இன்று காலை நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை கலைஞரை எங்கே அடக்கம் செய்வார்கள் என்ற கேள்வியே பலரையும் குடையத் தொடங்கியது. திமுக தொண்டர்களைவிட பொதுமக்களில் சிலருக்கும் இதைப்பற்றிய முடிவை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருப்பதை பார்க்க முடிந்தது.
காலையில் சாலையில் வந்துகொண்டிருக்கும்போது, வழியில் சந்தித்த சைக்கிளில் கேன்சுமந்து டீ விற்றுக்கொண்டிருந்த பெரியவர் கேட்டார்... ''என்ன சார் முடிவு என்னாகும்.?'' என்று.
அப்புறம் ''மெரினா பீச்ல அவருக்கு இடம்இல்லைன்னு சொல்றாங்களாமே? ஏதோ சுற்றுச்சூழல் பிரச்சினையாமே'' என்று இழுத்தார்.
''அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்... ஆளும் எடப்பாடி அரசு அதிமுக அரசு.. கலைஞரோ திமுக... ரெண்டுபேரும் பரம வைரி அப்புறம் எப்படி சம்மதிப்பாங்க... ''
பெரிய தாளை நீட்டி முதலில் சில்லறை வாங்கிக்கொண்டு, டீயை வாங்கியபடியே இப்படி பேசினார் முழுக்கை சட்டை அணிந்தவர்...
அப்போதுதான் அங்கு வந்த டீஷர்ட் அணிந்திருந்த ஒரு இளைஞர் குறுக்கிட்டார், ''சார் அதெல்லாம் விடுங்க நான் கேட்கிறேன்... மெரினா பீச் என்ன இடுகாடா சார்... எல்லாரையும் அடக்கம் செய்ய'' என்று.
எனக்கு ஒருகணம் தூக்கிவாரிப்போட்டது. என்னது இடுகாடா? ஒருவகையில் அப்படியொரு தோற்றத்தை நினைத்தும் பார்க்க வேண்டியிருந்தது. அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா ஏற்கெனவே மூன்று பேர் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அடுத்து கலைஞர்.... அவர் கேட்பது நியாயம்தானோ என்றும் தோன்றியது.
''ஹாஹாஹா சரியான கேள்வி'' என்று ஓரமாய் நின்று காகித கப்பை காலில் போட்டு மிதித்தபடியே சிரித்தார். அவர் அப்படி சிரித்தபடி மிதித்தது காகித கப்தானா என்று நினைக்கவைத்தது அவரது சிரிப்பும் கேள்வியும்... சபாஷ் சரியான போட்டி என்று வில்லன் நடிகர் வீரப்பா சிரிப்பது போலவே இருந்தது....
சரி அந்த இடத்தில் இருந்தால் நமக்குத்தான் மண்டை காயும் முதலில் டீயை அருந்திவிட்டு இடத்தைக் காலிசெய்வோம்... என்று பெரியவரைப் பார்த்து ''அண்ணே எனக்கு ஒரு டீயைக் கொடுங்கண்ணே...'' என்று வாங்கி சுடச்சுட அருந்திக்கொண்டிருக்கும்போதே.
ஒருவர் ஸ்மார்ட்போனைப் பார்த்தபடியே ''பாருங்க சார்... தீர்ப்பு வந்துடிச்சி... ''மெரினாவில் கருணாநிதி அடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு....'' என்று செய்தி வாசித்தார். செய்திகள் வாசிப்பது வழிபோக்கர் என்று சொல்லவில்லையே தவிர மொத்த சாரம்சத்தையும் படிக்க ஆரம்பித்தார்.
''அப்பாடா ஒரு வழியா தீர்ப்பு சொல்லிட்டாங்களா... நல்லது... இதை மொதல்ல செஞ்சிருக்கலாமே எடப்பாடி அரசுக்கு கெட்ட பேர்தானே... என்று முழுக்கை சட்டைக்காரரின் அடுத்த டயலாக் தொடரும்போது நான் பத்தடி தள்ளி நடந்துபோய்க்கொண்டிருந்தேன்...
தீர்ப்பை ஒட்டி கொஞ்சம் நேரம் பேசினால்தான் அவர்களுக்கு மனசு ஆறும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
உண்மையில் மெரினா இடுகாடா என்ற கேள்வி ஜெயலலிதாவின் மரணத்தின்போது எழவில்லை. மாறாக கருணாநிதிக்கு அந்த கேள்வி எழுகிறது. கருணாநிதி அரசியலில் நம்பிக்கை அற்றவர்கள் பலரும் இந்தக் கேள்வி கேட்பதை பார்க்க முடிகிறது. அதுதான் தமிழகத்தின் பிரச்சினை. ஆனால் பொதுவாகவே மெரினா இடுகாடா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அவர்கள் ஒட்டுமொத்த திராவிட அரசியலுக்கு மாற்றுத் தேடிக்கொண்டிருப்பவர்கள் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
இனி வருங்காலத்தில் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று விரும்புபவர்கள் நடப்பதை இப்போதைக்கு வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும்.
ஏனெனில் தமிழகம் கடந்துவந்த ஒரு நூற்றாண்டுப்பாதை அகன்ற பரப்பளவைக் கொண்டது. அதில் நிலைநிறுத்தப்பட்டவர்களும், அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களும், அதற்காகவே போராடியவர்களும், போராடி வென்றவர்களுமாக வென்றவர்களினால் பயனடைந்த கோடானுகோடி மக்களுமாக களம்கண்ட பரப்பளவு அது.
ரஷ்யாவில் சோவியத் யூனியனை உருவாக்கிய மாபெரும் புரட்சித்தலைவர் லெனின் இறந்தபோது அவரது உடல் மாஸ்கோ நகரின் முக்கிய பகுதியான மக்கள் திரளக்கூடிய பகுதியில்தான் அடக்கம் செய்யப்படாமல் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் அவரை பெருமைப்படுத்தவே செஞ்சதுக்கம் என்ற பெயர் உருவானது.
லெனின் உருவாக்கிய அரசு, அதன் கொள்கைகள் பற்றியெல்லாம் நிறைய மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் ஜார் எனும் கொடுங்கோல் மன்னனிடமிருந்து ரஷ்ய மக்களை விடுவித்ததில், லெனின் செய்த புரட்சியை ரஷ்ய மக்கள் நன்றிகூறத்தானே செய்வார்கள்.
தமிழக அரசியலிலும் திராவிட இயக்கங்களின் அரசுகள் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிகோலின. இதன் சாதக பாதக அம்சங்கள் விரிவாக ஆராயப்படவேண்டிவை. சொல்லப்போனால் சில பாதக அம்சங்களும் இருக்கத்தான் செய்யும். அப்படியெல்லாம் இல்லை என்று சொல்வதற்கில்லை.
ஆனால், தமிழக அரசியலில் அன்றையை காங்கிரஸ் பேரியக்கத்தில் பஸ் முதலாளிகளும், மில் ஓனர்களுமே வட்டாரத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் என்றிருந்தார்கள். அங்கு சாமான்யனுக்கு வேலை இல்லாமல் இருந்தது. மக்களாட்சியின் உண்மையான பலன் காங்கிரஸ் ஆட்சியில் எட்டாக்கனியாகவே இருந்தது.
அதை உடைப்பதுபோலத்தான் திமுகவின் ஆட்சியதிகாரம் தமிழகத்தில் ஒரு பெரும்புயல் என புறப்பட்டுவந்தது.
குதிரைவண்டிக்காரர், டீக்கடை நடத்துபவர், மைக் செட் போடுபவர், வாடகை சைக்கிள் கடை நடத்துபவர் என குப்பன் சுப்பன் எல்லாம் எம்எல்ஏ எம்பி ஆனது திமுக ஆட்சியில்தான். இது ஒரு கீற்று உதாரணம்....
இந்தவகையிலான தாக்கம் தமிழகத்தின் உள்ளடங்கிய ஊர்களில் இருந்து எல்லாம் அரசுப் பணிகளில் ஐடி துறைகளில் என எளிய மக்கள் உயர்ந்துநிற்க, பல்வேறு வகைகளில் மாற்றத்தைக் கொண்டுவர ஏதுவாக அமைந்தது... திமுக ஆட்சி. புதிய சிந்தனைகள். சீர்த்திருத்த சட்ட மாற்றங்கள் எனற புது வசந்தத்தை அண்ணா தலைமையிலான ஆட்சியதிகாரம் அடியெடுத்து வைக்க அதனைப் பின்தொடர்ந்து உருவான கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் ஆட்சிகள் அதன் தொடர்ச்சியாக அமைந்தது என்றால் மிகையில்லை...
இவர்களுக்கு பிறகு வரலாறு மாறலாம். வேறு திசையை நோக்கி நகரலாம். நகராமல் ஸ்தம்பித்தும் போகலாம். நடந்த வரலாறுக்கு சாட்சி இன்றைய மெரினா.
அங்கு கலைஞருக்கு இடமில்லை என்றால் மெரினாவில் துயில் கொள்ள வேறு யாருக்கு தகுதி இருக்கிறது... என்று கேட்பவர்கள் கூட இருக்கிறார்கள். சரி அவர்களை விட்டுவிடலாம்.
தன் எழுத்திலும் பேச்சிலும் அரசியல் அதிகாரத்திலும் திராவிட நாட்டை நிர்மாணித்து தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை வெற்றிகண்டவர்.
திராவிட இயக்க கொள்கைகளின் அடிப்படையிலான மக்களாட்சியை நிர்மாணிக்க கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக நிறைவேற்றிக் காட்டியவர் கருணாநிதி. சட்டப்பேரவையில் அவர் அடியெடுத்து வைத்ததற்கான வைரவிழா நாயகனாகவும் பெருமை பெற்றவர்.
காலையில் சைக்கிள் டீக்கடையை சுற்றி பேசிய நண்பர்கள் யாரென்று தெரியாது. ஆனால் அவர்களை சந்தித்தால் நிச்சயம் சொல்வேன்,
''தமிழ்நாட்டின் பொதுவாழ்வின் மூத்த மகன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கியது பொருத்தமானது. மெரினா இடுகாடோ சுடுகாடோ அல்ல. அது தமிழக வரலாற்றின் மாபெரும் சாசனம் என்பதைத்தான் இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளது நண்பர்களே'' என்று.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago