கார்கில் போரில் பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் நச்சிகேட்டாவை நினைவுபடுத்தும் அபிநந்தன்: 1999-ல் நடந்தது என்ன?

By க.போத்திராஜ்

கடந்த 1999-ம் ஆண்டில் நடந்த கார்கில் போரின்போது, இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் ராணுவம் வசம் சிக்கிக்கொண்டது போல் தற்போது அபிநந்தன் சிக்கிக் கொண்டுள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தித் திரும்பின. இதில் 350 பேர் கொல்லப்பட்டதாக  மத்திய அரசு கூறுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று இந்திய எல்லையான ரஜவுரி பகுதியில் வந்து குண்டு வீசிவிட்டு பாகிஸ்தான் விமானங்கள் சென்றன. அப்போது பாகிஸ்தானின் எப்-16ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் இரு இந்திய  விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது.

இதில் கைது செய்யப்பட்டு ஒரு விமானி காமாண்டர் அபிநந்தன். சென்னையைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியதும் அவரை ராணுவமும், பொதுமக்களும் சேர்ந்து தாக்கினார்கள். ரத்தம் முகத்தில் வழிந்தோட, கைகள் கட்டப்பட்ட நிலையில் அபிநந்தன் அழைத்துச்செல்லப்படும் வீடியோ வெளியானது.

அபிநந்தன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மனிதநேயமின்றி நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் கார்கில் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்ட இந்திய விமானப்படை வீரர் கே. நச்சிகேட்டாவை நினைவு படுத்துகிறது.

கடந்த 1999-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தது.  அந்த போரில் இந்திய விமானப்படை வீரரும், நம்பர்-9 படையின் வீரருமான கே.நச்சிகேட்டா மே 27-ம்தேதி மிக்-27 விமானத்தை இயக்கியபோது எஞ்சின் பழுதால் பாகிஸ்தான் பகுதிக்குள் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவர் தரையிறங்கிய பின்புதான் தெரிந்தது தன்னைச் சுற்றி ஏராளமான பாகிஸ்தானிய ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர் என்பதை உணர்ந்தார். அதன்பின் பாகிஸ்தான் ராணுவம் நச்சிகேட்டாவை கைது செய்து அழைத்துச் சென்றது. கார்கில் போரில் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் சிக்கிய ஒரே வீரர் நச்சிக்கேட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

நச்சிகேட்டாவுக்கு என்ன நேர்ந்தது

ஏறக்குறை பாகிஸ்தான் ராணுவத்தினரால் 8 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நச்சிகேட்டாவை அந்நாட்டு ராணுவத்தினர் பல கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாக்கினார்கள். ஆனால், இதைப் பார்த்த பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நச்சிக்கேட்டா உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், சர்வதேச குற்றமாகிவிடும் என்று அவரை சித்ரவதையிலிருந்து மீட்டுள்ளார். இதை பாகிஸ்தானிலிருந்து திரும்பிய பின் நச்சிகேட்டா தெரிவித்தார்.

அப்போது அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “ பாகிஸ்தான் எல்லைக்குள் நான் விழுந்தவுடன் என்னை அந்நாட்டு வீரர்கள் பிடித்துச் சென்று பல சித்ரவதைகளை எனக்குக் கொடுத்தனர், கொலை செய்யவும் திட்டமிட்டனர். ஏனென்றால், எதிரிநாட்டு விமானி, அந்நாட்டில் குண்டு வீச வந்தவன் என்பதால், எனக்கு ஏராளமான தொந்தரவுகள் இருந்தன.

அப்போது, மூத்த அதிகாரி ஒருவர் சூழலை அறிந்துகொண்டு என்னை சித்ரவதையில் இருந்து காப்பாற்றி ராவல்பிண்டி சிறைக்குக் கொண்டு சென்றார். அனைவரையும் கட்டுப்படுத்திய அந்த அதிகாரி என்னைக் காப்பாற்றினார். அப்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு இருந்த ஆத்திரத்தில் அந்த அதிகாரி தலையிடாவிட்டால் என்னைக் கொலை செய்திருப்பார்கள். அவர்கள் 4 நாட்கள் எனக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் செய்த கொடுமைகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. கடினமானது. இவர்களிடம் துன்பத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், நான் செத்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 8 நாட்களில் நான் பாகிஸ்தான் பிடியிலிருந்து மீட்கப்பட்டேன் “ எனத் தெரிவித்தார்.

இந்திய அரசு ஐநா வரை சென்று சர்வதேச அளவில் அளித்த நெருக்கடி, அழுத்தம் காரணமாக 8 நாட்களில் பாகிஸ்தான் அரசு நச்சிகேட்டாவை விடுவித்தது. 1999-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி செஞ்சிலுவைச் சங்க  நிர்வாகிகளிடம் நச்சிகேட்டா ஒப்படைக்கப்பட்டார். மறுநாள் வாகா எல்லை வழியாக  இந்தியாவுக்கு நச்சிகேட்டா வந்து சேர்ந்தார். அவரை அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய் பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தனர். 2000-ம் ஆண்டு வாயு சேனா விருது நச்சிகேட்டாவுக்கு வழங்கப்பட்டது.

ஆதலால், நச்சிகேட்டாவுக்கு ஏற்பட்ட கொடுமைகள் போல், அபிநந்தனுக்கு நேர்ந்தாலும், ஜெனிவா ஒப்பந்தத்தை மதித்து, பாகிஸ்தான் விரைவில் விடுவிக்கும் என்று நம்பலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்