தமிழ்த் திரையுலக போராட்டத்தில் இப்படியொரு பிளவு ஏற்படுவதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறதே?
அரசியல் சாயம் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழனின் நிலைப்பாட்டை உலகம் முழுவதுக்கும் எடுத்துக் காட்டவே நெய்வேலியில் இருந்து மின்சாரம் தரக்கூடாது என்று நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்!
இந்தப் பிரச்சினையில் அரசியல் ரீதியாக யார் தூண்டிவிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களை அடுத்த தேர்தலில் சந்திப்பேன் என்றிருக்கிறாரே ரஜினிகாந்த்?
இதை நீங்கள் சொல்லித்தான் நான் கேள்விப்படுகிறேன். இதைப் பற்றி தகவல் எதுவும் எனக்கு இல்லை. நம்மைப் பொறுத்தவரையில் காவிரியில் தண்ணீர் வேண்டும் என்றுதான் கர்நாடகத்திடம் கேட்கிறோம். ரத்தம் வேண்டும் என்று கேட்கவில்லை. சாத்வீக முறையில், அமைதியான வழியில் போராட்டம் நடந்தே தீரும். இந்தப் போராட்டத்தின் உணர்வு பற்றி தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும்!
நெய்வேலி போராட்டத்தில் திமுக நடிகர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளாரே?
நான்கு நாட்களுக்கு முன்பு திரையுலக போராட்டத்தை திமுக ஆதரிக்கும் என்று கருணாநிதி கூறியிருந்தார். இதில் எந்த அரசியல் பின்னணியும் கிடையாது!.
பாரதிராஜா இப்படி பேட்டிகள், அறிக்கைகள் கொடுத்த நேரத்தில் விஜயகாந்த்தும் தன் தரப்புக்கு 'யார் வந்தாலும் வராவிட்டாலும் நெய்வேலி பேரணி போராட்டம் நடந்தே தீரும்!' என்று தன் அரசியல் அதிர்வேட்டுகளை வீசியிருந்தார்.
தமிழ் திரை உலகின் காவிரி போராட்டக்குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் நடிகர் சங்கத்தில் உள்ள சங்கரதாஸ் சாமி கலையரங்கில் 9.10.2002 அன்று மாலை நடந்தது. இதில் இரவு 8 மணிக்கு வந்து கலந்து கொண்டார் விஜயகாந்த். பாரதிராஜாவுடன் தனியாக சற்றுநேரம் ஆலோசித்த அவர் பிறகு நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
‘நெய்வேலியில் திட்டமிட்டபடி தமிழ்த் திரையுலகினரின் பேரணி நடந்தே தீரும். இதில் மாற்றுக் கருத்தே ககிடையாது. எல்லா கலைஞர்களும் அதில் கலந்து கொள்வார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும் நெய்வேலி பேரணி நடக்கும். வெளியூர்களில் இருக்கும் நடிகர்-நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது விவசாயிகளின் பிரச்சினை. விவசாயிகளின் பிரச்சினைக்காக நாம் அரசுக்கு துணை நிற்பது அவசியம்.
'நாம் இந்தப் பேரணியை நடத்தாவிட்டால் உணர்வு இல்லாதவர்கள் என்று நினைத்துவிடுவார்கள். நமக்கு இருக்கும் ஒற்றுமையைப் பேரணியில் காட்ட வேண்டும். கர்நாடக மக்களை அங்குள்ள அரசியல்வாதிகள் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு எதிராக அவர்களை தூண்டி விடுகிறார்கள். தமிழர்களை எதிரிகளைப் போல சித்திரிக்கிறார்கள். கர்நாடக மக்கள் அதற்கு துணை போகக்கூடாது. பேரணியை எப்படி வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது என்பதுதான் நமது சிந்தனை' என்றெல்லாம் பேசியவரிடம் நிருபர்கள் சில கேள்விகள் கேட்டனர். அதிலும் ரஜினியின் பெயரே அதிகமாக மிதந்து வந்தது.
உங்களில் ரஜினிகாந்த் பேரணியில் கலந்து கொள்ளாமல் தனியாக உண்ணாவிரதம் இருக்கிறாரே?
அது அவரது தனிப்பட்ட விருப்பம்!
நெய்வேலிக்கு ஊர்வலமாகப் போய் மின்சாரத்தை நிறுத்து என்று சொன்னால் நிறுத்தி விடுவார்களா? காவிரியில் தண்ணீரை திறந்து விட்டுவிடுவார்களா? என்று ரஜினிகாந்த் கேட்டிருக்கிறாரே?
அவர் மட்டும் உண்ணாவிரதம் இருந்தால் தண்ணீரை திறந்து விட்டு விடுவார்களா? உண்ணாவிரதம் இருப்பது அவரது தனிப்பட்ட உணர்வு. அதில் நாம் தலையிடக்கூடாது!
ரஜினிகாந்த் உங்களுடன் தொலைபேசியில் பேசினாராமே? என்ன பேசினார்?
‘நெய்வேலி தவிர வேறு இடத்தில் எங்கு போராட்டம் நடத்தினாலும் கலந்து கொள்வேன்னு சொன்னார். ரஜினி எப்போதுமே தனிமையை விரும்புபவர். அதில் தப்பு இல்லை!
ரஜினி தனியாக உண்ணாவிரதம் நடத்துவதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?
நான் வருத்தப்படவில்லை.
நெய்வேலியில் போராட்டம் வேண்டாம் என்று ரஜினி சொன்னபோது நடிகர் சங்கத்தில் பத்தில் எட்டு பேர் ஆதரவு தெரிவித்ததாக கூறியிருக்கிறாரே?
பாதுகாப்பு இருக்குமா? என்ற சந்தேகத்தில் அப்படி ஆதரவு தெரிவித்திருப்பார்கள். நான் அவர்கள் மத்தியில் பேசிய பின் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். சிலர் தேவையில்லை என்றால் அவர்களை இழுக்கக்கூடாது!.
திமுகவைச் சேர்ந்த சரத்குமார், நெப்போலியன் இருவரும் இந்தக் கூட்டத்துக்கும் வரவில்லையே. பேரணியில் கலந்து கொள்வார்களா?
சரத்குமார், நெப்போலியன் இருவரும் என் இரண்டு கைகள் மாதிரி. அவர்கள் நிச்சயம் பேரணியில் கலந்து கொள்வார்கள். நான் சொன்னால் கேட்பார்கள்!
விஜயகாந்த் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் சத்யராஜ், பிரபு, முரளி, அர்ஜூன், பார்த்திபன், மணிவண்ணன், எஸ்.எஸ்.சந்திரன், ராதாரவி, தியாகு, வடிவேல், கரண், அப்பாஸ், சின்னி ஜெயந்த், ஸ்ரீமன், உதயா, பாண்டியன், நாசர், மன்சூர் அலிகான், குண்டு கல்யாணம், தாமு, ஜூனியர் பாலையா, நடிகைகள் ரோஜா, மனோரமா, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேநேரத்தில் திமுக கட்சியைச் சேர்ந்த சரத்குமார், நெப்போலியனை பேட்டி காண நிருபர்கள் அலையாய் அலைந்தார்கள். அதில் நெப்போலியன், ‘எங்களுக்கு தலைவர் சொல்லே தாரக மந்திரம். கட்சித்தலைமையில் என்ன உத்தரவு வருகிறதோ, அதற்கேற்பவே பேரணியில் கலந்து கொள்வேன்!’ என்றார். சரத்குமாரிடம் பேச முயன்றால், அவர் தொலைபேசியில் கூட கிடைக்கவில்லை.
அதே சமயம் கமலஹாசனின் நிலை என்ன என்றும் தேடியது மீடியாக்கள். ‘கமலஹாசன் ரஜினிக்கு நெருங்கிய நண்பர். எந்த இடத்திலும் அவரை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றனர் ஒரு சிலர். வேறு சிலரோ, நெய்வேலிப் பேரணியில்தான் கமல்ஹாசன் கலந்து கொள்வார்!’ என்றனர் பலர்.
இதன் பின்னணியில் தமிழக அரசியல் அரங்கமே சினிமா அரசியல் அரங்கமாக, குறிப்பாக ரஜினியின் காவிரி அரசியலை மையமாக வைத்து சுழல ஆரம்பித்து விட்டது. அடுத்தடுத்த நாட்களில் வந்த தினசரி, பருவ இதழ் செய்திகள், மீடியா ஒளி,ஒலி பரப்புகள் எல்லாவற்றிலும் ரஜினியா? பாரதிராஜாவா? நெய்வேலி பேரணியா? சென்னை சேப்பாக்க உண்ணாவிரதமா? என சடுகுடு தகவல்கள் இறக்கை கட்ட ஆரம்பித்து விட்டது.
இந்த களேபரங்களுக்கிடையே 12-ம்தேதி என அறிவித்த உண்ணாவிரதத்தை 13-ம் தேதி என்று மாற்றிக் கொண்டார் ரஜினி. அதேபோல் பாரதிராஜா தரப்பு நெய்வேலியில் தடையை மீறி போராட்டம் என்று அறிவித்திருந்ததை ‘தடைமீறல்’ என்பதை மாற்றி சாதாரண போராட்டமாக மாற்றி அறிவித்துக் கொண்டார்கள்.
இந்தச் சூழலில் நெய்வேலி பேரணி ஒரு கலையுலக நட்சத்திர விழா போலவே நடந்தது. சென்னையில் நடிகர் நடிகைகள் புறப்பட்ட இடத்திலிருந்து நெய்வேலி போய் சேர்ற வரைக்கும் ஒரே பாட்டும், நடனமும்தான். அதோடு, யாரெல்லாம் பேரணியில் கலந்து கொள்கிறார்கள். யாரெல்லாம் வரவில்லை என்று தனியாக கணக்கெடுப்பு வேறு நடந்து வந்தது. இங்கே வரும் சினிமா பிரபலங்கள் குறித்த தகவல்கள் சென்னை தலைமைக்கு உளவுத்துறை தரப்பில் அனுப்பப்பட்டபடி இருந்தது. இதில் கமல் வரவில்லை என்று பெரிய அளவில் சர்ச்சை கிளம்பியது. உளவுத்துறை போலீஸாரும் சல்லடை போட்டு சலித்த பின்னர் அவரும், நடிகை சிம்ரனும் பின்னர் காரில் வந்து இறங்கியதால் அவர்களையும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டனர்.
- பேசித் தெளிவோம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
19 hours ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago