உலகத்திலேயே நம் தென்னிந்தியாவைப் போல் சினிமா நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகின்றனவா என்று தெரியாது. எவன் நடிக்க ஆரம்பித்தாலும் ஒரு ரசிகர் நற்பணி மன்ற பேனர் ஒன்று அந்த தியேட்டரில் தொங்குகிறது. இந்த துக்கடா மன்றங்களுக்கு ஆரம்ப நிலை நடிகர்களே பைனான்ஸ் செய்கிறார்கள்.
கொஞ்சம் வளர்ந்த நடிகர்கள் என்றால் உடனே பதிவு எண், மன்றக்கொடி போன்ற காமெடிகளுடன்... முதல் நாள் முதல் ஷோ டிக்கெட்டோ அல்லது சிறப்பு காட்சிகளோ உண்டு. பிளாக்கில் விற்பதுதான் இவர்களது முக்கிய சம்பாத்தியம். இப்போதெல்லாம் இவர்களுக்கு போட்டியாக ரோட்டரி சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.! விஜய், அஜீத், தனுஷ், ஜீவா போன்றவர்களிடம் எதைக் கண்டு இந்த ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர் என்றால் புரியவில்லை... சில நடிகர்களை ஜாதி அபிமானத்தோடு கொண்டாடுகின்றனர். தென் மாவட்ட திருமண பிளக்சுகளில் இப்போதெல்லாம் நாடார் வீடென்றால் சரத்குமார், தேவர் என்றால் கார்த்திக், தேவேந்திரர் என்றால் விக்ரம் & பிரசாந்த் (இருவரும் ரத்த உறவுள்ள கசின்ஸ் என்பது நிறைய பேருக்கு தெரியாது) கட்டாயமாக இடம் பெறுகின்றனர்.
முதன் முதலில் இங்கு யாருக்கு ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும்? பாகவதர் அபிமானிகளும் சின்னப்பா அபிமானிகளும் இருந்தனர்.. ஆனால் மன்றங்கள் இருந்தனவா? ஒருவேளை எம்ஜிஆருக்குத்தான் ஆரம்பித்தி ருப்பார்களோ! தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்ற ஆய்வாளர்களிடம் கூட விசாரித்தேன். ஒரு முன்னாள் கவுன்சிலரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன ஓர் தகவல் உபயோகமாக இருந்தது. சாமையர் புது வீதியில் பாகவதருக்கு போர்டு மாட்டி ஒரு மன்றம் இருந்ததாகவும், பின்னர் டி .ஆர்.மகாலிங்கத்துக்கும் அதே ஏரியாவில் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் சொன்னார். சிவாஜியும் எம்ஜிஆரும் சமகாலங்களில் மன்றம் கண்டவர்கள் என்றும் சொன்னார்.
அப்போது மன்றங்களை ரசிகர்களே அமைத்துக்கொண்டனர். நடிகர்கள் அதற்கு பைனான்ஸ் செய்ததில்லை. ரசிகர் மன்ற காட்சிகள், டிக்கெட் வாங்கி பிளாக்கில் விற்பது போன்ற வியாபாரங்கள் நுழைந்தவுடன் அரசியலும் தலைமை பீடங்களும் நுழைந்தன. மன்றங்கள் அரசியல் கட்சிகளின் அங்கங்கள் ஆகவும் ஓட்டு வங்கிகளாகவும் மாறின... குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி மன்றங்கள்! கோவையில் மதுரையை போல் எல்லா நடிகர்களுக்கும் மன்றங்கள் இருந்ததில்லை. ஜெமினி கணேசனுக்கு ஒரு மன்றம் இருந்தது.
பள்ளிச் சிறுவனாக இருந்தபோதே ரசிகர்களின் செயல்பாடுகளை கவனிப் பேன். எந்த புதிய படம் வருவதாக இருந்தாலும் ரசிகர்கள் எங்கள் கடையில் திரண்டுவிடுவார்கள்...என் தந்தையிடம் படத்தின் ஸ்டில்களை காட்டும்படி கெஞ்சுவார்கள். காட்டியவுடன்..இதை வரையுங்கள், அதை வரையுங்கள் என்று ஆலோசனை தர ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு கடுப்பாக இருக்கும்..அப்படி வந்த ‘கவுரவம் சிவாஜி மன்ற மறவர்' வேணு என் வாழ்நாள் நண்பர் ஆகிப்போனார்!
கோவை மேயர் வெங்கடாசலத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன செய்தி வியப்பாக இருந்தது. திருவிளையாடல் ரிலீசின்போது சிவன் வேடம் போட்டுக்கொண்டு கழுத்தில் பாம்புடன் ஊர்வலம் போனவர் சாட்சாத் இவர்தானாம்!! இன்னும் இது போல பல பேர். எம்ஜிஆர் பக்தர்கள் இன்றும் பழைய படங்களுக்கு பேனர் வைத்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறார்கள்.
‘உனக்காக நான்’ ரிலீசின்போது ஜெமினி ரசிகர்கள் சிவாஜிக்கு இணை யாக கட் அவுட் வைக்கவேண்டும் என்று தகராறு செய்தது இன்னும் மறக்க முடியாதது. யோசித்து பார்க்கும்போது எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்தவர்கள் பின்னர் அவரது உதவியால் பெரும் பதவிகளையும் அனுபவித்தனர். சிவாஜி ரசிகர்களுக்கெல்லாம் அவர்களது கட்சியினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை.
நடிகர்களின் முதலமைச்சர் ஆசை இந்த ஜாம்பவான்களிடம் தொடங்கி குஞ்சு குளுவான்களுக்கேல்லாம் பரவி.. இன்று ரசிகர் மன்றங்கள் எல்லாம், தத்தம் தலைவர்களை வருங் கால முதல்வர்களாகக் கருதி ஆர்ப்பரிக் கின்றன. சமீப காலம் வரை கரை வேட்டி களுடன் உலவிய விஜயகாந்த் ரசிகர்கள் இன்று சோர்ந்து போயிருக்கின்றனர்.
நான் பார்த்த கேள்விப்பட்ட ரசிகர்கள் பல வகை. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த காட்சி இது. அருகருகே இரண்டு வெங்காயக்கடைகள்.ஒன்றின் சுவர் முழுவதும் எம்ஜிஆர் படங்களின் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கும். பக்கத்து கடையில் சிவாஜி விளம்பரங்கள். வாடிக்கையாளர்கள் தத்தம் விருப்ப கடைகளில் வெங்காயம் வாங்கலாம். என் ரொம்ப நாள் சந்தேகம் இரண்டு கடைக்கும் உரிமையாளர் ஒருவர்தானோ என்று! தங்கப் பட்டறைகளில் தியாகராஜ பாகவதர் படம் கட்டாயமாக மாட்டப்பட்டிருக்கும்.
பூதப்பாண்டி ஜீவா சிற்றுண்டி நிலையத்தின் உரிமையாளரான என் சித்தப்பா, கடை முழுவதும் சிவாஜி ஸ்டில்களையும், காலண்டர்களையும் அலங்கரித்து வைத்திருப்பார். பாதி நேரம் வாடிக்கையாளர்களான எம்ஜிஆர் ரசிகர்களுடன் சண்டை நடக்கும். தோசைகளும் ரசவடைகளும் காய்ந்து கிடக்கும்.
என் மூத்த நண்பர் மறைந்த பேராசிரியர் ஆறுமுகம், தன் நாகர்கோவில் வீட்டில் சிவாஜி நடித்த பெரும்பான்மையான படங்களின் வீடியோ காசெட்டுகளையும் 16mm பிரதிகளையும் வைத்திருந்தார். அயல் நாடுகளிலிருந்து சேகரிப்புகள். அவர் சொல்வது போல சிவாஜி நடித்த ‘மருத நாட்டு வீரன்’ போன்ற படங்களுக்கு கூட நாலைந்து பிரதிகள்! தன் அபிமான இசை அமைப்பாளர்களின் / பாடகர்களின் இசைத்தட்டுக்களை சேகரித்து வைத்து ரசித்துக்கொண்டிருக்கும் அன்பர் கள்...எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்க ளின் பரம பக்தர் கோவை ரவி அவருடைய அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்! சங்கீத மேதைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் பரம ரசிகர்கள் இருக்கிறார்களே.
சுஜாதாவை சும்மா பார்க்கவே பெங்களூர் பயணம் செய்த கல்லூரி நண்பர்கள் இருந்திருக்கின்றனர். ஜெயமோகனை கொண்டாடுபவர்கள் இப்போது உண்டு!!
ரசிகர்களை செலுத்துவது எது...அந்த வயதா, இல்லை ஆர்வமா, தன்னை கவர்ந்த ஆளுமை மீதான பற்றா, விடை தெரியாத கேள்விகள்!
ஓவியர் ஜீவாவின் வலைப்பூ>http://jeevartistjeeva.blogspot.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago