ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் சென்று வருவது வழக்கம். இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை மெக்காவில் இருக்கும் கஃபதுல்லாஹ்தான் ஆதி ஆலயம்.
சமீபத்தில் இந்த கஃபதுல்லாஹ் ஆலயத்துக்குச் சென்ற தமிழின் முக்கியமான கவிஞராக ( கவிஞர் ஆரூர் புதியவன்) கருதப்படுபவரும், சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியருமான பேராசிரியர் ஹாஜா கனி மெச்சத் தகுந்த பெருமைமிகு தமிழ்ப் பணியைச் செய்துவிட்டு வந்திருக்கிறார். இது நமது செந்தமிழுக்கான அருந்தொண்டாகும்.
அருமையான நூலகம்
இந்த கஃபதுல்லாஹ் ஆதி ஆலயத்துக்கு 120 பாதைகள் உண்டு. அதில் 79-வது பாதை முக்கியமான பாதையாகக் கருதப்படுகிறது. இதற்கு மன்னர் பகத் நுழைவாயில் என்று பெயராகும். இதன், வலது பக்கம் 4-வது தளத்தில் அமைந்திருக்கிறது புனித மெக்கா ஹரம் பள்ளிவாசலுடைய நூலகம்.
ஆன்மிகம் மற்றும் இலக்கியப் படைப்புகளை தனது தொடர் வாசிப்பின் மூலம் விசாலமான ஆய்வுக்கு உட்படுத்தும் பேராசிரியர் ஹாஜா கனிக்கு, அந்த நூலகத்துக்குள் ஓர் அதிர்ச்சி காத்திருப்பது அப்போது தெரியவில்லை.
அந்த நூலகத்துக்குள் ஆசை ஆசையாகச் சென்ற ஹாஜாகனி, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த... மேற்கத்திய, கீழை தேச மொழி நூல்களை எல்லாம் பார்வையால் மேய்ந்திருக்கிறார். 'நம் அன்னைத் தமிழுக்கும் இங்கே சிறப்பான ஓரிடத்தை நிச்சயம் தந்திருப்பார்கள்' என்கிற ஆர்வ அலையடிக்க... கண்களுக்குள் மொழியின் வெளிச்சத்தோடு தமிழ் நூல்களைத் தேடியிருக்கிறார். ஆனால் அவருக்குக் கிடைத்தது அதிர்ச்சியான பதில்தான். ஆம், அங்கே ஒரே ஒரு தமிழ் நூல்கூட இல்லாததைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.
மனசுக்குள் வருத்தத்தைச் சுமந்துகொண்ட ஹாஜா கனி, கஃபதுல்லாஹ் ஆதி ஆலய நூலகத்தில் இடம்பெறும் வகையில் தகுதியான அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என 20 மொழிகளின் பட்டியலை வைத்திருந்ததைக் கண்டு அதை ஆய்வு செய்திருக்கிறார்
அந்தப் பட்டியலில் 19-வது இடத்தில் தமிழ் இருந்ததைக் கண்டு மனம் வெதும்பியுள்ளார். நமது அன்னைத் தமிழுக்கு முன்பாக அங்கே இந்தி, உருது, மலையாளம் எல்லாம் இருந்துள்ளன. எல்லா மொழிகளுக்கும் பின்னாலே 19-வது இடத்தில் தமிழுக்கு இடமளித்திருப்பதைக் கண்டு அவர் மனம் பதைபதைத்திருக்கிறார்.
''இந்த நூலகத்தின் பொறுப்பாளரை நான் உடனடியாகச் சந்திக்க வேண்டும். இந்த இடத்தில் எனது தாய்த்தமிழுக்கு உரிய மரியாதையைப் பெற்றுத் தருவது எனது கடமை'' என்று உரிமை யுத்தம் நடத்தியிருக்கிறார் ஹாஜா கனி.
''முகமது ஜெஃப்ரி என்பவர்தான் இந்த நூலகத்தின் பொறுப்பாளர். அவர் நாளைதான் வருவார்'' என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த நூலகப் பொறுப்பாளர் வரும் வரையில் காத்திருந்து மறுநாள் வந்த அவரைச் சந்தித்திருக்கிறார் ஹாஜாகனி.
அவரைச் சந்தித்த அடுத்த நொடியே, ''இந்த நூலகத்தில் ஏன் தமிழ் நூல்களை வைக்கவில்லை? உலக அளவில் அதிக அளவில் மக்கள் சமூகத்தால் கொண்டாடப்படுகிற தமிழ் மொழிக்கு வரிசையில் பின்னால் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதே ஏன்?'' என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
''உங்கள் உணர்வைப் பாராட்டுகிறேன். உடனடியாகத் தமிழ் மொழியில் இஸ்லாம் பற்றிய ஆதாரப்பூர்வ நூல்களை வாங்கி நூலகத்தில் வைக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று முகமது ஜெஃப்ரி உறுதியளித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜனவரி 10-ம் தேதி சென்னை ரஹ்மத் பதிப்பகத்தாரின் உதவியுடன் தமிழ் நூல்கள் அங்கே வைக்கப்பட்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சாதனைமிக்க பணியை தனது ஆன்மிக யாத்திரைக்கு இடையில் செயற்கரிய பணியாகச் செய்துவிட்டு திரும்பியிருக்கும் பேராசிரியர் ஹாஜா கனியை நாமும் மனதாரப் பாராட்டுவோம்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago