அங்குலிமாலன் கதை
புத்தருடைய வரலாற்றைப் புரட்டுகின்றபோது, நம் கண்களில் தென்படுகிற ஒரு பெயர்: அங்குலிமாலன்.
இன்றைய பிஹார் மாநிலம் அன்றைய நாட்களில் மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம். கங்கை ஆறும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் அமைந்திருந்தது மகதநாடு. அந்த நாட்டில் வேளாண்மைத் தொழில்தான் பிரதானம். கோதுமையும் நெல்லும் கரும்பும் விளைந்து மகத நாட்டை செழுமைப்படுத்தியிருந்தன. அந்த மகத நாட்டில் .கட்டிஹார் எனுமிடத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன்தான் அங்குலி மாலன்.
புனை கதையாகவும், வாலாற்றுரீதியிலும் அங்குலி மாலனைப் பற்றி குறிப்பிடுகிறபோது... தங்களுடைய கற்பனைகளையும், பொய்யையும் சேர்த்து பிசைந்து கதை செய்திருக்கிறார்கள். படிப்பவர்களிடையே ருசிகரமாக தகவலைத் தர வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் அங்குலி மாலன் கதை சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
நீங்கள் வேறு எதிலாவது - அங்குலிமாலனைப் பற்றி படித்து வைத்திருந்தால், அவனைப் பற்றிய பிம்பத்தை மனதில் அழித்துவிடுங்கள்.
‘அங்குலி மாலன் என்பவன் ஒரு அசுரன்.
ரத்தம் குடிப்பவன்.
வாய் நிறைய அவன் கூர் பற்களைக் கொண்டவன்.
மிருகங்களோடு ஒப்பிட்டால் அவனுக்கும் மிருகங்களுக்கும் துளிதான் வித்தியாசம் இருக்கும். அவன் மனிதர்களின் உயிரைப் பறித்து... அந்த மனிதர்களின் விரல்களை வெட்டி எடுத்து, அந்த விரல்களை எல்லாம் கோத்து தனது கழுத்தில் மாலையாகப் போட்டிருப்பவன்’ - என்றெல்லாம் உங்களில் பலர் படித்திருப்பீர்கள். படிப்பவர்களிடையே சுவாரஸ்யத்தைக் கூட்டவே இது போன்ற ஃபேன்டஸி தன்மையில் அங்குலிமாலனைப் பற்றி பதிவு செய்திருக்கிறார்கள்.
ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸே என்பவர் 1922-ல் ஜெர்மானிய மொழியில் எழுதிய ‘சித்தார்த்தன்’ என்கிற புத்தகம், 1951-ல் ஆங்கிலத்தில் வெளியானது. இப்புத்தகத்தில் அங்குலிமாலனைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளதுதான் கொஞ்சம் நம்புவது போல உள்ளது.
அங்குலிமாலன் அடிப்படையில் ஒரு விவசாயி. கல்வி அறிவற்றவன். புத்தர் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்தவன் என்று சொல்லப்படுகிறது. இவன் ஒரு கொல்லையன் என்றும், காட்டு வழியில் செல்வோரைக் கொள்ளையடித்து அவர்களின் விரலை வெட்டியெடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டதால் அங்குலிமாலன் என்ற பெயர் பெற்றான் என்பதெல்லாம் கட்டுக்கதை. பொய்யில் விளைந்தவை.
புத்தரின் வரலாற்றுக்கு இடையில் இதுபோன்ற பொய்யையும் கற்பனையையும் பிசைந்து எழுதப்பட்ட அப்பட்டமான கதைச் சரடுகள் ஏராளமாக உள்ளன. நாம் இந்தக் கசடுகளை எல்லாம் அகற்றிவிட்டுத்தான் புத்தரின் வரலாற்றை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அங்குலிமாலன் ஒருகொடுங்கோலன், தன் எதிரில் வருபவர்களின் பொன்னையும் பொருளையும் பறித்துக்கொண்டு, அவர்களின் விரல்களை வெட்டி எடுத்து மாலையாகக் கோத்து மாலையாகத் திரிவான். அப்படி அவன் அதுவரையில் 999 விரல்களை கோர்த்து மாலையாகப் போட்டுக்கொண்டிருந்தவன் ஆயிரமாவது விரலை வெட்டுவதற்காக மனிதர்களைத் தேடிக்கொண்டிருந்தான். அப்போது அவனது எதிரில் புத்தர் தோன்றினார். ஆனால் அந்த அங்குலிமாலனின் ஜம்பம் எல்லாம் புத்தரிடம் பலிக்கவில்லை. ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும்படி ஒன்று நடந்தது. அது என்னவெனில் - புத்தர் அவனை ஆட்படுத்தி, நல் ஆலோசனைகளை எல்லாம் வழங்கி அவனைத் தனது சீடர்களில் ஒருவனாக ஆக்கிக்கொண்டதாக புத்தருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய பலர் இப்படிக் கதைவிட்டிருக்கிறாகள்.
ஆனால் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதியுள்ளது கற்பனை கலக்காத நிஜமாக உள்ளது. அவர் எப்படி அங்குலிமாலனின் சித்திரத்தைத் தீட்டுகிறார் பாருங்கள்:
அங்குலிமாலன் ஒரு விவசாயி. மற்றவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்கிற பத்ரா என்கிற பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவன். உயர்ந்த பண்பாடு கொண்ட அவன் தினமும் காட்டுக்குச் சென்று எந்த விலங்குகளுக்கும் தீங்கும் விளைவிக்காமல் காட்டில் எங்கும் காய்த்துத் தொங்கும் காய்கள், பழங்களைப் பறித்து வந்து தனது கிராமத்தில் வறுமையில் வாழும் ஏழை எளிய மக்களுக்கெல்லாம் இலவசமாக வழங்கி வந்தான்.
இதை அவன் ஆண்டுக்கணக்காக ஒரு சமூக சேவையாகவே செய்துவந்தான். அவனுக்கென்று குடும்பங்கள் இல்லாததால், அந்தக் கிராமத்து மனிதர்கள் எல்லோரையும் தனது சொந்த பந்தங்களாகக் கொண்டாடி மகிழ்ந்தான். அவர்கள் பிரதிபலனாக தரும் எந்தப் பொருளையும் கை நீட்டி வாங்கிக்கொள்ள மாட்டான். அந்த ஊர் மக்கள் அவனைத் தங்கள் கிராமத்து மன்னனாக, தங்களின் அமைச்சராக, நல்லாசானாகக் கருதினார்கள்.
புத்தர் அந்தப் பகுதியைக் கடந்து சென்ற போது... அந்த கிராமத்து மக்கள் புத்தரை எதிர்கொண்டபோது...’’நீங்க என்ன இந்த உலகுக்கு நல்லது செய்ய வந்த புனிதரா..? உங்களால் எங்கள் அங்குலிமாலனுடன் போட்டி போட்டுக்கொண்டு நல்லது செய்ய முடியுமா?’’ என்று கேட்டனர்.
‘’என்னது போட்டி போட்டுக்கொண்டு நல்லது செய்யவும் இந்த ஊரில் ஒரு மனிதன் இருக்கிறானா? அவனை நான் சந்திக்க வேண்டுமே...’’ என்று சொல்கிறார் புத்தர்.
அந்தக் கிராமத்து மக்கள் புத்தரை அங்குலிமாலனிடம் அழைத்துச் செல்கின்றனர்.
புத்தரிடம் அவர்கள், கழுத்தில் வெண்டைக்காய் மாலைகளை அணிந்துகொண்டு, தலை கனக்க காய், பழங்களை சுமந்துகொண்டு வரும் ஒரு மனிதனை அறிமுகம் செய்து வைத்துவிட்டுச் சொல்கின்றனர்:
‘’அங்குலிமாலன் காட்டில் இருந்து இது போல காய்களையும், பழங்களையும் பறித்துவந்து எங்களுக்கெல்லாம் இலவசமாகக் கொடுப்பார். நாங்கள் மாறாக எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளவே மாட்டார். ஆனால் எங்களுக்கெல்லாம் பல காலமாக விளங்காத ஒரு ரகசியமும் உள்ளது. காட்டில் இருந்து திரும்புகிற அங்குலிமாலன் கை நிறைய காய், பழங்களுடன் திரும்புகிறார். ஆனால் காட்டுக்குப் போகும் போது ஒரு சிறு பையில் என்னமோ முடிச்சுப் போட்டு எடுத்துச் செல்வது வழக்கம். அது என்னவென்று தெரியவில்லை...’’ என்று சொல்கின்றனர்.
புத்தர் அங்குலிமாலனிடம் ‘’காட்டுக்குப் போகும்போது யாருக்கும் தெரியாமல் கையில் என்ன எடுத்துச் செல்கிறாய்?’’ என்று கேட்கிறார்.
விடுவிடு என்று தனது குடிலுக்குள் சென்று வெளியே வரும்போது சிறுமுடிச்சு ஒன்றை எடுத்து வருகிறான். அந்த முடிச்சினை அவிழ்த்து புத்தரிடம் காட்டினான் அங்குலிமாலன். அவன் காட்டிய அந்த முடிச்சில் இருந்தது அத்தனையும் விதைகள்.
’’எனக்குப் புரிந்துவிட்டது அங்குலிமாலனே. இங்குள்ள எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொல் சகோதரனே..’’ என்று புத்தர் சொல்ல... இப்போது எல்லோரிடமும் அங்குலிமாலன் சொன்னான்:
‘‘காடு என்பது தானாகத் தோன்றுவது... காடு விளைவதில்லை. விளையாத காட்டுக்கு யாரும் விதை போட மாட்டார்கள்தான். ஆனால்... எனக்கு தினமும் அந்தக் காடு காய் தருகிறது. கனி தருகிறது, மலர் தருகிறது... அப்படி எனக்கு வாரி வாரித் தருகிற அந்தக் கானகத்துக்கு நான் ஏதேனும் கைமாறு செய்ய வேண்டாமா... சொல்லுங்கள். அதனால்தான், மனிதர்கள் பழங்களைத் தின்றுவிட்டுத் துப்புகின்ற விதைகள் எல்லாம் சேகரித்து வைத்துக்கொள்வேன். அதைத்தான் கானகத்தில் கொண்டுபோய் விதைக்கிறேன்...’’ என்றான் அங்குலிமாலன்.
அதைக் கேட்ட புத்தர் சொன்னார்:
’’இவர் இந்த விதைகளை எல்லாம் எடுத்துச்சென்று - காட்டில் விதைக்கிறார் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை... காட்டுக்குள் காட்டை விதைக்கிறார். இவரை வணங்குங்கள். இவர்தான் உங்களின் புத்தர்’’ என்று சொல்லிவிட்டு அங்குலிமாலனை வணங்கிக்கொண்டே அங்கிருந்து நகர்..ந்...தார்.
+++++++++++++++++++++++++++++++++++++++
புத்த மொழி:
'பிரார்த்தனைகளை விட
மிக உயர்ந்தது பொறுமைதான்!'
==================================================
அந்தக் கிராமத்தின் வழியே புத்தர் சென்றார். அவரை சிலர் கிண்டல் செய்தார்கள்.
சிரித்தார் புத்தர்.
’’கோபம் வரவில்லையா?’’ என்று அவர்கள் கேட்டனர்.
‘’இல்லை...’’ என்றார் புத்தர்.
"இங்கு வருவதற்கு முன்னால் வேறொரு கிராமத்தின் வழியாக வந்தேன். அவர்கள் இனிப்புகள் வழங்கினார்கள். எனக்கு வேண்டாம் என்று மறுத்தேன். அவர்கள் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள். அப்படித்தான் உங்கள் விமர்சனங்களையும் நான் மறுத்துவிட்டேன். நீங்களும் அதை உங்கள் வீட்டுக்குத் தானே கொண்டு செல்லவேண்டும்" என்றார் புத்தர்.
புத்தர் சிரித்தார்.
அவர்கள் சிரிக்கவில்லை!
----------
ஹெர்மன் ஹெஸ்ஸே
இவர் ஒரு பிரபலமான ஜெர்மானிய கதாசிரியர், கவிஞர், ஓவியர். இவருடைய கவிதைகள் இவருக்கு உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசினை வாங்கித் தந்துள்ளது.
1877-ல் ஜெர்மனியில் பிறந்த ஹெர்மன் ஹெஸ்ஸே.... 1911-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவுக்கு வந்த இவருக்கு... இங்குள்ள விஷயங்கள் எல்லாம் ஆன்மிகத்தின்பால் இவருக்கு மிகுந்த ஈடுபாடு வரக் காரணமாக அமைந்தன. 1914-ம் ஆண்டு இவர் எழுதிய ‘ரோஷால்டே’ என்ற நாவலும், 1919-ல் இவர் எழுதிய ‘டெமியன்’ நாவலும் இவருக்கு மிகுந்த பாராட்டுகளையும் புகழையும் உருவாக்கித் தந்தன. நார்சிஸ் அண்ட் கோல்முன்ட்’ என்கிற இவரது படைப்பு 1946-ம் ஆண்டில் ஹெர்மன் ஹெஸ்ஸேஇலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய மற்ற படைப்புகளை விட 1922-ம் ஆண்டில் ஜெர்மன் மொழியில் இவர் எழுதிய சின்னஞ்சிறு நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு இலக்கிய உலகம் இவரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாட ஆரம்பித்தது. தமிழில் இந்தப் படைப்பை கவிஞர் திரிலோக சீதாராம் மொழிபெயர்த்துள்ளார்.
பவுத்தம், தாவோயிஸம், கிறிஸ்தவம், இந்து மதம் போன்ற மதக் கருத்துகளின் பிரதிபலிப்பில் ’சித்தார்த்தன்’ எழுதப்பட்டி இருந்தாலும், பொதுவான மதக் கருத்துகளை எல்லாம் புறக்கணிக்கும் வகையில்தான் தனது கருத்துகளை இதில் பதிவு செய்துள்ளார் ஹெர்மன் ஹெஸ்ஸே.!
- இன்னும் நடப்போம்...
மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago