திமுக தலைவர் கருணாநிதி வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு.
* கருணாநிதி தலைமையில் ஒரு கவியரங்கம். அதில் கவிக்கோ அப்துல் ரகுமான் உட்பட பிரபலமான ஏழெட்டு கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். கவியரங்கின் நிறைவு கவிதையை வாசித்த கருணாநிதி இப்படி முடித்தார்:
‘‘வெற்றி பல பெற்று
விருது பெற நான் வரும்போது
வெகுமானம் எதுவேண்டும்
எனக் கேட்டால்...
அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’
* கலைஞர் உடல் நலக்கோளாறால் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை பரிசோதித்த டாக்டர் “மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” என்று சொல்லியுள்ளார். உடனே கலைஞர் மூச்சை இழுத்துப் பிடித்துள்ளார்.
அடுத்து டாக்டர் “இப்போ மூச்சை விடுங்க” என்று சொல்லியுள்ளார்.
உடனே கலைஞர் சொன்னாராம் இப்படி: “மூச்சை விடக்கூடதுன்னுதானே டாக்டர் நான் உங்கள்ட்ட வந்திருக்கேன்!”
* வெளிநாட்டில் இருந்து வந்த நிருபர் ஒருவர் கருணாநிதியிட, ‘‘நீங்கள் என்ன படித்தீர்கள்?’’ என்றார்.
‘‘எம்.ஏ., பி.எஃப்.’’ என்றார்.
‘‘அப்படி ஒரு படிப்பா?’’
‘‘மார்ச் அட்டம்ப்ட்... பட்.. ஃபெயில்’’ என்றார் கருணாநிதி.
* கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கலைஞர் அவரிடம் “தேர்தலில் இந்த தடவை எங்கே நிற்கப் போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணதாசன் ” எந்தத் தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிடுகிறீர்கள். நான் இந்தத் தடவை தமிழ்நாட்டில் நிற்கப் போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்” என்று சொன்ன அடுத்த நொடியே கலைஞர் சிரித்தபடியே ” பாண்டிச்சேரியில் உன்னால நிற்க முடியாதேய்யா!” சொல்ல, அதன் அர்த்தம் புரிந்த கவியரசர் வெடுத்து சிரித்தாராம்.
* ஒரு தடவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முதல்வர் கருணாநிதியிடம் அப்துல் லத்தீப் ‘’ கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவது பற்றி ஆலோசிக்குமா?’’ என்று கேள்வி தொடுத்துள்ளார். அதற்கு முதல்வர் க ருணாநிதி சொன்ன பதில்: ’’ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது!’’
* கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘எங்கள் தங்கம்’. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடித்த இப்படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இப்படத்தில் இடம்பெற்ற ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என்ற பாடலை எழுதியவர் வாலி.பாடல் கம்போஸிங்கின்போது ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என்கிற பல்லவியின் முதல் வரியை எழுதிய வாலிக்கு அடுத்த வரி அவ்வளவு எளிதாக பிடிபடவில்லை, மண்டையைப் போட்டு பிய்த்துக்கொண்டு இருந்த அந்த சமயத்தில் அங்கே கருணாநிதி வந்துள்ளார்.
அப்போது வாலியைப் பார்த்து கருணாநிதி ‘’என்ன வாலியாரே... என்ன கலக்கமாக இருக்கிறீர்?’’ என்று கேட்டுள்ளார்..
‘’நான் அளவோடு ரசிப்பவன்னு பல்லவியோட முதல் வரியை எழுதிட்டேன். அடுத்த வரி சிக்க மாட்டேங்குது’’ என்று சொல்லியுள்ளார் வாலி. அதைக் கேட்டவுடனேயே கருணாநிதி சொன்னாராம்: ‘’நான் அளவின்றி கொடுப்பவன்’ன்னு போடுய்யா!’’ என்றாராம்.
* சட்டப்பேரவையில் சோனையா என்பவர் ’’தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டதற்காக, எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது? அதில் தண்டிக்கப்பட்டவர்கள் யார் யார் என்கிற விவரத்தை தெரிந்த்துகொள்ள விரும்புகிறேன்!’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கருணாநிதி பதில் சொன்னார்: ’’தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டதற்காக, பல பேர்மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களை எல்லாம் விளக்கமாகக் கூறி, சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே... அந்த ஆபாசப் படங்களை வாங்கிப் பார்க்க வேண்டும், ஆபாசப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்ட விரும்பவில்லை!’’ என்றார்
* ஒரு ஹாக்கிப் போட்டி. போட்டியைக் கண்டுகளித்து, அப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு கருணாநிதி பரிசளிக்க வந்திருந்தார். அவ்விளையாட்டில் இரண்டு அணிகளுமே சமமான கோல் போட்டிருந்தன, எனவே, டாஸ் போட்டுப் பார்க்கப்பட்டது. அவ்வாறு டாஸ் போட்டுப் பார்த்தபோது தலை கேட்ட அணி தோற்றுப்போனது. பூ கேட்ட அணி வெற்றிபெற்றது.
பரிசளிக்க வந்த கருணாநிதி பேசினார் இப்படி:
“இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. தலை கேட்டவர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள். ஏனெனில் - ’தலை’ கேட்பது வன்முறை அல்லவா?’’
* ஒரு தடவை சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. துரைசாமி: ’’ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?’’ என்கிற கேள்வியை முன் வைத்தார். அதற்கு கருணாநிதி சொன்ன பதில் இது: ‘’அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!
* எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் ஒரு உறுப்பினர், ‘‘இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவந்தான் காப்பாற்ற முடியும்’’ என்றார்.
‘‘தமிழகத்தை ஏற்கெனவே ஆண்டவன் நான். உறுப்பினர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்’’ என்றார் கருணாநிதி.
*’’திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?’’ என்று கருணாநிதியிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி ஒன்றை முன் வைத்தார்.
அதற்கு அவர் சொன்ன பதில்:
24.03.1960 அன்று சட்டப் பேரவையில் ’அஞ்சல் தலைகளுக்கு என்று ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்துக்கு உண்டா?’ என்று நான் கேட்டேன். என்னுடைய கேள்விக்கு - பெரியவர் பக்தவத்சலனார், ’சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப் பற்றி யோசிப்பார்கள்’ என்று பதில் கூறினார். அந்த பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவர் படம் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்களை வைக்கத் தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அய்யன் வள்ளுவர் சிலை வைக்கும் அளவு வளர்ந்தது!’’ என்றார்
* திருவாரூரில் கருணாநிதி படித்த பள்ளிக்கூடத்தில் அவரோடு படித்தவர்கள் மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எல்லாம் இணைந்து ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்துகொண்ட கருணாநிதிக்கு விழா குழுவினர் ஒரு சின்னஞ் சிறு தஞ்சாவூர் தட்டை பரிசாக அளித்தார்கள்.
அப்போது தஞ்சாவூரில் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அதில் திமுக வெற்றிவாய்ப்பை இழந்திருந்தது. ஏற்புரையில் பேசும்போது கருணாநிதி சொன்னார்: இவ்வளவு சிறிய அளவு தஞ்சாவூர் தட்டை எங்கிருந்து வாங்கினார்கள் என்று தெரியவில்லை. தஞ்சாவூர் இடைத் தேர்தலில் நமது கழக வெற்றிவாய்ப்பை ஒரு தட்டு தட்டிப் போனதற்காக இந்தத் தட்டை பரிசளித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இருந்தாலும் இது சின்னத் தட்டுதான்!’’ என்றபோது அரங்கம் அதிர்ந்தது.
* கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு மூன்று பேரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் ஏறி உட்கார்ந்தபோது வைரமுத்துவின் ஜிப்பா மேல் டி.ஆர்.பாலு உட்கார்ந்துவிட்டார். இது இருவருக்குமே தெரியாது. இறங்கும்போது வைரமுத்துவின் ஜிப்பா சிறிது கிழிந்துவிட்டதாம். அதை பார்த்த கருணாநிதி அடித்த கமெண்ட் இது: ‘’மத்திய மந்திரி டி.ஆர்.பாலு என்னத்த கிழிச்சார்னு இனிமே யாரும் கேள்வி கேட்க முடியாது!’’
* ஒரு தமிழ் விழாவில் கவியரங்கம் நடைபெற்றது. கருணாநிதி தலைமை கவிஞராக இருந்து அந்தக் கவியரங்கத்தை வழிநடத்தினார். அந்தக் கவியரங்கத்தில் இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து கவிதை பாடிய கவிஞர் ஒருவர், கருணாநிதியைப் பார்த்து கலைஞர் அவர்களே எனக்கொரு துப்பாக்கித் தாருங்கள்’’ என்று ஆவேசத்துடன் முடித்தார். அப்போது கருணாநிதிவசம்தான் காவல்துறை இருந்தது. உடனே அவர் சொன்னார்: ’’கவிஞரே வேறு ஏதாவது பாக்கி இருந்தால் கேளுங்கள். துப்பாக்கி மட்டும் என்னால் தர இயலாது!’’
* சட்ட சபையில் மீன் வளத்துறையை பற்றிய ஒரு விவாதத்தில் அந்தத் துறையைச் சேர்ந்த அமைச்சர் எழுந்து பேச ஆரம்பித்தார். மீன் வளத் துறை அமைச்ச எங்கே நீண்ட கருணாநிதியிடம் இருந்து ஒரு துண்டு சீட்டு அந்த அமைச்சருக்கு வந்தது. அதில் கருணாநிதி எழுதியிருந்தார் இப்படி: ’அயிரை மீன் அளவுக்குப் பேசவும்!’
* ஒருமுறை கலைஞருக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர் “ஆளூயர மாலை நீங்கள் அணிவித்திருக்கிறீர்கள் ” என்று இரண்டுமுறை சொன்னார்.
“ஆள் உயர சைஸில் நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்றும், ஆள் உயர்வதற்காக (வாழ்க்கையில்) நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்றும் இருபொருள்படும்படி அவர் பேசியதை சுற்றிலும் இருந்தவர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.
* சட்டமன்றத்தில் ஒரு முறை டி.என். அனந்தநாயகி “என்னை சிஐடி. வைத்து அரசு வேவு பார்க்கிறது. சிஐடி போலீஸார் என்னைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி “உங்களுக்குத் தெரியும்படி உங்களைக் கண்காணிப்பவர்கள் எப்படி சிஐடி போலீஸாக இருக்க முடியும்?” என்று எதிர்கேள்வி கேட்டு அவரது வாயை அடைத்தார்.
* கருணாநிதி எழுதிய வசனத் தெறிப்புகளில் இதோ சில:
“எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம்” - இது ‘பராசக்தி’.
“மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது” - இது ‘மருதநாட்டு இளவரசி’.
“வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன!” - இது ‘மனோகரா’.
“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” - இது ‘பூம்புகார்’.
“அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசன்கூட கம்பனிடம் ஒன்றிரண்டு நாவை கடன் வாங்க வேண்டும்” - இது ‘ புதுமைப்பித்தன்’
* நடிகர் ராதா ரவி, தன் தந்தை எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக் கண்ணீர் நாடகத்தை நடத்த முன் வந்து , கருணாநிதியை அதற்கு தலைமைதாங்க அழைத்திருந்தார். கருணாநிதி ராதாரவி நடித்த அந்த நாடகத்தை முழுமையாக இருந்து பார்த்துவிட்டு, தனது பாராட்டுரையில் இப்படி பேசினார்:
‘‘நாடகத்தில் ஒப்பனையைப் பார்த்தேன். அதில் உங்கப்பனையே பார்த்தேன்’’ என்றார்>
* ‘சேரன் செங்குட்டுவன்’ ஓரங்க நாடகத்தின் ஒரு வசனம் எழுதியிருந்தார் கருணாநிதி. அந்த வசனம் திராவிட இயக்கத் தலைவர்களுக்கெல்லாம் கிரீடம் சூட்டும் வகையில் அமைந்தது.. அண்ணா, நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, பி.எஸ். இளங்கோ, கண்ணதாசன், என்.எஸ். கிருஷ்ணன், இராம.அரங்கண்ணல் போன்ற அத்தனை தலைவர்களையும் ஒரே வசனத்தில் உள்ளடக்கியிருந்தார் கலைஞர்.
அந்த வசனம்: “சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள். ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால் கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!”
* முதன்முதலாக சட்டமன்றத்தில் கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததுஇப்படி: வெரி குட் ஸ்பீச் .
கருணாநிதி முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்கிற தலைப்பில் நங்கவரம் விவசாயிகள் பிரச்னையை பற்றிப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம்தான் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப் பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ்.
* “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக் கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்றார் கருணாநிதி.
* சட்டமன்றத்தில் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே. இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அப்படிக் கேட்டுவிட்டு அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”
* தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன்? நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். அதற்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி உடனே எழுந்து ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்றார்.
* எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் இடித்தார். அந்தப் புகைப் படத்தை தன்னுடைய முரசொலியில் வெளியிட்டு, அதன் கீழே
‘‘பரவாயில்லை தம்பி...
என் முதுகிலே குத்தவில்லை..
நெஞ்சிலேதான் குத்துகிறாய்’’ எனப் பிரசுரித்திருந்தார்.
தொகுப்பு: மானா பாஸ்கரன்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 hours ago
வலைஞர் பக்கம்
11 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago