் திருமஞ்சனம் எனப்படும் சுவாமி நீராட்டு விழா இன்று வரையிலும் நடைபெறுகிறது. இதனால், கோயிலிலிருந்து புறப்பட்டுக் காவிரிக் கரையை அடையும் தெருவை இன்றும் திருமஞ்சன வீதி என்றே மக்கள் அழைக்கின்றனர். இங்குள்ள மக்கள் அன்றாடம் நீராடுவது இந்தக் காவிரியில்தான். கணித மேதை ராமானுஜனுக்கு லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஃபெலோஷிப் வழங்கியபோது, “நீங்கள் கணித மேதையாக உருவானதற்கு என்ன காரணம்?” என்று அவரிடம் கேட்டார்கள். “தினந்தோறும் காவிரியில் விடியற்காலையில் குளித்ததே இதற்கான முதல் காரணம்” என்றார் அவர்.
படித்துறைகளில் எத்தனை வகைகள்!
சுவாமி நீராட்டின்போது ஏராளமான மக்கள் காவிரியில் நீராடி சுவாமியைத் தரிசித்து வருவது இன்றும் வழக்கமாக உள்ளது. இந்த பக்தர்களின் வசதிக்கேற்ப அந்த மன்னர்கள் கருங்கற்களால், கலை நுணுக்க அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய திருமஞ்சன மண்டபங்கள், நீராழி மண்டபங்கள், படித்துறைகள், அவற்றை ஒட்டி சிவன், விஷ்ணு, விநாயகர் கோயில்கள் போன்றவற்றை உருவாக்கிக் காவிரிக்கு அழகு சேர்த்தனர். ரங்கம், திருச்சி, தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம், திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், திருவிடைமருதூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஊர்களில், காவிரியில் அழகிய படித்துறைகள், கோயில்கள், நீராழி மண்டபங்கள் காணப்படுகின்றன. கோயில்கள் நிறைந்த கும்பகோணத்தில் மட்டும் பகவத் படித்துறை, பாணாதுரை படித்துறை, ராயர் படித்துறை, மேலக்காவேரி படித்துறை, சங்கர மடப் படித்துறை என்று 5 விதவிதமான படித்துறைகளைக் காணலாம்.
ஆடிப்பெருக்கின்போது ஆயிரக் கணக்கான மக்கள் காதோலை கருகமணி, காப்பரிசி போன்றவற்றைக் காவிரி கரைக் கோயில்களில் படைத்துக் குழந்தைகளுக்குப் புனித மஞ்சள் நூலை கட்டும் வழக்கத்தை காணலாம். புதுமணத் தம்பதிகள் தாலி பிரித்துக் கட்டும் மங்கல வழக்கம் ஆடிப்பெருக்கின்போது நடைபெறுகிறது. சிறுவர்கள் காவிரியிலிருந்து தேர் வடிவத்தில் உள்ள சப்பரங்களில் சுவாமி படங்களை வைத்து இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வரும் மழலையின் பேரழகை இன்றும் காணலாம். மழலைகளின் இப்பருவத்தைச் சிறுதேர்ப் பருவம் என்று சங்க இலக்கியங்கள் அழைக்கின்றன.
பிறகு, வீட்டில் காவிரித் தாயைப் பெண்கள் பூஜை செய்வது தமிழர்களின் வீட்டுச் சடங்குகளின் ஒன்றாகவே திகழ்கிறது. நீர் இல்லாத மணற்பாங்கான கோடைக் காலத்தில் காவிரியில் ஊற்றை உருவாக்கி, அந்த நீரைக் கொண்டு கலசத்தை நிரப்பி, கரகாட்டம் நிகழ்த்துவதை கரையோர நாட்டுப்புறங்களில் இன்றும் காணலாம்.
ஒய்யார நடை போட்டு வரும் காவிரியை, படித்துறைகள், நீராழி மண்டபங்களைக் கட்டி மக்கள் எப்படியெல்லாம் வரவேற்றிருக்கிறார்கள்! காவிரியும் என்ன சும்மாவா, போகும் இடங்களிலெல்லாம் கலைகளாக அல்லவா பாய்ந்திருக்கிறாள்!
- தேனுகா, கலைவிமர்சகர், தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago