கடந்த சில ஆண்டுகளாகச் சிறந்த நிர்வாகத் திறனோடு மிகவும் புரட்சிகரமான நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியது ஆசிரியர் தேர்வு வாரியம். அத்தகைய புரட்சிகரமான மாற்றங்களை போற்றிப் புகழ வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பயன் அடைந்தவர்களின் கடைமை, அதைப் பொதுமக்களும் தெரிந்துப் போற்றிப் புகழ்ந்திடவே இக்கட்டுரை.
ஊர், உலகம் எல்லாம் தேர்வாணையங்கள் எத்தனைப் பணியிடங்கள் நிரப்பத் தேவையாய் இருக்கிறது என்பதை முதலில் கணக்கிட்டுவிட்டு, பிறகு அந்தத் தேர்வுக்கு அறிக்கை வெளியிடும் நடைமுறையைக் கடைபிடித்து வருகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிர்த்த முக்கில் இருந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமும் அதன் பெரிய அண்ணன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும்கூட இத்தகைய பழம்போக்கான நடைமுறையைக் கடைபிடித்துவருகின்றன.
பழமையைத் துளி கூட விரும்பாத ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த நடைமுறையைத் தன் காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு முதலில் தேர்வை நடத்துவோம்; பிறகு பொறுமையாக எல்லாப் பள்ளிகளையும் தொடர்பு கொண்டு மிக விரைவாகச் சுமார் ஆறு மாத காலத்தில் காலிப் பணியிடங்கள் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம், பின்னர் அடுத்த ஆறு மாத காலத்தில் பணி வழங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து புரட்சிகரமாகச் செயல்பட்டு ஒட்டு மொத்த உலகத்துக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.
மத்திய அரசுப் பணியாளர் நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வை (Civil Service Exam) மூன்று கட்டமாக சுமார் ஓராண்டு காலத்துக்கு நடத்தும். ஒரே தேர்வை மூன்று கட்டமாக ஓராண்டுக்கு நடத்துவதில் என்ன பெரிய நிர்வாகத் திறமை இருந்துவிடப் போகிறது என்று மாற்றி யோசித்த ஆசிரியர் தேர்வு வாரியம், தான் தலையிட்டு நடத்தும் எல்லா தேர்வுகளையும் ஓர் ஆண்டுக்கு நடத்துவது என்று முடித்துவிட்டது, அதுவும் ஒரு தேர்வுக்கு ஒரே கட்டம்தான். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் http://trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தை மேய்ந்து பாருங்கள், நடப்புத் தேர்வுகள் என்ற பகுதியின் கீழ் இருக்கும் பகுதியில் உள்ள தேர்வுகளின் பட்டியலைப் பாருங்கள், தேர்வு நடத்தப்பட்டு ஓராண்டைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பவர் ஸ்டாரின் லத்திகாவுக்கு அடுத்து நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரே நிகழ்வு இதுதான்.
இந்தத் தேதியில் இந்த அறிவிப்பை வெளியிடுவோம், முடிவுகளை வெளியிடுவோம் என்று முன்கூட்டியே அறிவித்துவிட்டு அப்படியே செய்துவிடுவதில் என்ன ஒரு திறமையும் நேர்மையும் பளிச்சிடப்போகிறது. இத்தகைய நடைமுறைகளை முற்றாக வெறுக்கும் வாரியமானது இதையெல்லாம் கைவிட்டு எந்தத் தேதியில் அறிவிப்பை வெளியிடுவது என்பன போன்றவற்றை முன்பே அறிவிப்பதில்லை. அப்படி அறிவித்தால் அந்தத் தேதியில் அறிவித்தாக வேண்டுமே, இதுபோன்ற கட்டுப்பாடுகளை விரும்பாத வாரியம் தான் ஒரு சுதந்திர அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. நேர்மையான, சுதந்திரமான ஒரு அரசு அமைப்பு இயங்குவதுதானே ஆரோக்கியமான சமூகத்துக்கு நலம்பயக்கும்.
மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசுத்துறை அமைப்புகள் அதற்கென ஒரு அலுவலரோ அல்லது அதற்குப் பொறுப்பான ஒருவரோ இருப்பதுதானே வழக்கம். இந்த வழக்கத்தையும் வாரியம் மிகவும் வெறுத்துப் புதுமையைப் புகுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளைப் பார்த்தால் வாரியத்தின் இந்தப் புதுமையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர், மர்ம நபர் தகவல் தெரிவித்தார் என்பது போன்றே செய்திகள் வரும்.
மற்ற எந்த அரசுத் துறைகளும் செய்யாத மிகப் பெரிய சாதனை ஒன்றை கடந்த ஓராண்டு காலமாக வாரியம் செய்துவருகிறது. பிற துறைகள் என்னதான் முயன்றாலும் இந்தச் சாதனையை இன்னும் முறியடிக்க முன்னூறு ஆண்டுகளாவது ஆகும் என்கின்றனர் ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரத்தினர். பிற அரசுத் துறைகளில் நீங்கள் ஒரு குறையைக் கண்டறிந்தால் அந்தத் துறையைத் தொடர்பு கொண்டு பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமே தவிர நீதிமன்றத்தை உங்களால் பொசுக்கென அணுகிவிட முடியுமா, நிச்சயமாக முடியாது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது நீங்கள் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் தொடுக்க முடியும், அதற்குத் தேவையான காரணங்களையும் வாரியமே நமக்காக ஏற்படுத்தித் தருகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மட்டுமே சுமார் 700 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கிறதாம், இது போக முதுநிலை ஆசிரியர்கள் தொடர்பாக வேறு மேலும் பல நூற்றுக் கணக்கான வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். இவ்வாறு சாதனை புரிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய நீதிமன்ற வழக்குகளுக்காகவே இரண்டு பணியாளர்களை நியமிக்கப்போவதாக மான்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனது கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் (கருத்தாகப் பார்த்தால் இவர்கள் இன்னும் / இப்போது ஆசிரியர்கள் அல்ல) இன்னும் பல்லாண்டுகளுக்கு மாணவர்கள் நலனுக்காகவும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உழைக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஓய்வை அனுபவிக்கும் பெரும் பொருட்டு தேர்வு வாரியம் ஆண்டுக்கணக்கில் இத்தேர்வுகளை நடத்துவதாக தேர்ச்சி பெற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தேர்ச்சி பெற்றவர்கள் சிலரை இதற்கு முன்பு அவர்கள் பணிபுரிந்த தனியார் பள்ளிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த ஓய்வு நடவடிக்கையை செயல்படுத்தும் விதமாக அவர்களைப் பணியிலிருந்து விடுவித்து வாரியத்தின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டனர். தேர்ச்சிபெற்றவர்களும் ஓய்வை ஓராண்டாகச் சுகமாக அனுபவித்துக் கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்கிறார்கள்.
மிக நீண்ட காலமாகச் சிறப்பாகவும் புரட்சிகரமாகவும் செயல்பட்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் பொது மக்களின் கவணத்திற்கு வந்தது தற்போதுதான் வந்திருக்கிறது. அதுவும் "ஆசிரியர் தகுதித் தேர்வு-2013" நடத்தியதன் பிறகும் இத்தேர்வில் உடனுக்குடனும் முன்பு மேற்கொண்ட நடவடிக்கைகளை திருத்திக் கொண்டு மீண்டும் வேறு வகையான வழிமுறைகளைக் கையாண்டு தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்துகொள்வதிலும் வாரியத்தைப் போலச் சிறந்த ஒரு அமைப்பை மங்கள்யான் செயற்கைக்கோளானது செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடித்தால்தான் உண்டு.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago