ரஜினி அரசியல்: 37 -சேப்பாக்கத்தில் பொங்கிய நடிகர்கள்

By கா.சு.வேலாயுதன்

''நெய்வேலி பேரணியில் பாரதிராஜா திடீரென்றுதான் கருணாநிதியைப் பற்றி விமர்சித்தார். திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அது ஏதோ தனக்கு வந்த கூட்டம் என்று நினைத்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தடுமாறிப் பேசினார். அப்போதே நாங்கள் பதிலடி கொடுத்திருப்போம். மேடை நாகரிகம் கருதிப் பேசாமல் இருந்தோம். ரஜினியை தாக்கிப் பேசிய பாரதிராஜா ரஜினியை வைத்து 'கொடி பறக்குது' படத்தை தயாரித்து, இயக்கி அதில் கோடி, கோடியாக சம்பாதித்தார். அவரது மகன் நடித்த 'தாஜ்மஹால்' படத்திற்கு ரஜினியை வைத்துதான் குத்துவிளக்கு ஏற்றச் சொன்னார். ஆனால் அந்த நன்றி உணர்வு இல்லாமல் ரஜினியை அந்த மேடையில் தாக்கிப் பேசினார். பாரதிராஜா பேசுவதைப் பார்த்தால் அவர் பின்னணியில் ஏதோ பெரிய சதி நடப்பது போல் உள்ளது.

தமிழன் என்ற உணர்வு ஏதோ அவருக்கு மட்டும் உள்ளது போல பேசுகிறார். பேரணி சென்ற போது காலை முதலேயே தகராறு செய்வது போலவே நடந்து கொண்டார். நடிகர்கள் சென்ற பஸ்ஸுக்கு குறுக்கே தனது காரை விட்டு குழப்பங்களை ஏற்படுத்தினார். அவருக்கு அரசியலுக்கு வரும் ஆசை வந்துவிட்டது. எங்கள் முதுகில் ஏறி அவர் தலைவராக நினைக்கிறார். அரசியலுக்கு வரணும்னா அவர் உழைச்சுட்டு வரட்டும். நடிகர் சங்கத்துல எல்லோரும் ஒற்றுமையாக இருந்தோம். இப்போது அதில் அரசியல் புகுந்துவிட்டது. நடிகர்களைக் குழப்பி ஆதாயம் தேட யாரும் நினைக்கக்கூடாது. அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்!'' என்றார் சரத்குமார்.

ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த கமல்ஹாசனோ இதற்கும் ஒரு படி மேலே போய், 'ரஜினி செல்வது அரசியல் பாதை!' என்று விமர்சனம் ததும்ப பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

நடிகர் கமல்ஹாசன் இந்த உண்ணாவிரத மேடைக்கு பிற்பகல் 3 மணிக்கு வந்தார். ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு நிருபர்களிடம் பேசினார். ''காவிரி பிரச்சினைக்காக இங்கே போராட்டம் நடைபெறுகிறது. எனது நண்பர் இங்கு உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக வந்திருக்கிறேன். சினிமா என்பது வேறு. அரசியல் என்பது வேறு. நான் சினிமாத்துறையில் ரஜினியுடன் இருக்கும்போது ஒருவருக்கொருவர் பல உதவிகளைச் செய்து இருக்கிறோம். பரஸ்பரமாக அந்த உதவிகளைப் பகிர்ந்து கொண்டோம். இன்று இந்த மேடை அரசியல் மேடையாக மாறியுள்ளது. அதை நான் வழிமொழிய வந்து இருக்கிறேன். ரஜினி போகும் திசை அரசியல் திசை ஆகும்.

நேற்று நடந்த பேரணி-பொதுக்கூட்டம் கொஞ்சம் அரசியல் மேடையாக இருந்தது. இன்று முழுக்க, முழுக்க அரசியல் மேடையாகி விட்டது. திமுக தலைவர் கருணாநிதியையோ, நண்பர் ரஜினிகாந்த்தையோ பாரதிராஜா விமர்சனம் செய்திருந்தால் அது தவறு. நான் ஒரு கலைஞனாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு அரசியல் கிடையாது. சினிமாத்துறையில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது அல்ல. சினிமாத்துறை பல முதலமைச்சர்களை தந்து உள்ளது. நான் இங்கே வாழ்த்து சொல்லி வழியனுப்ப வந்திருக்கிறேன்!'' என்பதுதான் அன்று கமல்ஹாசன் பேட்டியின் சாராம்சம்.

அன்றைய தினம் ரஜினியின் உண்ணாவிரத மேடைக்கு வந்த அத்தனை நடிகர், நடிகைகளுமே உணர்ச்சி பொங்கிட பேட்டியளித்தனர். அதில் சத்யராஜ், வடிவேலு, ஜெமினி கணேசன், பிரசாந்த், ஆனந்த்ராஜ், ஸ்ரீகாந்த், ஜெயராம், சிலம்பரசன், இயக்குநர்கள் பாலசந்தர், பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார், கவிஞர் வாலி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் கேயார், நடிகைகள் மனோரமா, லதா உள்ளிட்டோரும் வந்தனர்.

சத்யராஜ் தனது பேட்டியில், ''காவிரி நீருக்காக யார் குரல் கொடுத்தாலும் அங்கு நான் கலந்து கொள்வதை எனது கடமையாக கருதுகிறேன். நேற்று பேரணி நடத்தப்பட்டது. இன்று ரஜினி சார் உண்ணாவிரதம் இருக்கிறார். இவற்றின் மையம் காவிரி நீர் ஒன்றே. எனவே இந்தப் போராட்டங்களில் நான் கலந்து கொள்கிறேன். சினிமா துறையில் அரசியல் என்பது புதியது அல்ல. புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் வெவ்வேறு திசையில் இருந்தவர்கள்தான். ஆனால் திரை உலகுக்கு ஒரு பிரச்சினை என்றால் இருவரும் ஒன்றாக இணைந்து போராடினார்கள். எனவே இந்த திரை உலகில் இப்போது நடந்து இருப்பதை பிளவு என்று சொல்ல மாட்டேன். பிளவு ஏற்பட்டால் அதை சேர்க்கத்தான் முயற்சிப்பேன்!'' என்றார்.

வடிவேலு, ''காவிரி தண்ணீர் கேட்டு எங்கு போராட்டம் நடந்தாலும் நான் ஒரு உப்புக் கண்டமாக அங்கு இருப்பேன். காவிரி நீருக்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை நான் ஆதரிப்பேன். நான் தமிழ்மண்ணில், தமிழ்த்தாய் வயிற்றில் பிறந்தவன் என்ற முறையில் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறேன். இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் இந்தியனாக மாறுவேன். தமிழகத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழ் வெறியனாகவே இருப்பேன். உலகத்துக்கே ஒரு பிரச்சினை என்றால் மனிதனாக இருப்பேன்!'' எனத் தெரிவித்தார்.

ஜெமினி கணேசன் பேட்டியின்போது, ''காவிரி நீர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் நெய்வேலியில் நடத்திய போராட்டம் சிறப்பாக இருந்தது. அதை விட ரஜினி நடத்தும் போராட்டம் மிகச் சிறப்பாக உள்ளது. இந்த போராட்டங்கள் வாயிலாக கர்நாடக அரசு சுமுகமாக நடந்து கொள்ளவேண்டும்!'' என்று குறிப்பிட்டார்.

பாலசந்தர் குறிப்பிடுகையில், ''காவிரி பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு அவசியம். நாம் நடத்தும் போராட்டம் வெற்றிபெற வேண்டும். காவிரியில் தண்ணீர் விடக்கூடாது என்று கர்நாடகத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழக தமிழ்த் திரையுலகத்தினர் சார்பில் மணி கட்டப்பட்டுள்ளது. இது வெற்றி பெற வேண்டும். இதற்காக யார் போராட்டம் நடத்தினாலும் வரவேற்பேன்!'' என்றார்.

நடிகர் பிரசாந்த், ''காவிரி நீர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் நடத்திய நெய்வேலிப் போராட்டமும், ரஜினிகாந்த் சென்னையில் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டமும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வைத்தான் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நெய்வேலி கூட்டத்தில் பாரதிராஜா அவரது சொந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்!'' என்றார்.

பாக்யராஜ், ''தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து தனது உணர்வுகளை தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதற்கு யாரும் அரசியல் சாயம் பூச வேண்டியதில்லை. உயிர் வாழ தண்ணீர் அவசியம். இது விவசாயிகளின் ஜீவப் போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு விடிவு காண்பது அவசியம். இதற்கு நமது போராட்டம் வழி வகுக்கும்!'' என்றார்.

பாண்டியராஜன், ''காவிரி பிரச்சனை குறித்து தமிழகத்தில் யார் போராட்டம் நடத்தினாலும் அவர்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு. அப்படி ரஜினிக்கு ஆதரவு கொடுக்கவே இப்போது வந்தேன்!'' என்றும், ஆனந்தராஜ், ''காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டுவதோடு, ஆண்டவன் அருளால் மழை பெய்ய வேண்டும். கன்னடர்களுக்கு அவர்களின் தாய்மொழி முக்கியம் என்றால் தமிழர்களுக்கு அவர்களின் தாய்மொழி முக்கியம். நாம் அனைவரையும் மதிக்கிறோம். மதித்து நடப்பதால்தான் அமைதி காக்கிறோம். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விட வேண்டும். அனைவரையும் மதித்து நடக்கும் நம்மை கர்நாடக அரசு மிதிக்க நினைக்கக் கூடாது!'' என்றும், ''நேற்று உடல்நிலை சரியில்லாததால் நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் இன்று ரஜினிசார் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்!'' என்று சிலம்பரசனும் குறிப்பிட்டனர்.

நெய்வேலிப் பேரணியில் கலந்து கொள்ளாத நடிகை குஷ்பு, ரஜினியின் உண்ணாவிரத மேடைக்கு வந்தார். குஷ்பு அப்போது கர்ப்பமாக இருந்ததால் அந்தப் பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் ரஜினி உண்ணாவிரதத்திற்கு வாழ்த்து தெரிவித்து மலர்ச்செண்டு கொடுத்துவிட்டுச் சென்றார்.

- பேசித் தெளிவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

19 hours ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்