ஹரிலால் காந்தி
காந்தியால் இறுதிவரை சமாதானம் செய்ய இயலாதவர்கள் இரண்டு பேர். ஒருவர் முகமது அலி ஜின்னா. மற்றொருவர் ஹரிலால் காந்தி.
மகாத்மாவின் நான்கு மகன்களில் மூத்தவர் ஹரிலால். காந்தி பேரொளி என்றால், ஹரிலால் பேரொளியின் உள்ளிருக்கும் நிழல். காந்தி மதுப் பழக்கத்தைக் கடுமையாக வெறுத்தவர். ஹரிலாலால் மது இன்றி வாழவே முடியாது. காந்தி கடன் வாங்குவதை வெறுத்தார். ஹரிலால் கடன் வாங்கியே வாழ்வைத் தொலைத்தார். காந்தி தன்னை ஓர் உண்மையான இந்துவாக உயர்த்திக் கொள்ள முயன்றார். ஹரிலால் காந்தியை வருத்த இஸ்லாமியரானார். (மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிட்டார்)
காந்தி தேசத்தின்முன் மகாத்மாவாக உயர்ந்து கொண்டிருந்த நேரத்தில், ஹரிலால் பலவீனங்கள் கொண்ட சாதாரண மனிதனாகக்கூட வாழ வழியின்றி விழுந்து கொண்டிருந்தார். ஒரு வகையில் காந்தி தன்னை ஒரு தூய ஆன்மாவாக மாற்றிக்கொள்ள மேற்கொண்ட பரிசோதனைகளில், வீழ்ந்தவர் ஹரிலால்.
கா
ந்தியின் 19-வது வயதில் பிறந்தவர் ஹரிலால். திருமணத்துக்குப் பிறகே, மனைவியையும் குழந்தையையும் இந்தியாவில் விட்டுவிட்டு மேற்படிப்புக்கு இங்கிலாந்து சென்றார். இந்தியா திரும்பிய காந்தி இங்கு வழக்கறிஞர் தொழில் செய்ய ஏதுவான சூழல் இல்லாததால், தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு இருந்த அரசியல் கட்டுப்பாடு களும், அங்கு நடந்த போராட்டங்களும் எல்லோரும் அறிந்தவையே. காந்தி அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல தன்னை வடிவமைத்துக் கொண்ட காலங்களில், பதின்வயதில் இருந்த ஹரிலாலும் உடன் ஈடுபட்டிருக்கிறார். ‘யங் காந்தி’ என்று அங்குள்ளவர்கள் பாராட்டும் வகையில் ஹரிலாலின் தொடக்கக் கால அரசியல் வாழ்க்கை, காந்தி யின் அடியொற்றியே இருந்திருக்கிறது.
நல்ல தொடக்கமாக இருந்த ஹரிலாலின் வாழ்க்கை திசை மாற காரணம் என்ன?
குடும்பத்தினரின் அன்பை அதிகம் எதிர்பார்க்கும் மென்மையான குணம் கொண்ட ஹரிலால், தந்தையின் கட்டுப்பாடான நடவடிக்கைகளால் காயம்பட்டதாக கூறுகிறார். சர்க்கஸ் ரிங்மாஸ்டர் போல் தனது தந்தை தங்களை நடத்தியதாக வருந்துகிறார். ‘தங்களுடைய உணர்வுகளைத் தந்தை ஒருபோதும் புரிந்துகொண்டதே இல்லை’ என்ற வருத்தம் ஹரிலால் இறக்கும்வரை அவரைவிட்டு விலகவில்லை.
ஹரிலால் தன் தந்தையைப் போல் பாரிஸ்டர் ஆக வேண்டும், அதற்காக இங்கிலாந்து சென்று படிக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். காந்தியின் நண்பர் மூலமாக அப்படி யொரு வாய்ப்பு வந்தபோது, ஹரிலாலை காந்தி அனுப்ப விரும்பவில்லை. இன்னொரு மகன் மணிலாலைக்கூட அனுப்பத் தயாராக இருந்தார். பிறகு அவரின் உறவினர் ஒருவருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார்.
ஹரிலாலுக்கும் காந்திக்கும் இடையிலான புரிந்துணர்வில் விழுந்த முதல் அடி இதுதான். ஹரிலாலால் இந்த ஏமாற்றத்தில் இருந்து மீளவே முடியவில்லை. திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருக்கும்போதுகூட மெட்ரிக் பரீட்சையிலாவது தேறிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவரால் தேர்ச்சியடைய முடியவில்லை.
ஹரிலால், காந்தியின் குடும்ப நண்பரின் மகளான குலாபை திருமணம் செய்துகொண்டார். காந்தி அப்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். குலாபை காந்தி தன் மகள்போல் அன்பு செய்தார் என்றாலும்கூட, ஹரிலாலுக்குத் திருமணத்துக்கு ஏற்ற வயதில்லை என்ற எண்ணத்தினால் திருமணத்தை ஏற்க மறுத்தார்.
குலாபுடனான திருமண வாழ்க்கை, ஹரிலாலுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருந்தது. இருவருக்கும் நான்கு குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை பிறந்த கொஞ்ச நாட்களில் இறந்துபோனது. ஹரிலாலின் அன்பு மனைவியும் வெகு விரைவிலேயே அவரை விட்டு இறந்து போகிறார். 16 வயதில் ஒரு மகன் டைபாய்டு காய்ச்சல் வந்து இறந்து போகிறான். ஹரிலாலுக்கு வாழ்க்கை முழுக்க துன்பத்துக்குமேல் துன்பம்தான். ஹரிலாலுக்கு இருந்த கொஞ்சம் கட்டுப்பாடும் மொத்தமாகப் போனது. குழந்தைகளை கஸ்தூரிபாயின் பொறுப்பில் விட்ட ஹரிலால், தன்னை மீட்டெடுக்கவே முடியாத ஒரு வாழ்க்கைக்குள் நுழைந்தார்.
காந்தி 40 கோடி மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக, தன்னுடைய உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருந்த காலம். தீவிரமான போராட்டக் களத்தில் இருந்த காந்தியின் அடிமனதில், ஹரிலாலுக்கான கவலையும், ஏக்கமும் அரித்துக் கொண்டிருந்தன.
இந்தக் காலகட்டங்களில்தான் ஹரிலால், கூட்டங்களிலும் பத்திரிகையின் அறிக்கைகளிலும் காந்தியைத் தாக்கிப் பேசியவை வெளியாகிக் கொண்டிருந்தன. அதிகமாகக் குடித்துவிட்டு, எங்காவது பிரச்சினை செய்து, போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின் அபராதத்துடன் விடுவிக்கப்பட்ட செய்தி யும் பத்திரிகைகளில் இருக்கும். காந்தி காலையில் செய்தித்தாளைப் பார்க்கும்போது, ஹரிலால் பற்றிய செய்தி இருக்குமோ என்று மனம் வருந்துவார். கஸ்தூரிபாயைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவரின் கண்களில் நிரந்தரமாக இரு துளிக் கண்ணீர் ஹரிலாலுக்காக சேகரமாகியிருக்கும்.
அன்பை பெறமுடியா வலி
காந்தியின்மேல் ஹரிலாலுக்கு மரியாதை இருந்தது. ஆனால், தந்தையாக அவரின் அன்பைப் பெற முடியாமல் போன ஏமாற்றத்தில் ஹரிலால் காந்தியை அவமானப் படுத்தும் செயல்களைச் செய்தார்.
ஒருமுறை காந்தி அலகாபாத்தில் இருந்து வார்தாவுக்கு, கஸ்தூரிபாயுடன் சென்றுகொண்டிருந்தார். ரயில் கட்னி ரயில் நிலையத்தில் நுழைகிறது. காந்தி வரும் செய்தியறிந்த மக்கள் ஆயிரக்கணக்கில் ரயில் நிலையத்தில் காத்திருக் கிறார்கள். காந்தியின் கழுத்துக்கொள்ளாத அளவுக்கு மாலைகள் விழுகின்றன. ‘மகாத்மா காந்தி கி ஜே’ என்ற வாழ்த்தொலி எங்கெங்கும் ஒலிக்கிறது.
கடவுளைத் தரிசிப்பதுபோல் காந்தியை தரிசிக்க வந்த கூட்டத்தில், ‘மாதா கஸ்தூர் பா கி ஜெய்’ என்றொரு குரல் கேட் கிறது. இருவருக்கும் புரிகிறது அது ஹரிலாலின் குரல் என்று. கஸ்தூரிபாய் மகனைப் பார்க்கும் ஆர்வத்தில் கதவருகே ஓடிவருகிறார். ஹரிலாலை கூட்டத்தில் பார்த்தும் விடுகிறார். மகனின் தோற்றத்தைப் பார்த்து அவருடைய கண்களில் கண்ணீர் பெருகுகிறது.
தள்ளாடும் கால்கள், உலர்ந்த உதடுகள், முன்பற்கள் இல்லாமல் துயரத்தில் தோய்ந்த முகம், கிழிந்த ஆடைகள், காலணிகள் இல்லாத வெற்றுக் கால்கள், வாரப்படாத தலை என இரங்கத்தக்க தோற்றத்தில் இருந்தார் ஹரிலால்.
தாயைப் பார்த்தவுடன் தன் பையில் இருந்து ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொடுக்கிறார். ‘‘உங்களுக்காக, உங்களுக்காக மட்டும் கொண்டு வந்திருக்கிறேன். யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட வேண்டும்’’ என்று சொல்லி, கஸ்தூரிபாயின் கையில் பழத்தைக் கொடுக்கிறார். காந்தி தலையை வெளியே நீட்டி, ‘‘ஹரிலால் எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’’ என கேட்டவுடன், ஹரிலால் ‘‘என்னுடைய அம்மாவுக்காகத்தான் நான் வந்திருக்கிறேன்’’ என்கிறார். காந்தி சோர்வுடன் தன் இருக்கைக்குத் திரும்புகிறார். ஒரு தேசத்து மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற முடிந்த காந்தியால், தன் மகனின் அன்பைப் பெற முடியாத தோல்வியின் வலி, அப்போது அவருக்குள் இருந்திருக்கும்.
கூட்டத்தில் ஒருவன்
காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, தேசமே கண்ணீரில் மிதந்தது. தலைவர்கள் குவிந்திருந்தனர். தேவதாஸும், மணிலாலும் மட்டும் அருகில் இருக்க, ஹரிலால் எங்கிருக்கிறார் என்ற தகவலே கிடைக்காமல் காந்தியின் இறுதி ஊர்வலம் நடக்கிறது. அஞ்சலி செலுத்திய லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவராக ஹரிலாலும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டிருக்கிறார்.
காந்தி இறந்த 5 மாதங்களில் ஹரிலாலும் இறந்து போகிறார். காந்தியின் மகன் என்ற அடையாளம்கூட வெளிப்படாமல், யாரோ ஒரு ஆதரவற்ற முதியவரின் உடல்போல் மும்பை மருத்துவமனை ஒன்றின் பிணக் கிடங்கில் கிடந்த ஹரிலாலின் உடலை, அவரின் மருமகன் உள்ளிட்ட ஆறு பேரே அடக்கம் செய்திருக்கிறார்கள். ஹரிலாலின் மரணச் செய்தி கேள்விப்பட்ட தேவதாஸ் காந்தி, ‘‘வாழ்நாள் முழுக்க துன்பப்பட்ட ஓர் ஆன்மா விடுதலையடைந்திருக்கிறது!’’ என்று சொல்லியிருக்கிறார்.
உண்மைதான். ஹரிலாலுக்கு மரணம் மட்டுமே அமைதியைக் கொடுத்தது.
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 hours ago
வலைஞர் பக்கம்
13 hours ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago