அ
ஸ்தபோவ் ரயில் நிலையம்... டால்ஸ்டாய் வாழ்க்கைப் பயணத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட இடம்.
ஏகப்பட்ட நிலமும், அரண்மனைப் போன்ற வீடும், வீடு முழுக்க வேலைக்காரர்களும் கொண்ட, ரஷ்யாவின் செல்வ பிரபுக்களில் ஒருவரான டால்ஸ்டாய், அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் கோப்புகளும், தூசிகளும் நிரம்பிய சின்னஞ்சிறிய அறையில் இறந்துபோனார்.
டால்ஸ்டாய் இறக்கும்போது ‘‘விடுதலை... விடுதலை...’’ என்று சொல்லியிருக்கிறார். அமைதியற்ற மனநிலையுடன், தான் நினைத்ததை முழுமையாக செய்துமுடிக்க முடியாத ஏக்கத்தில் இருந்த டால்ஸ்டாய் வேண்டிய ‘விடுதலை’ என்னவோ?
மரணிக்கும் தருவாயிலும் வீட்டில் இருந்து தன்னுடைய மனைவி தன்னைத் தேடி வந்துவிடுவாளோ என்ற பயத்தில் இருந்தார் டால்ஸ்டாய். மனைவி சோபியாவைப் பார்த்துப் பயப்படும் அளவுக்கு சோபியா கொடுமைக்காரர் இல்லை. டால்ஸ்டாய் தான் எழுதிய படைப்புகளுக்கு காப்புரிமை இல்லை, விரும்பியவர்கள் பதிப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவித்ததை சோபியா எதிர்த்தார்.
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு டால்ஸ்டாயின் காப்புரிமைத் தொகை அவசியம் என நினைத்தார். மூதாதையர் சொத்தாக இருந்த விவசாய நிலங்களை விவசாயிகளுக்கே பிரித்துக் கொடுக்க, டால்ஸ்டாய் முடிவெடுத்தபோது, சோபியாவுக்கு எதிர்காலம் பற்றிய பயம் வந்தது.
சொல்லாமலே...
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாமல் வாழ நினைத்த டால்ஸ்டாய், சோபியாமேல் உள்ள அன்பினாலும், அவர் கொடுத்த நிர்பந்தங்களாலும் தன் விருப்பத்துக்கு மாறாக நடக்க வேண்டி இருக்குமோ என்று யாருக்குமே சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.
நீண்ட தூரம் மேற்கொண்ட ரயில் பயணத்தில், தொடர்ந்து பயணிக்க உடல்நிலை இடம்தராது என்ற நிலையில் அவர் இறங்கிய இடம்தான் அஸ்தபோவ். உலகத்தின் மாபெரும் இலக்கிய மேதை, தன்னுடைய நடைமேடையில் இறங்கி மரணத்தை வரவேற்க காத்திருக்கிறார் என்பதை அஸ்தபோவ் ரயில் நிலையம் உணரவில்லை.
வறுமையினாலும் குடும்பத்தின் ஆதரவின்மையாலும் படைப்பாளிகள் துயருற்ற கதைகளைப் படித்திருக்கிறோம். டால்ஸ்டாயின் சமகால எழுத்தாளரான தஸ்தயேவ்ஸ்கி, வறுமையினால் இறுதிவரை துயருற்றார். டால்ஸ்டாய்க்கோ சராசரி வாழ்க்கையின் போதாமைகள் எதுவும் கிடையாது. செல்வநிலையிலேயே வாழ்ந்த அவருக்கும் அமைதியான மனநிலை வாய்க்கவில்லை.
எழுதுவதோடு ஓர் எழுத்தாளனின் கடமை முடிவடைந்துவிடுவதாக டால்ஸ்டாய் நினைக்கவில்லை. வறியவர்களைப் பற்றி எழுதிவிட்டு தான் செல்வ நிலையில் இருப்பதை வெறுத்தார். அடிமைத்தனத்தை எதிர்த்துவிட்டு, ஐநூறு அடிமைகளைத் தன்னுடைய பண்ணையில் வைத்து வேலை வாங்கும் முரண்பாட்டினால் துயருற்றார். எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்தே டால்ஸ்டாய்க்குள் இந்தப் போராட்டம் தொடங்கிவிட்டது. விவசாயிகள் உழைக்க, தான் உட்கார்ந்து சாப்பிடுவதைக் குற்றமாகக் கருதினார்.
130 மைல்... 3 நாட்கள்
‘‘ரஷ்ய விவசாயிகள் ஆறாத் துயருடன்தான் இறந்து போவார்கள். நானும் என் பாவங்களுடன் இறந்துபோகப் போகிறேன்’’ என்று மரணப் படுக்கையில் கூறியுள்ளார். உயர் மேட்டுக்குடி வாழ்க்கையில் இருந்தாலும், டால்ஸ்டாய் தன்னை ஒரு விவசாயியாகவே நினைத்திருந்தார் என்பதையே அவரின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.
60 ஆண்டுகளுக்கும்மேல் தொடர்ந்து எழுதிய டால்ஸ்டாய் ஒருபோதும் உடலுழைப்பை விட்டதில்லை. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தொடர்ந்து எழுதுவார். நான்கைந்து மணி நேரம் உடல் வருந்த நிலத்தில் வேலை செய்வார். எழுதுவதின் களைப்பை, உடலுழைப்பின் மூலமே சரி செய்துகொண்டார். உழுவது, மரம் வெட்டுவது, விறகு உடைப்பது என எந்த வேலையையும் விட்டு வைத்ததில்லை. இளமையிலேயே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு நான்கைந்து மணிநேரம் குதிரை சவாரி செய்வதென்றாலும் டால்ஸ்டாய்க்கு விருப்பமே. ஏறக்குறைய 60 வயது இருக்கும்போது ஒருமுறை மாஸ்கோவில் இருந்து அவருடைய பண்ணை இருந்த யாஸ்னயாவுக்கு நடந்தே வந்திருக்கிறார். 130 மைல் தூரம். தோளில் மாட்டிய பையில் கொஞ்சம் உணவுப் பொருட்கள், ஒரு சட்டை, வயிற்று வலி மருந்து, பென்சிலும் குறிப்பு நோட்டுமாக கிளம்பிய டால்ஸ்டாய், மூன்றே நாட்களில் இந்த தூரத்தை நடந்து கடந்தி ருக்கிறார்.
காந்தியின் பள்ளிக்கூடம்
டால்ஸ்டாய் தொடக்கத்தில் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவமும் பயிற்சியும்தான் உடலுழைப்பின் மீதான அவரின் ஆர்வத்தை அதிகரித்தது.
டால்ஸ்டாய் தன் காலத்தில் இருந்த சமூக அவலங்கள் எல்லாவற்றையும் எதிர்த்தார். குறைகளைக் களைய செயலூக்கத்துடன் இருந்திருக்கிறார். டால்ஸ்டாய் தனக்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கிறார். இன்றைய நவீன கல்விக் கொள்கைகளுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறது டால்ஸ்டாயின் கல்விக் கொள்கை.
கல்வியில் இரண்டே பிரச்சினைகள்தான். எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்? எப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டும்? டால்ஸ்டாய் இவ்விரண்டு கேள்விகளையும் தானே உருவாக்கிய பள்ளியில் முயற்சி செய்து பார்த்தார். காந்தி தென்னாப்பிரிக்காவில் உருவாக்கிய பள்ளிக்கூடத்துக்கு ‘டால்ஸ்டாய்’ என்று பெயரிட்டதற்குக் காரணம், டால்ஸ்டாயின் கல்விக் கொள்கையை அவர் ஏற்றுக்கொண்டதுதான்.
கிறிஸ்துவ மதச் சடங்குகளும் கோட்பாடுகளும் டால்ஸ்டாய்க்கு ஏற்புடையதாக இல்லை. ஆனால் பைபிள் ஒன்றே உண்மையானது, குழந்தைகள் அனைவருக்கும் ஏற்ற ஒரே புத்தகம் பைபிள் மட்டுமே என்றார். டால்ஸ்டாய் பைபிளை முழுமையாக மனப்பாடம் செய்திருந்தார். கடவுள் உண்டென்று நம்பினார். எந்த மாதிரிக் கடவுள் என்றுதான் தன்னால் சொல்லமுடியவில்லை என்றார். கிறிஸ்துவையும் அவர் உபதேசங்களையும் ஏற்றுக்கொண்ட அவரால், மத நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை.
கணவர் இல்லாத அறை
டால்ஸ்டாய் தான் சிந்தித்ததையெல்லாம் செயல்படுத்திப் பார்த்தார். உடன் இருந்தவர்கள் அவர் செய்கையும் பேச்சும் விசித்திரமாகவும் விபரீதமாகவும் இருப்பதாக நினைத்தார்கள். டால்ஸ்டாய் அகமும் புறமும் ஒன்றென இருந்ததால் விமர்சிக்கப்பட்டார்.
தன்னைவிட 20 வயது இளைய சோபியாவைத் திருமணம் செய்துகொண்டார். பிரபுக்கள் குடும்பம், புகழ்பெற்ற எழுத்தாளர், சீமாட்டியைப் போல் வாழலாம் என்ற கனவுகளுடன் டால்ஸ்டாயைத் திருமணம் செய்துகொண்டார் சோபியா. திருமணமான முதல் நாளிலேயே தன்னுடைய நாட்குறிப்புகளைக் கொடுத்துப் படிக்கச் செய்தார். டால்ஸ்டாய் தினம் நாட்குறிப்பு எழுதும் பழக்கமுடையவர். திருமணத்துக்குமுன் அவர் காதலித்தப் பெண்கள், உறவுகொண்ட பெண்கள், சூதாடியது எல்லாம் ஒளிவுமறைவின்றி எழுதப்பட்ட அந்த நாட்குறிப்புகளைப் பார்த்த சோபியா அதிர்ந்துபோனார். ‘‘இனியும் இது தொடருமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘தொடராது’’ என்ற உறுதியை கொடுத்தார் டால்ஸ்டாய். அந்த உறுதியை கடைசிவரை மீறவில்லை அவர்.
சோபியாவும் டால்ஸ்டாயின் கடந்தகால தவறுகளைப் பெரிதுபடுத்தாமல், டால்ஸ்டாயின் எழுத்துக்கு உறுதுணை யாக இருந்தார். டால்ஸ்டாய் அடித்து அடித்து எழுதுபவர். அச்சுக்குப் போகும் கடைசி நிமிடம்வரை திருத்தங்கள் சொல்லிக்கொண்டிருப்பவர். இந்தக் கடினமான ஆனால் முக்கியமான பணியை சோபியாவே பார்த்துக்கொண்டார். இருவருமே ஒருவர்மேல் ஒருவர் தீராத அன்பு கொண்டிருந்தனர். அன்பு கணவர் இல்லாத அறையை, கற்பனை செய்துபார்க்க முடியாதவர் சோபியா. டால்ஸ்டாய் தங்களை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்ற செய்தியறிந்தவுடன் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
டால்ஸ்டாய் மரணப் படுக்கையில் இருந்தபோது, அவரை அருகில் சென்று பார்க்க அனுமதி கிடைக்காமல், அடுத்த அறையில் இருந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தார் சோபியா. அன்பான மணவாழ்க்கையில் உடனிருந்து, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, அவரின் எழுத்துக்களுக்கு உறுதுணையாக நின்ற ஒரு ஜீவனை டால்ஸ்டாய் பார்க்க மறுத்ததேன்? கணவன் மனைவியாக இருவருக்குள்ளும் இருந்த அந்நியோன்யம் ஒருபோதும் குறையாத நிலையில் சோபியா ஏன் தண்டிக்கப்பட்டார்? டால்ஸ்டாய் தன்னுடைய கொள்கைகள் தோற்றுவிடக்கூடாது என்ற போராட்டத்தில் அன்பு மனைவியைக்கூட விலக்கி வைத்தார்.
நினைவில் உறைந்த ரயில் நிலையம்
சின்னஞ்சிறிய அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வாசகர்கள் குழுமி இருந்த நேரம். மனக்குழப்பங்களுடனும், கவலைகளுடனும், தன் பால்யத்துக்குத் திரும்ப வேண்டிய ஏக்கத்துடனும், எல்லோரும் சூழ்ந்திருக்க, மீளாத் தனிமையில் இருப்பதாக எண்ணி 82-வது வயதில் (1910) டால்ஸ்டாய் தன்னுடைய இறுதி மூச்சை விட்டார். இப்போதும் ரஷ்யாவுக்கு சுற்றுலாச் செல்பவர்கள் அஸ்தபோவ் ரயில் நிலையத்துக்குத் தவறாமல் செல்வது உண்டு.
டால்ஸ்டாயின் இறுதி நாட்களைப் பற்றி ‘Departure of a Grand Old Man’ என்ற மவுனப் படமும், ‘The Last Station’ என்ற திரைப்படமும் வெளியாகியுள்ளன.
தன்னுடைய பண்ணையில் இருந்த ஆப்பிள் தோட்டத்தின் கல்லறையில் இருக்கும் டால்ஸ்டாயின் ஆன்மா, இப்போதும் மானுட விடுதலை வேண்டியே கனவு கண்டுகொண்டு இருக்கும்.
‘‘இந்த உலகம் தன்னைப் பற்றி எழுத நினைத்தால், அது டால்ஸ்டாய்போல் எழுதிக்கொள்ளும்!’’ என்று ‘போரும் அமைதியும்’ புத்தகம் பற்றி எழுதிய விமர்சகர் ஐசக் பாபேல் கூறியுள்ளார்.
ஆம், உலகமே விரும்பும் எழுத்தாளர் டால்ஸ்டாய்!
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
10 hours ago
வலைஞர் பக்கம்
12 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago