பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்க சிந்தனை, ஆபாச கூடமான பிக் பாஸ் 2: முதிர்ச்சியற்ற போட்டியாளர்களால் முகம் சுளிக்கும் பார்வையாளர்கள்

By மு.அப்துல் முத்தலீஃப்

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பலத்த வரவேற்புடன் காணத்துடித்த தமிழக பார்வையாளர்கள், நாளுக்கு நாள் மோசமாகிச் செல்லும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் ஆணாதிக்க வெளிப்பாடு, பெண்ணடிமைத்தனம், ஆபாச பேச்சு, நடனங்களைக் கண்டு முகம் சுளிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

முதிர்ச்சியற்ற ஆட்களைப் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பியதால் இது நிகழ்ந்ததா? கமல்ஹாசன் இதை கண்டிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பிரச்சினையை கமல்ஹாசனும் உணர்ந்திருப்பார். அதனால் தான் கடந்த பிக் பாஸை வைத்து இதை அளவிடக்கூடாது என்று கூறினார். ஆனால், பொதுவான ஒரு கோட்பாடு, நிகழ்ச்சியில் சில நெறிமுறைகள் உள்ளன. அதை மீறக்கூடாது அல்லவா? இது சீரியல் அல்ல, ரியாலிட்டி ஷோ என்கிறார்கள். அப்படி இருக்கும்போது அந்த நிகழ்ச்சி தரமானதாக இருக்கவேண்டும் என்பதில் மற்றவர்களை விட நெறியாளர் கமல்ஹாசனுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தெரிந்தோ தெரியாமலோ அனைவரும் ரசிக்கும் மிகப்பெரும் நிகழ்ச்சி. அடுத்தவர் வீட்டில் நடப்பதை எட்டிப்பார்க்கும் மனப்பான்மையில் உள்ள ஆர்வத்தை காசு பண்ண கண்டுபிடிக்கப்பட்டதே பிக் பாஸ் நிகழ்ச்சி. மேலை நாடுகளில் வெற்றிகரமாக நடந்த நிகழ்ச்சி வழக்கம்போல் இந்திய அளவில் காப்பி அடிக்கப்பட்டு அது தமிழகத்துக்கும் இறக்குமதி செய்யப்பட்டது.

முதல் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரையுலகின் பிரபலங்கள் இறக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்ட போட்டியாளர்கள் போட்டியிட்டார்கள், மோதினார்கள், புறம்பேசினார்கள் அனைத்தையும் செய்தார்கள். ஆனாலும் அவர்களிடையே ஒரு கண்ணியம் இருந்தது.

நிகழ்ச்சியில் மோதிக்கொண்டவர்கள் ஆண், பெண்ணாக இருந்தாலும் தரக்குறைவாக பேசுவதோ, நாகரீகமற்று நடப்பதோ இல்லாமல் இருந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நிகழ்ச்சி நடந்தது கண்டனத்துக்குள்ளானது. அதற்கு கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக பிக் பாஸுக்கும் கோரிக்கை வைத்தார்.

பெண் போட்டியாளர்கள், ஆண் போட்டியாளர்கள் நடனம் ஆடினர், நடித்துக்காட்டினர், சண்டைபோட்டனர், போட்டியில் உறுதியாக இருந்தனர். ஆனாலும் ஒரு வரைமுறையை கடைபிடித்தனர். கடந்த ஆண்டு பிக் பாஸில் நடிகை ஓவியாவின் மருத்துவ முத்தம் மிக நாசுக்காக கையாளப்பட்டது. நிகழ்ச்சியின் நெறியாளர் கமல்ஹாசன் ஒவ்வொரு வாரமும் நெறிப்படுத்தும் வேலையை செவ்வனே செய்தார்.

கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் எந்த இடத்திலும் போட்டியாளர்களில் ஆண் - பெண் என்ற பாகுபாடோ, ஆணாதிக்கத்தின் வெளிப்பாடோ இருந்ததில்லை. தனது உண்மை நிலையை வெளிப்படுத்திய நமிதா, காயத்ரி ரகுராம், ஜூலி போன்றோர் மக்களால் வெறுக்கப்பட்டனர். வெளிப்படையாக நடந்த ஓவியா கொண்டாடப்பட்டார்.

கடந்த ஆண்டின் சிறப்பான வெற்றிகரமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் அனைவராலும் வரவேற்கப்பட்டது என்றால், அதற்கு முக்கிய காரணம் மேற்சொன்ன நிகழ்வுகளே. ஆபாசமற்ற, நெறியாளர் கமல் போன்றோரால் வழிநடத்தப்பட்ட நிகழ்ச்சியை தமிழகத்தில் பெரும்பாலான குடும்பங்கள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன.

அதனால் இந்த ஆண்டு பிக்பாஸ் துவங்கும்போதே ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. அதிலும் கமல்ஹாசன் மீண்டும் வழிநடத்துகிறார் என்பதால் நிகழ்ச்சியை பார்க்க ஆர்வத்துடன் அனைவரும் இருந்தனர். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் யார் யார் என்று பார்த்தபோது பொதுமக்களின் ஆர்வம் குறைந்தது.

முதிர்ச்சியற்ற இளவயது நடிகர்கள், நடிகைகள், பிரபலமாக இல்லாத நித்யாவை சேர்த்தது போன்றவை பார்வையாளர்களை சற்று யோசிக்க வைத்தது.

ஒரே மாதிரி போட்டியாளர்களை வைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது என்று பார்வையாளர்கள் தங்களை சமாதானப்படுத்திக் கொண்டாலும், அது வெற்று சமாதானம் என்பதாக அடுத்தடுத்த நாட்களில் பிக் பாஸ் போட்டியாளர்கள் நிரூபித்தனர்.

ஒரு பிரபலமான மனிதர் தனிப்பட்ட முறையில் 100 நாட்கள் ஒரே இடத்தில் அடைந்துக் கிடக்கும்போது, அவரது தனித்தன்மைகள் அவரது சுய கட்டுப்பாட்டையும் மீறி வெளிப்படும் என்பதைக் காட்டுவதே பிக் பாஸின் முக்கிய வெற்றி. ஆனால், பிக் பாஸில் தற்போது பங்கேற்பவர்கள் தாங்கள் ஜாக்கிரதையாக போட்டியில் செயல்படுவதாக நினைத்து ஓரிரண்டு நாட்கள் நடிக்க முடிந்தது.

ஆனால் அடுத்து வந்த நாட்கள், முதிர்ச்சியற்ற இளவயது டேனியல், மகத், ஷாரிக், ஐஸ்வர்யா, யாஷிகா போன்றோர் அடிக்கும் கொட்டம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. பிக் பாஸில் இளம் வயது போட்டியாளர்கள் என்றால் அவர்களை இணைத்து பேசுவது சாதாரண கேலிக்குரிய விஷயம் என்று எடுத்துக்கொண்டாலும், அதற்கு அடுத்தடுத்த கட்டங்களில் அவர்களின் செயல்பாடுகள் ஆபாசத்தின் உச்சிக்கே செல்கிறது.

நெறியாளர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிப் பற்றி பேசும்போது தமிழகம் முழுதும் கோடிக்கணக்கான பெண்கள் , குழந்தைகள் ரசித்து பார்க்கும் குடும்ப நிகழ்ச்சி என்று கூறுவார். ஆனால் இந்த ஆண்டு நிகழ்ச்சியை அவர் அவ்வாறு கூறினால் அவர் நடிக்கிறார் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

நள்ளிரவில் இருட்டில் இரண்டு பெண்களுக்கு நடுவே மகத் படுத்துக்கொண்டு போர்வையை போர்த்திக்கொண்டு இருப்பதும், அதை பாலாஜி இரட்டை அர்த்தத்தில் விமர்சிப்பதையும் வீட்டில் நிகழ்ச்சியைக் காண்பவர்கள் சங்கடப்படாமல் இருக்க முடியாது. அடுத்து மகத், ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியல் நடந்துக்கொள்ளும் விதம் கேமரா தங்களை கண்காணிக்கிறது என்பதையும் தாண்டி ஓவர் ரகம்.

நிகழ்ச்சியில் போட்டி (டாஸ்க்) என்ற பெயரில் முதலில் பெண் போட்டியாளர்களை வேலை ஆட்களாகவும், ஆண் போட்டியாளர்களை எஜமானர்களாகவும் போட்டியிட வைத்தனர். இதில் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களை சகல விதத்திலும் வேலை வாங்கினர், மிரட்டினர், நடனம் ஆட வைத்தனர், ஊட்டிவிட வைத்தனர். அதையெல்லாம் டாஸ்க் என்று கூறினர்.

அதன் பின்னர் ஆண்களை கிளப்புகளில் அமர்ந்து நடனக்காட்சிகளை ரசிப்பது போல் மெத்தை திவான் போட்டு பெண்களை நடமாடி மகிழ்விக்க வேண்டும் என்று டாஸ்க்கில் கூறினர். அதில் நடனம் என்ற பெயரில் ஐஸ்வர்யா, யாஷிகா ஆடியது ஆபாசத்தின் உச்சகட்டமாக இருந்தது. சமீப காலமாக பெண்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறேன் என ஆபாசத்தின் உச்சமாக நடத்தப்படும் நிகழ்ச்சியை இந்த டாஸ்க் ஞாபகப்படுத்தியது.

மறுநாள் இதே டாஸ்க் ஆண்கள் வேலைக்காரர்களாகவும், பெண்கள் எஜமானர்களாகவும் மாற்றி நடத்தப்பட்டபோது தான் ஆண் போட்டியாளர்கள் சிலரின் சுயரூபம் வெளிப்பட்டது. பலரும் பெண்கள் அதிகாரம் செய்வதை மனதுக்குள் சகிக்க முடியாதவர்களாக எரிந்து விழுந்தனர். இது போட்டி என பெண் போட்டியாளர் வைஷ்ணவி உள்ளிட்டோர் சுட்டிக்காட்டியபோது ஒரு பெண் போட்டியாளர் என்றும் பாராமல் பாலாஜி அவதூறாக திட்டினார்.

சட்டப்படி சாதாரணமாக ஒரு பெண்ணை இவ்வாறு பேசுவதே குற்றம் எனும்போது, கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் ஒரு பெண் போட்டியாளரை பாலாஜி திட்டியது பல தவறான முன்னுதாரணங்களை உருவாக்கும் செயல். பாலாஜி தனது தவறை உணரவே இல்லை. அவர் இதற்கு முன்னர் தனது மனைவியை பல முறை சில நிமிடங்களுக்கு முன் திட்டியபோதும் ஆண் போட்டியாளர்கள் அதை கண்டிக்கவே இல்லை.

மாறாக ஆண் போட்டியாளர்களில் சிலர் தவிர பெரும்பாலானோர் அதை ஆதரிக்கும் விதமாக பாலாஜியை கண்டிக்க தவறினர். சிலர் கண்டுக்கொள்ளவே இல்லை. சக்தி ஓவியாவிடம் சாதாரணமாக பேச வந்தபோது ஓவியா கொதித்தெழுந்து திரும்ப பேசியதை பொதுமக்கள் வெகுவாக ரசித்தார்கள். ஆனால் வைஷ்ணவி, அனிதா இருவரையும் பாலாஜி அவதூறாக பேசியபோது ஒரு போட்டியாளர்கூட அதை கண்டிக்கவில்லை.

கணவன் மனைவியை சேர்த்து வைக்க ஒரு நிகழ்ச்சியா? அதில் மனைவி முதல் வாரமே வெளியேற நாமினேட் செய்யப்பட அதையும் சாமர்த்தியமாக தலைவியாக்கி காப்பாற்றும் பிக் பாஸின் செயலை பொதுமக்கள் அறியாமல் இல்லை. ஆனால் ஒரு பொது நிகழ்ச்சியில் இதுபோன்ற தனிப்பட்ட விவகாரத்தை வைப்பதன் மூலம் பாலாஜியும், நித்யாவும் சண்டைப்போடும் நிகழ்வாக பிக்பாஸ் மாறியுள்ளது.

நேற்றைய நிகழ்ச்சியில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக தங்களை வேலை வாங்கிய பெண் போட்டியாளர்களிடம் சிலரைத் தவிர பெரும்பாலான ஆண் போட்டியாளர்கள் எரிந்து விழுந்ததோ அல்லது வேறு வகையில் கிண்டல் அடித்ததையோ காண முடிந்தது. பாலாஜி மனைவியுடன் போட்ட சண்டையும் அதையடுத்து வைஷ்ணவியிடம் நடந்துக்கொண்ட விதமும் எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது.

டாஸ்க்கில் போட்டியிடும்போது போட்டியில் கடுமையாக இருப்பதை விட நேர்மையும் கண்ணியமும் இருக்கவேண்டும் என்பதை கடந்த பிக் பாஸ் போட்டியில் பல முறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் இம்முறை, பெண் போட்டியாளர்கள் ஒருபுறமும், ஆண் போட்டியாளர்கள் மறுபுறமும் பிரிந்து நிற்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி விரும்பியோ, விரும்பாமலோ தமிழகம் முழுதும் அனைத்து பார்வையாளர்களும் காணும் ஒரு நிகழ்வாகியுள்ளது. இதில் என்ன வகையான பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்? என்று கமல்ஹாசன் வாராவாரம் நிகழ்ச்சியில் பார்வையாளர்களிடம் விளக்குவார்.

ஆனால் தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்க வெளிப்பாடும், ஆபாசமும் நிறைந்து நிகழ்ச்சி முழுதும் மோசமான இரட்டை அர்த்த கமெண்டுகளால் நிறைந்து காணப்படும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் என்ன வாழ்க்கைத் தத்துவத்தை கமல் கூறப்போகிறார் என்பதை பார்க்கத்தான் வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில், தனிமனித உணர்வுகளின் வெளிப்பாடு சமுதாயத்தில் எப்படி வெளிப்படுகிறது, கூட்டு வாழ்க்கையில் எவ்வாறு ஒத்துழைத்து வாழ வேண்டும் போன்ற பல விஷயங்களை வெளிப்படுத்தியதாக பெருமைப்பட்ட கமல்ஹாசன் தற்போதைய பிக் பாஸை ஆரம்பத்திலேயே சரிப்படுத்துவாரா? அல்லது உடன் சேர்ந்து ஓடுவாரா? காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முகம் சுளிக்க வைக்கும் சண்டை சச்சரவுகளை சீரியலில் கண்டுகளிக்கும் மக்கள், அதேநிலையில் பிக்பாஸும் இருந்தால் சிறிது நாள் ஆதரிப்பார்கள். ஆனால், போகப்போக புறக்கணிப்பார்கள் என்பது நிதர்சனம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்