வெற்றுக் கோப்பையாய் இரு!
ஒரு கல்லூரியில் இருக்கும் தத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியர் நுஹன். அவர் ஒரு மாலை வேளையில் ஒரு ஜென் குருவைப் பற்றி கேள்விப்பட்டு, அவரைத் தேடிப் போகிறார். நுஹனைக் கண்டது புன்னகை பூசி அவரை வரவேற்கிறார் அந்த ஜென் குரு.
ஜென் குரு எந்த ஒரு கருத்தைப் பற்றி விரிவானதொரு உரையை நிகழ்த்த ஆரம்பிக்கும்போது... அதற்கிடையே புகுந்துவிடுகிற நுஹன், அந்தக் கருத்தைப் பற்றி தான் அறிந்துவைத்திருக்கும் தகவல்களை எல்லாம் கொட்டுவார்.
ஜென் குரு சொல்லப்ப்போகிற அந்தக் கருத்தைப் பற்றி தனக்கு ஏராளமான தகவல்கள் தெரியும் என்கிற வகையில் பேசுவார். முழுதாக எந்த ஒரு கருத்தையும் ஜென் குரு சொல்ல நுஹன் அனுமதிக்கவே இல்லை.
இன்னும் சொல்லப்போனால்... கற்றுக்கொள்ள வந்த இடத்தில் தன்னுடைய பிரதாபங்களை அவிழ்த்துவிடுவதிலேயே நுஹன் குறியாக இருந்தார்.
கொஞ்ச நேரம் கடந்தது. ‘’சரி... பேராசிரியர் அவர்களே நாம் பேசிப் பேசி உலர்ந்துவிட்டோம். கொஞ்சம் தேநீர் அருந்திவிட்டு வரலாம்...’’ என்று அவரை அழைத்தார் ஜென் குரு.
தேநீர் மேஜை முன்னால் இருவரும் அமர்ந்துகொண்டனர். நுஹனின் கோப்பையில் சுடச் சுட தேநீரை ஊற்றினார் ஜென் குரு. அந்தக் கோப்பை முழுவதுமாக நிறைந்தது. ஆனால் ஜென் குரு கோப்பையில் தான் தேநீர் ஊற்றுவதை நிறுத்தவே இல்லை.
தனக்கு முன்னால் இருந்த தனது கோப்பையில் இருந்து தேநீர் வழிந்து ஓடுவதைக் கண்ட நுஹன் பதறியடித்துக்கொண்டு... ‘’ குருவே தேநீர் ஊற்றுவதை நிறுத்தக்கூடாதா? அதோ பாருங்கள் தேநீர் வழிந்து ஓடுகிறது!’’ என்றார் படபடவென்று.
அப்போது நுஹனைப் பார்த்து நிதானமாக ஜென் குரு சொன்னார்:
வெற்றுக் கோப்பையில்தான் தேநீரை ஊற்ற முடியும். ஏற்கெனவே நிறைந்திருக்கும் கோப்பையில் தேநீரை ஊற்ற முடியாதல்லவா... அதைப் போல இதற்கு முன்னால் அறியப்பட்ட தகவல்களால் நிரம்பி வழியும் உங்கள் மனசில்... என்னால் எந்த புதிய கருத்தையும் சிந்தனையையும் நிரப்ப முடியாது. அன்பு மிகுந்த நுஹனே... இப்போது இங்கிருந்து செல்லுங்கள்... மீண்டும் வெற்றுக் கோப்பையுடன் திரும்பி வாருங்கள்'’ என்று சொல்லி ஒரு கல்லூரியின் தத்துவத் துறைக்கே தலைமைப் பேராசிரியரராக இருக்கும் ஒருவரை அனுப்பி வைக்கிறார் ஜென் குரு!
**** **** ***** *****
புத்தனின் புன்னகை
-------
பொதுவெளியில் நின்றிருந்தது
உள்ளீடற்ற புத்தனின் சிலை.
அதிசயத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
அந்த சிலையை..
மூடியிருந்த கண்கள்
வானோக்கிய உள்ளங்கையின்
மீதிருந்த உள்ளங்கை
எல்லாவற்றிலும் நேர்த்தி.
புன்னகையில் மட்டும் குறை
புத்தனின் தவறுதலா?
சிற்பியின் தவறுதலா?
தடுமாறிக்கொண்டிருந்தார்கள் முன்நின்றவர்கள்.
சடுதியில் கொடுங்காற்றுடன்
பெய்த கடும்மழையில்
உள்ளீடற்ற புத்தன் சிலைக்குள் ஓடிச்சென்று
ஒதுங்கினார்கள் அத்தனைபேரும்.
யாருமே கண்டறியாதபடி
நிறைவுற்றிருந்தது
புத்தரின் புன்னகை!
- கீர்த்தி ரமேஷ்
**** **** ***** *****
யார் இந்த பூரணர்?
கவுதம புத்தரின் முதன்மையான 10 சீடர்களில் ஒருவர்தான் பூரணர். இவர் புத்தத் தன்மை பெற்றவர். இவரது இயற்பெயர் : பூரண மைத்திரேயினி புத்திர என்பதாகும். இவர்தான் பூரணர் என்ற பெயரில் அறியப்படுகிறார். பாலி மொழி நூல்களில் புன்னா என இவர் அறியப்படுகிறார். புத்தரின் கொள்கைகளையும், தருமங்களையும் நாடு முழுவதும் விளக்கி கூறியவர் இவர்!
**** **** ***** *****
அந்த 7 பண்புகள்!
பாலி மொழியில் எழுதப்பட்ட நூல் ‘திரிபீடகம்’. இந்த ஓலைச்சுவடி நூல், கி.மு. முதலாம் நூற்றாண்டில் வலகம்பாகு மன்னன் காலத்தில் இலங்கையில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பவுத்த நூல் முழுக்க புத்தரது உரைகள் பதிவாகியுள்ளன. மனிதர்களின் உயர்நிலைக்கு ஏழு பண்புகள் முக்கியமானது எனக்கூறும் புத்தர், அந்த ஏழு பண்புகளை ‘சப்த போத்யங்கா’ என்று பெயரிட்டு அழைத்ததாக ‘திரிபீடகம்’ சொல்கிறது.
புத்தர் வலியுறுத்தும் அந்த 7 பண்புகளாவன:
1. தற்கண உணர்வு
மனத்தின் நகர்வுகளைக் கவனிப்பதும் தன் இயற்கையை நினைவுகூர்வதுதான் தற்கண உணர்வு எனப்படுகிறது.. உடல், உணர்வு, எண்ணங்கள், கருத்துருவங்களின் மீதான தியானமே தற்கண உணர்வாகும்!
2. தம்மம்
தன்னுடைய மனதிலும் உடலிலும் நடப்பது என்னவென்பதை விசாரிப்பதற்கு தம்மம் என்று பெயராகும். உயிருள்ள, உயிரற்ற பொருட்களைக் கவனிப்பது; மானுடத்தையும் தெய்வீகத்தையும் புரிந்துகொள்வது. அதனதனை அதனதன் அடிப்படை இயல்புகளோடு உற்றரிவதே தம்மம் ஆகும்!
3. வீரியம்
மனதில் உருவாகும் தீமையான, கெட்ட எண்ணங்களை, சிந்தனைகளை அழிக்கும் செயலே வீரியமாகும். தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு முன்பே தடுக்கும் செயல். தோன்றாத நல்ல எண்ணங்களைத் தோற்றுவிப்பது. தோன்றிய நல்லெண்ணங்களை வளர்ப்பதற்கான நற்செயல்கள் வீரியம் எனப்படும்.
4. ஆனந்தம்
மனம் - உடல் இரண்டிலும் பரவக்கூடிய மனத்தின் இயல்பு இது. இந்த இயல்பு சுத்தமாக இல்லாவிட்டால் ஞானத்தின் பாதைக்கு ஒருவர் செல்லவே இயலாது!
5.அமைதி
உடலும் மனமும் நிம்மதி அடைந்த நிலை இது. உடல் அமைதியாக இருப்பது ‘காய பசதி’ என்று சொல்லப்படுகிறது. சித்த பசதி மனத்தின் அமைதியைக் குறிப்பது. உணர்வு, பார்வை நிலைகளில் கொந்தளிப்பில்லாமல் இருப்பது. காயமும் சித்தமும் அமைதியாக இருக்கும்போதே அமைதி கிட்டும்.
6. சமாதி
மனத்தின் ஒருமுக நிலையைத் தான் சமாதி . தியானத்தின் இலக்கில் அமைதியான மனமே குவிய முடியும். அமைதியும் கவனமும் உள்ள மனம்தான் விஷயங்களை அதன் இயல்பில் பார்க்க இயலும். புலன் இச்சை, தீய எண்ணம், தாமச நிலை, பதற்றம், சந்தேகம் போன்ற தடைகளை ஒருமித்த மனம் களைந்துவிடும்.
7. சமநிலை
உள்ளேயும் வெளியேறும் தோன்றி மறையும் பொருட்களையும் விஷயங்களையும் விருப்பு வெறுப்பின்றி உற்றறியும் அமைதியான மனநிலையே சமநிலை எனப்படுகிறது.. ஆற்றல், மகிழ்ச்சி, விசாரம், அமைதி போன்ற உணர்வுகள் எல்லாமே சிலவேளைகளில் முழுமையாகவும் பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேலோங்கியும் இருக்கும். ஆனால், இவையெல்லாம் சமநிலையுடன் இருப்பதே ஞானத்துக்கான வழி.
- இன்னும் நடப்போம்...
மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago