இந்த விவகாரம் வெடித்து, இதற்காக பேட்டி கொடுத்த போது ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, போயஸ் கார்டனில் உள்ள வீட்டிலிருந்து, அபிராமபுரம் போட் கிளப் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். அவர் பேட்டி கொடுத்த அன்று காவிரி பிரச்சினைக்காக பொது வேலை நிறுத்தம் நடந்தது. அதையொட்டி ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கடுமையாக போடப்பட்டிருந்தது. இதே பரபரப்பான சூழ்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவும் ஓர் நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ‘காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்ட 12-ம்தேதி நெய்வேலியில் நடைபெற உள்ள தமிழ் திரை உலகினரின் பேரணி குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தென்னிந்திய நடிகர் சங்கம் உள்பட தமிழ்த்திரை உலகின் அனைத்து பிரிவுகளையும் சார்ந்த பிரதிநிதிகள் என் தலைமையில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது இந்தப் பேரணி அமைதியாகவும், இதில் கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான திரைப்படத்துறையினருக்கு எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் முதல்வர் அனைவரின் முன்னிலையிலேயே உள்துளை செயலாளர் டிஜிபி சம்பந்தப்பட்ட விழுப்புரம் பகுதி டிஜிபி மற்றும் கடலூர் எஸ்.பி ஆகியோருக்கு விரிவான உத்தரவுகளை பிறப்பித்தார். பேரணியின் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை குறித்து நாங்கள் கேட்பதற்கு முன்னரே முதல்வர் அது குறித்து விரிவான, தெளிவான உத்தரவுகளை பிறப்பித்தார்.
குறிப்பாக நூற்றுக்கணக்கான பேருந்துகளில் சென்னையிலிருந்து தமிழ்த் திரைப்படத்துறையினர் சென்னையிலிருந்து செல்லும்போது பேருந்துகளுடன் காவல்துறை வாகனங்களும் பாதுகாப்பிற்கு உடன் செல்லவேண்டும் என்றும் கட்டளையிட்டார். சென்னையிலிருந்து நெய்வேலி வரை இடையிலுள்ள முக்கிய ஊர்களில் பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடி அதன் மூலம் ஏதும் அசம்பாவித நிகழ்ச்சிகள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அத்தகைய ஊர்களில் ஒழுங்குபடுத்தவும், காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்கவும் கட்டளையிட்டார். மேலும் திரைப்பட நடிகைகள் அதிக அளவில் இதில் பங்கேற்க இருப்பதால், அதிக எண்ணிக்கையில் பெண் போலீஸாரை பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தவும் ஆணை பிறப்பித்தார்.
ஒவ்வொரு பேருந்திலும், காவல்துறையினர் உடன் பயணம் செய்து பாதுகாப்பு அளித்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அதேபோல் நெய்வேலியை அடைந்த பிறகு அங்கு திரைப்படத்துறையினர் தங்குகிற விடுதிகள், ஊர்வலம் செல்லும் பாதை, பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் என அனைத்து இடங்களிலும் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அந்தந்த மாவட்டம் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு விரிவான ஆலோசனைகளையும், ஆணைகளையும் பிறப்பித்தார்.
இப்படி முதல்வரே பாதுகாப்பு குறித்த அம்சங்களில் இந்த அளவு உன்னிப்பாகவும், அக்கறையாகவும் ஏற்பாடுகள் செய்துள்ளார் என்பது எங்கள் பாதுகாப்பில் அவர் கொண்டுள்ள அக்கறையையும், ஈடுபாட்டையும் தெளிவாக உணர்த்துகிறது. இதற்கும் மேலாக பேரணி நடைபெறவுள்ள பாதையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கச் சொல்லியும், பாதையின் இருபுறங்களிலும் நடைமேடை அமைத்து ஆங்காங்கே காவல்துறையினரின் வீடியோகிராபர்களை அமர்த்தி பேரணியினை வீடியோ வாயிலாக படம் பிடித்து கண்காணிக்கவும் கூடுதலான உத்தரவாதமான, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகப் பெருமக்களும் பங்கேற்பதால், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் கூட அன்று நெய்வேலியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கும்போது, பேரணியில் அசம்பாவிதமோ, வன்முறையோ நிகழும் என்று அச்சப்படுவதற்கு அவசியமே இல்லை.
தமிழ்த் திரைப்படத்துறையின் எல்லாப் பிரச்சனைகளையும் சார்ந்த மிகப்பெரிய குழுவில் கே.பாலசந்தர், அபிராமி ராமநாதன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர், கமல்ஹாசன், திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாமலை, கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ், மனோரமா, தொழிலாளர் அமைப்பான பெப்சியில் தலைவர்கள் சத்யராஜ், பிரபு, வடிவேலு போன்ற பல்வேறு திரைப்படப் பிரிவு சங்ககங்களின் தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்தபோது அவர்கள் முன்னிலையிலேயே முதல்வர் பிறப்பித்த உ த்தரவுகளுக்கு உறுதிமொழிகளும், கலைத்துறையினரின் பேரில் அவருக்குள்ள பாசத்தையும் பரிவையும் உணர்த்துவதாகவே அமைந்தன.
தமிழ் திரைப்பட உலகில் நடத்தவிருக்கின்ற இந்த பேரணியில் அரசியல் மதமாச்சர்யங்கள் ஏதும் கலந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் ஆரம்பம் முதலே உறுதியாக இருந்து வருகிறோம். அந்த வகையில் நெய்வேலியில் பேரணிக்காக முதல்வரை நாங்கள் சந்திப்பது என முடிவு செய்த நிலையிலேயே திமுக தலைவர் கருணாநிதி தானாக தமது கட்சியின் ஆதரவை தெரிவித்துவிட்டு, தற்போது அதை புறக்கணிக்க வேறு காரணங்களை அடுக்கி உள்ளார். அது ஏன் என எங்களுக்கு தெரியவில்லை.
காவிரி பிரச்சினையில் பொதுவான உணர்வோடும், பரந்த மனப்பான்மையோடும், அரசியல் கலப்பு ஏதுமின்றி, தனிப்பட்ட அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ் திரையுலகினர் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றுதான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஆனால் காவிரிப் பிரச்சனையை மையமாக வைத்து, தமிழ்த்திரை உலகத்தினரிடையே சிலர் அரசியல் ஆதாயம் தேட நினைப்பது வருத்தத்திற்குரியது. திரும்பவும் சொல்கிறோம். நாம் நமது மக்களுக்கு, தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். யாரும் உப்புத் துரோகம் செய்யவோ, அதற்கு தூண்டவோ, துணை நிற்கவோ வேண்டாம். உருவாகி உள்ள தமிழ்த்திரை உலகின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை யார் செய்தாலும் தமிழுக்கும், தமிழ் கலை உலகிற்கும் செய்கிற துரோகமாக எதிர்கால வரலாறு அவர்களை பழி சொல்லும்!
இப்படி அறிக்கை வெளியிட்ட நாளன்றே நிருபர்களுக்கு உணர்ச்சி பொங்க பேட்டியும் அளித்திருந்தார் பாரதிராஜா. அந்த அறிக்கையில் அவர் ரஜினியை பெயர் சொல்லாமல் சுத்தமாக விடுபடுத்தியிருக்க நிருபர்கள் பெரும்பான்மை கேள்வியாக அவரையே முன் வைத்தனர்.
‘நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன். அதே நாளில் (12-ம்தேதி) சென்னையில் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ரஜினிகாந்த் அறிவித்து இருக்கிறாரே?’ எனக் கேள்வி.
‘தனிப்பட்ட ஒருவர் சொல்லும் கருத்துக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. நெய்வேலியில் போராட்டம் என்பது எட்டு அமைப்புகள் சேர்ந்து எடுத்த முடிவு. ஆகவே நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த், பொதுச்செயலாளர் சரத்குமார் ஆகியோர் எங்களிடம் வந்து நாங்கள் நெய்வேலி போராட்டத்தில் பங்கெடுக்க மாட்டோம் என்று சொல்லட்டும். அவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன்!’
’12-ம்தேதி சென்னையில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து இருப்பதால் நெய்வேலி போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா?’ என பிறிதொரு நிருபரின் கேள்வி.
‘நெய்வேலி போராட்டம் திட்டமிட்டபடி நிச்சயமாக நடந்தே தீரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இது பேரலை. இந்த பேரலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த போராட்டத்தில் திரைப்பட கலைஞர்கள் மட்டுமல்லாமல் திரை உலகைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், அரசியல் கலப்பு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய அமைப்புகளும் இதில் கலந்து கொள்கின்றன. தஞ்சையில் வாடும் விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஒட்டுமொத்த தமிழகமே எழுந்து குரல் கொடுக்கும்!’
‘உங்கள் தலைமையில் நடக்கும் போராட்டத்தை உடைக்கத்தான் ரஜினிகாந்த் தனிப் போராட்டத்தை அறிவித்து இருக்கிறாரா?’
‘ஹேஸ்யங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை!’
- பேசித் தெளிவோம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
19 hours ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago