அன்பிற்கினிய டைம்ஸ் ஆஃப் இந்தியா,
சில நேரங்களில் மவுனத்தை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமானது. பெரும்பாலான இணையச் சமூகமே உங்களுக்கு எதிராக கொதித்தெழுந்த வேளையில், மக்கள் ஏன் இப்படி கோபப்படுகிறார்கள் என சுயபரிசோதனை செய்துகொள்வதில் தவறேதும் இல்லை என நீங்கள் நினைத்தாலும்கூட, தீபிகா உணர்வுகளுக்கு எதிரான உங்களது பதிவு எதிர்பாராதது.
தீபிகா படுகோனேவுக்கு எதிரான, குறிப்பாக அவர் மார்பகப் பிளவு குறித்த உங்கள் செய்திக் கட்டுரையைக் கண்டித்துக் கொதித்தெழுந்த அவரது ட்வீட்கள் மற்றும் >ஃபேஸ்புக் பதிவு ஆகியவற்றுக்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் எதிர்பாராதது மட்டுமல்ல அதிர்ச்சிகரமானது. இதற்கு பதிலாக நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க முயற்சித்திருக்கலாம். இல்லையேல் மவுனமாகவே இருந்திருக்கலாம். ஆனால், இந்த இரண்டு வாய்ப்புகளையும் விடுத்து, மொத்த பிரச்சினையையும் தவறாக அணுகியிருப்பதன் மூலம் அதல பாதாளத்துக்குள் உங்களை நீங்களே தள்ளிக் கொண்டீர்கள் என்றே சொல்ல வேண்டும்.
பாம்பே டைம்ஸ் பத்திரிகையில் உங்களுடைய (‘ >Dear Deepika, our point of view,’ Sept. 21) கட்டுரை "உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் நாங்கள் அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம், ரேடியோ, இணையம் என வெவ்வேறு ஊடகங்களின் வித்தியாசமான வாசகர்களின் தேவைக்கு ஏற்ப அவற்றை அணுகுகிறோம். எங்கள் வாசகர் வழியே எங்கள் வழி. பலதரப்பட்ட ஊடகங்களில் கோலோச்சியுள்ள நிலையில் அவற்றில் செய்திகளை நுகர்ந்து, பகிர்ந்து கொள்வதில் எந்தவிதமான கெடுபிடியும் எங்களுக்கு இல்லை" இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
ஊடக உலகில் ஒவ்வொரு துறைக்கும் வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதேவேளையில் துறைகள் பலவாக இருந்தாலும் ஊடக தர்மம் ஒன்றே.
இருப்பினும் இணையத்தில் எதைப் பதிவு செய்யலாம, எதைத் தவிர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இருக்கவே செய்கிறது. இணைய உலகம்...குழப்பமானது, இரைச்சலானது...அங்கே பரபரப்பான தலைப்புகளை பயன்படுத்துவதில் நிதானிக்க வேண்டியதில்லை என்றெல்லாம் கூறி, பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாது. அப்படிக் கூறுவதால், தவறுகளுக்கு வருந்தத் தவறிவிடுகிறீர்கள்.
இந்த அணுகுமுறை சரியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இங்கே இப்படித்தான், இதை நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே உங்கள் கருத்தின் சாராம்சம். ஆன்லைன் உலகம் குழப்பமானது, இரைச்சலானது என்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், அந்த குழப்பமான சூழலே இங்கே பதிவிடப்படும் அனைத்து உள்ளடக்கங்கள் மீது அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதை ஏற்க முடியவில்லை என்றால், ஒரு பெண்ணை இழிவுபடுத்தி, அதை பரபரப்பான செய்தியாக்குவதை விருப்பத்தோடே செய்ததாக வெட்கத்தைவிட்டு ஒப்புக்கொள்ளுங்கள்.
பெண்கள் நடத்தப்படும்விதம் நாட்டின் மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கும் வேளையில், இப்படி ஒரு செயலைச் செய்துவிட்டு அதுகுறித்து சிறிய வருத்தம்கூட இல்லாமல் நீங்கள் இருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. பாலியல் வக்கிரங்கள் பல்வேறு ரூபங்களில் வெளியாகின்றன. ஒருபுறம் பாலுணர்வை தூண்டும் பேச்சுகள், பாலியல் ரீதியான விமர்சனங்கள், ஆளை விழுங்குவது போல் பார்வையாலேயே அத்துமீறுதல் என இருந்தால் பாலியல் பலாத்காரம் என மற்றொருபுறம் விரிகிறது. பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறையான பலாத்காரத்திற்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பும் வேளையில், சிறிய சீண்டல்களை ஆதரிப்பது எப்படி நியாயமாகும். அது நயவஞ்சகம்...அப்படி யாராவது சொன்னீர்களா என்ன?
பின்னர், >தீபிகாவின் கோபம் விளம்பரம் தேடும் வஞ்சகமா? என கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். அந்தக் கேள்விக்கு கீழ் (உங்களைப் பொறுத்தவரை அது கேள்வி அல்ல, நடிகை உங்களை திட்டியதற்கு நீங்கள் கற்பிக்கும் காரணம் அது) சில புகைப்படங்களை கலவையாக்கி பதிவு செய்திருக்கிறீர்கள். அந்தப் புகைப்படங்கள் அத்தனையும் தீபிகாவின் மார்பகங்களையும், அவரது மார்பு பிளவையும், கால்களையும் காட்டுவதாக உள்ளன. இதன்மூலம் நீங்கள் உணர்த்த நினைப்பது என்னவென்றால், நடிகை தீபிகா பல தருணங்களில் தனது அங்கங்கள் பகிரங்கமாக தெரியுமாறு போட்டோ ஷூட்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும்போது நாங்கள் தாராளமாக அளித்த "பாராட்டை" மட்டும் ஏன் குற்றமாக கொள்கிறார்? என்பதையே.
அது அப்படி அல்ல டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஒரு பெண்ணின் மார்பகப் பிளவை மிகவும் நெருக்கமான கோணத்தில் காட்டுவதற்கும், அதை வைத்தே ஒரு தலைப்புச் செய்தியை உருவாக்கி, OMG! Deepika’s Cleavage Show” என்று அதற்கு ஒரு தலைப்பிட்டு, ஏதோ அவரே உங்களுக்காக பிரத்யேகமாக போஸ் கொடுத்து, அந்தப் புகைப்பட்டங்களை அளித்த மாதிரி செய்தி வெளியிடுவதிலும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றன. நீங்கள் அந்த புகைப்படங்களை செய்தியாக்கியது அப்பட்டமான தனிமனித உரிமை அத்துமீறல், அவர் அப்படி போஸ் கொடுத்தது அவரது விருப்பம்.
இதே காரணத்திற்காகத் தான் முன்பு கேத்ரீனா கைஃபும், ரன்பீர் கபூருடன் ஸ்பெயினில் பிகினி உடையில் இருந்த அவரது புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியானபோது ஆத்திரமடைந்தார். அவர் பிகினி உடையில் இருந்த புகைப்படம் வெளியானது அவரை ஆத்திரப்படவைக்கவில்லை. ஆனால், அவர் அனுமதி அல்லாமல், அவருக்குத் தெரியாமல் அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன என்பதுதான் அவருக்கு ஆத்திரமூட்டியது. 'அனுமதி' அதுவே நீங்கள் தொடத் தவறிய பிரச்சினை.
தீபிகாவின் உடலுக்கு அவரே சொந்தக்காரர் - அதை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே தீர்மானிப்பார். அவருடைய உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டுக்காட்டி அதை விமர்சிப்பதன் மூலம் பெண்ணை ஒரு போகப்பொருளாக்க வேண்டாம் என்ற பெண்களின் போராட்டத்திற்கு எதிராக நீங்கள் செயல்படுகிறீர்கள்.
தீபிகாவின் மார்புப் பிளவு குறித்த உங்களது விமர்சனத்திற்கும், தெரு முணையில் நின்று கொண்டு பெண்களைப் பார்த்து விசிலடிக்கும் ஆணுக்கும், பேருந்தில் பெண்ணின் துப்பட்டா சரிந்தால்கூட அவளது அவயங்களை உற்றுநோக்கும் ஆணுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். அவர்கள் தங்கள் கண்களால் பெண்ணை படம் பிடிக்கிறார்கள். நீங்கள் உங்கள் கேமராவால் அவளது அங்கங்களை படம் பிடிக்கிறீர்கள்.
அதோடு நிற்கவில்லை நீங்கள், ஆண்களும்தான் காட்சிப் பொருளாக்கப்படுகிறார்கள் என்ற வாதத்தை வைக்கிறீர்கள். ஷாருக்கானின் 8 பேக் போஸ்டரும் 'ஓ மை காட்' என்ற எதிர்வினையை ஏற்படுத்தியது என கூறுகிறீர்கள். அதாவது, நாங்கள் ஷாருக்கான், தீபிகா, அவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமையே காட்சிப் பொருளாக்குகிறோம் என்கிறீர்கள்.
தீபிகா விளம்பரத்திற்காகவே இதை செய்தாரா? எனக்கு நிச்சயமாக தெரியாது, ஆனால், பலர் கேட்கும் ஒரே கேள்விக்கு அப்படி பதில் சொல்லிக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, உங்களுக்கு தணிக்கை வாரியம் தேவையில்லை. ஆனால், இத்தகைய பதிவுகளை இடும் முன்னர், ஆசிரியர் குழுவில் சில முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதில் தவறில்லை. அது, உங்களை பெரும்கோபத்தில் இருந்து காக்கும். ஒரு தனிநபர் மீது ஆளுமை செலுத்துவதையும் தாண்டி அவரை ஒரு காட்சிப்பொருளாக்கி, அவரது உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் செயல்பட்டதே இங்கே எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி என்பதை தயைகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பதிவுக்கு நீங்கள் பயன்படுத்திய நபரின் தன்மை உங்கள் பதிவாலும், அதற்கு பதிவிடப்பட்ட முதல் கருத்துகளாலும் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் அவரது உணர்வுகளை மதித்து மன்னிப்புக் கேட்டிருக்கலாம், இல்லையேல் மவுனமாகவே இருந்திருக்கலாம்.
தங்கள் உண்மையுள்ள
வெகுண்டெழுந்த ஒரு பெண்.
| தமிழில்: பாரதி ஆனந்த் |
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago