ரஜினி தன் உண்ணாவிரதத்தை ஆதரித்து மேடைக்கு வந்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த அத்தனை திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், இதர விஐபிக்கள் எல்லோருக்கும் பெரிய கும்பிடு மட்டுமே போட்டார். சைகை காட்டி உடன் அமர வைத்தார் ரஜினி. நேரில் வாழ்த்து சொல்ல வர இயலாத முக்கிய பிரமுகர்கள் அன்றே ரஜினிக்கு வாழ்த்துக் கடிதங்கள் தந்திகள் அனுப்பினர். அவை ஆயிரக்கணக்கில் குவிந்தன.
பலர் உண்ணாவிரத மேடையில் இருந்த ரஜினியுடன் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தனர்.
திமுக சார்பில் அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உசேன் ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள். ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் மஞ்சள் நிற பொன்னாடை மற்றும் ஆள் உயர ரோஜாப்பூ மாலை அணிவித்து வாழ்த்தினார். பரிதி இளம் வழுதி எம்.எல்.ஏ குடும்பத்துடனே வந்து வாழ்த்தினார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தா.கிருட்டிணன் ஆகியோரும் வாழ்த்தினர்.
ஸ்டாலின் வாழ்த்திய போது தன் கையோடு கொண்டு வந்திருந்த திமுக தலைவர் மு.கருணாநிதி கொடுத்து அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தையும் ரஜினியிடம் கொடுத்தார். தொடர்ந்து நிருபர்களிடம் ஸ்டாலின் பேசும்போது, 'சேப்பாக்கம் தொகுதி திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதி, எனவே அவரது சார்பில் அவர் கொடுத்து அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை கொடுக்க வந்தேன். கடிதத்தைக் கொடுத்து வாழ்த்தினேன். ரஜினிகாந்த் என்னுடைய நண்பர். எனவே அவரை நேரில் வாழ்த்த வந்தேன். காவிரி பிரச்சினையை அரசியல் ஆக்கவில்லை!' என தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், 'நெய்வேலியில் பாரதிராஜா மேடையில் திமுகவை கடுமையாகத் தாக்கி பேசி உள்ளாரே?' எனக் கேட்டனர். அதற்கு பதில் தெரிவித்த ஸ்டாலின், 'தலைவரிடம் (கருணாநிதியிடம்) விஜயகாந்த் உறுதிமொழி கொடுத்ததனால் பேரணியில் திமுக கலைஞர்கள் கலந்து கொண்டனர். எங்கள் கலைஞர்கள் எப்படி நாகரிகமாக கலந்து கொண்டார்கள் என்பதை எல்லோருமே பார்த்தார்கள். 'அவர்கள்' எப்படி மேடையில் நடந்து கொண்டார்கள் என்பதை இந்த உலகமே பார்த்தது. அப்படிப்பட்ட பாரதிராஜாவை விமர்சிக்க எனக்கு தகுதியில்லை!' என்று உணர்ச்சி பொங்கினார்.
திமுகவுக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே அரசியல் ரீதியாக நெருங்கிய நட்பு உள்ளதா என்ற இன்னொரு கேள்விக்கு, 'அரசியல் ரீதியாக அல்ல நட்பு ரீதியாகவும் எப்போதுமே நாங்கள் நெருங்கியே இருக்கிறோம்!' என்று பதிலளித்தார்.
அப்போது மத்திய அமைச்சராகவும், பாஜகவில் இருந்தவருமான திருநாவுக்கரசரும், பாஜக நிர்வாகிகள் ஹண்டே, காசிமுத்து, மாணிக்கம் ஆகியோரும் நேரில் வந்து வாழ்த்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்த குமார், ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம், எம்.எல்.ஏக்கள் ரங்கநாதன், வள்ளல் பெருமான் ஆகியோரும் மாலை மற்றும் சால்வைகள் அணிவித்து வாழ்த்தினர். புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்ததுடன் ரஜினியுடன் உண்ணாவிரதத்திலும் கலந்து கொண்டார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், மக்கள் தேசம் தலைவர் கண்ணப்பன், எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் பலராமன் ஆகியோரும் ரஜினிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர்கள் தவிர திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சரத்குமார், அர்ஜுன், விஜய், பிரசாத், சூர்யா, முரளி, நெப்போலியன், சந்திரசேகர், அப்பாஸ், பாக்யராஜ், பார்த்திபன், லிவிங்ஸ்டன், ஜெயராம், சிலம்பரசன், லாரன்ஸ், டெல்லி கணேஷ், பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, அருண்பாண்டியன், பாண்டு, செந்தில், ஹர்ஷவர்த்தன், ஸ்ரீகாந்த், அருண்குமார், சின்னி ஜெயந்த், வினுசக்கரவர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, மலேசியா வாசுதேவன், கவுண்டமணி, அலெக்ஸ், ராஜீவ், கரணாஸ், குள்ளமணி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ராஜேஷ், ரமேஷ்கண்ணா, கிரேன் மனோகர், சிசர் மனோகர், தியாகு, ஸ்ரீகாந்த், டி.ராஜேந்தர், நிழல்கள் ரவி. நடிகைகள் ராதிகா, மனோரமா, குஷ்பு, மீனா, ரம்பா, காய்த்ரி ஜெயராம், ஜெயசித்ரா, தீபா வெங்கட், மயிலை ஜெயதேவி, விலாசினி, சைலு, காந்திமதி, 'பசி' சத்யா, சத்யப்ரியா, எஸ்.என்,பார்வதி, லதா, டைரக்டர்கள் பாலசந்தர், கே.எஸ்.ரவிகுமார், மகேந்திரன், எஸ்.பி.முத்துராமன், சேரன், கவிஞர்கள் வைரமுத்து, வாலி, படத்தயாரிப்பாளர்கள் பஞ்சு அருணாசலம், ஆர்.பி,சவுத்ரி, கே.ஆர்.ஜி, கேயார், விநியோகஸ்தர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.சிதம்பரம் உள்ளிட்டோரும் வாழ்த்தினர்.
இவர்களில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ''நெய்வேலி பொதுக்கூட்டத்தில் பாரதிராஜா திமுக தலைவர் கருணாநிதியைப் பற்றியும், ரஜினியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். அவரை அப்படி பேசுவதற்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் எப்படி அனுமதிக்கலாம். அவரை ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அந்தப் பேரணியில் திமுகவை சேர்ந்த நடிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கருணாநிதியை சந்தித்து விஜயகாந்த் கேட்டபோது நானும் பக்கத்தில்தான் இருந்தேன். அப்படி அழைத்து சென்ற பின்பு மேடையில் திமுக நடிகர்களை வைத்துக் கொண்டு நாகரிகம் இல்லாமல் பாரதிராஜா பேசியதை விஜயகாந்த் தட்டிக் கேட்க வேண்டாமா?
தார்மீகப் பொறுப்பு ஏற்பதாகக் கூறி திமுக நடிகர்களை அழைத்து சென்ற விஜயகாந்த் இதற்கு விளக்கம் சொல்வாரா? கருணாநிதியை தாக்கிப் பாரதிராஜா கொடுத்த பேட்டிக்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் பேரணிக்கு போய் வாருங்கள் என்று சரத்குமாரையும், சந்திரசேகரையும் நான் வைத்தேன். இது எங்கள் நாகரிகம். ஆனால் பாரதிராஜா அங்கே காட்டிய நாகரிகம் என்ன? நெய்வேலி பேரணிக்கு வந்தவர்கள் மட்டுமே தமிழ் உணர்வு உள்ளவர்கள் என்று பேசியிருக்கிறார். இது எந்த வகையில் நியாயம்? நான் ரஜினியை வைத்து படம் எடுக்கவில்லை. என் மகன் நடிக்கும் படத்துக்கு குத்து விளக்கு ஏற்ற அழைக்கவில்லை!'' என கடுமையாக தாக்கி விட்டே அகன்றார்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நெப்போலியன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ''சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அரசியலில் அறிமுகம் செய்தவர் கருணாநிதி. பாரதிராஜாவினுடைய மாணவன் என்று முறையில் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நெய்வேலி கூட்டத்தில் கருணாநிதியைப் பற்றி பாரதிராஜா பேசியது கண்டிக்கத்தக்கது. நாங்கள் சபை அடக்கத்திற்காக பொறுமை காத்தோம். மேடைகளில் பேசும்போது, 'பராசக்தி' படம் பார்த்துத்தான் தமிழ் உச்சரிப்பை கற்றுக் கொண்டேன் என்று பல முறை புகழ்ந்து பேசியவர்தான் இந்த பாரதிராஜா. தற்போது கருணாநிதியை யார் என்று கேட்கும் அளவுக்கு வந்திருக்கிறார். இந்த நிலைக்கு வந்த பாரதிராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். பாரதிராஜா நடிப்பை கற்றுக் கொடுக்கட்டும். ஏற்றுக் கொள்கிறோம். அரசியல் கற்றுத்தர வேண்டாம். அரசியல் கற்றுத்தர அவருக்கு அருகதையில்லை!'' என்று பொங்கினார்.
நடிகை ராதிகா நிருபர்களிடம் பேசுகையில், ''பாரதிராஜா எப்பவுமே தமாஷானவர். எனக்கு இருபது வருஷமா அவரைத் தெரியும். உணர்ச்சி வசப்பட்டு ரொம்ப பேசுவார். அப்புறம் அப்படியே மாறி விடுவார். டைரக்டர் பாலசந்தரை ஒரு முறை சாதி குறிப்பிட்டு திட்டினார். இப்போது அவரை கட்டித்தழுவிக் கொள்கிறார். ரஜினியை இப்போது இப்படி பேசும் பாரதிராஜாவுக்கு ரஜினியை வைத்துப் படம் எடுக்கும்போது தெரியவில்லையா? என்னையே 'நீ தமிழச்சியா?' என்றுதான் பாரதிராஜா கேட்பார். நான் இங்கே பிறந்தவள் இல்லைதான். என் அப்பா எம்.ஆர்.ராதா பெரியார், அண்ணாவுடன் திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர். அந்த பாரம்பரியத்தில்தான் தமிழ்காற்றை நான் சுவாசிக்கிறேன். வளர்ந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் தமிழ் என்றாலே கருணாநிதியைத்தான் சொல்வார்கள். அவரைப் போய் 'யார் இவர்?' என்று பாரதிராஜா கேட்கிறார்.
ஒரு தமிழனை இன்னொரு தமிழன் இப்படி கேட்கலாமா? தமிழனுக்கு அழிவு தமிழனால்தான். நான் திமுக கட்சிக்காரி அல்ல. ஒரு நடிகையாகத்தான் இதை சொல்கிறேன். பாரதிராஜாவோ ஒரு கட்சி சாயம் பூசிக் கொள்வதற்காக அப்படி பேசியிருக்கிறார். அவர் அப்படித்தான் பேசுவார்!'' என்று கூடுதல் உணர்ச்சி காட்டினார். அவருடன் வந்த அவரின் கணவர் நடிகர் சரத்குமாரோ அதையும் தாண்டி தாக்குதல் நடத்தினார்.
- பேசித் தெளிவோம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
19 hours ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago