புத்தர் மொழி
* கடந்த காலத்தில் வாழாதே, எதிர்காலத்தைப் பற்றி கனவு காணாதே, தற்போதைய தருணத்தில் மனதைக் கவனம் செலுத்து.
* உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஒரு கடமை, இல்லையென்றால் நமது மனதை வலிமையாகவும் தெளிவாகவும் வைக்கமுடியாது.
* என்ன செய்துமுடிக்கப்பட்டது என்பதை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை; இன்னும் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டுமே பார்க்கிறேன்.
* அமைதியற்ற எண்ணங்கள் இல்லாதவர்கள், நிச்சயமாக அமைதியைக் கண்டறிவார்கள்.
* உடல்நலம் என்பது உயரிய பரிசு. மனநிறைவு என்பது உயரிய செல்வம். விசுவாசம் என்பது சிறந்த நல்லுறவு!
*** **** **** *****
தொடர்புதான் செல்வம்!
போதிவனம் அமைதியை உடுத்தியிருந்தது. புத்தர் தியானத்தில் இருந்தார். அப்போது அந்த போதிவனத்துக்குள் ஓர் இளைஞன் வந்தான். புத்தர் தியானத்தில் இருந்து கண் விழிக்கும் வரையில் காத்திருந்தான் அந்த இளைஞன்.
தன்னுடைய தியானம் கலைந்து புத்தர் கண் விழித்தபோது அவருக்கு எதிரில் போய் நின்றான் அந்த இளைஞன். புத்தருடைய விழிகளின் வெளிச்சத்தில் அந்த இளைஞன் பிரகாசமானான். அவன் என்ன நினைத்தானோ... தெரியவில்லை. அவன் புத்தரின் கால்களில் விழுந்து வணங்க முயற்சித்தான்.
புத்தர் அந்த இளைஞனைத் தடுத்து... பிறருடைய காலில் விழுந்து ஏன் உன்னை நீயே தாழ்த்திக்கொள்கிறாய்? இனி இதுபோன்ற தவறை கனவில்கூட நீ செய்யக்கூடாது என்ற புத்தர் அந்த இளைஞனைப் பார்த்து, ‘‘நீ யார்? என்னைத் தேடி எதற்கு வந்திருக்கிறாய்?’’என்றார்.
''என்னுடைய பெயர் அபிநந்தன். நான் ஒரு ஏழை. மிகவும் கஷ்டத்தில் உழல்கிறேன். என்னுடைய மனைவியும் நானும் நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் வறிய நிலையில் அல்லாடுகிறோம். என் வாழ்வில் இன்பம் என்ற சொல்லுக்குக் கூட துளியும் இடமில்லை. எனக்கு துறவறம் கொடுத்து, இந்த உலக கஷ்டங்களில் இருந்து என்னை விடுவியுங்கள்... அப்படி நீங்கள் செய்தால் என் மகிழ்ச்சி அடைவேன். அதைவிடப் பேரின்பம் வேறு இல்லை எனக்கு'' என்றான்.
அபிநந்தனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் புத்தர். சூரியனில் இருந்து ஒளி பெறும் பூமியைப் போல புத்தரின் விழிகளில் இருந்து அவன் கருணை வெளிச்சத்தை கடன் பெற்றான்.
மெல்ல வாய் திறந்து மெல்லிய குரலில் அபிநந்தனிடம் பேச ஆரம்பித்தார் புத்தர்.
‘‘அன்புகொண்ட இளைஞனே.... அபிநந்தா! காற்றைப் போல சுதந்திரமாக சுழன்று திரிய வேண்டிய உன்னை, உனது பெற்றோர் இல்லறக்கடலில் இறக்கிவிட்டு விட்டார்கள் என்று கவலைகளால் ஆனதொரு படகினை உன் மனசுக்குள் நீயே ஓட்டிக்கொண்டிருக்கிறாய். அதனால் தான் இப்படியெல்லாம் நீ பேசுகிறாய்.
அதோ அங்கு இருக்கும் துவரந்த மரத்தைப் பார். அந்த துவரந்த மரத்தின் இலைகள் எவ்வளவு இதமாக பசுமையின் மொழியை பேசிக்கொண்டிருக்கின்றன... என்று பார். ஒவ்வொரு இலையும் மற்றொரு இலையுடன்... ஒரு பச்சைக்கிளி இன்னொரு பச்சைக்கிளியுடன் உரையாடுவதைப் போல.... ஏதோ ரகசியம் பேசிச் சிரிப்பதை உன்னால் உணர முடிகிறதா அபிநந்தா? அந்த துவரந்த மரத்தின் இலைகள் எவ்வளவு அழகாக அசைந்தாடுகின்றன பார்த்தாயா? இலைகளின் அசைவுக்கு என்ன காரணம் தெரியுமா?
காற்று இலைகள் மீது மோதுகின்றன. அந்த காற்றுதான் மரத்தின் இலைகளை ஆட்டுவிக்கின்றன. ஆம்... அபிநந்தா. மனித மனங்களும் அந்த மரத்தின் இலைகளைப் போன்றவையே. மனித மனங்கள் மீது உலகப் பற்று என்கிற காற்று வந்து மோதிக்கொண்டே இருக்கிறது. அதனால் மனித மனங்கள் ஆடுகின்றன. அசைகின்றன. அலைபாய்கின்றன. இதுதான் இயல்பு, இதுதான் இயற்கை!’’ என்றார் புத்தர்.
அதை கேட்ட அபிநந்தன், ‘‘புத்த பெருமானே! என்னை எந்த வெளிக்காற்றும் அசைத்துவிட முடியாது. நான் உறுதியாக எதிர்த்து நிற்பேன். என்னை உலக வாழ்விலிருந்து விடுவியுங்கள்...’’ என்றான்.
‘‘சரி அபிநந்தா! நீ விரும்பியபடியே இருக்க உன்னை நான் அனுமதிக்கிறேன். இனி நீ இந்த போதிவனத்திலேயே தங்கிக்கொள்ளலாம்!’’ என்றார் புத்தர்.
புத்தர் சொன்னது போலவே அபிநந்தன் அந்த போதிவனத்திலேயே தங்கிக்கொண்டான்.
ஒருநாள் நீராடச் சென்ற புத்தர், காலவி ஆற்றின் கரையில் ஒரு நாய்க்குட்டியுடன் அபிநந்தன் நிற்பதைப் பார்த்தார். அபிநந்தனைப் பார்த்து, ‘‘என்ன இது? யாருடைய நாய்க்குட்டி இது?’’ என்று கேள்வி எழுப்பினார் புத்தர்.
‘‘புத்தபெருமானே! இது என் மீது அளவுகடந்த பாசம் கொண்ட என்னுடைய நாய்க்குட்டிதான். இது எப்போதும் என் கூடவே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறது. என்ன செய்வது... இந்த பாசமிக்க நாய்க்குட்டியை மட்டும் என் கூடவே வைத்துக்கொள்ள நீங்கள் அருள்கூர்ந்து அனுமதிக்க வேண்டும்" என்றான்.
புத்தர் எதுவும் சொல்லவில்லை. மெல்ல புன்னகைத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றார்.
இன்னொரு நாள் புத்தர் நீராடச் சென்றபோது, அதே ஆற்றங்கரையில் நாய்க்குட்டியுடனும் ஒரு சிறுவனுடனும் நின்று கொண்டிருந்தான் அபிநந்தன்.
‘‘அபிநந்தா... இந்தச் சிறுவன் யார் ?" எனக் கேட்டார் புத்தர்.
‘‘அதை ஏன் கேட்கிறீர்கள் புத்தபிரானே! இவன் என்னுடைய புதல்வன். இவன் இதோ இந்த நாய்க்குட்டியுடன் எப்போதும் இருக்கவே விரும்புகிறான். இவனால் இந்த நாய்க்குட்டியைப் பிரிந்து இருக்கவே முடியவில்லையாம். எனவே இந்த நாய்க்குட்டியுடன் சேர்த்து இவனையும் என்னுடன் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்!’’ என்றான் அபிநந்தன்.
அதற்கும் புத்தர் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக சென்றுவிட்டார்.
மறுநாள் அபிநந்தனை அழைத்தார்.
‘‘உனது நாய்க்குட்டிக்கு உன்னை பிரிய மனமில்லை. உனது மகனுக்கு நாய்க்குட்டியை பிரிய மனமில்லை என்கிறாய். பார்த்தாயா... இந்த உலகில் ஒவ்வொன்றும் இப்படித்தான் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான். இந்தத் தொடர்பு சங்கிலியை அறுத்தெறிவது என்பது எளிதானது அல்ல. உங்களால் மட்டும் எப்படி முடிந்தது என்று என்னைப் பார்த்து நீ கேள்வி எழுப்பலாம். எதனுடனும் நான் தொடர்பற்றவன் என்று மற்றவர்கள்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் தொடர்புதான் செல்வம். தொடர்புதான் சொத்து!
*** **** ****
எங்கிருக்கிறார் புத்தர்?
அந்த வயது முதிர்ந்தவர் வரும்போதே அவருடைய கையில் இருந்த ஊன்றுகோல்கூட குளிரில் நடுநடுங்கியது. பற்கள் கஞ்சிரா வாசித்தன. குளிரோடு வந்த அந்த முதியவருக்கு... அந்த புத்த மடாலயத்தில் அன்றிரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தங்குவதற்கு மட்டும்தான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர... போர்த்திக்கொண்டு படுத்துறங்க அங்கே எந்த வசதியும் துளியும் இல்லை.
அங்கு தங்கியிருந்த மற்றவர்களுக்கெல்லாம் அந்தக் குளிர் பழக்கப்பட்டுப்போயிருந்தது. அவர்கள் நிம்மதியாக குறட்டை வாசித்தனர். ஆனால் அந்த முதியவரை குளிர் படுக்கவிடாமல் வாட்டியெடுத்தது.
என்ன செய்வது என்று புரிபடாத அந்த இரவுப் பொழுதில்... அந்த புத்த மடலாயத்தில் ஒரு மேடையில் இருந்த மரத்தால் ஆன புத்தர் சிலையை எடுத்து வந்து கொளுத்தி அதில் குளிர் காய ஆரம்பித்தார் அந்த முதியவர்.
ஏதோ மரம் எரியும் வாசனையை அறிந்த புத்த மடாலயத்தைச் சேர்ந்தவர்கள் தூக்கத்தில் இருந்து சட்டென்று விழித்துக்கொண்டு ஓடி வந்தார்கள்.
தங்குவதற்கு இடம்கொடுத்த இடத்தில் புத்தரின் சிலையை எரியவிட்டு குளிர்காயும் அந்த முதியவரை... கடுமையாகத் திட்டினர்.
''இனி, ஒரு நாழிகைக்கூட இங்கு நீ தங்கக் கூடாது... இதோ இப்போதே இங்கிருந்து வெளியேற வேண்டும்'' என்று கோபத்துடன் முதியவரை திட்டி, அந்த நள்ளிரவில் மடாலயத்தில் இருந்து வெளியேற்றினர்.
நடுங்கும் குளிரில் நடக்கவே முடியாமல் ஊர்ந்தபடி அங்கிருந்து வெளியேறினார் முதியவர்.
மறுநாள் விடியற்காலை. மண், மரம், செடி, கொடி எங்கும் பனியின் ஈரக் கையொப்பம்.
நள்ளிரவில் இங்கிருந்து வெளியேற்றப்பட்ட அந்த முதியவர் என்ன ஆனார் என்று மடாலயத்துக்கு வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தனர்.
அந்த முதியவர் மடாலயத்துக்கு வெளியே... சாலையில் இருந்த ஒரு எல்லைக்கல்லின் மீது பால்நிற தும்பைப் பூக்களைத் தூவி, ''புத்தம்... சரணம்.... கச்சாமி....புத்தம்... சரணம்.... கச்சாமி....'' என்று பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.
மடாலயத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த முதியவரை நெருங்கி, ''நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அந்த எல்லைக் கல் என்ன புத்தரா? பூக்கள் போட்டு அந்த எல்லைக் கல்லை போய் வணங்குகிறீர்களே!'' என்று கேட்டார்.
அதற்கு அந்த முதியவர் சொன்னார்:
''நான் குளிர் காய எரித்தது சாதாரண மரத்தைதான் என்று நம்புகிறேன். நீங்கள்தான் அதனைப் புத்தர் என்று சொன்னீர்கள். எனவே, ஒரு மரம் புத்தராகும்போது; ஒரு எல்லைக் கல் ஏன் புத்தர் ஆகக் கூடாது? எனக்குள் இருந்த புத்தரைக் காப்பாற்றத்தான் நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தேன். ஒரு மரப் புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்திவிட்டீர்கள்!'' என்றார்.
- இன்னும் நடப்போம்...
மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 hour ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago