டி.இ.ஓ. விசிட்... பள்ளிப் பருவ நினைவலைக் குறிப்புகள்!

By மல்லிகா

என் பேர் சுந்தர். எனக்கு பதினோரு வயசு. நான் செகண்ட் ஃபார்ம் (ஏழாம் க்ளாஸ்) படிச்சுண்டு இருக்கேன். இன்னிக்கு எங்க ஸ்கூல் லீவ் விட்டு இருக்கா. நேத்திக்கு கார்த்தால அசெம்பிளில ஹெட் மாஸ்டர் (‘லைட் ஹவுஸ்’), “நம்ம ஸ்கூல் டி. இ. ஓ. (DEO – District Educational Officer) கிட்ட நல்ல பேர் வாங்கியிருக்கு. அதுக்காக ஒரு நாள் லீவ்”னு சொன்னார்.

எஸ்.எஸ்.எல்.சி. படிக்கற பசங்க எல்லாம் “லைட் ஹவுஸ் ராமமூர்த்தி, டி.இ. ஓ. கண்டத்தைத் தாண்டிட்டார், ஃபெயில் ஆகியிருந்தார்னா கரஸ்பான்டன்ட் லைட் ஹவுஸோட சீட்டை கிழிச்சிருப்பார். தப்பிச்ச சந்தோஷத்துல லீவ் விட்டிருக்கார்”னு பேசிண்டு இருந்தா. (அவர் பாடம் எடுக்கற காலத்தில மொத்த க்ளாஸையும் வைய்யரச்சே இந்தக் கோடிலேர்ந்து அந்தக்கோடி வரைக்கும் தலையை மாத்தி மாத்தி திருப்பித் திருப்பி, “முண்டங்கள், முண்டங்கள், மக்கு முண்டங்களுன்னு” சொல்லுவாராம். லைட் ஹவுஸ் விளக்கு மாதிரி இருக்குமாம் அவர் தலையைத் திருப்பறது. உங்க ஊர்ல எப்படியோ தெரியாது, நாங்க எல்லா வாத்தியார்களுக்கும் பட்டப்பெயர் வைப்போம்.)

உங்களுக்கு எங்க ஊர் பள்ளிக் கூடங்களை பத்தி என்ன தெரியும்னு எனக்கு தெரியாது. அதனால சில விஷயங்களை இங்க சொல்லறேன்.

டி.இ.ஓ.: ஸ்டேட் கவர்மென்டோட எஜுகேஷன் டிபார்ட்மென்ட்ல ஒரு நடுத்தர ஊழியர். அவரோட வேலை என்னவென்றால் அவருடைய வட்டத்தில் இருக்கும் ஹைஸ்கூல்களுக்கு வருஷத்தில் ஒரு நாள் விஜயம் செய்து ஹெட் மாஸ்டர்களையும் கரஸ்பான்டன்ட்களையும் “காப்ரா” செய்வது. எங்க உறவுக்காரர் ஒருத்தர் இன்னொரு ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர். அவர் சொல்லுவார் “மாமியாரே வேண்டாம். தொட்டதுக்கும் தொண்ணூருக்கும் குத்தம் கண்டுபிடிக்கறதே இவாளுக்குத் தொழில்”.

ஹை ஸ்கூல்: எங்க ஊர்ல மூணு விதமான ஹை ஸ்கூல்கள். கார்ப்பரேஷன் ஸ்கூல், “தயிர் சாதம்” ஸ்கூல், “ஆப்பக்கார” ஸ்கூல். பர்ஸ்ட் ஃபார்ம்லேர்ந்து சிக்ஸ்த் ஃபார்ம் வரைக்கும் இருக்கறது. நாங்க Form I, Form II, III, IV, V, VI னு “ரோமன் நம்பர்ல” சொல்லுவோம். ஏன் Form 1, Form 2, 3, 4, 5, 6-னு எழுதலன்னு எனக்கு தெரியல. அஞ்சு வருஷம் எலிமென்டரி ஸ்கூல்ல படிச்சுட்டு ஹை ஸ்கூலுக்கு வருவோம். சில ஹை ஸ்கூல்கள் அவாளே ஒரு எலிமென்டரி ஸ்கூல் வெச்சுண்டு இருப்பா, அந்த பசங்களுக்கு மார்க் கொஞ்சம் கம்மியாயிருந்தாலும் அட்மிஷன் தருவா. அவாளோட எலிமென்டரி ஸ்கூலாச்சே, விட்டு குடுப்பாளா? அந்த பசங்களோட அண்ணாக்கள் ஹை ஸ்கூல்ல ஏற்கனவே இருக்கறதாலே வாத்தியார்களோட பட்டப்பெயர் எல்லாம் அத்துபடி. ஒரு கோஷ்டியாவே இருப்பா. புதுப்பசங்களை ரொம்ப சேத்துக்க மாட்டா. அவா க்ரூப் லீடர்தான் எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் க்ளாஸ் லீடரா இருப்பான்.

கார்ப்பரேஷன் ஸ்கூல்: பண வசதி ரொம்ப குறைவா இருக்கறவாளாத்து பசங்க இங்க இலவசமா படிப்பா. டீச்சர்களும் ஏழையா இருப்பா. ஏன்னா பசங்களுக்கு டீச்சர்கள் கிட்ட ட்யூஷன் போறதுக்கு பணம் இருக்காது. சான்ஸ்க்ரிட் சொல்லி தரமாட்டா. ஏன்னு தெரியல, நிறைய சமயம் பி.டி. வாத்தியார் பேர் வேலுன்னு இருக்கும். இந்த வேலு சார் கையில எப்பவும் ஒரு பிரம்பு வெச்சுண்டு இருப்பார். அப்பப்போ பசங்களை வச்சு சாத்திண்டு இருப்பார். கார்ப்பரேஷன் ஸ்கூல்ல “ஸ்கூல் டே” அன்னிக்கு முனிசிபாலிட்டி கவுன்சிலரை தலைமைக்குக் கூப்பிடுவா.

“தயிர் சாதம்” ஸ்கூல் : கீழ் நடுத்தர, நடுத்தர, சற்று உயர்தர குடும்பங்கள்ளேர்ந்து ஸ்டூடன்ஸ் வருவா. ஒரு மாசத்துல எவ்வளவு சீக்கரம் டிபன் பாக்ஸ்ல கறிகாய் மறைந்து மோர் மிளகாயோ, நார்த்தங்கா ஊறுகாயோ இருக்கிறதோ அதை வெச்சுண்டு யார் எந்த க்ரூப்புனு சொல்லிடலாம். பசங்க படிப்புல குறியா இருப்பா. கிரிக்கெட்ல ஸ்பின் பவுலர்ஸா இருப்பா, ஃபாஸ்ட் பவுலிங் வராது. புக்ஸ், நோட் புக்ஸ் எல்லாத்துக்கும் பழைய பால் கணக்கு எழுதின ஷீட் காலண்டர், ஹிந்து பேப்பர், தினமணி பேப்பரை வெச்சு அட்டை போட்டிருப்பா. எல்லா புக்ஸ்லையும் சந்தனப் பொட்டு வெச்சு அது நடுவுல குங்குமப் பொட்டு வெச்சிருக்கும். ஒரு ஸ்டூடன்ட் எந்த சப்ஜெக்டுல வீக்குனு டக்குனு சொல்ல முடியும். ஏன்னா அந்த புஸ்தகத்தை சரஸ்வதி பூஜையின் போது சரஸ்வதி கடாக்ஷம் நிறையா வேணுங்கிறதுக்காக மேலே வெச்சுருப்பா. அதுனால அட்டைல அருகம் புல்லும் அக்‌ஷதையும் ஒட்டிண்டு இருக்கும்.

சில பசங்க புக்குக்கு நடுவில மயில் தோகை வெச்சு இரண்டு அரிசியும் வெச்சுருப்பா. மயில் தோகை அந்த அரிசியை சாப்பிட்டு வளருமாம். வளர்ந்தா அதிர்ஷ்டமாம். புக்குல சில பக்கங்கள்ல KPV-ன்னு இருக்கும். KPV- ன்னா கட்டாயம் பரிட்ஷைக்கு வரும்னு அர்த்தம். “அயிகிரி நந்தினி”, “ஆதித்ய ஹ்ருதயம்” ஸ்லோகங்கள் தெரியும். டியூஷன் நிறையா கெடச்சுதனால கணக்கு வாத்தியார்களும், சயின்ஸ் வாத்தியார்களும் கொஞ்சம் சவுக்கியமா இருப்பா. பல சமயம் பி. டி. வாத்தியார் பேர் ராஜாமணின்னு இருக்கும். அவர் விபூதி, குங்குமம் இட்டுண்டு இருப்பார். இந்த மாதிரி ஸ்கூல்ல “ஸ்கூல் டே” அன்னிக்கு ஒரு கம்பெனியோட அதிகாரியை தலைமைக்கு கூப்பிடுவா.

“ஆப்பக்கார” ஸ்கூல்: ஸ்கூல் பேர் ஸ்டைலா இருக்கும். நிறையா சம்பளம் கேப்பா, அதுக்கு மேல வருஷா வருஷம் டொனேஷன் வேற பிடுங்குவா. இங்க படிச்சா இங்கிலீஷ் நன்னா பேச வரும்னு சொல்லரா. அதை தவிர ஃபாரின் பேர் வச்ச காலேஜ்ல ஈஸியா இடம் கிடைக்கும்னு சொல்லரா. என்னோட ஸ்கவுட் லீடர் போன வருஷம் ஸ்கவுட் கேம்ப்-க்கு போனானாம். ராத்திரி கேம்ப் ஃபயர்னு இருக்குமாம். ராத்திரி சாப்பிட்டவுடன் தக தகன்னு இருக்கற நெருப்பை சுத்தி ஒக்கார்ந்துண்டு மிமிக்ரி, பாட்டு எல்லாம் உண்டாம்.

அப்போ தயிர் சாதம் ஸ்கூல் ஸ்கவுட்ஸ் பசங்க “டிங்கிரி டிங்காலே மீனாஷி டிங்கிரி டிங்காலேன்னு” பாடி முடிச்சதும் இந்த ஆப்பக்கார ஸ்கூல் ஸ்கவுட்ஸ் “ஜான் ப்ரவுன்ஸ் பேபி ஹேட் அ கோல்ட் அப்பான் ஹெர் செஸ்ட்; அண்ட் ஹி ரப்ட் இட் வித் கேம்ஃபர் ஆயில்னு” பாடினாளாம். ஒரு மண்ணும் புரியலை. இந்த ஸ்கூல் ஹெட் மாஸ்டர் பஞ்சாபி இங்கிலீஷ்ல பேசுவார். இந்த ஸ்கூல்கள்ள கிரிக்கெட் மேட், நெட் எல்லாம் நன்னா வைச்சுண்டு இருப்பா. சமயத்துல டென்னிஸ் கோர்ட் கூட இருக்கும். பி. டி. வாத்தியார் பேர் அல்ஃபோன்ஸ்னு இருக்கும். கூடவே ஜான்-னு ஒரு மார்க்கர் இருப்பான். மார்க்கருக்கு எல்லா ஸ்போர்ட்ஸையும் பத்தி நன்னா தெரியும். அவன்தான் கிரிக்கெட் பிட்சை ரோலர் போட்டு சமன் படுத்துவான். அவனுக்கு தான் ஸ்போர்ட்ஸ் டே போது 400 மீட்டர் ட்ராக் வளைச்சு போடத் தெரியும். ஸ்கூல் டே அன்னிக்கு ஒரு கலெக்டரையோ, போலீஸ் ஐ.ஜி.யோ தலைமைக்கு கூப்பிடுவா.

கரஸ்பான்டன்ட் : இவரோட தாத்தா ஒரு ஜமீன்தாரா இருந்திருப்பார். அவர் ஸ்கூலை ஆரம்பிச்சு வெச்சுருப்பார். கரஸ்பான்டன்ட் ஸ்கூலின் வெளி விவகாரங்களை கவனிச்சுப்பார். இவர் நினைச்சா ஹெட் மாஸ்டருக்கு சீட்டு கிழிக்க முடியும். மெதுவா நடப்பார். அப்பப்போ இவர் காலமாயிட்டார்னு வதந்தி வரும், ஒரு நாள் லீவ் கிடைக்கும்னு பசங்க கிளப்பி விடுவாங்க. இவரோட சில பெண் வயித்து பேரன்கள் இங்கே ஸ்கூல்ல படிப்பாங்க; அந்த பசங்கள் எல்லாம் இளவரசர்கள் மாதிரி பள்ளிக்கூடத்தில பல சலுகைகளொட இருப்பா. ஆனா இவரோட பிள்ளை வயித்து பேரன்களை கரஸ்பான்டன்டோட மாட்டுப்பெண் ஆப்பக்கார ஸ்கூலுக்குதான் அனுப்புவான்னு டீச்சர்கள் பேசி நான் கேட்டிருக்கேன்.

ஹெட் மாஸ்டர்: இவர்தான் ஸ்கூலின் தலைவர். பசங்களுக்கு இவரை பார்த்தாலே பயம். எவ்வளவுக்கு எவ்வளவு பசங்களுக்கு இவரை பாத்தா பயமோ அவ்வளவுக்கு அவ்வளவு அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும் இவரை பிடிக்கும். ஏன்னு தெரியலை, கார்ப்பரேஷன் ஸ்கூல் ஹெட் மாஸ்டர்கள் பேர் முருகபூபதி, தயிர் சாதம் ஸ்கூல்ல தியாகராஜன் (பேருக்கு முன்னாடி “குண்டு” “கிளிமூக்கு” ன்னு ஏதாவது பட்டப்பேர் கட்டாயம் உண்டு) ஆப்பக்கார ஸ்கூல்ல தாமஸ் (பட்டப்பேர் ஹிந்தி சினிமாலேந்து ஏதாவது வரும்). ஸ்டாஃப் ரூம்ல ஹெட் மாஸ்டர்னா பயம்.

ஹெட் மாஸ்டருக்கு ஒரு ப்யூன் இருப்பான். அவன் அவரின் அந்தரங்கம். அவரின் நிழல். அவரின் ஆலோசகன். அவரின் ஒற்றன். அவரின் தூதுவன். அவரின் ஸ்வீகாரம். அவரின் மனச்சாட்சி. ஹெட் மாஸ்டருக்கு யாரைப் பார்த்தாலும் பயம் இல்லை... டி.இ.ஓ.-வைத் தவிர!

எஸ்.பி.எல் (ஸ்கூல் பீப்பில் லீடர்) : இவன்தான் ஸ்டூடண்ட்ஸுக்குத் தலைவன். இவன் ஃபோர்த் ஃபார்ம் படிக்கச்சேயே வருங்கால எஸ்.பி. எல்-னு ஸ்டாப் ரூம்ல தீர்மானம் பண்ணியிருப்பா. டீச்சர்களுக்கு பெட், ஹெட் மாஸ்டருக்கு பெட், கரஸ்பான்டென்டுக்கு பெட். இதுக்கு ஒரு எலக்ஷன் வைப்பா. எதிர்த்து ஸ்டூடன்ட்ஸுக்கு பிடிச்ச ஒத்தன் நிப்பான். எந்த வருஷத்திலயும் ஸ்டூடன்ட்ஸுக்கு பிடிச்சவன் ஜெயித்ததா தெரியலை. உங்க ஊர்ல எப்படியோ தெரியாது எங்க ஊர்ல பெரியவா பார்த்து தீர்மானம் செஞ்ச பெண்ணைதான் இன்னிவரைக்கும் கல்யாணம் பண்ணிக்கறோம். அது மாதிரி டீச்சர்ஸுக்கு பிடிச்சவன்தான் எஸ்.பி.எல்.

இவனுக்கு பல பொறுப்புகள் உண்டு. ஆனா சில காரியங்களைச் சந்தோஷமா செய்வான். ஸ்கூல் டேயின் போது தலைமைதாங்க வரும் பிரமுகர்களை வரவேற்கிறது, கேர்ள்ஸ் ஸ்கூல் டிபேட் டீமை வரவேற்கிறது, டி.இ. ஓ. வை வரவேற்கிறது மாதிரி வேலைகள் எல்லாம் அவனுக்கு பிடித்த வேலைகள். தினம் ஸ்கூல் அசெம்பிளியில் அதிகாரம் பண்ணறது ரொம்ப பிடித்த வேலை.

ஸ்கூல் பெல் அடிச்சதும் ஸ்டூடென்ட்ஸ் எல்லாரும் மணல் திடல்ல க்ளாஸ் க்ளாஸா லைன்ல நிற்போம். அவன் “ஸ்கூல், அட்டென்ஷன், ஸ்டேன்ட் அட் ஈஸ்னு” நாலு, அஞ்சு தரம் கத்துவான். ஃபிப்த் ஃபார்ம் ஸ்டூடன்ட்ஸ் இஷ்டப்பட்டாதான் பண்ணுவா. அவன் அவாளை பார்த்து “ஃபிப்த் ஃபார்ம் ஸ்டூடன்ட்ஸ், அட்டென்ஷன்னு” சத்தம் போட்டு தன் பவரைக் காட்டுவான். ப்ரேயருக்கு அப்பறம் ஹெட் மாஸ்டர் பேசுவார். கடைசியில் “ஸ்கூல், டிஸ்மிஸ்டுனு” கத்துவான்.

பல இஷ்டமில்லாத காரியங்களை ஏமாந்த அஸிஸ்டன்ட் எஸ்.பி.எல். தலையில கட்டிடுவான். ஸ்போர்ட்ஸ் டே வேலையெல்லாம் வெய்யில்ல பண்ணனும். வேர்த்து விறுவிறுத்து போகும். அதையெல்லாம் ஸ்போர்ட்ஸ் செகரட்ரியை பண்ணச் சொல்லிடுவான்.

கிளாஸ் டீச்சர்: எல்லா கிளாஸுக்கும் ஒரு முக்கியப்பட்ட டீச்சர் இருப்பா. பொதுவா சொன்னா அவா இங்கிலீஷ் எடுப்பா. அந்தந்த கிளாஸுக்கும் அவாளோட கிளாஸ் டீச்சர் மேல உசுரா இருப்பா. எனக்கே தெரியும், எல்.ஐ.சி.ல பெரிய வேலைல இருக்கற கும்பகோணம் ஜகன்நாதன் மாமா இன்னி வரைக்கும் “எனக்கு எஸ்.எஸ்.எல்.சி-க்கு சி.வி. ஆர். சார் தான் கிளாஸ் டீச்சர்னு” சொல்லிண்டு இருப்பார். கிளாஸ் டீச்சர் ஸ்டாஃப் ரூம்லேயிருந்து கிளம்பச்சே முன்னாடியும் பின்னாடியும் பரிவாரமா பசங்க வருவா. சில பேர் காக்காய் பிடிக்க போவா, ஆனா பல பேர் டீச்சர் மேல மதிப்பினால போவா.

கிளாஸ் மானிட்டர்: ஒவ்வொரு கிளாஸுக்கும் அந்த கிளாஸ் ஸ்டூடன்ட்ஸ் ஒரு லீடரை எலக்‌ஷன் வெச்சு தேர்ந்தெடுப்போம். ஆனா இந்த எலக்‌ஷனுக்கு முன்னாடியே கிளாஸ் டீச்சர் தனக்கு யாரை பிடிக்கும்னு கொடி காட்டிடுவா. எப்பவுமே அவன் கிளாஸ்ல முதல் மூணு ரேங்குக்குள்ள வருவான். அவனை எதுத்து அவனோட எனிமி ஒத்தன் எலக்ஷனுக்கு நிப்பான், ஆனா தோத்துடுவான். கிளாஸ் மானிட்டர் வருஷா வருஷம் குத்தகை எடுத்த மாதிரி அவனே கிளாஸ் மானிட்டரா இருப்பான். தான் எதிர்கால எஸ்.பி.எல். என்ற கனவில் ஜம்பமா இருப்பான்.

அவனுடைய பொறுப்புகள் (உதாரணத்துக்கு) – தினம் பிளாக் போர்ட்ல “ஆன் ரோல்ஸ்: 45, அட்டென்டன்ஸ்: 43” என்று எழுதுவது; பிரேயர் முடிஞ்சு எஸ்.பி.எல். “ஸ்கூல் டிஸ்மிஸ்டு” என்று கத்தினாவுட்டு எங்க கிளாஸ் இருந்த லைனுக்கு முன்னால போய் கிளாஸுக்கு எங்களை வரிசையாக அழைச்சுண்டு போவான். ஒரு பீரியட் கிளாஸ் முடிஞ்சப்பரம் அந்த டீச்சர் போய்விட்டு அடுத்த பீரியட் டீச்சர் வர வரைக்கும் கிளாஸைக் கொயட்டா இருக்க வெச்சுக்கணும். அவனை எலக்ஷன்ல எதுத்து நின்ன பையனோட ஃபிரண்ட் யாராவது கொஞ்சமா கொயட்டா பேசினாக்கூட போர்டுல அந்த பையனோட பேரை எழுதிடுவான். அடுத்த பீரியட் டீச்சர் வந்ததும் போர்டுல யார் பேர் இருக்கோ அவாளையெல்லாம் வைய்வா. இவனுக்கு அல்ப சந்தோஷம். எதுத்து நின்னவன் பேரை அவன் பலக்க பேசினாக்கூட எழுத மாட்டான், ஏன்னா அவன் மானிட்டரோட சைக்கிள்ல காத்தை பிடுங்கி விட்டுடுவான்

ஸ்கவுட் மாஸ்டர்: உங்க ஊர்ல பாய்ஸ் ஸ்கவுட்ஸ் இருக்கோன்னு தெரியாது. இங்க ரொம்ப ஸ்கூல்ல இருக்கு. நானும் இருக்கேன். முதல் ஸ்கவுட் கிளாஸ்லயே யாரோ “பேடன் பவல்” என்கிற வெள்ளக்கார ஆள் ஆரம்பிச்சார்னு சொல்லித்தந்தா. அந்த பேரை பத்து தரம் இம்போசிஷன் மாதிரி எழுதச்சொன்னா. ஸ்கவுட்ல சேர்ந்ததுமே யூனிஃபார்ம் தைச்சுக்கணும். யூனிஃபார்ம் போட்டுண்டு போனா அக்கம் பக்கத்துல மாமிகள் எல்லாம் பேசிப்பா. “வேதா மாமியாத்து சுந்தர் ஸ்கவுட்ல சேர்ந்துந்துட்டானாமே! நன்னா வந்துடுவான் மாமி”. ஸ்லோக கிளாஸ்ல சேர்ந்தா கிடைக்கறதைவிட மதிப்பு ஜாஸ்தி.

ஸ்கவுட்ல “B” சர்டிபிகேட் வாங்கினா நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கும்னு சொல்லரா. ஏன்னு புரியலை, எனக்கு தெரிஞ்சு யாருமே “A” சர்டிபிகேட் வாங்கினது இல்லை. ஸ்கூல் வாத்தியார் ஒருத்தரே ஸ்கவுட் மாஸ்டரா இருப்பார். அதுக்காக அவருக்கு அலவன்ஸ் தருவாளாம். எங்க சோஷியல் ஸ்டடீஸ் வாத்தியார் அந்த அலவன்ஸுக்காக அந்த வேலையை எடுத்துண்டார். ஏன்னா யாரும் சோஷியல் ஸ்டடீஸுக்கு ட்யூஷன் வெச்சுக்க மாட்டா. சாதாரணமா பஞ்ச கச்சம் கட்டிண்டு வருவார். ஆனா ஸ்கவுட் மாஸ்டர் ஸ்வரூபத்துல வர்ரச்சே காக்கி அரை ட்ராயர் போட்டுண்டு கூர்க்கா மாதிரி வருவார். கொஞ்சம் சிரிப்பு வரும். (டீச்சரைப் பாத்து சிரிக்கக் கூடாது. கன்னத்துல போட்டுண்டுட்டேன். நீங்க சிரிச்சேள்னா நீங்களும் கன்னத்துல போட்டுண்டுடுங்கோ)

ட்ரூப் லீடர்: இவன்தான் எங்க ஸ்கூல் ஸ்கவுட்டுக்கு லீடர். எங்க ட்ரூப் பேரு “பாரத்” ட்ரூப். எப்பவுமே லீடர்கள் ஃபிப்த் ஃபார்ம் படிச்சுண்டு இருப்பான்கள். சிக்ஸ்த் ஃபார்ம் பசங்க ஸ்கவுட்ஸ்ல இருக்க மாட்டாங்க. அவாள்ளாம் எந்த காலேஜுக்கு அப்ளை பண்ணலாம், யாருக்கு எந்த காலேஜுல இன்ஃபுளூயன்ஸ் இருக்கு, போன வாரம் அவா அப்பாவோட பழைய செவ் ஓ க்ளாக் ப்ளேடு வெச்சு முதல் தரம் ஷேவ் பண்ணின்டது பத்தி, எப்படி தன்னோட செகண்ட் ஃபார்ம் படிக்கற தங்கைய பாக்கணும்கிற சாக்கை சொல்லி கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் வாட்ச்மேனை தாண்டி உள்ளே போனதை பத்தி எல்லாம்தான் பேசிண்டு இருப்பா. சில பேர் அவா உறவுக்காரர் ஃபாரின்லேர்ந்து அனுப்பிச்ச கூலிங் கிளாஸ் போட்டுண்டு, தப்பு தப்பா இங்கிலீஷ்ல பேசிண்டு, சைக்கிளை ஸ்டைலா சாய்த்து பிடிச்சுண்டு கேர்ள்ஸ் ஹை ஸ்கூல் மெயின் கேட்டுக்கு முன்னாடி நின்னுண்டு இருப்பா.

சான்ஸ்கிரிட் வாத்தியார்: கார்ப்பரேஷன் ஸ்கூல்ல சான்ஸ்கிரிட் சொல்லி தரமாட்டா. தயிர் சாதம் ஸ்கூல்ல கட்டாயம் சொல்லித்தருவா. வாத்தியார் பேர்கள் சர்மா, தீஷிதர், சாரி அப்படியெல்லாம் இருக்கும். பஞ்சகச்சம் கட்டிண்டு, நெத்திக்கு இட்டுண்டு, ஜிப்பா போட்டுண்டு, குடுமி வெச்சுண்டு இருப்பா. எல்லா சான்ஸ்கிரிட் வாத்தியாருக்கும் இந்த குடுமி ஷேப் வெச்சு கட்டாயமா பட்டப்பெயர் உண்டு. கொத்தமல்லி கட்டு, முள்ளம் பன்னி அப்படில்லாம் இருக்கும். ரொம்ப ஏழைகளா இருப்பா, ரொம்ப ஆச்சாரம், அனுஷ்டானங்களோட இருப்பா. அவா வீடு வழியா போனா அவாள்ளாம் ஸ்கூலுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி அவாத்து திண்ணைல நின்னுண்டு தக்ளீல பூணுல், சரடுக்களுக்கு நூல் நூத்துண்டு இருப்பா. ரொம்ப சாதுவா இருப்பா, கிளாஸ்ல பசங்களை சாதாரணமா அடிக்கமாட்டா.

ஆனா அமாவாசை அன்னிக்கோ, திருமுடி நீக்கத்தன்னிக்கோ (அன்னிக்குதான் மங்கின ப்ளேட வெச்சு, சோப் போடாம வெறும் ஜலம் போட்டு வழிச்சுவுட்டு, எரிச்சலை தணிக்க ஸ்படிகம்னு ஏதோ ஒண்ணை தடவி விடுவான்) கிளாஸ்ல கொஞ்சம் வாலை ஆட்டனா நேர பரலோகம்தான். ஆசாரத்துக்குமாச்சு, கோவத்துக்குமாச்சு, பிரம்பு குச்சியால சாத்திடுவார்.

டி. இ. ஓ. வருகை பற்றி அறிவிப்பு: ஸ்கூல் திறந்து ஒரு மாசத்திலேந்து ஸ்கூல்ல ஒரு பரபரப்பு. போன வருஷம் வந்தாச்சே, இந்த வருஷம் வராம இருப்பாளோன்னு. ஆனா புது ஹெட் மாஸ்டராச்சே, அவர டெஸ்ட் பண்ண வந்தாலும் வரலாம்னு வதந்தி. மேற்கொண்டு ஹெட் மாஸ்டர் பதவிக்கு டி. இ. ஓ. சிபாரிசு பண்ணின நபருக்கு வேலையை கொடுக்கலைன்னு கரஸ்பான்டன்ட் மேல கோபம் கூட அப்படீன்னு இன்னொரு வதந்தி.

ஒரு மாசம் முன்னாடி வழக்கம் போல ஸ்கூல் அசெம்பிளில எஸ்.பி.எல். “ஸ்கூல் அட்டென்ஷன்னு” கத்திட்டு கொஞ்சம் நகர்ந்துண்டான். ஹெட் மாஸ்டர் மைக்கை தன்பக்கம் இழுத்தார். வழக்கம் போல கீகீகீங்ங்க், ஸ்க்க்ரீரீரீரீச் சத்தங்கள். ஹெச்.எம்மோட ஸ்வீகாரம் அந்த மைக் உயரத்தை அட்ஜஸ்ட் பண்ணிட்டு சாரை பார்த்து சரியா இருக்குன்னு தலையை ஆட்டினான். அவர் மைக்கை தட்டிப்பார்த்துட்டு “இந்த வருஷம் டி. இ. ஓ. இன்ஸ்பெக்ஷன் உண்டு. ஆகஸ்ட் 26-ம் தேதி வருவார். ஐ வாண்ட் அவர் ஸ்கூல் டு கெட் தி பெஸ்ட் ரிப்போர்ட்.

எல்லாரும் பளிச்சுனு ட்ரெஸ் போட்டுண்டு வரணும். இன்ஸ்பெக்ஷன் முடியர வரைக்கும் லீவ் போடக்கூடாது. எல்லா புக்ஸ், நோட்க்கும் அட்டை, லேபில் இருக்கணும். தினம் கார்த்தாலே அரை மணி முன்னாடி ஸ்கூல் ஆரம்பிக்கும். அயிகிரி நந்தினியும், ஆதித்யஹ்ருதயமும் சந்தை சொல்லி கத்துண்டு முடிக்கணும். லைப்ரரி புக்கெல்லாம் திருப்பி வெச்சுடுங்கோ, இல்லனா லைப்ரரி மொட்டையா இருக்கும்.

ஸ்கவுட்ஸ் “கார்ட் ஆஃப் ஆனர்”, கொடி மூலம் சமாஜாரம் தெரிவிக்கிறது எல்லாம் ப்ராக்டீஸ் பண்ணனும். கிளாஸ் ப்ளாக் போர்டெல்லாம் கோவக்காய் போட்டு தேய்ச்சு கன்னங்கரேல்னு இருக்கணும். கிளாஸ் மானிட்டர்கள் பேட்ஜ் போட்டுண்டு இருக்கணும்னு” சொல்லி எஸ்.பி. எல்லை பார்த்து தலையாட்டினார். அவனும் மைக்கு கிட்ட வந்து “ஸ்கூல் டிஸ்மிஸ்டு” கத்தினான்.

ஆகஸ்ட் 26: வரவேற்பு: எங்க கிளாஸ்லேர்ந்து கேட் நன்னா தெரியும். அதனால நேரப் பார்த்ததை உங்களுக்கு சொல்லறேன். நேத்திக்கு ஒரு அரை மணி லேட்டாதான் டி. இ. ஓ. வந்தார். வெள்ளை பேண்ட், வெள்ளை புஷ் கோட்டு, காபூலி செருப்பு. கரஸ்பான்டன்ட் தன்னோட மாரிஸ் மைனர் காரை டி. இ. ஓ. வை அழைச்சுண்டு வரத்துக்கு டி. இ. ஓ. ஆத்துக்கு அனுப்பிச்சார்.

ஸ்கூல் கேட்டுக்கிட்டயே மாலை மரியாதையோட கரஸ்பான்டன்ட், அவரோட பேரன் சுதர்ஸன், ஹெச்.எம். அசிஸ்டன்ட் ஹெச்.எம். ஸ்கவுட் மாஸ்டர், ட்ரூப் லீடர், எஸ்.பி.எல். எல்லாரும் காத்துண்டு இருந்தா. உள்ளே நுழைந்ததும் சுதர்ஸன் மாலையைப் போட்டான். அவர் அவன் கன்னத்தை மெதுவா கிள்ளி எந்த கிளாஸ்ல படிக்கறன்னு கேட்டுட்டு நல்ல வேளை அவன் பதில் சொல்லறதுக்கு முன்னாடியே உள்ள வர ஆரம்பிச்சுட்டார். ஏன்னா சுதர்ஸன் எங்க ஸ்கூல்லயே படிக்கலை. அவன் டேங்க் பக்கத்துல இருக்கற ஆப்பக்கார ஸ்கூல்ல படிக்கறான்.

ஹெச்.எம். ஸ்கவுட் மாஸ்டரையும், ட்ரூப் லீடரையும் அறிமுகப்படுத்தினார். அவா ரெண்டு பேரும் பளிச்சுனு ஸ்கவுட் சல்யூட் அடிச்சா.

ஸ்கவுட்ஸ் “கார்ட் ஆஃப் ஹானர்”: நீங்க இதை பார்த்து இருக்கேளான்னு தெரியாது, பாரத் ட்ரூப் நன்னா பண்ணுவோம். எதிரும் புதிரமா பத்து ஸ்கவுட்ஸ் நின்னுண்டு எல்லாரும் ஆளுக்கு மெல்லிசான ஆறடி நீள மூங்கில் குச்சியை சாய்ச்சு உசத்தி பிடிச்சிண்டிருப்போம். என் குச்சியும் எதிர் பையனோட குச்சியும் மேல நுனில தொட்டுண்டு தலைகீழா இருக்கிற “V” மாதிரி இருக்கும். இது மாதிரி பத்து V இருக்கும். இதுக்கு கீழே எல்லாரும் ஊர்வலம் மாதிரி வருவா. இது பேர்தான் “கார்ட் ஆஃப் ஹானர்”.

நாங்க இதை ப்ராக்டிஸ் பண்ணச்சே சில சமயம் மேல தொட்டுண்டு இருக்கற குச்சி நழுவி மொட்டுனு எதிர்ல இருக்கற ஸ்கவுட் மேல விழும், அவன் திருப்பி நம்ம மேல வேணும்னே போடுவான். ஒரு நாள் ப்ராக்டிஸ் முடிச்சுட்டு குச்சியை வீட்டுக்கு கொண்டு போக விட்டா. பி.என்.ஶ்ரீனிவாஸனோட பாட்டி மடித்துணி உலர்த்தரதுக்கு ஒசரமா வசதியா இருக்குன்னு வெச்சுண்டு திருப்பித்தர மாட்டேன்னு தகராறு பண்ணினாளாம். இந்த குச்சிகளுக்கு கீழே அவரை அழைச்சுண்டு வந்தோம். விபத்து ஒண்ணும் இல்லாம முடிஞ்சது!

கொடி மூலம் செய்தி: ஸ்கவுட்ஸில் எங்களுக்கு சமிக்ஞை மூலமா சின்ன சின்ன செய்திகளை தெரிவிக்க சொல்லி கொடுத்திருக்கா. கையில துணியால பண்ணின கொடிகளை ஒவ்வொரு கையில ஒவ்வொரு விதமா வெச்சுண்டு A, B, C எல்லாம் சமிக்ஞைகள் மூலம் தெரிவிப்போம். டி. இ. ஓ. கிட்ட ஒரு மெசேஜ் கேட்டோம். அவர் “ஐ அம் ஹேப்பி டு பி ஹியர் டுடே” அப்படின்னு ஒரு பேப்பர்ல எழுதிக் கொடுத்தார். அதை சமிக்ஞை மூலம் ஒருத்தன் தெரிவித்தான்.

நூறடி தள்ளி இன்னொரு ஸ்கவுட் அதை புரிஞ்சுண்டு இன்னொரு காயிதத்தில் எழுதிண்டு வந்து டி இ. ஓ. கிட்ட காட்டினான். ஸ்கவுட் மாஸ்டருக்கும், ஹெச்.எம்-க்கும் பெருமையா இருந்நது. இந்த சமிக்ஞைகள் பழக்கம் ஆகிற வரைக்கும் இட வல மாற்றத்தில கன்ஃப்யூஸ் ஆகிடும். A-யை இடவலம் மாத்திப் போட்டா G ஆகிடும். B-யை இடவலம் மாத்திப்போட்டா F ஆகிடும். மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பையன் இந்த மாதிரி தப்பு தப்பா மாத்தி எழுதி ஸ்கூலுக்கு மானம் போயிடுத்தாம். நல்லவேளை நேத்திக்கு விபத்து ஒண்ணும் இல்லாம முடிஞ்சுது.

ஆபீஸ் மீட்டிங்: அப்பறம் கரஸ்பான்டன்ட் ரூம்ல காபி, டிபன். என்ன டிபன்னு கூட ஹெச்.எம். ப்யூன் மூலமா எங்களுக்கெல்லாம் தெரியும். ஃபோர்த் ஃபார்ம்ல இன்னொரு செக்ஷன் போடவும், டைப்பிங் க்ளாஸ் ஆரம்பிக்கவும் பர்மிஷன் கேட்டோமாம். கேர்ல்ஸ் அட்மிஷனுக்கும் மனு கொடுத்தோமாம்.

கிளாஸ் வரவு: இது முக்கிய கட்டம். சில பல க்ளாஸுக்கு டி. இ. ஓ. உள்ள வருவார். ஹெட் மாஸ்டர் வயித்துல நெருப்பைக் கட்டிண்டு இருந்தார். எங்க ஸ்கூல் நல்ல ஸ்கூல்னாக்கூட சில வாத்தியார்கள் சுமார்தான். நேத்திக்கு தப்பிச்சுட்டோமாம். என் க்ளாஸுக்குள்ள வந்தார். போர்டுல அட்டென்டன்ஸ் “On Rolls 44” என்றும் “Present 42” ன்னு மானிட்டர் எழுதியிருந்தான். ஏன் இரண்டு பேர் ஆப்செண்ட்னு கேட்டார். மானிட்டர் டக்குனு எழுந்து “சார், வாசுக்கு டைஃபாய்ட் இப்பதான் ஒரு ஜலம் விட்டிருக்கா, பி. என். ஶ்ரீனிவாஸனோட பாட்டி நேத்திக்கு செத்து போயிட்டான்னு” சொன்னான். அவர் அப்பறம் உங்களுக்கு வாத்தியார் இன்னிக்கு என்ன பாடம் நடத்தறார், எல்லாம் புரியறதான்னு கேட்டுட்டார்.

டீச்சரை பார்த்து “ஹௌ லாங்க் ஹேவ் யூ பீன் டீச்சிங் செகண்ட் ஃபார்ம்? ஹவ் டு யு ஃபைன்ட் தி ஸ்டூடன்ட்ஸ்? யூ மஸ்ட் கிவ் அ லாட் ஆஃப் ஹோம் ஒர்க்னு” சொல்லிட்டு அடுத்த ரூமுக்கு போனார். டீச்சருக்கு அப்பறம்தான் உசுரு வந்தது. ஒரு சமயம் ஒரு டி. இ. ஓ. கடைசி பெஞ்ச்ல போய் உட்கார்ந்துண்டு “யூ கன்டின்யூ. ஐ வான்ட் டு அப்சர்வ் யுவர் டீச்சிங் மெத்தட்” என்று சொல்லிட்டு பெல் அடிக்கர வரைக்கும் இருந்துட்டாராம். இப்படி பல கிளாஸ் ரூம் விசிட்டுக்கப்புறம் ஹெட் மாஸ்டர் ரூம்ல லஞ்ச். லஞ்சுக்கு அப்புறம் இன்னும் கொஞ்சம் கிளாஸ்கள்.

மாரல் சயின்ஸ்: நல்ல மூணு மணி வெய்யில். ஓட்டுக்கூரை கிளாஸ். சாதாரணமா உட்கார்ந்துண்டு தூங்கி வழியற எம்.எஸ். ராவ் இன்னிக்கு விறுவிறுன்னு நடந்துண்டு தர்மம், நீதி, நியாயம் பத்தி எப்பவோ எங்கயோ கேட்டதை வெச்சுண்டு அளந்துண்டிருந்தார். டி. இ. ஓ. கிளாஸுக்குள்ள நுழஞ்சதும் ஹெட் மாஸ்டரின் சிக்னலைப் புரிஞ்சுண்டு ஆதித்யஹ்ருதம் ஆரம்பிச்சு வெச்சார். அதை முடிச்சதும் “குள்ள பாஸ்கர்” மூர்த்தியை ஒரு சின்ன உபன்யாசம் பண்ணச்சொன்னார். அவனும் சின்னதா ஒண்ணு சொல்லிட்டு சேங்காலிபுரம் அனந்தராம தீஷிதர் உத்திரீயத்தால மறைச்சுண்டு பால் சாப்படற மாதிரி பாசாங்கு பண்ணினான். டி. இ. ஒ. சிரிச்சுட்டார்.

பி. டி. பீரியட்: கார்ப்ரேஷன் ஸ்கூல்ல பசங்களுக்கு வசதி கிடையாது. ஓடியாடி விளையாட திறமை உண்டு. ஆப்பக்கார ஸ்கூல்ல வசதியும் உண்டு, திறமையும் உண்டு. தயிர்சாதம் ஸ்கூல்ல வசதியும் சுமார், திறமையும் சுமார். ஒரு டி. இ. ஓ. கிரிக்கெட் பேட்டை எடுத்துண்டு தனக்கு பந்தை போடச் சொன்னாறாம். பந்து பயங்கரமா எகிறி அவரோட தலை பக்கத்தில் பறந்துதாம். பி.டி. சார் எங்க ஸ்பின் பவுலர்கிட்ட இந்த கூக்ளி கீக்ளின்னு போட்டு தொலைக்காதேன்னு சொல்லி வெச்சிருந்தார். நல்ல வேளை இந்த டி. இ. ஓ. க்கு செஸ்தான் பிடிச்ச விளையாட்டாம். தப்பிச்சோம்.

சான்ஸ்க்ரிட் கிளாஸ்: டி.ஈ.ஓ. வந்ததும் ராம சப்தம் ஒப்பிச்சோம். டி. இ. ஓ. டீச்சரை தனக்கு ரொம்ப விஷயம் தெரிஞ்சா மாதிரி கேக்கறதா நினைச்சுண்டு “காளிதாஸா எல்லாம் எப்போ கத்து கொடுப்பேள்னு” கேட்டார். இன்னிக்கு திருமுடி நீக்கம் நாள். பாவம் சார் நல்ல எரிச்சல். அந்த மூட்ல சான்ஸ்க்ரிட் சார் வந்து “அடுத்த ஜன்மத்துலன்னு” முணுமுணுத்துட்டு “சான்ஸ்க்ரிட்ல எம். ஏ. படிக்கச்சே கத்துப்பான்னு” சொன்னார்.

முடிவு: ஒரு வழியா டி.இ.ஓ. விஜயம் முடியிற சமயம். அவரை ஹெச்.எம். தன் ரூமுக்கு அழைச்சுண்டு போய் கூல் ட்ரிங்ஸ், டிபன் தந்தாராம். கரஸ்பான்டன்டும் வந்தாராம். ஸ்கூல் நன்னா நடக்கறது, நீங்க கார்த்தாலை கேட்டதையெல்லாம் அப்ரூவ் பண்ணி மேல் ஆபிஸருக்கு ரெக்கமண்ட் பண்ணறேன்னு சொன்னாராம். அதை தவிர ஸ்கவுட்ஸுக்கு கேம்ப்புக்கு போகறதுக்கு இவரே பணம் சேங்ஷன் பண்ணிட்டாராம்.

சேன்ஸ்க்ரிட் வாத்தியார் மரியாதை இல்லாம பேசினது டி.ஈ. ஓ. காதில விழுந்துடுத்தாம். அவருக்கு இரண்டு இன்கிரிமென்ட் கட் பண்ணச் சொன்னாறாம். கரஸ்பான்டன்டும், ஹெச். எம்மும் ரொம்ப மன்றாடி மன்னிப்பு கேட்டாளாம். அதுனால ஒரு இன்கிரிமென்ட் பொழச்சுதாம். சார் ரொம்பப் பாவம்.

எங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு யோசிக்கறேளா? ஹெச்.எம்மோட ப்யூன் எங்களுக்கும் உளவாளியாச்சே!!!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

மேலும்