நாளை நிறைவு பெறப்போகும் புத்தகக் காட்சி குறித்து ஒரு உரையாடலை நாம் தொடங்கலாம். இதில் பேசப்பட்டது முடிவான பார்வையும் அல்ல. இதைத் தவிர்த்து வாசகர்களும் புத்தகக் காட்சிகள் குறித்து தாங்கள் சொல்ல நினைப்பவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குப் போகலாமா வேண்டாமா, வேறு சில வேலைகள், அலைச்சல்கள் என்று சில குழப்பங்கள் இருந்தன. ஒருவழியாக சென்னை 42-வது புத்தகக் கண்காட்சிக்கு போயே தீருவது என்ற முடிவுக்குப் பிறகு புத்தகக் காட்சிக்கு செல்லும் உற்சாகம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைததார் என்பதே ஒரு நல்ல செய்திதான். தமிழக அரசின் நட்புறவோடு ஒரு புத்தக விழா அமையும்போது புத்தகக் காட்சிக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் தங்கு தடையின்றி கிடைப்பது போன்ற நல்ல அம்சமாக இதைப் பார்க்கலாம்.
இந்த முறை இதில் பாராட்டும்படியாக நிறைய அம்சங்கள் தெரிந்தன. முதலாவது அம்சம் புத்தகக் காட்சி அரங்கங்களிலிருந்து மிகவும் தள்ளியிருந்த அரங்க மேடை. அடுத்தது கேண்டீன் இதர அருந்தகங்கள். (காபி சூப் வகையறாக்கள் விலை ரூ.30 ரூபாய் என்றபோதும் கூட அங்கு எப்போதும் கூட்டம் இருந்தது.)
எதிரெதிரெ அமைந்திருந்த புத்தக அங்காடி வரிசைகளுக்கான அகன்ற தாழ்வாரங்கள். முன்பு போல நெருக்கடியாக இல்லாமல் எவ்வளவு கூட்டமென்றாலும் நன்றாக கையை வீசி நடக்கலாம்.
ஒவ்வொரு வரிசை தொடங்கும் இடத்திலும் அங்காடிகளின் பட்டியல் பயனுள்ளதாக இருந்தது. என்றாலும் இதை இன்னும் பார்வையில் படும்படியாக இதன் வடிவமைப்பில் இன்னும் சற்றே பெரிதுபடுத்தி கீழ்ப்பகுதியில் வைக்காமல் சற்றே உயர்த்தி அமைக்க வேண்டும்.
எந்த புத்தகக் கடைக்கும் இன்னொரு கடைக்கும் இடையூறு இன்றி நுழைந்து புத்தகங்களை நிதானமாகப் பார்வையிட்டுத் தேர்ந்தெடுக்கலாம்.
அப்படி நடந்து செல்லும்போது காதில் விழுந்தது ஒரு வாசகம்... ''பேஸ்புக்ல மாங்குமாங்கு லைக் போடறாங்க... ஷேர் பண்றாங்க. நேர்ல பாத்தா எதுவுமே பேசறதில்லை.. என்னப்பா இது..''
அவரது புகார் ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று தெரியவில்லை. நேரில் பார்த்தால் எதையாவது பேசித்தான் ஆகவேண்டுமா என்ன?
ஆனால் அவர் பேசிச் சென்றதின் எச்சம்: சிலர் பாக்காமலே போறாங்க.... அப்புறம் எந்த உறவை வளர்த்துக்கொள்ள ஃபேஸ்புக் லைக்குகள்? எத்தனை லைக்குகள் எத்தனை தலைகள் எத்தனை மனிதர்கள் எத்தனை ஷேர்கள்... இதெல்லாம் வலைதள ஆதரவு செல்வாக்கை அதிகரித்து காட்டுவதற்குத்தானா? என்று அங்கலாய்த்துச் சென்றது அந்தக் குரல். யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
உண்மையில் பலருக்கும் புத்தகங்களோடு மனிதர்களைக் கண்டுகொள்ளும் ஒரு இடமாகவும் புத்தகக் காட்சி அமைந்ததென்றால் அது மிகையில்லை. சில உறவுகளில் சில வேறுபாடுகள் முன்பின் இருக்கும். அது எப்போதும் இருக்கக் கூடியதுதான்.
பல்வேறு துறைசார்ந்த ஆர்வலர்களை நேரில் சந்தித்து நேரில் கலந்துரையாடும் வாய்ப்பும் இங்கு அமைந்து விடுவது கூடுதல் சிறப்பு. எவ்வளவு பெரிய ஆளானாலும் வழியில் அவர்களை மடக்கிச் சிறிதும் நேரம் பேசுவதை அவர்களும் விரும்பத்தான் செய்கிறார்கள்.
என்ன ஒன்று ''சார் நான் உங்க ரசிகன் அல்லது வாசகன்'' என்று தொடங்க வேண்டும். அல்லது உங்க எழுத்துக்களைப் படிச்சிருக்கேன், நீங்க நடிச்ச இயக்கிய படங்களைப் பாத்திருக்கேன், உங்க விஞ்ஞான சாதனைகளை கேள்விப்பட்டிருக்கேன் என்றாவது ஆரம்பிக்க வேண்டும்.
விழா மேடையில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற கூட்டங்களில் சிறப்பு பேச்சாளர்கள் நன்றாகவே பார்வையாளர்களைக் கவர்ந்தனர். சிந்திக்கத் தூண்டினர். நாம் கொண்டுள்ள குறுகிய பார்வைகளை விரிவுபடுத்தினர்.
அதற்குக் காரணம் வந்திருந்தவர்கள் யாருமே வெறும் பேச்சாளர்கள் அல்ல. பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டிருப்பவர்கள். முன்பெல்லாம் பேச்சில் எண்டர்டெய்ன் செய்யும் ஆட்கள் மேடையில் நின்றுகொண்டு நீட்டி முழக்கும்போது உண்மையில் வாசகர்கள் பலரும் கடும் கோபத்தில் இருந்தனர். ஆனால் இந்த முறை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தது.
தாதா சாகேப் பால்கே, மிருணாள் சென் திரை அரங்கில் குறும்படங்கள் திரையிடப்பட்டதும் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்கள் அழைத்து பேசவைத்திருந்ததும் வாசகர்களுக்கு பயனுள்ள ஒரு ஏற்பாடு.
முன்பெல்லாம், வழக்கமாக புத்தகக் காட்சியில் நுழைந்தால் புத்தகம் சார்ந்த விளம்பரங்கள் ஓரளவுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், இந்தமுறை சம்பந்தமில்லாத தொலைவில் வரிசையாக ஏதோ ட்ரம்ப்பின் கனவு சுவர்போல வெகுதூரத்தில் வைத்துவிட்டார்கள். அதில் என்ன எழுதியிருக்கிறதே என்று தெரியவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் மருத்துவம் தொடர்பான நூல்கள் சமகால நீதி, சட்ட வழக்குகள் தொடர்பான நூல்கள், சமகால தமிழக நிகழ்வுகள் சார்ந்த நூல்கள் சார்ந்த விளம்பரங்கள் எதுவுமே கண்ணில் படவில்லை.
குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் ஆர்வமாக தேடி வருபவர்கள் 700 கடைகளுக்கும் அலைய வேண்டுமா? ஓரளவுக்குப் பார்வையில் படும்படியாக விளம்பரங்களை வைத்திருக்கலாம்.
மற்றபடி கூட்டத்தைச் சமாளிக்க நிறைய டிக்கெட் கவுண்டர்கள், அவ்வப்போது ஒலிப்பெருக்கியில் பொது அறிவிப்புகள், கடைகள்தோறும் உங்களுக்கு நாங்கள் உதவட்டுமா என்பதுபோல நிறைய உதவியாளர்கள், ஒளிவண்ணத்தில் மிதந்த அங்காடிகளின் தாழ்வாரப் பாதைகள்... ஒவ்வொரு வரிசை தொடங்கும் பாதைக்கு அருகிலேயும் தாகம் தணிக்க தண்ணீர் கேன்கள் அவசரத்திற்கு உதவியாக உள்ளன.
சிற்றரங்கில் நடத்தப்பட்ட கூட்டங்கள் மட்டும் புத்தகக் கண்காட்சிக்கு புறவாசலில் வைக்கப்பட்டன. அதுவும் கழிப்பறைக்குச் செல்லும் பாதையில்... அப்படியாவது என்ன நடக்கிறது என்று சற்றே எட்டிப் பார்ப்பார்களோ என்ற நப்பாசையோ என்னவோ?
விற்பனை குறித்து ஒரு புத்தக அங்காடி உரிமையாளரிடம் பேசியபோது, இந்த முறை சென்னை புத்தகக் காட்சி விற்பனை மந்தம் என்று தெரிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் தற்செயலாக நேர்ந்த ஒரு பிரச்சினை பற்றியது.
10 நாட்கள் விடுமுறை; வாசகர்கள் எங்கே?
இரண்டு நாள் லீவு போட்டால் 10 நாட்கள் விடுப்பு என்கிற ஒரு சமாச்சாரம்தான் அது. நகர வாழ்க்கையிலிருந்து சொந்த ஊருக்குத் தப்பிச்செல்லும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேலைதினத்திற்கு முன்னாள் இரவோ மறுநாள் காலையிலோதான் சென்னைக்குத் திரும்பக்கூடும். எவ்வளவு ஒரு அபத்தம்.
தொடங்கிய 4-ம் தேதியிலிருந்து நாளை முடியஉள்ள 17-வது நாளான 20-ம் தேதி வரை நீண்டு நடந்த ஒரு சந்தையில் செலவு, வாடகை என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால் பெரிய அங்காடிகளின் வருமானம் மட்டும்தான் கொஞ்சம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்குமோ என்னவோ!
வாசகர்கள் சார்பாக ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு நல்ல புத்தகம் வாங்க வேண்டுமெனில் குறைந்தது 300 ரூபாய் வைக்க வேண்டும். அதிலிருந்து தொடங்கி 1000 ரூபாயைத் தாண்டுகிறது நல்ல புத்தகங்களின் விலை. மிகக் குறைந்த ஒரு சிறிய 64 பக்கப் புத்தகம் ரூ.100. நவீன புத்தக வடிவமைப்பில் தயாரான இப்புத்தகங்கள் வாசகனுக்கு சற்று தள்ளியே உள்ளன. உடனே இதை ஒரு சினிமாவுக்கு, ஷாப்பிங் மாலுக்குச் செலவழிப்பதோடு இதை ஒப்பிட வேண்டாம். எல்லாரும் சினிமாவுக்கு ஷாப்பிங் மாலுக்குப் போவதில்லை.
உதாரணமாக திஜா, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஜெயகாந்தன், பிரபஞ்சன் சிறுகதைத் தொகுப்புகள் ரூ.1000 என்கிற எல்லை மதிலைத் தாண்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் வாங்க ஆசைப்பட்டு கடைசிவரை இந்தப் புத்தகங்கள் நமக்கு அந்நியமாகவே போகும் அபாயம் இது.
இன்னொரு பிரச்சினை. புத்தகக் காட்சி முடிந்து வெளியே வந்தால் கண்ணுக்கெட்டடிய தூரம் வரை ஒரு நகரப் பேருந்தும் தென்படாது. இத்தனைக்கும் மவுண்ட் ரோடு. அதுவும் புத்தகக் காட்சிக்காகக் கூட ஒரு சிறப்புப் பேருந்தும் கிடையாது. அதுவும் ஏராளமானோர் காத்திருந்த தைப்பொங்கல் அன்று மாலை.
ஒவ்வொரு நாளும் புத்தகக் காட்சி முடிந்த பிறகு நிறுத்தத்தில் வந்து மக்கள் வழிமேல் விழிவைத்து பேருந்துக்காக கூட்டம்கூட்டமாகக் காத்திருக்கும் காட்சி ஏதோ தேவையில்லாமல் ரெண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து வந்து காத்திருப்பது போலிருந்தது.
தமிழக அரசின் வாழ்த்துரையோடு தொடங்கிய நிகழ்வு என்ற வகையிலாவது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு சிறப்புப் பேருந்து வசதி செய்திருக்க வேண்டும். இதை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்ள மறந்தார்களோ தெரியவில்லை. இதனாலும்கூட வாசகர்கள் அலுத்திருக்கக் கூடும்.
எது எப்படியோ, எல்லோரும் நாளை ஞாயிற்றுக்கிழமை அதாவது புத்தகக் காட்சியின் 17-வது நாள் ஒருநாளை தான் நம்பியுள்ளனர். வாசகர்கள் ஒருசேர இவ்வளவு புத்தகங்களை நேரில் காண்பதோடு ஒரே இடத்தில் பலதுறை சார்ந்த புதிய நூல்களை 10 சதவீத தள்ளுபடி விலையில் சேகரிக்கும் இந்த வாய்ப்பை விட்டால் அடுத்த வருடம்தான். இன்றே கடைசி. முந்துங்கள், நாளை ஒருநாள் என்பது கடைக்காரர்களுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும்தான்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago